தமிழர் சமுதாயம் - பார்ப்பன இந்து சமூகமாக்கப்பட்டதால், சாதி - தீண்டாமை - பெண்ணடிமை - ஆழமாகப் பதிந்து - சமூக ஒடுக்குமுறைகளுக்கு, வலிமையான கட்டமைப்பை நிலைநிறுத்தியதோடு சமூக வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளிவிட்டது. இதை மாற்றியமைக்கப் புறப்பட்டதுதான் பெரியார் கண்ட சுயமரியாதை திராவிடர் இயக்கம். ஆனால், சோகம் என்னவென்றால், பெரியார் இயக்கத்திலிருந்து விலகிச் சென்ற அமைப்புகள், தேர்தல் அரசியல் பயணத்தை மட்டுமே இலக்குவாகக் கொண்டதால், சமுதாயக் கொள்கைகள் படிப்படியாக மறைந்து, இன்று எதிர்திசையில் பயணிக்கும் நிலைக்கு வந்து சேர்ந்துவிட்டன. மீண்டும், வர்ணாஸ்ரம காலம் தலை தூக்கி விடுமோ என்ற அச்சம் உண்மையான சுயமரியாதை உணர்வாளர்களிடம் மேலோங்கி நிற்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு, இது பற்றி அண்மையில் பேசியிருக்கிறார்.

இரண்டு திருமண நிகழ்வுகளில் அவர் பேசியதை சுட்டிக்காட்ட வேண்டும். ஒன்று தி.மு.க.வின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான மறைந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தர்மலிங்கம் அவர்களின் பேரன் திருமணம். திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவரான தர்மலிங்கம், தனது மகனுக்கு அன்பழகன் என்று பெயர் சூட்டினார். இது இரண்டாவது தலைமுறை. பொதுப் பணித் துறையின் தலைமைப் பொறியாளராக இருக்கும் அன்பழகனோ, தனது மகனுக்கு சூட்டியுள்ள பெயர் பிரதீப் என்ற வடமொழிப் பெயர்.

இது பற்றி தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி தமது வாழ்த்துரையில் குறிப்பிடும்போது, “வேடிக்கை என்னவென்றால் திராவிட இயக்கத்தின் தாக்கம், தமிழ்ப் பற்று, தமிழ் மீது நாம் கொண்டிருக்கிற வேகம், இவைகள் எல்லாம் ஒரு காலகட்டத்திற்குத்தான், அடுத்து அடுத்து வந்த தலைமுறைகள், மகன், பேரன், பேத்தி என்று இவர்கள் எல்லாம் தாத்தாவினுடைய தமிழ் மொழிப் பற்றை தமிழ் ஆர்வத்தை எங்கேயோ தள்ளிவிட்டார்கள். தாத்தாக்களுக்கு இருந்த தமிழ் உணர்வு எங்கே போயிற்று?” - என்று கலைஞர் கேள்வி எழுப்பியிருக்கிறார். (‘முரசொலி’ 18.1.2010)

இரண்டாவது, சாதி மறுப்பு கலப்பு திருமணத்தை நடத்தி வைத்து கலைஞர் கருணாநிதி பேசியுள்ள கருத்தும் குறிப்பிடத்தக்கதாகும்.

“இன்னும் நம் நாட்டில் காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பதெல்லாம் வெறும் வரிவடிவங்களாக, வார்த்தை ஜாலங்களாகத்தான் இன்றைக்கு இருப்பதை காண்கிறோம். அதை விடுத்து உண்மையிலேயே காதல் திருமணம் உண்மையிலேயே கலப்புத் திருமணம் நம்முடைய நாட்டில் சமுதாயத்தில் நடைபெற வேண்டும். அதற்கான விளக்கத்தையும் உறுதியையும் நம்முடைய நண்பர்கள், தோழர்கள், தொண்டர்கள் பெற வேண்டும்.”

“இங்கே தமிழர்களாக கருதுகிறோம். நாம் இந்த விழா முடிந்து மண்டபத்திலிருந்து வெளியேறுகிற நேரத்தில் ஒரு பத்து பேர், இருபது பேர், செட்டியார்களாக, முதலியார்களாக, அய்யர்களாக, இப்படித்தான் குழு குழுவாக சாதி வாரியாகத்தான் இங்கேயிருந்து வெளியே போகிறோம். இந்த அளவிற்குத்தான், தமிழ்நாட்டிலேயே இன்றைக்கும் சாதி மாறுபாடுகள் சாதி வேறுபாடுகள் இருக்கின்றன.” - ‘முரசொலி’ (19.1.2010)

இரண்டு கருத்துகளுமே உண்மையானவை. இதை ஏதோ மேடைப் பேச்சாக மட்டும் கருதி விடாமல், சுயமதிப்பீடாகக் கருதி, கவலையுடன் பரிசிலிக்கப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.

தாத்தாக்கள் காலத்தில் சுயமரியாதை இயக்கமும், திராவிடர் இயக்கமும் தொடங்கி வைத்த பண்பாட்டுப் புரட்சிகள், இன்று, மறைந்து கொண்டே போவதற்கு காரணம், இந்தக் கட்சிகளே. அதை வலியுறுத்த, பரப்புரை செய்ய, பின்பற்ற மறந்ததுதான். கட்டியிருக்கும் வேட்டியிலே - தமது திராவிட கட்சியின் அடையாளத்தையும், நெற்றியிலே இந்து வைதீக அடையாளத்தையும் காட்டிக் கொண்டு, வலம் வரும் தொண்டர்களை தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் நீக்கமறக் காண முடிகிறது. பார்ப்பனத் தலைமையில் செயல்படும் அ.தி.மு.க. - இதில் முதலிடம். ம.தி.மு.க., தி.மு.க. - அடுத்தடுத்த இடங்களில் நிற்கின்றன. இந்து பார்ப்பன எதிர்ப்பு லட்சியத்தை முழங்கிய அம்பேத்கர் தத்துவத்தை ஏற்ற அமைப்புகளும், இதற்கு விதிவிலக்கு அல்ல.

அதிகாரத்தைப் பிடிக்க, அரசியலில் ஓட்டப் பந்தயம் நடத்தி வரும் இந்தக் கட்சிகள், கொள்கை லட்சியப் பார்வைகளுக்கு அழுத்தம் தராமல், அப்படி ஒன்று, ஒரு காலத்தில் இருந்ததே என்பதைக்கூட மறந்துவிட்டு செயல்பட்டதால் இளம் தலைமுறை திசை மாறி நிற்கிறது. கட்சி அமைப்புகளுக்குள்ளேயே சாதியம் தலைதூக்கி நிற்பதையும் பார்க்க முடிகிறது. வலிமையான தகவல் தொடர்பு சாதனங்களை தங்களிடம் கொண்டுள்ள திராவிட கட்சிகள், இந்த சமுதாய மாற்றத்துக்கான சிந்தனைகளையோ, இயக்கத்தின் வரலாறுகளையோ இளம் தலைமுறையிடம் கொண்டு செல்வதில் எந்த முனைப்பும் காட்டுவதில்லை. மாறாக வணிக நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு, சமூக மாற்றத்துக்கான சிந்தனைகளை முனை மழுங்கச் செய்து, பார்ப்பனியப் பயிர் செழிப்பதற்கான நாற்றங்காலாக செயல்படுகின்றன.

குடும்பத்தினர், நண்பர்கள் ஒன்று கூடும் - சுயமரியாதைத் திருமண மேடைகளை, சுயமரியாதை கருத்துகளுக்காகப் பயன்படுத்தப்படாமல், கட்சி அரசியல் மேடைகளாக்கப்பட்டதோடு, புரோகிதத் திருமணங்களை ரகசியமாக முடித்துக் கொண்டு, பிறகு, சுயமரியாதை திருமணத்தை நாடகமாக நடித்துக் காட்டும் காட்சிகளும் அரங்கேறி வருகின்றன. குறைந்தது கட்சியின் பொறுப்பாளர்களாக இருப்பவர்களாவது கொள்கை அடையாளத்தோடு வாழ வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை உருவாக்கிடக்கூட இந்தக் கட்சிகள் தயாராக இல்லை. அரசியல் செல்வாக்கோடு சமூகத்தின் ‘அந்தஸ்து’ பெற்று திகழ்வோர்கூட சாதி வட்டத்துக்குள் திருமணங்கள் நடத்தவே விரும்புகிறார்கள். அப்படி ஏதேனும் சாதி மறுப்புத் திருமண முயற்சிகள் நடந்தால், அதைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்கள். இவைகள் பற்றியெல்லாம் விரிவாக ஆராயப்பட்டு, தவறுகள் சரி செய்யப்பட வேண்டும்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கமும், திராவிடர் இயக்கமும் வலியுறுத்திய கொள்கைகளில் ‘இடஒதுக்கீடு’ கொள்கையை மட்டுமே ஏற்றுக் கொண்டு ஏனைய சாதி ஒழிப்பு - பார்ப்பன புரோகித எதிர்ப்பு - பெண்ணுரிமை - பகுத்தறிவு - சமதர்ம கொள்கைகளை படிப்படியாக திராவிட அரசியல் கட்சிகள் கைகழுவிவிட்டதை வெட்கத்தோடு ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.

தலை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய இந்த பண்பாட்டு அடையாளங்களை பார்ப்பனியச் செல்வாக்கில் மூழ்கித் தொலைத்துவிட்ட காரணத்தினால் சமூக அவலங்கள் பல்வேறு வடிவங்களில் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்பது வேதனையான உண்மை! கலைஞர் கருணாநிதி முன் வைத்துள்ள கருத்துகளை உண்மையாகக் கவலையுடன் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அனைத்துமே பரிசீலித்து, சாதி ஒழிப்பு சமுதாயப் பண்பாட்டுக் கருத்துகளைப் பரப்பவும் பின்பற்றவும் முன்வரவேண்டியது மிகவும் அவசியமாகும்.

Pin It