மாநாட்டில் நிறைவாக உறுதிமொழியைப் படிப்பதற்கு முன், கழகப் பொதுச் செயலாளர் நிகழ்த்திய சுருக்கமான உரை:

இந்த மாநாட்டைப் பொறுத்த வரை மாநாடு அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இருக்கிற நமது தோழர்கள் ஆற்றிய பணி மிகப் பெரிய அளவிடற்கரியது; மதிப்புக்குரியது. குறிப்பாக கடைவீதிகளில் சாதாரண மக்களை சந்தித்து கடைவீதி வசூல் என்ற ஒரு இயக்கத்தைத் தொடங்கி இரண்டு மூன்று வாரங்களாக தோழர்கள் இதே பணியை செய்து மாநாட்டிற்கு நிதி திரட்டினார்கள். சுவர் எழுத்து விளம்பரங்களை செய்தனர், மாநாட்டுப் பணிகளில் தங்களை முழுமையாக மூழ்கடித்து, அர்ப்பணித்து செயல்பட்டனர். இந்த மாநாடு மிகப் பெரிய வெற்றியடைவதற்கு அடித்தளமிட்டது, கழகச் செயல் வீரர்களின் கடுமையான உழைப்பு ஒன்று மட்டும்தான் என்பதை இந்த மாநாட்டின் வழியாக நாம் சொல்லியாக வேண்டும்.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் அந்த மாவட்ட கழகத் தோழர்கள் கடைவீதி வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திக் காட்டினார்கள். தொடர்ச்சியாக மக்களை சந்தித்து சாதாரண மக்களிடம், கடை மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து ஒரு மிகப் பெரிய தொகையினை திரட்டி இந்த மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள். இந்த மாநாட்டிற்கு நாங்கள் தலைப்பை தேர்வு செய்து கொடுத்தபோது இந்த தலைப்பே தோழர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் பேரெழுச்சியையும் தந்தது என்பதை எங்களால் உணர முடிந்தது. இரண்டாம் முறையாக அதுவும் இரண்டு நாள் மாநாடாக நடத்தி இந்த மாநாட்டிற்காக ஒரு நோக்கத்தை வரையறுத்தோம். அதற்கான செயல் திட்டத்தை உருவாக்கினோம். இந்த மாநாட்டின் உண்மையான நோக்கத்தில் 100% வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை பெருமையோடு மகிழ்ச்சியோடும் நாம் ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடலாம்.

viduthalai rajendran 305குறிப்பாகச் சொல்லப் போனால் சேலம் மாவட்ட தோழர்களின் உழைப்பு அவ்வளவு சாதாரணமானதல்ல. சேலத்தில் மிகப் பெரிய எண்ணிக்கை யில் தோழர்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் இதற்காக செய்த அர்ப்பணிப்பும், கடும் உழைப்பும் விலை மதிப்பில்லாதது மட்டுமின்றி பாராட்டக்கூடிய ஒன்று. கடுமையாக உழைத்து இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்த சேலம் மாவட்ட கழகத் தோழர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் தலை தாழ்ந்த வணக்கத்தை, மகிழ்ச்சியை உளப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இந்த மாநாடு அறிவிக்கப்பட்டதிலிருந்து மிகுந்த உற்சாகத்தோடு எந்தவித தூண்டலும் இல்லாமல் தன் முனைப்பாக எழுந்து களப்பணியாற்றிய நிகழ்வை நாங்கள் முகநூல் வழியாக, தோழர்கள் அனுப்பிய செய்திகளின் வழியாக உணர முடிந்தது. எங்களுக்கே இவ்வளவு வலிமையான தொண்டர்களைப் பெற்ற இயக்கத்திற்கு பொறுப்பாளர்களாக இருக்கிறோமா என்றவொரு நம்பிக்கையையும், உணர்வையும், பெருமிதத்தையும் உங்களது உழைப்பும் களப்பணியும் தந்திருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சில தனித்துவமான பண்புகளை கட்டிக் காட்ட வேண்டும். அந்தப் பண்பு சட்டத்தால் வரிகளால் எழுதப்படாத ஒன்று. எந்த வேலை செய்தாலும் அதில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்ற விளம்பர வெளிச்சம் இல்லாமல் செயலாற்றக் கூடிய தொண்டர்களை கொள்கை உணர்வாளர்களைக் கொண்ட இயக்கமாக திராவிடர் விடுதலைக் கழகம் நிமிர்ந்து நிற்கிறது. அதேபோல இந்த மாநாட்டை இளம் தலைமுறையினரின் மாநாடாக நாம் அறிவித் திருந்தாலும் வேறெந்த தேர்தல் அரசியலில் ஈடுபடாத கட்சியிலும் இயக்கங்களிலும் இல்லாத அளவிற்கு கொள்கை அர்ப்பணிப்புள்ள இளைஞர்களை மட்டுமே கொண்ட இயக்கமாக திராவிடர் விடுதலைக் கழகம் இருக்கிறது என்பதை இன்றைய பேரணியும் மாநாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு நிரூபித்து காட்டியிருக்கிறது. நமது அமைப்பில் தலைமை பொறுப்பில் இருக்கிற பொறுப்பாளர்களைத் தவிர மற்ற அனைவரும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆவார்.

இந்த மாநாட்டில் நாங்கள் பார்த்து வியந்த ஒன்று, இந்த மாநாட்டில் பேச்சாளர்களாக கருத்தாளர்களாக நமது இயக்கத்தைச் சேர்ந்த தோழர்களை அதிகளவு பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். அதற்காக நம்முடைய தோழர்களை தேடித் தேடி கண்டுபிடித்து, பெண் தோழர்கள், ஆண் தோழர்கள் என நமது தோழர்களையே மேடை ஏற்றினோம். ஆனால் இரண்டு நாட்களாக நம்முடைய தோழர்கள் ஆற்றிய கருத்துரைகள், சிந்தனை வெளிச்சங்கள் எங்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டன. இந்த மாநாட்டைப் பார்த்தவர்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தில் உணர்ச்சியுள்ள தோழர்கள் மட்டுமல்லாமல் அறிவார்ந்த கருத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் கொண்ட இளைஞர்களின் இயக்கமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது என்று பாராட்டுகிறார்கள்.

மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டதைப் போல கட்சி அரசியலில் ஈடுபடாத இவ்வளவு பெரிய இளைஞர்கள் கூட்டம் இங்கே இருப்பதை பார்த்து நான் வியந்துப் போனேன்; பெருமைப்படுகிறேன் என்று சொல்லுகிற அளவிற்கு அவர்களை வியப்படையச் செய்கிற சக்தியாக நாம் இன்று நிமிர்ந்து நிற்கிறோம். இந்த சக்தியை நாம் மீண்டும் வளர்த்தெடுப்போம். இந்த சக்தி தமிழ்நாட்டின் சமூகக் களத்தை நிர்ணயிக்கின்ற ஒரு சக்தியாக நாம் மாற்றிக் காட்டுவோம்.

அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்குகிற தோழர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். இத்தனை குறும்படங்களை தயாரித்தவர்கள், சுவரெழுத்து விளம்பரங்களை செய்தவர்கள், இந்த மாநாட்டிற்காக மக்களை சந்தித்து அவர்களது மொழியில் கருத்துக்களை தெரிவித்தவர்கள் என்று பல்வேறு துறைகளில் திறமையுள்ள இளைஞர்களைக் கொண்டது நமது கழகம். நமது வெளியீடுகளுக்கு நமது இயக்கத் தோழர்கள் தான் அட்டை படங்களை வடிவமைக்கிறார்கள்; நமது இயக்கத் தோழர்கள் தான் நூல்களை வடிவமைக்கிறார்கள்; நமது இயக்கத் தோழர்கள் தான் கணிப்பொறியை மிகச் சிறப்பாக பயன்படுத்துகிறார்கள்; நமது இயக்கத் தோழர்கள் தான் குறும்படங்களை தயாரிக்கிறார்கள்; நமது இயக்கத் தோழர்கள் தான் குறும்படங்களுக்கு எழுத்து வடிவங்களை தருகிறார்கள்; நமது இயக்கத் தோழர்கள் தான் ‘எடிட்’ செய்கிறார்கள்; இயக்குகிறார்கள்; சிறந்த இசைக் கலைஞர்கள், பாடகர்கள் இங்கே இருக்கிறார்கள். இப்படி நமது இயக்கம் வலிமை கொண்ட இளைஞர் படையாக, கருத்தாயுதம் மிக்க தொண்டர்களைக் கொண்ட இயக்கமாகப் பெண்களும் ஆண்களுமாக வீறுநடைபோட்டு கம்பீரமாக நிற்கின்றது. நமது இயக்கத்திற்கு இந்த இரண்டு நாள் மாநாடு புதிய நம்பிக்கையை ஊட்டும், புதிய நம்பிக்கையோடும் வெளிச்சத்தோடும் நாம் பயணிப்போம் என்பதை இந்த மாநாடு உறுதிப்படுத்துகிறது, என்றார் விடுதலை இராசேந்திரன்.

Pin It