indian army killing civilians

(டிசம்பர் 4, 2021 அன்று நாகலாந்தில் இந்திய ராணுவத்தினரால் கொல்லப்பட்ட அப்பாவிகளின் உடல்கள்)

இராணுவ துப்பாக்கிச் சூட்டில் கொடுங்கொலைக்கு ஆளான மகனை எவ்வாறு அடக்கம் செய்வது?

அவனோடு வாழ்ந்த ஒவ்வொரு நினைவுகளையும் பூமியில் எங்ஙனம் புதைப்பது?

அவனது தாயின் முடிவில்லாத கண்ணீர் தடத்தில் தூசியாகப் படிந்த, உணர்வற்ற இந்த மணலால் அவனை மூடுவதா?

பதின்மூன்று தாய்மார்களும் தங்கள் பதினான்கு மகன்களை எவ்வாறு அடக்கம் செய்வது?

ஒரு இளம்பெண், மணமாகி ஒன்பது நாட்களிலே தனது கணவனை எப்படி புதைப்பாள்?

இப்பிரபஞ்சத்தில் பதில்கள் கிடைக்காத இமாலய கேள்விகள் அவை.

திசம்பர் நான்காம் தேதி இந்திய இராணுவத்தால் இந்திய குடிமக்கள் பதினான்கு பேர் (அனைவரும் இளைஞர்கள், அதில் இளையவர் பதினேழு வயதே ஆனவர்) கொல்லப்பட்டது தொடங்கி, இன்றளவும் ஆழ்ந்த, தாங்கமுடியாத துயரத்திலிருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர், எங்கள் மக்கள்.

நாங்கள் எங்கள் இளைஞர்களுக்காக சொல்லமுடியாத தேசிய துக்க நாட்களை அனுசரிக்க தொடங்கிவிட்டோம். இந்த நாட்கள் எங்களை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது, ஒவ்வொரு நாகா இதயமும், மீண்டும் இக்கொடுஞ்செயல் நடவாமல் இருக்க வேண்டிக்கொள்கிறது.

உலகின் பிற பகுதிகள் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் புத்தாண்டை நோக்கி நகர்ந்த வேளையில். மோன் மாவட்டத்தில் உள்ள ஓட்டிங் மக்களுக்கும், நாகா என்ற பெரிய குடும்பத்திற்கும், கடந்த 2021, குணப்படுத்த முடியாத இதய காயத்தை ஏற்படுத்தியதோடு முடிவடைந்தது. இன்னும் நாங்கள் ஓட்டிங்கில் இருந்து மீள முடியவில்லை. காந்தயீர்ப்பில் சிக்கிய கடிகார முள் போல் நாகாவாக இருக்கும் அனைவருக்கும் காலச்சக்கரம் சுழலவில்லை, அந்தள்விற்கு ஓட்டிங்கின் தாங்க முடியாத விதியால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

ஒரு தாயின், மணமகளின், ஒரு தந்தையின் அல்லது ஒரு உடன்பிறந்தவரின் சிதைந்த இதயத்தை ஆறுதல்படுத்தும் வார்த்தைகள் எதுவும் இல்லை. பாதிக்கப்பட்ட இளையவருக்கு 17 வயது. பிக்-அப் வாகனத்தின் உரிமையாளர் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தச் சென்றபோது, ​​அவர் வயல் கொட்டகையில் தஞ்சமடைந்திருந்தார். பிக்கப்பில் இருந்தவர்கள் ராணுவத்தால் சுடப்பட்டதை அறிந்த அவர், தனது குடும்பத்தினரை அழைத்து,

‘பிக்கப் வாகன ஓட்டுநர் இறந்துவிட்டார். இராணுவம் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.’ என்று இரவு 8:16 மணிக்கு வந்த அழைப்பில் குரல் நடுங்கச் சொல்லியுள்ளார், அதுவே அவரது கடைசிச் சொற்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் அவரைத் திரும்ப அழைத்தபோது, எந்த பதிலும் இல்லை. ஊர் மக்கள் உடல்களைத் தேடிச் சென்றபோது, ​​கொட்டகையில் இருந்து சிறிது தூரத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் குண்டு காயங்கள் இருந்தன.

இந்தச் செய்தி என்னை வெகு நாட்களாக அழ வைக்கிறது. பேனா மையின் திடத்தை நீர்த்துப் போகச் செய்கிறது எனது கண்ணீர் .

கொன்யாக் பழங்குடியினர் இந்த பேரடியை சந்தித்த கண்ணியத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். கொல்லப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஓடிங் என்ற சிற்றூரில் உள்ள கொன்யாக் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். கொலைகளை அரசியலாக்க வேண்டாம் என்று KU (கொன்யாக் சங்கம்) வேண்டுகோள் விடுத்துள்ளது. இது ஒரு அறிவுப்பூர்வமான நிலைப்பாடு தான். கொலைகளை அரசியலாக்குவது, இளைஞர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான காரணத்தை வழங்கும். கொலைகளை அரசியலாக்குவது கொலையை நியாயப்படுத்துவதுடன், இதுபோன்ற பல கொலைகள் போல் ஒருபோதும் வராத தீர்ப்புக்காகக் காத்திருக்கும் கம்பளத்தின் கீழே இதுவும் கூட்டித் தள்ளப்படும்.

இது தெரியாமல் நடந்தேறிய இணை சேதம் அல்ல. இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை, இவ்வாறு கருத்தில் கொண்டு தான் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

நாகா இளைஞர்கள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்திய விமானப்படை உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமை தளபதி உட்பட பதின்மூன்று பேர் படுகொலையானபோது, ​​​​கொன்யாக் யூனியன் தான் முதல் ஆளாக இரங்கல் தெரிவித்தது. அதுதான் இவர்களின் கண்ணியம்.

அது, ‘கர்மா!’ என்று ஆங்காங்கே எழுந்த வெற்றுக் கூச்சலை அடக்கி உயர்ந்து ஒலித்தது, எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான சிறந்த வழியையும் அது காட்டத்தவறவில்லை. ஒருவரின் எதிரிகள் அதே துன்பத்தால் பாதிக்கப்படும்போது தனிப்பட்ட கசப்பையும் அனுதாபத்தையும் வேறுபடுத்தி அறியும் அறிவை கொண்டவர்களே இப்பழங்குடியினர், ஒரு அரசகுடி அதன் துயரங்களை எவ்வாறு சந்திக்கிறது என்பதற்கான ஒரு சான்று அது. அந்த செயலின் உன்னதம் பார்வையாளரின் சிந்தனையை அவர்களது முன்முடிவுகள் இழுத்துச் செல்லும் பாதைகளுக்கு தடையாக நிற்கும்.

 எல்லாவற்றிற்கும் மேலாக, கொன்யாக் என்ற ஆங் பழங்குடியினர், மேற்கத்திய உலகத்துடன் எந்தத் தொடர்பும் கொள்வதற்கு முன்பே துப்பாக்கி தயாரிப்பதை நன்கு கண்டுபிடித்த அரச வழித்தோன்றல்கள்.

இராணுவத்தினரால் கொல்லப்பட்ட இளைஞர்களின் சிதறிக்கிடந்த சடலங்களைக் கண்டுபிடிக்கும் துணிச்சல் அவர்களிடம் குறையவில்லை. சடலங்களை மீட்டெடுத்தது (இச்சம்பவம் வெளிவரமல் இருக்க இராணுவ வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ஒருவரது உடல் உட்பட) மற்றும் கொலையாளிகளில் ஒருவரைக் கொன்றதன் மூலம்,

எங்கள் பழங்குடி சொல்லாடலில் சொல்வதென்றால்,

'அவர்களால் கொல்லப்பட்ட தங்கள் சகோதரர்களுக்காக ஒரு ஆணின் வேலையைச் செய்தார்கள்'

என்றே நம் சூழலில் கூறுவோம்.

இனி இந்திய இராணுவம் தமது காணிகளில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லும் துணிச்சல் அவர்களுக்கு இருந்தது. இதைக் கூற அவர்களுக்கு முழு உரிமையும் இருந்தது.

ஒட்டுமொத்த நாகா உலகமும் ஓட்டிங்கையே உற்றுகவனித்துக்கொண்டும், ஒத்துணர்வோடும் நிற்கிறது.

நாகாலாந்திற்கு முதன்முறையாக வருகை தந்த ஒருவரின் வார்த்தைகள் இவை:

‘இவ்வளவு வன்முறை மற்றும் துயரங்களை கண்ணியத்துடனும் பிரார்த்தனையுடனும் சந்தித்ததை என்னால் மறக்கவே முடியாது.'

‘அன்பால் வன்முறையை எதிர்த்துப் போராடுங்கள், இருளை ஒளியால் எதிர்த்துப் போராடுங்கள்’ என்பார்கள் இளம் நாகர்கள்.

இந்த மாலையை வாழ்நாள் முழுவதும் நான் நினைவில் வைத்திருப்பேன்: மிக உயர்ந்த வளர்ச்சியடைந்த நாகரீகத்தால் மட்டுமே இத்தகைய மகத்தான கண்ணியத்தையும் கருணையையும் கொடூரமான ஆத்திரமூட்டலுக்கு எதிர்வினையாக தரமுடியும்.

ஆனால் இச்சம்பவம் நாட்டின் வேறு ஒரு பகுதியில் நடந்திருந்தால, அது அரசியல் ஆதாயங்களகவும், அரசியல் சூழ்ச்சி ஆயுதமாகவும் மாறியிருக்கும்.

எர்மியான் ஆர்தர், அசோசியேட்டட் பிரசிற்கு (ஏபி) ஒரு செய்தியை எழுதுகிறார், அதில் ஒரு தாயின் வார்த்தைகளைப் பதிவு செய்தார்:

"மனிதர்கள் தரையில் இருந்து அறுவடை செய்யப்படுவதில்லை. அவை காடுகளாக வளர்க்கப்படுவதும்மில்லை. அவர்கள் நம் கருப்பையில் இருந்து வளர்கின்றனர். ஒன்பது மாதங்களாக உடல் வலியுடன் அவர்களைப் பராமரித்து, கொசுக்கடியில் இருந்து காப்பாற்றுகிறோம், நமக்கான உணவைக் கொடுத்து, அவர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் பள்ளிக்கு அனுப்புகிறோம். அவ்வாறு வளர்ந்தவர்கள் கொல்லப்பட்டது எங்களுக்கு ஆற்றா துயரத்தை அளித்துள்ளது. இனி கிறித்துமசன்று காலையில் அவர்களின் கல்லறைகளுக்குச் சென்று அவர்களுடன் பேசுவோம். அவர்களின் ஆவிகள் எங்களைச் சந்திக்கும்படி கேட்டுக்கொள்வோம்."

"ஓட்டிங்கின் நினைவு வரும்போது மற்ற எல்லா ஒலிகளையும் கடந்த ஆழ்ந்த அமைதி நிலவுகிறது. வார்த்தைகள் தோற்றுப்போயின. ஓட்டிங் என்ற பெயரில் எழும் துக்கத்தைப் படம்பிடிக்க முடியாமல் வலுவிழந்து போயின சொற்கள்." என்று ஒரு நாகா-அமெரிக்கர் குறிப்பிடுகிறார்.

சில சமயங்களில் சொற்களை விட மௌனம் அமைதி தரும்.

இது விரக்தியின் மௌனம் அல்ல. வலிகளுக்கு பணிந்து, வாழ்வின் புனிதத்தையும், மரணத்தின் இறுதியையும் ஒப்புக்கொள்ளும் அமைதி. தெய்வத்தின் நீதிக்காக காத்திருக்கும் மௌனம் இது, இனி மனிதர்களால் வழங்கப்படும் நீதியின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம்.

*1958 ஆம் ஆண்டில், இந்திய ஒன்றிய அரசு, நாகா மலைகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) நிறுவியது. அதன்படி, ஒரு இராணுவ வீரனின் பார்வையில், 'சந்தேகத்திற்குரிய வகையில் செயல்படும்' எந்தவொரு குடிமகனையும் சுட்டுக் கொல்லும் வகையில், இராணுவ வீரர்களை அனுமதித்தது.

*இந்திய இராணுவத்தால் ஒரு இளம் பெண் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாள். அதன் பிறகு, அந்தச் சட்டத்தை நீக்க இந்திய அரசை வற்புறுத்தி 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இரோம் சர்மிளா என்ற இளம்பெண் பலருக்கு நினைவிருக்கலாம்.

அதனைத் தொடர்ந்து AFSPA மறுபரிசீலனை செய்யப்பட்டது, ஆனால் திரும்பப் பெறப்படவில்லை மற்றும் சர்மிளா 2016 இல் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

AFSPA ஐ வாய்ப்பாகப் பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களின் பல இராணுவக் கொலைகள் தொடர்கின்றன, மேலும் இது தொடர்பான விசாரணைகள் அரசாங்கத்தால் தடுக்கப்படுகின்றன.

(எழுத்தாளர் எசிட்டரின் கீரே நார்வேயைத் தளமாகக் கொண்ட நாகா நாவலாசிரியர் மற்றும் வெளியீட்டாளர் ஆவார்.)

தமிழில்: இராசகுரு கார் பாலன்
Pin It