durai nallanபெரியார் உருவாக்கிய திராவிடர் இயக்கம் உங்களது வாழ்வில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

1948-இல் எட்டாவது முடித்தபோது ஒரு வருடம் பயிற்சிப் பள்ளிக்கு இடம் கிடைக்கலை. 15 வயது முடியணும்னு சொல்லி இடம் தரமாட்டேன்டாங்க. பதினாலரை வயது முடிந்து இருந்தது. 15 வயது முடிந்து இருக்கணும். அந்த ஓராண்டு நான் வீட்டில் இருந்தபோது ஒன்பதாம் வகுப்பு முடிச்சுட்டு கூ.சி.பழனிச்சாமி என்பவர் கும்மம்பட்டியில் மேலும் பள்ளிக்கு போகாமல் இருந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்துல கலந்துக்கிட்டவர். பள்ளியில இந்தியைப்பற்றி பேசுனதுனால அவரைத் தண்டிச்சாங்க. தண்டனைக்குப் பயந்து அவர் பள்ளிக்கு போவதையே நிறுத்திட்டார்.

நிறுத்தினாலும் நிறைய படிக்குற பழக்கம் இருந்தது. நூல்களை நிறையா வாங்கி என்னை மாதிரி மாணவர்களுக்குக் கொடுத்தார். நான் எட்டாம் வகுப்பு படிச்சவன் அவரு ஒன்பதாம் வகுப்பு. மற்ற ஐந்தாம் வகுப்பு படித்த அளவுக்கு இருந்தவர் களையும் சேர்த்து, ஒரு பத்துப் பேருக்கு நிறைய புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார். அப்படி வாங்கிக் கொடுத்ததுனால திராவிட இயக்கத்தைப்பற்றித் தெரிந்தோம்.

திருச்சியில் இருந்து முத்துக்கிருஷ்ணன் நடத்திய திராவிடப் பண்ணையில் இருந்து வெளியிட்ட அவ்வளவு நூல்களையும் அவர் வாங்கிக் கொடுத்தார். வாங்கிக் கொடுத்ததோடு நாங்களெல்லாம் படிக்க வேண்டும் என்பதற்காக இந்த பத்து பேருக்கும் சேர்த்து, அவர் கொஞ்சம் வசதியானவர் என்பதுனால வெல்லமும், கடலைப் பருப்பும் வாங்கிக் கொடுத்தார். 8 மணிக்கு படிக்கத் தொடங்கினால் 12 மணிக்கு முடிப்போம். இப்படிப் படித்த புத்தகங்களெல்லாம் பெரியார் எழுதிய அறிக்கைகள், அண்ணா எழுதிய மடல்கள், கலைஞர் எழுதிய நாடகங்கள், மற்றது வெளிநாட்டுக் காரங்களுடையது. இதையெல்லாம் நாங்கள் தொடர்ந்து படித்தபோது இந்த உணர்வு ஏற்பட்டது.

ஜாதகத்தை நம்பி இருந்தால் நான் தோட்ட வேலைதான் பார்த்துட்டு இருப்பேன்

எட்டாம் வகுப்பை முடித்தவுடனே என்னுடைய அப்பா என்னை மேலும் படிக்க வைக்கலாமா? இல்லை தோட்டத்தைப் பார்க்கச் செய்யலாமாங்கறதுக்காக வக்கம்பட்டியில ஒரு சிறந்த ஜோதிடர் இருந்தார். அவர்கிட்ட போய் கேட்டோம். அவர் பையனுக்குப் படிப்பு வராது என்று சொன்னார்.

ஒருவருடம் கழித்து, பயிற்சிப் பள்ளியில் இடம் கிடைத்தபோது மாதம் 12 ரூபாய் உதவித்தொகை கிடைத்தது. என்னுடைய அப்பா என்னை கூப்பிட்டுக் கொண்டு அந்த ஜோதிடர்கிட்ட போய் நீங்க படிப்பு வராதுனு சொன்னீங்க இப்ப வந்து இருக்குதே? அப்படின்னு சொன்னபோது இவனுக்கு 5 ரூபா கூட சர்க்கார் சம்பளம் கிடைக்காது. இந்த ஜாதகக் காரங்களுக்கு கிடைக்காதுன்னார். அப்பா சொன்னார் இப்ப இவன் 44 ரூபா வாங்கீட்டு வந்து இருக்கான். நீங்க இப்படி சொல்றீங்கன்னு சொன்னபோது, அந்த ஜோதிடர், “ஏதோ ஜாதகத்துல கோளாறு இருக்குன்னு” சொன்னார்.

அந்த ஜாதகத்தை எங்க அப்பா இருக்கும்போதே அதை ஒடிச்சு போட்டுட்டார். அதுல இருந்து எனக்கு ஜாதகம் இல்லை. ஏன்னா சொன்னது எல்லாம் தவறாத்தான் சொன்னார். நான் ஜாதகத்தை நம்பி இருந்தால் நான் தோட்டவேலைதான் பார்த்துட்டு இருப்பேன்.

நானும் என்னுடைய துணைவியும் திருமணம் முடித்து ஒரு ஊருக்கு விருந்துக்கு போய் இருந்தோம். அங்கு ஒரு ஜோதிடர் என்னுடைய கையை பாக்கணும்னு சொன்னார். பார்த்துட்டுச் சொன்னார், உங்களுக்கு விரைவிலேயே திருமணம் முடியும்னு சொன்னார். நான் சொன்னேன், திருமணம் முடிச்சுட்டுதான் விருந்துக்கு வந்து இருக்கறோம்னு. அப்படியான்னு மீண்டும் ஒருமுறை பார்த்து நீங்க எழுதுன பரிட்சையில பாஸ் பண்ண முடியாதுன்னார். அடுத்த ஒரு மாசத்துல வந்த ரிசர்ட்ல நான் பாஸ் பண்ணுனேன்.

எந்தக் கைரேகை பார்த்த வரும், பனைமட்டை ஓலையிலிருந்து பார்த்துச் சொன்னவரும், குடுகுடுப்பை அடித்துச் சொல்றவரும் எல்லாமுமே தவறாத்தான் இருக்கு. என்னைப் பொறுத்த வரைக்கும் சொன்னதெல்லாம் தவறாத்தான் இருந்தது. நான் மாத்திக் காட்டுறேன்னு பிடிவாதம் பண்ணுனேன்.

அதே மாதிரி நாலாம் வகுப்பு படிச்சவங்க, 2ஆம் வகுப்பு படிச்சவங்க எல்லாம் ஒரு பத்து இருபதுபேர் சேர்ந்து இந்த நூல்களைப் படித்த பிறகு, நான் ஒரு கருத்துச் சொன்னேன். “நாமெல்லாம் படித்ததைப் பகிர்ந்துக்கலாம். வாரம் ஒருதடவை கூட்டத்துல அவுங்கவுங்க படித்தைப் பற்றி கருத்து சொல்லலாம்னு” அப்படி வச்சுக்கலாமேன்னு சொன்னேன். சரின்னு சொன்னார் பழனிச்சாமி. பத்து, இருபதுபேர் சேர்ந்தோம். கேட்டவர்களும் சேர்ந்து முப்பதுபேர் சேர்ந்துட்டாங்க.

ஒவ்வொரு முறையும் நான் வரவேற்புரை, தலைவர் உரை, சிறப்புரை, நன்றியுரை எல்லாம் எழுதிக் கொடுப்பேன். அது எனக்கே பயனா அமைந்தது. இதற்காகவே எல்லாருமே இந்த திராவிட இயக்க நூல்களைப் படிக்க ஆரம்பிச்சாங்க. படிச்சு, குறிப்பு எடுத்துக்கிட்டு இருந்தாங்க. கும்மம்பட்டியைப் பொறுத்தவரைக்கும் ஒரு 40 பேர் திராவிட இயக்கப் பற்றாளர்களாக மாறினோம்.

பெரியாரின் திராவிட இயக்கமும், அண்ணாவின் திராவிட இயக்கமும் உங்களது கிராமத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

திராவிட இயக்கம் என்று சொன்னபோது சில எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது. தூக்குமேடை நாடகம் நடத்தினோம். அந்த நாடகம் எங்களுக்கு ஒரு சமத்துவத்தை ஏற்படுத்தியது. நாடகத்தில் நடித்த ஊர்லயே முக்கியமான வீட்டுப் பையனான கூ.சி.பழனிச்சாமி “பாண்டியனாக” நடித்தார். “செல்லம்” என்ற சலவைத் தொழிலாளி, “நீதிபதியாக” நடித்தார்.

ஊர்க்காரர்கள் எல்லாரும் என்ன சொன்னாங்க...“ஒரு கீழ்ஜாதிக்காரன், சலவை செய்கிறவன் நீதிபதியாக இருக்க, ஒரு பண்ணையார் மகன் ஊர்ல குற்றவாளியா நிற்கிறதா? இது வேண்டாம்” அப்படிங்கறதுதான் முதல் தடை. அதை மீறித்தான் அவரை நாங்க உட்காரவச்சோம் நாடகத்துல. பரி தைத்தவர்கள், செருப்பு தைத்தவர்கள், எருமை மேய்த்தவர்கள் வீட்டுப் பிள்ளைகளை நாங்க பக்கத்துல வச்சு பேசிக்கிட்டோம். எனவே கொஞ்சம் கொஞ்சமா நாங்க நகர்த்திட்டு வந்ததுல ஊர்க்கார வங்களுடைய எதிர்ப்பு கொஞ்சம், கொஞ்சமா மறஞ்சிடுச்சு.

நாடகத்தன்னைக்கெல்லாம் நாடகத்தையே நடத்த விடமாட்டோம் என்று சொல்லிப் பிடிவாதம் பண்ணியவர்கள் வீட்டுக்குள்ளே போய் சீமெண்ணெய்யை எடுத்துட்டு வந்து நாடகக் கொட்டகையில் தீவைக்க நினைத்தார்கள். வீட்டுக்குள்ள போனபோது, வீட்டுக்கதவை சாத்திக் கொண்டார்கள் வெளியில் இருந்தவர்கள். எல்லாப் பக்கத்துலையும் ஒரு நூறு மாணவர்களுடைய ஆதரவை வைத்து திண்டுக்கல், சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை என்று எல்லா ஊர்காரங்களும் வந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். போலீஸ்காரர்கள் வந்தார்கள். பத்திரிகை நிருபர்களும் 52-இல் கும்மம்பட்டிக்கு வந்து, தினத்தந்தி, தமிழ்நாடு இதழ்களில் செய்தி வெளியிட்டார்கள்.

இப்படி மீறிய போது அந்த ஊர்க்காரர் களுடைய எதிர்ப்பு மாறியது. நாங்கள் ஒற்றுமையாக 40 பேரும் கலை மன்றத்தை ஏற்படுத்தினோம். அதன்மூலம் இராமாயணம் நாடகத்தை கீமாயணம் என்று எம்.ஆர்.ராதா ஆத்தூரில் நாடகம் வைத்தார். அந்த நாடகத்தை நடத்த விடக்கூடாதுன்னு அந்த ஊர்க்காரர்களுடைய எதிர்ப்பு இருந்தது. நாங்க 40 பேரும் 40 தடியோடு போய் நாடகக் கொட்டாயைச் சுத்தி நின்று நாடகத்தை நடத்த வைத்தோம்.

அதேபோல வீரக்கல் என்ற ஊர்ல “பி.எஸ்.செல்வா கலைத்தூதன்” என்பவர்கள் பெரியார், அண்ணா இவர்களை முதல் பாட்டிலேயே பாடி நாடகத்தைத் துவங்குவார்கள். அந்த நாடகத்துக்கு நாங்கள் போய் துணை இருந்தோம். நாங்கள் செய்த அந்தப் பொதுப்பணி... தண்ணீர் இல்லாத கடுமையான பஞ்சம் நாங்கள் கிணறு வெட்டினோம்.இப்ப இருக்கக்கூடிய கிணற்றை ஆழப்படுத்தினோம். தெருக்களை எல்லாம் சுத்தப்படுத்தினோம். திருடர்கள் வந்து பொருட்களை கவராமல் இருப்பதற்காக நான்கு பக்கமும் பத்துப் பத்துபேர் இரவு நேர காவல் புரிந்தோம்.

அந்தக் காலத்துல பகைனாலே முதல் எதிர்த்து தீவைப்பதுதான். அந்தத் தீ வைப்பவர்களைக் கண்டுபிடித்து அந்தத் தீயை உடனே அவிப்பதற்காக நாங்க முதல்லையே கருவிகளை வைத்து இருந்தோம். ஒரு இடத்துல இருந்து விசில் சத்தம் கேட்டால் 40 பேரும் அந்த இடத்துக்கு போனோம். இந்த மாதிரியான செயல்கள் எங்களுக்கு திராவிட இயக்கத்தினுடைய கொள்கையைப் பரப்புனாலும் எதிர்ப்பைக் குறைத்து இருந்தது. திராவிட இயக்கம் நூல்களினால் பெற்ற அறிவு எங்களுடைய தொண்டு உள்ளத்தால் கிடைத்த ஆதரவு, இரண்டும் சேர்ந்ததுதான் அந்த ஊரின் வளர்ச்சி.

அப்போது நாங்கள் கட்சி தொடங்கவில்லை. தொண்டுதான். அந்த எண்ணம் இன்றைக்கு வரைக்கும் இருக்குது. ஒரு கட்சியில உறுப்பினரா இல்லை. ஆனா கருத்துகளை எங்களால் முடிந்த அளவுக்குப் பரப்பினோம். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாத இதழான “நமது தமிழாசிரியர்” இதழை, 20 ஆண்டுகள் நடத்தினேன். 20 ஆண்டுகளும் ஒருமுறைகூட எந்தச் சமய விழாவையும் வாழ்த்தி அல்லது அந்த நிகழ்ச்சியை வெளியிட்டு இதழ் நடத்தவில்லை. ஆனால் தலைவர்களுடைய காமராசர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர்களுடைய படங்களையும், தமிழ் அறிஞர்களுடைய படங்களையும் வைத்து 20 ஆண்டு இதழ் நடத்தியபோதும் எனக்கு அடிப்படையாக இருந்தது, கும்மம்பட்டியில் போட்ட விதை. அது மரம் வளர்ந்ததுனால தமிழ்நாடு முழுதும் என் நண்பர்கள் இன்று பரந்து இருக்கிறார்கள்.

1928 லிருந்து பெரியார் நடத்திய சுயமரியாதைத் திருமணங்கள் சட்டபடிச் செல்லாதவை. சமுதாயத்திலும் கடும் எதிர்ப்புகள் இருந்தன. சட்டப்பாதுகாப்பு இல்லாததையும், சொந்த ஊர்க்காரர்களின் எதிர்ப்புகளையும் எவ்வாறு கையாண்டீர்கள்?

1952 இல் நாங்க ஒரு நாடகம் நடத்தினோம். தூக்குமேடை. அதற்கு சுமார் 2 ஆண்டு ஒத்திகை. ஏன்னா அதற்கு முன்னால “வள்ளிதிருமணம்”, “அல்லிஅரசாணி” போன்ற புராண நாடகம்தான் இருக்கும். ஆனா நாங்க முதன் முதல்ல அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட “தூக்குமேடை” நாடகத்தை “இளைஞன் குரல்” என்ற பெயரில் நடித்தோம்.

நாடகத்துல விருப்பப்பட்டு சாதி பார்க்காம, ஏழை பணக்காரர் பார்க்காம பாண்டியனும், வேணியும் திருமணம் முடிக்கிறார்கள். அந்தத் திருமணக் காட்சியில நான் அதுல தமிழாசிரியரா இருந்தாலும் கூட அய்யர் தமிழாசிரியர். என்னைமீறி அவர்கள் திருமணம் முடிக்கிறார்கள். புரோகிதர் இல்லாத திருமணமா அங்க முடியற மாதிரி கதை அமைப்பு.

சொந்த வாழ்க்கையிலும், அது போலத் திருமணம் நடத்தணும்னு முதல்ல கு.சி.பழனிச்சாமிக்கு அய்யர் வரச்சொன்ன பிற்பாடும் கூட அவர வேண்டாம்னு சொல்லீட்டு நான் திருமணத்தை நடத்தி வச்சது முதல் திருமணம். அந்தத் திருமணத்திற்கு காசி பாளையம் கல்வார்பட்டில இருந்து எல்.வீரராசன் என்ற திராவிடர் கழக தலைவர், அவரைக் கூப்பிட்டு வந்து தலைவராக வைத்து, நான் வாழ்த்துரை வழங்கி திருமணத்தை முடிச்சோம்.

ஒலிபெருக்கி வச்சுக்கிட்டோம். ஒரு மேஜை, இரண்டு நாற்காலி போட்டு, பத்துப் பேரை உட்கார வச்சு கூப்பிட்டு நடந்த திருமணம். அதுதான் முதல் திருமணம். இப்படி நடத்தியதைப் பார்த்து, அடுத்தடுத்து கும்மம்பட்டியில யார் வீட்டுல திருமணம்னாலும் என்னையக் கூப்பிட ஆள் அனுப்பீட்டாங்க. அய்யரைக் கூப்பிடுறதை விட்டுட்டாங்க. அப்படி எனது திருமணத்திற்கு முன்னாலேயே 50, 100 திருமணம் நடத்தி இருக்கேன்.

கும்மம்பட்டியில நான் என்னுடைய திருமணத்திற்கு முன்னால திருமணம் நடத்தி வைத்த, “கு.தில்லான்-–ஆராயி” என்ற தம்பதியர் இன்றைக்கும் இருக்காங்க. “கு.சி.பழனிச்சாமி-இராசம்மாள்” அந்த இரண்டு பேரும் இல்லைன்னாலும்கூட அவுங்களுடைய குடும்பம் நல்லா இருக்குது. அவர்களுடைய மகன் தான் வணங்காமுடி. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தரா இருந்து ஓய்வு பெற்றவர். அடுத்த பையன் கூட்டுறவுல எழுத்தரா இருந்து அவரும் ஓய்வு பெற்றார். அந்தக் குடும்பம் நல்லா வளர்ச்சியா இருக்குது.

இப்படி நானே இத்தனை திருமணத்தை நடத்தினேன். நல்லூர் போன பிறகு நான் ஒரு 20 திருமணத்தை நடத்தி வச்சேன். அப்ப போய் எங்க திருணத்தைப் பற்றிப் பேசுனாங்க. என்னுடைய நோக்கம் முழுக்க அந்த மக்களுக்கு கல்வி அறிவு ஏற்படுத்தணும். நாமும் மேலும் படிக்கணும்னு படிச்சுட்டு இருந்தேன்.

அரசியல் கட்சிகள் சம்பந்தமா, மு.காதர்ஷா, எம்.பி.அப்போ கல்லூரியில படித்தார், அவர் வீட்டுக்கு வருவார். முத்துசாமி சட்டமன்ற உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துல படிச்சார், அவர் வருவார். வி.பி.பாலசுப்பிரமணியம் படிச்சுட்டு இருந்தார் அவரும் வருவார். ஆனா அவர் என்னுடைய மாணவர் இல்லை. இந்த மூணுபேரோட வீட்டுப் பிள்ளைகளும், தம்பிகளும், தங்கைகளும் என்னிடம் படிச்சதால அனைவரும் வந்திட்டு இருந்தாங்க.

பக்கத்துப் பள்ளி ஆசிரியர்களும் என்னோட அன்பா இருந்து ஞாயிற்றுக்கிழமை நல்லூருக்கு வருவார்கள். என்னுடைய கவனம் பூராம் ஆசிரியர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், மரமேறிகள், செருப்புத் தைப்பவர்கள், பன்றி மேய்ப்பவர்கள், முடிதிருத்து பவர்கள் இவர்களின் வீட்டோட சொந்தபந்தப் பிள்ளைகளைப் படிக்க வைப்பது. இதுலதான் கவனம் இருந்தது.

என்னுடைய மாமா, இவுங்க சின்னம்மா வேலை பார்த்த அந்தப் பள்ளியிலேயே வேலை பார்த்ததுனால என்னுடைய மாமா ஏற்பாட்டுல ஒரே நாள்ல நானும் சம்மதித்தேன். இவுங்களும் சம்மதிச்சாங்க. அதற்குப் பின்னால நான் எப்படியோ இத்தனை திருமணத்தை நடத்தி வச்சதுனால இவுங்க தாத்தாகிட்ட சொன்னேன். “நாங்க அய்யர் வச்சுக்குற பழக்கம் இல்லைன்னு” சொன்னேன். “நீ எப்படியோ வச்சுக்கப்பா... ஞாயிற்றுக்கிழமை பொண்ண கும்மம்பட்டிக்கு அனுப்பி வைக்கிறேன் அப்புறம் அவுங்க உங்க சொந்தம் நீ எப்படி வேணுணாலும் நடத்திக்கலாம்னு” சொன்னார்.

அதுனால நான் அய்யர் இல்லாத திருமணத்தை நடத்தினேன். எனக்கு வாழ்த்துரை வழங்கக்கூட யாரும் வரலை. எங்க உறவினர்கள்ல யாருமே இந்த மாலையை எடுத்துக் கொடுக்க சொன்னேன். ஒருத்தர்கூட முன்னுக்கு வரலை. நீ உன்னோட பிரியத்துக்கு எதையாவது செஞ்சுகிட்டு இருக்க. இங்க எத்தனையோ பெண்கள் இருக்குது. நாங்கள் சொல்றதையும் கேட்கலை. இப்ப அய்யரையும் வேணாங்கிற வரலைனு சொல்லி முன்வரிசையில் உட்கார்ந்து இருந்தாங்க. ஆனா வரலை. நல்லூர் காரங்க கொஞ்சம்பேர் வந்து இருந்தாங்க.

ஊர்க்காரர்கள்கூட, நான் அந்த முறையோட அழைக்கலைங்கறதால நிறையபேர் வரவில்லை. அந்த ஊர் வெத்தலை, பாக்கு என்று ஒரு சடங்கு முறையில அழைக்கணும். அத நான் செய்யலை. எனவே அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாம, நானா தாலியை எடுத்துக்கட்டி, நானா மாலையைப் போட்டேன். அவுங்க எனக்கு மாலையைப் போட்டாங்க. காந்தி கிராம பல்கலைக்கழகத் தமிழ் பேராசிரியர் ரெங்கராஜன் அந்த நேரம் வந்தார். தம்பி புலவர் பழனிச்சாமி கூட்டீட்டு வந்தார். அவருடைய வாழ்த்துரையோட நிறைந்தது. எனக்கு இது ஒரு மனநிறைவு. சட்டம் அனுமதி இல்லை, அத சட்டப்படிக் கொண்டு வந்தது அண்ணாதான். அவர் 68 இல் கொண்டு வந்தார். நான் 58 இல் இருந்து 68 வரைக்கும் ஒரு 200 திருமணம் நடத்தி வச்சு இருப்பேன்.

உங்கள் சொந்த ஊருக்குத் தொடர்பில்லாத எரியோடு பகுதியில் உள்ள நல்லூர் கிராமத்தில் தமிழாசிரியராகப் பணியேற்ற பிறகு அந்தப் பகுதிகளில் திராவிட இயக்கம் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

நாலு பேரு 5 ஆம் வகுப்பு படிக்கிறான். 3 கவுண்ட, பிள்ளைமார் பையன் பெஞ்சுல உட்கார்ந்து இருக்கான். ஒரு சக்கிலியர் பையன் கீழ உட்கார்ந்து இருக்கான். “ஏண்டா நீ எந்த வகுப்பு படிக்கிறனு” பள்ளிக்கு போனவுடனே கேட்டேன். “5 ஆம் வகுப்புனு” சொன்னான். “ஏண்டா கீழ உட்கார்ந்து இருக்க”னா, “அவுங்க பெரிய ஜாதி, உட்கார கூடாதுங்”குறான். “மேல உட்கார்றானு சொன்னா”... இந்த மீதி மூணு பேர் எந்திரிச்சி நின்னான். அவன உக்கார விடமாட்டேன்ட்டான்.

அந்த மாதிரி இருந்த ஒரு நேரம். அவுங்களை எல்லாம் ஒண்ணு சேர்த்து... அந்தப் பிள்ளைகளுக்கு நான் ஆசிரியர், அந்தப் பிள்ளைகளுடைய அண்ணன்களெல்லாம், மாமன்களெல்லாம் என் வயது இருந்ததுனால, நண்பர்கள். அவர்களையும் படிக்க வச்சேன். இரவு நேரத்துல அவர்களுடைய அப்பா, அதாவது 2 ஆம் வகுப்பு படிக்கிற பிள்ளைகளுடைய அப்பாவும், பாட்டனும் என்னுடைய மாணவர்கள் தான்.

நான் பதினெட்டு வயதில் ஆசிரியராப் போனேன். என்னிடம் அறுபது வயதுள்ள மாணவர்கள் 5, 6 பேர் படித்தார்கள். அந்த மாதிரி நான் அவர்களுக்கு, அவர்களுக்கும் கல்வி அறிவு வரணும் தன்னுடைய பரம்பரையையும் படிக்க வைக்கணும். முதல்ர பாட்டன், பாட்டிக்கு கல்வி அறிவு. இரண்டாவது என் நண்பர்களைச் சீர்திருத்தவாதிகளாக ஆக்குவது. மூன்றாவது இந்தப் பிள்ளைகளைப் பத்தாம் வகுப்பு வரைக்கும் படிக்க வைப்பது. மூணு திட்டத்துலையும் வேலைசெய்து மூணுலையும் வெற்றிதான்.

அங்க நான் ஒண்ணாம் வகுப்பில் சேர்த்துவிட்ட மாணவர்களுக்கு, நானே பத்தாம் வகுப்பு வரைக்கும் ஆசிரியராகி, அவர்களுக்குத் திருமணமும் முடித்து வைத்து, அவர்களுடைய குழந்தைகளுக்கும் திருமணம் முடித்து வைத்திருக்கிறேன். அப்படி நல்லூர் பகுதியில ஒரு ஐம்பது, அறுபது குடும்பத்தை நான் முன்னேற்றியிருக் கிறேன். அவுங்களும் இன்றைக்கு எங்க பிள்ளைகளுக்கு எல்லாம் சீர்வரிசை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்களும் அந்தப் பிள்ளைகளுக்கு சீர்வரிசை செய்து கொண்டுதான் இருக்கிறோம். என்னுடைய மாணவர்களுடைய பேரன் பேத்திகளுக்கு அவர்கள் நன்றி மறக்காம இருக்கிறார்கள். நாங்களும் அதைச் செய்து கொண்டிருக்கிறோம்.

இருபது கி.மீ சுற்றளவுள ஒரே ஒருத்தர்தான் போலீஸ். மற்ற அவ்வளவு பேரும் மாறி, மாறி உழுவணும், பன்றி மேய்க்கணும் இதுதான். பன்றி மேய்த்தவர் வீட்டுப் பையனை நான் பத்தாம் வகுப்புப் படிக்க வச்சு, அந்தப் பெற்றோர்களுக்குச் சொல்றது எல்லாம் சொல்லி, அவுங்க அண்ணன், அவுங்களுக் கெல்லாம் நானே அவுங்க வீட்ல போய்த் திருமணம் நடத்தி வச்சு, அந்தப் பையங்க படித்தார்கள்.

அதன் பிற்பாடு நம்ம பகுதிக்கே லைன் இன்ஸ்பெக்டரா வந்தார். அவர்களுடைய குழந்தைகள் எல்லாம் காந்தி கிராமத்துல எம்.ஏ., எம்.எஸ்.சி. படிச்சிட்டு இருக்காங்க. அப்படி அந்த ஊர்ல இருந்து படிச்சுட்டு அந்த ஊரக் காலி பண்ணிட்டு, வெளில போய்ட்டாங்க. நல்லா வசதியா, தொகை வசதியிலும் நல்லா இருக்காங்க. படிப்பிலையும் உச்சத்துல இருக்காங்க. பெரிய பொறுப்புல இருக்காங்க.

இளையபாரதி என்றவர் பம்பாயில் இந்திப் படத்தயாரிப்பாளரா இருக்காரு. பம்பாயிலிருந்து எனக்கு இரண்டு, மூன்று முறை டிக்கெட் அனுப்பி வைத்தார். நான் தான் போக முடியாமல் போச்சு. அதனால் நம்மால் முடிந்த அளவுக்கு 52 லேயே வேலையைத் தொடங்கி 1972, 1978 வரையிலும் இந்த வேலையைப் பார்த்தேன்.

படிக்க வைக்கவே கூடாத குடுகுடுப்பை என்று ஒரு இனம். மக்கள் தொகைக் கணக்கு எடுப்புக்காகப் போனேன். அப்பாவு என்ற குடும்பத் தலைவனைப் பார்க்கணும்னு போனேன். அவருடைய மனைவி தான்னு ஒரு அம்மா சொன்னாங்க. அந்த அப்பாவு வயது 5. அந்தப் பெண்ணுக்கு வயது 32.

உங்க வீட்டுக்காரரை வரச்சொல்லுங்கம்மா, கூப்பிடுங்கம்மா கணக்கு எடுக்கணும்னு சொன்னேன். இந்தா பாருங்க விளையாடிட்டு இருக்கார்னு சொன்னாங்க. உங்க பையன் வேண்டாம் உங்க வீட்டுக்காரரை வரச்சொல்லுங் கன்னு சொன்னேன். அவருதான் எங்க வீட்டுகாரர்னு சொன்னாங்க. அவரைக் கூப்பிட்டு வேண்டாம்பா... இப்படியெல்லாம் இருக்கக் கூடாதுன்னு சொல்லி, இந்த அம்மாளுக்கும் சொல்லி, அவனக் கொண்டு போய் ஒண்ணாம் வகுப்புல சேர்த்து விட்டேன்.

ஐந்தாம் வகுப்பு வரைக்கும் படித்த பிற்பாடு, நான் உயர்நிலைப் பள்ளிக்குப் போனதுக்கு அப்புறம் என்கிட்டையே கணவரைக் கூட்டிட்டு வந்து சேர்த்துவுட்டுச்சு. அவனப் பத்தாம் வகுப்பு வரை படிக்க வச்சு பாஸ் பண்ணிவிட்டேன். அவன் இப்பக்கூட எங்க ரெண்டு பேரையும் காட்டாஸ்பத்திரியில பார்த்து அந்த குடுகுடுப்பை அடிக்கிறதையும் விட்டுட்டதா சொன்னார்.

இதுபோல திருமணம் முடித்த பெண்கள் 5, 6 பெண்கள் என்கிட்ட வந்து படிச்சாங்க. சின்ன ராவுத்தம்பட்டி என்ற ஊரில் நான் ஒரு பள்ளியைத் தொடங்கி வைப்பதற்காகப் போனேன். அங்க குருசாமின்னு ஒரு ஆசிரியர் வந்தார். அவருக்கு துணையா அந்தப் பள்ளியைத் தொடங்கி வைக்கப் போனேன். அங்க ஒண்ணாம் வகுப்புல 10, 15 பேரைச் சேர்த்துவிட்டாங்க. ஒரு பத்துப்பேர் திருமணம் முடித்தவர்கள்தான்.

ஏறுக்கு மாறாதான் இருக்கும். அவனுக்கு வயது 40 இருக்கும். அந்தப் பிள்ளைக்கு 6 வயது இருக்கும். இந்தப் பையனுக்கு 8 வயது இருக்கும். அந்தப் பிள்ளைக்கு 25 வயது இருக்கும்.

இந்தமாதிரி ஒரு சமுதாயத்துல, எத்தனையோ பேர்பெரிய தொண்டு செய்து இருப்பாங்க. என் அளவுக்கு ஒரு ஆசிரியர் என்ன செய்யணுமோ, என் பங்கைச் செய்து இருக்குறேங்கறதுதான் எனக்கு மனநிறைவு.

Pin It