கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

காஷ்மீர் மக்கள் பல ஆண்டுகளாக போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து வருகின்றனர். இம்மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவர்களுள் ஒருவர் காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவர் யாசின் மாலிக். தன் இளம் வயது முதலே காஷ்மீரின் முழுமையான சுயநிர்ணய உரிமைக்காகவும், காஷ்மீர் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் போராடி வந்தவர். பல ஆண்டுகளாக காஷ்மீர் மக்களுக்காக போராடிய யாசின் மாலிக் தற்போது இரட்டை ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

kashmiri arrest 624யாசின் மாலிக்கை போன்று பல அரசியல் செயல்பாட்டாளர்களைச் சிறையில் அடைப்பதும், பல ஆயிரம் போராளிகள் அம்மண்ணில் இருந்து காணாமல் ஆக்கப்படுவதும் காஷ்மீரில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்திய இராணுவம் காஷ்மீரிய மண்ணில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, சரியாக 75 ஆண்டுகள் ஆகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற 75-ம் ஆண்டை கொண்டாடும் இதே வேளையில், காஷ்மீர் மக்களின் சுதந்திரத்திற்கான குரல் 75 ஆண்டுகளாக இராணுவ உதவியுடன் இந்திய ஒன்றிய அரசினால் ஒடுக்கப்பட்டு வருகிறது.

இன்று உலகத்திலேயே அதிகமாகமான இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது காஷ்மீரிய தேசம். பாலியல் வன்புணர்வு, திட்டமிட்ட கொலைகள், கைது செய்யப்பட்டது காணாமல் ஆக்கப்படுவது, கடுமையான தாக்குதல்கள், பெல்லட் குண்டுகள், பல்வேறு இளைஞர்களையும் போராடும் தோழர்களையும் கைது செய்வது என ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையை காஷ்மீரிய மக்களின் மீது இந்தியா நடத்தி வருகிறது.

இந்த இனப்படுகொலையின் தொடக்கம் 75 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 1947-ல் ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் பெற்று இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது தொடங்கியது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் பல்வேறு ஆங்கிலேய காலனியாதிக்க நிர்வாகத்தின் கீழ் வராத 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் தாங்கள் எந்த நாட்டுடன் சேர வேண்டும் என்று தேர்ந்தெடுத்தனர். ஆனால் காஷ்மீரில் அது முடியவில்லை.

முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த காஷ்மீரில் மகாராஜா ஹரி சிங் எனும் இந்து ஆட்சியாளர் இந்தியா பாகிஸ்தான் சுதந்திரத்துக்கு பின் இரண்டு மாதங்கள் தன்னாட்சி நடத்தினார். இது அவர் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் அனுப்பிய பேச்சுவார்த்தை ஒப்பந்தம் மூலம் சாத்தியமானது. ஆனால் இது அதிக நாள் நீடிக்கவில்லை. ஆங்கிலேயரின் படையில் இருந்த முஸ்லீம் வீரர்களின் ஆயுதங்களை பறிமுதல் செய்து இந்துக்கள் வாழும் கிராமங்களுக்குக் கொடுத்தபோது, அது பாகிஸ்தானில் உள்ள பஸ்தூன் பழங்குடினரிடம் ஒரு எதிர்ப்பை உண்டு செய்தது. இவர்கள் பாகிஸ்தானின் ஒப்புதல் இல்லாமல் காஷ்மீரைத் தாக்கினார்கள். இதனால் மகாராஜா ஹரி சிங் இந்தியாவிடம் ராணுவ உதவியை வேண்டினார். காஷ்மீர் இந்தியாவை ஏற்க முன்வந்தால் ஒழிய நடுநிலையாக உள்ள ஒரு நாட்டுக்கு படைகளை அனுப்புவது ஒரு ஆபத்தான விடயம் என அப்போதைய கவர்னர் கூறினார்.

அந்த போராட்டங்களைக் கட்டுப்படுத்த இந்திய அரசின் படைகளும், ஆர்எஸ்எஸ் எனும் இந்து தீவிரவாத அமைப்பும் ஜம்முவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட படுகொலையை ஏற்பாடு செய்தது. இந்த தாக்குதலில் 20,000 முதல் 1,00,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த படுகொலை என்பது இந்திய துணை கண்டத்தில் நிகழ்ந்த மிக பெரிய வன்முறையாகக் கருதப்படுகிறது. இதில் 20,000 இந்து மதத்தினரும் சீக்கியர்களும் அடங்கும்.

இதனால் அந்த இந்து அரசர் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை அக்டோபர் 26-ல் கையெழுத்திட்டார். ஆனால் இதற்கு பாகிஸ்தான், தன்னுடன் போட்ட ஒப்பந்தம் அமலில் இருக்கும் போது இந்தியாவுடன் ஒப்பந்தம் போட அரசருக்கு உரிமை இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்தது. 1947 அக்டோபர் 27ல் இந்திய ராணுவப் படை காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கும் பஸ்தூன் பழங்குடியினருக்கு எதிராக நிறுத்தப்பட்டது. இதுவே முதல் இந்தியா பாகிஸ்தான் போரின் தொடக்கமாகும். காஷ்மீர் உடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஒரு வாக்கெடுப்பு (Plebiscite) நடத்த ஒப்புக்கொண்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த பிரச்னையை ஐநா-விற்கு இந்தியா எடுத்து சென்றது. ஆகஸ்ட் 13, 1948-ல் இரு நாட்டவரும் தங்கள் படைகளைத் திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராணுவ படைகளை திரும்ப பெற்றுக் கொண்ட பிறகு வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர் மக்கள் தங்களுடைய நாட்டை தேர்தெடுத்து கொள்ளலாம் என்று எண்ணினர். ஆனால் ராணுவமும் திரும்ப பெறப்படவில்லை வாக்கெடுப்பும் நடக்கவில்லை.

சனவரி 1,1949-ல் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அந்தப் போர் நிறுத்த எல்லையே காஷ்மீரை இரண்டாகப் பிரித்தது. இந்த 75 வருடத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் மூன்று யுத்தங்கள் நடந்துள்ளன. இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மட்டும் 6,00,000 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். உலகத்திலே அதிக இராணுவமயமாக்கப்பட்ட இடமாக காஷ்மீர் உள்ளது. Chatham House Think Tank நடத்திய வாக்கெடுப்பில் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் பெரும்பான்மையான மக்கள் சர்ச்சைக்குரிய தங்கள் நாடு சுதந்திரமாக வேண்டும் என்று கோரினர்.

இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி ‘ஜம்மு மற்றும் காஷ்மீர்‘ என்று 1954 முதல் அக்டோபர் 31, 2019 வரை இந்தியாவால் ஒரு சிறப்பு மாநிலமாக நிர்வகிக்கப்பட்டது. மேலும், இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவு அதற்கு தனி அரசியலமைப்பு, மாநிலக் கொடி மற்றும் மாநில சுயாட்சிக்கான அதிகாரம் உள்ளிட்ட சிறப்பு அந்தஸ்தை வழங்கியது. ஆனால் ஏப்ரல் 2018-இல், இந்திய உச்ச நீதிமன்றம், மாநில அரசியல் நிர்ணய சபை இல்லாததால், சட்டபிரிவு 370 நிரந்தரமாக்கத் தீர்ப்பளித்தது. இந்தச் சட்டச் சவாலை முறியடிக்க, இந்திய அரசாங்கம் அதற்குப் பதிலாக 370-வது சட்டப்பிரிவை அரசியலமைப்பில் உள்ளபோதும் அதை 'செயலற்றதாக' மாற்றியது. இந்த ஏமாற்றத்தினால் அங்கு பெரும் கிளர்ச்சி வெடித்தது. இது அங்குள்ள மக்களை மிகுந்த அடக்குமுறைகளுக்கு உள்ளாகியது. காஷ்மீரின் விடுதலைக்காகப் போராடியவர்களில் சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் ஃபாரூக் (Syed Ali Geelani, Mirwaiz Umar Farooq) மற்றும் முஹம்மது யாசின் மாலிக் (Muhammad Yasin Malik) முதன்மையானவர்கள்.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் 1994 வரை ஆயுதம் தாங்கிப் போராடினார். அதன் பிறகு ஆயுதத்தைத் துறந்து அமைதி வழியில் போராடி வருகிறார் . அவர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என்று போராடுபவர். அவரின் இந்த போராட்டங்களால் பல குற்றச்சாட்டுகள், பல வழக்குகள் என சட்டத்தால் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகப்பட்டார். பல்வேறு தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகவும், காஷ்மீரின் அமைதியை சீர்குலைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் ஐநா இராணுவ கண்காணிப்புக் குழு காஷ்மீரின் சூழல் குறித்து ஸ்ரீநகரில் முகாமிட்டிருந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பேரணி அறிவித்திருந்த நிலையில் 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரின் அரசியல் செயல்பாட்டிற்காக 18 வயதில் இருந்தே அவ்வப்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) 2017-ஆம் ஆண்டே யாசின் மாலிக்கிற்கு எதிரான பயங்கரவாத குற்றச்சாட்டுகள் மீது விசாரணையைத் தொடங்கியது. லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்திடம் இருந்து அவர் பணம் வாங்கியதாக என்ஐஏ நீதி மன்றத்தில் தெரிவித்தது. யாசின் மாலிக் அந்தப் பணத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்படும் பயங்கரவாதக் குழுக்களுக்கு அனுப்பியதாகவும் அந்த பணம் கல் வீச்சு சம்பவங்களுக்கும், பாதுகாப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் மீதான தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டதாகவும் என்ஐஏ நீதி மன்றத்தில் தெரிவித்தது.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு அவர் 2019-ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டதுடன் காஷ்மீர் சுதந்திரத்திற்காகப் போராடும் அவரின் இயக்கத்தையும் ஒன்றிய அரசு தடை செய்தது. அதன்பின்னர் அவர் மீதான வழக்கு மேலும் அழுத்தமாகப் பதியப்பட்டது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழும் அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு டெல்லி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தீர்ப்புக்கு முன்னதாக, மாலிக் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை எதிர்க்கப்போவதில்லை என்று தெரிவித்தார். தான் காந்திய கொள்கைகளைப் பின்பற்றி வருவதாகவும் 28 வருடங்களாகத் தான் ஏதேனும் தீவிரவாதச் செயல் அல்லது வன்முறையில் ஈடுபட்டிருந்தால், இந்திய உளவுத்துறை அதனை நிரூபித்தால், தாம் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் தெரிவித்தார்.

வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த மே மாதம் 19-ஆம் தேதி நீதிமன்றம் யாசின் மாலிக்கை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. சட்டப்பிரிவு 16 (தீவிரவாதச் சட்டம்), 17(தீவிரவாதத்துக்கு நிதி திரட்டுதல்), 18 (சதி மற்று தீவிரவாத செயல்கள் செய்தலோ), 20 ( தீவிரவாத குழுவில் உறுப்பினராக இருத்தல்), சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்பிரிவு 120B, 124A ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. பத்து வழக்குகளில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், இரண்டு வழக்குகளில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை தவிர 10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தேசிய புலனாய்வு முகமை சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் காஷ்மீர் பண்டிட்டுகளின் கொலைகளுக்கும் இவரே காரணம் என்று தூக்குத் தண்டனைக் கோரி வாதிட்டார். ஆனால் நீதிபதி அதை மறுத்து விட்டார். பட்டியாலா நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு திஹார் சிறை எண் 7-க்கு அழைத்துச் செல்லப்பட்டார். உயர் பாதுகாப்புக் கொண்ட அந்த சிறையில் 13,000 சிறை கைதிகளிடமிருந்து அவர் தனியாகவே வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் கடுந்தண்டனை என்று சொன்னாலும் பாதுகாப்புக் கருதி அவருக்கு எந்த வேலையும் கொடுக்கபோவதில்லை என்று சிறை நிர்வாகம் கூறியுள்ளது. சிறைக்குள் அவரது நடத்தைத் திருப்திகரமாக உள்ளது. அவருக்கு எதிராக எந்த குற்றமும் பதிவு செய்யப்படவில்லை என்று சிறைச்சாலை பதிவுகள் கூறுகிறது.

இந்நிலையில் 1989-ல் உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகமத் சயீத் அவர்களின் மகள் ருபையா சயீத் கடத்தப்பட்ட வழக்கிலும் யாசின் மாலிக்கின் மீது குற்றம்சாட்டப்பட்டது. ருபையா சயீத் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியினரால் டிசம்பர் 8, 1989 அன்று கடத்தப்பட்டு , டிசம்பர் 13 அன்று விடுவிக்கப்பட்டார். அவரின் விடுதலைக்கு ஐந்து பயங்கரவாதிகளை விடுவிக்க கோரபட்டது. இந்த கடத்தல் செயலுக்காகவும், 1990-ல் நான்கு IAF அதிகாரிகளைக் கொன்ற குற்றத்திற்காகவும் 30 ஆண்டுகளுக்கு பிறகு 2020-ல் யாசின் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. சாட்சிகளைத் தானே குறுக்கு விசாரணைச் செய்ய கோரியுள்ளதாகவும், தனது மனுவை அரசு ஏற்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் யாசின் மாலிக் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு ஆகஸ்ட் 23 அன்று நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் யாசின் மாலிக் நீதி மன்றத்தில் ஆஜராக அனுமதிக்கப்படவில்லை. இதற்காக அவர் சிறைச்சாலையிலேயே உண்ணாநோன்பு மேற்கொண்டார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் தனதுக் கோரிக்கை நிறைவேறும் வரை எந்தவொரு சிகிச்சையையும் ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஆனாலும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் மருத்துவமனையில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிறைச்சாலையிலும் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த யாசின் மாலிக் டெல்லிச் சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) சந்தீப் கோயலின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார். 10 நாட்கள் தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டதால் அவரது கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் அது குறித்த முடிவு அவருக்கு தெரிவிக்கப்படும் என்று டிஜிபி நம்பிக்கை தெரிவித்ததால் அவர் உண்ணாவிரதத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டார். இதற்கிடையில் ரூபையா சயீத் நீதிமன்றத்தில் ஆஜராகி 30 ஆண்டுகள் முன் நடந்த கடத்தலில் யாசின் மாலிக் மற்றும் நால்வரை வெறும் புகைப்படம் கொண்டு அடையாளப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

28 ஆண்டுகளாக அவர் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை என்பதை அரசு ஒப்புக்கொள்கிறது. யாசின் மாலிக் கடந்த காலங்களில் பிரதமர்கள் ஐ.கே.குஜ்ரால், அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இவர் வெளிநாடு செல்வதற்காக வாஜ்பாய் அரசு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்கியுள்ளது. இந்த பேச்சு வார்த்தைகள் கடந்த அரசாங்கங்கள் அவர் மீது கொண்ட நம்பிக்கையைக் காட்டுகிறது. 2019-ல் இருந்து அதே திகார் சிறை எண் 7 வளாகத்தில் அடைக்கப்பட்டிருக்கும் யாசின் மாலிக் மீது எந்த குற்றமும் பதிவு செய்யப்படவில்லை மற்றும் சிறைக்குள் அவரது நடத்தை திருப்திகரமாக உள்ளது என்று சிறை அறிக்கையில் உள்ளது. ஆனால் பாதுகாப்பு கருதி அவரை தனிமையிலேயே அடைத்து வைத்து உள்ளனர்.இதே பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி அவரை நீதி மன்றத்துக்கும் அழைத்துச் செல்ல மறுத்து விட்டனர்.

இவை அனைத்தும் ஒரு மனித உரிமை மீறல் குற்றங்களாகவே இருக்கின்றன. குற்றமும் சாட்டப்பட்டவர்களுக்கும் அவரது தரப்பு நியாங்களை சொல்ல நமது அரசியலமைப்பில் இடம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தொடரப்படும் வழக்கில் தனது நியாயத்தைச் சொல்ல அனுமதி மறுப்பது இந்திய ஒன்றிய அரசால் காஷ்மீருக்கான குரல் ஒடுக்கப்படுவதையே காட்டுகிறது. மேலும் காஷ்மீரிய மக்களின் உரிமைகளை மறுப்பதும் பொது வாக்கெடுப்பு நடத்தாமல் இருப்பதுவுமே பெரும் குற்றமாகும். 75 ஆண்டுகளாக இந்திய ஜனநாயக அரசு காஷ்மீர் மக்கள் மீது திட்டமிட்டு இந்த இனப்படுகொலையை நடத்தி வருகிறது.

காஷ்மீரில் மட்டுமல்லாது நாடு முழுவதுமே அரசியல் உரிமைக்காகவும், இந்தப் பாசிச ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு அரசியல் செயல்பாட்டாளர்களையும் இந்த அரசு பயங்கரவாதிகளாகவேச் சித்தரிக்கின்றது. மேலும் அவர்களைப் பொய் வழக்குகளில் கைது செய்வதும் கடுமையான தண்டனை வழங்குவதும் நாடு முழுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு உதாரணம் சமீபத்தில் பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடிய சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமியின் மரணமே ஆகும். சட்டங்களும் நீதிமன்றங்களும் உரிமைக்காகப் போராடும் அரசியல் சமூக ஆர்வலர்களின் குறைந்தப்பட்சப் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே நாட்டின் ஜனநாயகம் நீடிக்கும்.

- மே பதினேழு இயக்கம்