ஆன்மீகம் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதே நமக்குப் புரியவில்லை.

அகராதியில் இதற்கு எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆன்மீகம் என்பது ஒருகாலத்தில் எப்படி பார்க்கப் பட்டது? சனாதன வேதமதவாதிகள் ஒரு மதத்தைக் கட்டமைத்து, அதில் பார்ப்பனிய மேலாண்மையை உயர்த்திப் பிடித்து அதற்கான சடங்குகள், வழிபாட்டு முறைகளை உருவாக்கினார்கள். அப்படி கட்டமைக்கப்பட்ட ஒரு மதத்தை உருவாக்கியபோது, அதிலிருந்து விலகி நின்றவர்கள் 'ஆன்மீகவாதிகள்' என்று கருதப்பட்டார்கள். இராமகிருஷ்ணர், விவேகானந்தர், வள்ளலார், அரவிந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, இப்படி ஏராளமான பட்டியல்கள் உண்டு. இவர்கள், கட்டமைக்கப்பட்ட சனாதன மதத்தின் கருத்துக்களை அப்படியே ஏற்காமல், அதில் பல கருத்துகளிலிருந்து மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தனர்.

பிறகு ஆன்மீகம் என்பது சில கார்ப்பரேட் சாமியார்களின் கைகளுக்கு வந்தது. யோகா, தியானம், என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, உலகம் முழுவதும் கிளைகளை அமைத்துக் கொண்டு, அதற்கு காப்புரிமை பெற்றுக் கொண்டு, அதோடு பன்னாட்டு வணிகத்தையும் செய்து கொண்டு கோடிக் கணக்கில் வணிகமாக, தொழிலாக நடத்தினர். ‘ஆன்மீகம்’  அடுத்த கட்ட சீரழிவை நோக்கி சென்றது.

இப்போது வைதீகம், வர்ணாஸ்ரம தர்மத்தை வெளிப்படையாகப் பேசினால் மக்கள் விழித்துக் கொண்டு ஏற்க மாட்டார்கள் என்று பார்ப்பனியம் நயவஞ்சகமாக ‘ஆன்மீகம்’ என்ற சொல்லை கையில் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. திருவாரூரில் தியாகராஜ சுவாமிகள் தேரை ஓட வைத்தது கலைஞர் தான். அந்தக் கோவில் தேர் ஆண்டுக்கு ஒரு முறை ஓடும் மேல வீதிக்கு திருவாரூர் நகர சபை 'கலைஞர்' பெயரை சூட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இது ஆன்மீகத்திற்கு எதிரானது மனுநீதி சோழன் பெயரை சூட்டுங்கள் என்று சொல்லிக் கொண்டு பாரதிய ஜனதா கட்சி ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை திருவாரூரில் நடத்தியிருக்கிறது. இதற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? கலைஞர் என்ற சூத்திரர் பெயர் வைக்கப்பட்ட தெருவில் தியாகராஜன் பவனி வந்தால் தீட்டாகி விடுவாரா? இந்தத் தீட்டுக்குப் பெயர் தான் ஆன்மீகமா? இந்த ஆன்மீகத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டா? இந்த ஆன்மீகம் ஜாதியத்தை எதிர்க்கிறதா? ஆதரிக்கிறதா? இந்த ஆன்மீகம் சமூக சுரண்டலை ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இவர்களிடம் பதில்கள் இல்லை.

பாரதிய ஜனதா கட்சி பேசுகிற ஆன்மீகம் என்பது, திராவிட முன்னேற்றக் கழக எதிர்ப்பு - என்றாகி விட்டது. அடுத்து மோடிக்கு 'ஜே' போட வேண்டும். தமிழ்நாடு, பாஜக தலைவர் அண்ணாமலையைத் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்குகளை மீறுகிறவர்களாக இருக்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்து நடத்தலாம், கஞ்சா கடத்தலாம், சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு காவலிலும் இருக்கலாம்.

ஆன்மீகம் என்பது விவேகானந்தர் போன்றோரிடம் தொடங்கி, இன்றைக்கு அண்ணாமலையிடம் வந்து நிற்கிறது. இவர்கள் அனைவருமே ஆன்மீகக் காப்பாளர்கள்தான். பா.ஜ.க.வில் இருந்தாலே போதும், ஆன்மிகவாதி தான். தி.மு.க.வை ஆதரித்தால் ஆன்மீக எதிர்ப்பாளர்கள்.

ஒரு உண்மையான ஆன்மீகவாதி, தன்னைக் கடந்து நிற்பவன் என்கிறார்கள். ஆனால், தன்னைப் பல்லக்கில் வைத்து மனிதர்களை சுமக்கச் சொல்லும் ஆதினங்கள் ஆன்மீகவாதிகளா?

- விடுதலை இராசேந்திரன்

Pin It