போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்த அறிக்கை.

23-4-2017 அன்று கொளத்தூரில் மாட்டுக்கறி அரசியல், மாட்டுக்கறி விருந்து என்றறிவித்தோம்; அனுமதி மறுப்பு என்றது காவல்துறை. 2-5-2017 அன்று ஈரோட்டிலதே நிகழ்வு. நாம் அனுமதி கேட்கவில்லை; பாதுகாப்பு மட்டும் கேட்டோம். ஆனாலும் அனுமதி இல்லை என்றது காவல்துறை; உயர்நீதி மன்றமோ அடுத்த மாதம்தான் விசாரிப்பேன் என்கிறது. 12-5-2017 அன்று சேலத்திலும் அதே நிகழ்வு. பாதுகாப்பு மட்டுமே கேட்டிருந்தோம். அனுமதி இல்லை என்று கூறிவிட்டது காவல்துறை.

அரசியல் சட்டத்தின் 48ஆவது பிரிவு நேரடி சட்டம்கூட இல்லை; வெறும் வழிகாட்டும் நெறிமுறை மட்டும்தான். அப்பிரிவு “பால் கொடுக்கும் பசுக்களையும், பாரம் இழுக்கும் எருதுகளையும், இளங்கன்றுகளையும் வெட்டுவதை வேண்டுமானால் - தடை செய்ய விரும்பினால் - மாநில அரசுகள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்றுதான் கூறுகிறது. நாமோ பால் கொடுக்காத, விவசாய வேலைக்குப் பயன்படாத மாட்டின் கறியைத்தான் உண்ணப்போகிறோம் என்பதை தெளிவாக - அடிமடையன் கூட புரிந்துகொள்ளும் வகையில் நமது பாதுகாப்பு கோரும் விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் பசுவதை தடை சட்டமும் இல்லை.

அரசியல் சட்டத்தை நாம் மதிக்கிறோம். ஆனால் அடிப்படை உரிமையாய் கருத்துரிமையை வழங்கும் அரசியல் சட்டத்தை துச்சமென அலட்சியப்படுத்தி கருத்தரங்கத்துக்குக் கூட அனுமதி மறுக்கிறது காவல்துறை. அரசியல் சட்டத்தைக் காக்கவேண்டிய உயர்நீதிமன்றமும் காவல்துறையை வேறுவகையில் வழிமொழிகிறது. மாட்டுக்கறி தின்பது மலத்தைக் தின்பதற்கு சமம் என்கிறார் இந்துமுன்னணி இராமகோபாலன்! ( இராமன் பரத்துவாஜர் ஆசிரமத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதை வால்மீகி இராமாயணம் கூறுகிறது ) அசைவம் சாப்பிடுவோர் இந்துக்கள் அல்லர் என்கிறார் எச்.இராஜா!

காவிகளின் இக்கருத்தை வேறுவகையில் சொல்லுகிறது காவல்துறை; ‘கலவரத்தைத் தூண்டுவதற்காக இதைச் செய்கிறீர்கள் என்கிறார் உயர்நீதி மன்ற நீதிபதி - இல்லையில்லை - நீதியரசர்(?) அரசியல் சட்டம் வரையறுத்துள்ள உணவை உண்பதையும், கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் உரிமையையும் யார் வேண்டுமானாலும் மறுத்து கொள்ளட்டும்!  அரசியல் சட்டத்தை மதிக்கிற நாம் அரசியல் சட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்; நிலைநாட்டியே தீருவோம்!

அன்பார்ந்த தோழர்களே!

அரசியல் சட்டம் வழங்கியுள்ள உணவு, கருத்து உரிமைகளை நிலை நாட்டவும், காவல்துறையின் சட்டவிரோத ஆணைகளைத் தகர்த்தெறியவும் 12-5-2017 வெள்ளிக்கிழமை காலை 10-00 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக கூடுவோம்!  அலைகடலென அணிதிரண்டு வாரீர்! ஒத்த கருத்துள்ள தோழர்களையும் உடன் அழைத்து வாரீர்!  - என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை விடுத்திருந்தார்.

Pin It