குடந்தையில் நடைபெற்ற கழக மண்டல மாநாட்டுக்கு வருகைப் புரிந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. குடியரசுத் தலைவர் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுகிற ஒரு அரசு ஊழியர் என்பது தான் இவரது தகுதி நிலை ஆகும். ஆளுநர் தன்னிச்சையாக எதிலும் செயல்பட முடியாது. அமைச்சரவையின் ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பது தான் அரசியலமைப்பு அவருக்கு விதித்திருக்கிற கடமை ஆகும். ஆளுநர் உரை என்பது கூட அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை படிப்பது தானே தவிர ஆளுநர் தனது கருத்தை சொல்வதற்கு உரிமை இல்லை. ஆனால், அண்மைக் காலங்களில் தமிழ்நாடு ஆளுநர், ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினால், அரசியலமைப்புச் சட்டத்தில், மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க காலவரையறை இல்லை என்பதை மட்டும் வைத்துக் கொண்டு, இதுவரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களைக் கூட முடக்கிப் போட்டிருக்கிறார்.

தெலுங்கானாவில் உள்ள அரசுக்கும் ஆளுநருக்கும் பல முரண்பாடுகள் இருந்தாலும், தெலுங்கானாவின் ஆளுநர் ஒரு மசோதாவைக் கூட நிறுத்தி வைக்கவில்லை. இது அந்த ஆளுநரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஆனால் தமிழ்நாட்டு ஆளுநர், தமிழ் வழியில் தேர்ச்சிப் பெற்றவர்கள் தான் தமிழ்நாடு அரசுப் பணியில் வர முடியும் என்று தமிழ் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு கூட ஒப்புதல் அளிக்கவில்லை. இதில் அவருக்கு என்ன சிக்கல் ?

எழுவர் விடுதலையைப் பொறுத்தவரை, பேரறிவாளன் தொடுத்த வழக்கில் ஏற்கெனவே இருந்த இரஞ்சன் கோகாய் தலைமையில் இருந்த ஆயம், மாநில அரசு 161 விதியின் கீழ் விடுதலை செய்யலாம்  என்று கூறியிருக்கிறது. அதற்கான பரிந்துரையினை மாநில அரசு கொடுத்தும், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது என்று காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார் ஆளுநர். இந்த விடயத்தில் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறது. "ஏன் தாமதமாகிறது? நாங்களாகவே (உச்சநீதிமன்றம்) விடுவிக்கப்பட வேண்டிய சூழல் வந்துவிடும்." என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

எனவே அவரின் செயல் அப்பட்டமான அரசியலமைப்புச் சட்ட விதிமீறல் ஆகும். நாம் கல்விக் கொள்கையில் இருமொழிக் கொள்கை கொண்டிருப்பவர்கள். ஆனால் இவர் செல்லும் இடங்களிலெல்லாம் மும்மொழிக் கொள்கையைப் பற்றி பேசுகிறார்; இராமராஜ்ஜியத்தைப் பற்றி பேசுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, முரணான கருத்துக்களை தொடர்ந்து பேசி வருவதன் வழியாக, நமக்கு எதிரான ஒருவராக, தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிரான ஒருவராகத் தான் ஆளுநரை புரிந்து கொள்கிறோம். இப்படிப்பட்ட ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெறுவது என்பது அவரின் மரியாதையைக் காப்பாற்றியதாக இருக்கும். அது, தமிழர்அனைவருக்கும் நலமாகவும் அமையும்” என கொளத்தூர் மணி தெரிவித்தார்.

Pin It