திராவிடச் சூரியன் கலைஞர் மறைவுக்குப் பின்னாவது, திராவிடக் கொள்கைகளையும், திராவிட இயக்கத்தையும் வீழ்த்திவிட வேண்டும் என்று மதவாதப் பிற்போக்குச் சக்திகள் துடியாய்த் துடிக்கின்றன. அந்த நோக்கத்தை நிறைவேற்ற, வேறு திசையிலிருந்து வேறு சில சக்திகளும் முயற்சி செய்கின்றன.

stalin 250அடுத்து ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு தி.மு.கழகத்திற்கே உள்ளது என்பதைப் புரிந்துகொண்ட தீய சக்திகள், அதனைத் தடுக்கத் தங்களால் ஆன அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றன. கட்சியை உடைக்க முடியுமா, கட்சியின் மீது சேறு பூச முடியுமா என்று சிந்தித்துப் பல்வேறு விதமான சதித் திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

இந்த எண்ணத்தை நேரடியாக வெளிப்படுத்தத் துணிவில்லாமல், இரண்டு கழகங்களும் வேண்டாம் என்று ஒரு முழக்கம் முன்வைக்கப்படுகிறது. இரண்டும் எப்படித் திராவிட இயக்கப் பிரிவுகள் ஆகும்? திமுக மட்டுமே திராவிட இயக்க அரசியல் கட்சி என்பதை மறைக்க, அதிமுகவை நம்முடன் கொண்டுவந்து சேர்க்கின்றனர்.

தமிழ்த்தேசியம் என்னும் பெயரில், திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதையே தங்கள் தொழிலாகக் கொண்டு சிலர் இயங்குகின்றனர். இன்னும் அரசியலுக்கே வராத நடிகர் ஆட்சிக்கு வந்தாலும் குற்றமில்லை, திமுக வந்துவிடக்கூடாது என்று ஒருவர் மல்லுக்கட்டுகிறார். நாங்கள் மட்டுமே தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி, பொய்களையே தங்கள் மூலதனமாக்கி, திமுகவின் மேல் அவதூறு செய்து வருகிறது.

தடைகளைத் தகர்த்து எறிந்து, அடுத்த ஆளும்கட்சியாய்த் திமுகவை ஆக்கினால் மட்டுமே நாடு பிழைக்கும். அதற்கான ஆக்கப் பணிகளை இன்றே தொடங்குவோம். கலைஞரின் கனவை நினைவாக்குவோம்! என்றும் இந்த மண்ணில் திராவிடக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்!

Pin It