‘சமூக நல்லிணக்கம்’ என்ற போர்வையில் தமிழர் ஓர்மைப் பேசாமல் ஜாதி ஒழிப்புத் தளத்தில் ஓர்மையை உருவாக்க வேண்டும் என்றார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற் பாட்டாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் சிவகங்கை கச்சநத்தம் ஜாதிவெறிப் படுகொலையைக் கண்டித்து கண்டனக் கூட்டம் சென்னை மேற்கு மாம்பலம் வி.கே.எம். மகாலில் ஜூன் 3, 2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தொல். திருமாவளவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணிப்  பொறுப்பாளர் சாமுவேல் ராஜ், மனுஷ்யபுத்திரன், இயக்குநர் அமீர், வெற்றி மாறன், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், சீனு ராமசாமி, மீரா கதிரவன், வழக்கறிஞர் அருள்மொழி, நவீன், மதிவண்ணன், கிரேஸ் பானு, மருத்துவர் ஷாலினி, யாழன் ஆதி, பா. இரஞ்சித், வழக்கறிஞர் ராஜகுரு, லெனின் பாரதி உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரையிலிருந்து:

ஜாதியை எப்படி ஒழிப்பது - வலுவிழக்கச் செய்வது என்பது குறித்து இங்கே பல்வேறு கருத்துகள், விவாதங்கள் முன் வைக்கப்பட்டன. சாக்கடைக்குப் பக்கத்திலே இருப்பவனை கொசு கடிக்காமல் விடாது என்பதுபோல் இந்து மதத்துக்குள் இருப்பவனை ஜாதி கடிக்கவே செய்யும். இப்போது ஜாதி ஒழிப்புக் குறித்து நான் சில கருத்துகளை முன் வைக்க விரும்புகிறேன். ஜாதிப் படுகொலைகள் நடக்கும்போது, அதற்கான எதிர்வினையாற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம்; அதே நேரத்தில் ஜாதி ஒழிப்பு என்ற இலக்கில் ஜாதியை கட்டமைக்கும் கருத்தியலுக்கு எதிரான இயக்கம்; மூன்றாவதாக தீண்டாமை ஒழிப்புக்கான காப்பரண்களாக உள்ள சட்டங்கள் நீர்த்துப் போகாமல் பாதுகாத்தல் - என்ற மூன்று தளங்களில் நாம் வேலைத் திட்டங்களை உருவாக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். தமிழ் தேசியம் உருவாகும்போது ஜாதி ஒழிந்து விடும் என்று கூறுகிறவர்கள் இருக்கிறார்கள். நாம் ஜாதியமைப்பு பலவீனமாகும்போதுதான் தமிழ் தேசியமே முளைக்கும் என்ற கருத்துடையவர்களாக இருக்கிறோம்.

அரசியல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து பேசிய அம்பேத்கர், அதன் முகப்புரையில் ‘We  the  people of India’ (இந்திய மக்களாகிய நாம்) என்று கூறியபோது ‘இந்திய தேசத்தவராகிய நாம்’ என்று கூறக் கூடாதா என்று கேட்டார்கள். அம்பேத்கர் அப்போது சொன்னார்: இன்னும் நாம் ஒரு தேசமாகவே உருவாகவில்லை; இனிதான் ஒரு தேசமாக உருவாக வேண்டும் (yet to be a nation) என்று கூறிவிட்டு, பல்லாயிரம் ஜாதிகளாகக் கொண்ட இந்த நாடு எப்படி ஒரு தேசமாக முடியும் என்று கேட்டார்.  தேசத்துக்கு எதிரானது ஜாதி என்றார் (Caste is anti-national). இன்று எதை எதையோ தேச விரோதம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாதி அமைப்பு பலவீனமடைந்துவிடக் கூடாது என்பதில் சில ஜாதியவாதிகள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். தன்னைத்தானே உந்துவிசையில் ஒரு சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும்போது அதன் வேகம் குறைகிறபோது அதற்கு விசை கொடுத்து வேகமாக சுழலச் செய்வதுபோல் இப்போது இடை நிலைச் சாதியைச் சார்ந்த ஜாதி ஆதரவாளர்கள் அவ்வப்போது ஜாதி வெறியைத் தூண்டி வருகிறார்கள்.

ஒரு காலத்தில் கிராமத்தில் ஜாதி கட்டமைப்பைக் காப்பாற்றி வந்த பார்ப்பனர்கள், இப்போது கிராமங்களை விட்டு வெளியேறிவிட்டார்கள். அவர்களிடமிருந்து நிலங்களைக் கைப் பற்றிக் கொண்ட இடை நிலை ஜாதியினர், நிலத்தோடு, பார்ப்பனர்கள் வைத்திருந்த ஜாதி அதிகாரத்தையும் அவர்களிடமிருந்து எடுத்துக் கொண் டார்கள்.  பார்ப்பனர் களிடம் இல்லாத ‘உடல் வலிமையும்’ இவர்களுக்கு இருக்கிறது. இவர்கள்தான் ஜாதி அமைப்பைக் கட்டிக்காக்க வன்கொடுமைகளையும், கொலைகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாதி அமைப்பை அப்படியே பாதுகாத்துக் கொண்டு மேலோட்டமாக ஜாதியை மறந்து ஒன்றுபட வேண்டும் என்ற ஒரு கருத்து ‘சமூக நல்லிணக்கம்’ என்ற பெயரில் முன்வைக்கப்படுகிறது. பார்ப்பன மேலாண்மையை உயர்த்திப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். ‘சமாஜிக் சமரஸ்தா’ என்ற ஒரு துணை அமைப்பை உருவாக்கியுள்ளது. தமிழில் இதைச் சொல்ல வேண்டுமானால், ‘சமூக நல்லிணக்கப் பேரவை’  ஜாதியை அப்படியே பாதுகாத்துக் கொண்டு நல்லிணக்கத்தோடு இருப்போம் என்பதே இந்த அமைப்பின் நோக்கம். அத்தகைய நல்லிணக்கம் நமக்குத் தேவையில்லை. “ஜாதியை மறந்து தமிழராக இணைவோம்; வீட்டுக்குள் போகும்போது ஜாதியை வைத்துக் கொள்வோம்” என்ற இந்த கருத்து  ஆபத்தானது.  ஜாதியை மறந்துவிட்டு தமிழராகக் கூடாது; ஜாதியை மறுத்துவிட்டுத் தமிழராக வேண்டும். ‘சமாஜிக் சமரஸ்தா’ என்று மோடியே ஒரு நூலை நல்லிணக்கம் குறித்து எழுதினார். இராமன் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதே பீகாரைச் சார்ந்த காமேஸ்வர் சௌபால் என்ற ஒரு தலித். இதுவே சமூக நல்லிணக்கம் என்றார் மோடி. தலித் வீட்டில் போய் சாப்பிடுவதாகக் கூறுவதுபோல் இதுவும் ஏமாற்று மோசடி. ‘சமூக நல்லிணக்கம்’ என்ற சொல்லையே நாம் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

ஜாதி - ஒரு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. ஜாதியைச் சார்ந்த குடும்பங்களுக்கு நெருக்கடி உதவி தேவைப்படும்போது உடன்வந்து உதவக் கூடியதாக ஜாதி உறவுகள இருப்பதும், ஜாதிக்கான ஒரு பாதுகாப்பாக இருக்கிறது. ஜாதியை எதிர்க்கும் நாம், ஜாதி எதிர்ப்பு ஜனநாயக சக்திகளுக்கு நெருக்கடி உதவி என்றால் அவர்கள் கேட்காமலேயே ஓடிச் சென்று உதவிட முன் வரும்போது ஜாதி தான் சமூகப் பாதுகாப்பு தரும் என்ற நிலையை மாற்றியமைக்க முடியும்.

அம்பேத்கர் ஜாதி ஒழிப்பு குறித்த தனது லாகூர் உரையில், ஜாதி என்பது செங்கல் சுவர்; முள்வேலி போன்ற ஒரு பொருள் அல்ல; அது ஒரு மனநிலை; கருத்தியல் என்று கூறுவார்.  வரலாற்றிலிருந்து ஒரு உதாரணத்தையும் எடுத்துக் காட்டினார். ரோமில் நடந்த நெடிய போராட்டத்திற்குப் பின் உழைக்கும் மக்களுக்கும் பிரபுகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டு அதிகாரத்தை சம எண்ணிக்கையில் பகிர்ந்து கொண்டார்கள். அப்போது ஒரு விதியை சேர்த்தார்கள். ஆட்சித் தலைவராக வரக் கூடியவர்கள் பிரபுக்களின் கடவுளான ‘டெல்ஃபி’ கடவுளின் பூசாரியிடம் எந்த முடிவு என்றாலும் ஒப்புதல் பெற வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். உழைக்கும் மக்கள் தங்கள் கடவுள் நம்பிக்கையால் இதை ஏற்றுக் கொண்டார்கள். அந்தக் கோயில் பூசாரியின் முடிவு உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், பிரபுக்களுக்கு ஆதரவாகவும் இருந்தது. பல நூற்றாண்டு காலம் உழைக்கும் மக்கள் போராடி பெற்ற உரிமைகளை ஒரு ‘நம்பிக்கை’ சிதைத்து நொறுக்கியது என்று அம்பேத்கர் கூறினார்.

வர்ணாஸ்ரம அமைப்பும் அதன் வழியாக உருவான ஜாதியமைப்பையும் நியாயப்படுத்த சாஸ்திரங்கள், புனித நூல்கள் கற்பிக்கப்பட்டன. இவைகளின் அதிகாரங்களை மறுக்க வேண்டும் என்றார் அம்பேத்கர். இந்த அதிகாரங்களை பார்ப்பனர்களே எழுதிக் கொண்டார்கள். அவர்களே வரையறுத்துக் கொண்டார்கள். எழுதப்பட்ட வரலாறுகள் எல்லாம் உண்மையான வரலாறு  அல்ல; சிங்கத்தை வேட்டையாடிய வேட்டைக்காரர்கள் தான். வரலாறுகளை எழுதினார்கள். வேட்டையாடப்பட்ட சிங்கம் வரலாறு எழுதினால், அது வேறு வரலாறாகத்தான் இருக்கும். எனவே ஜாதியைக் காப்பாற்றும் கருத்தியல்களான சாஸ்திரம், புராணம், இதிகாசம், புனித நூல்களை எதிர்க்கும் இயக்கம் - ஜாதி ஒழிப்புக்கான இலக்கை அடைவதற்கு மிகவும் அவசியமாகிறது.

தீண்டாமை ஒழிப்புக்காக காப்பரண்களாக இருக்கும் சட்டங்களையும் நீர்த்துப் போகாமல் பாதுகாக்க நாம் போராட வேண்டியிருக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பால் நீர்த்துப் போகச் செய்யப் பட்டிருக்கிறது. தன்னை - ‘தீண்டப்படாதவர்’ என்ற காரணத்தால் பழிவாங்கிய அதிகாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர அனுமதி கேட்டார் பாஸ்கர் கெய்க்வாட் என்ற தலித் ஊழியர். பம்பாய் உயர்நீதிமன்றம் அவரை அனுமதிக்க வேண்டும் என்று கூறி குற்றம் சாட்டப்பட்டவர்மீது வழக்குப் பதிய அனுமதித்தது.

மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் வழக்குத் தொடரவே உயர் அதிகாரி ஒப்புதல் வேண்டும் என்று கூறிவிட்டனர். உச்சநீதிமன்றத்துக்கு வழக்கைக் கொண்டு சென்றவர் டாக்டர் மகாஜன் என்ற தொழில் கல்வி இயக்குனர். உயர் அதிகாரிகள் ஒப்புதல் தரவில்லை என்பதுதான் பாதிக்கப்பட்ட ‘தலித்’தின் வழக்கு வழக்கு. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றமோ, அதிகாரிகள் ஒப்புதலைப் பெற்று வழக்காட வா என்று கூறுகிறது.

நீதிபதிகளாக வரக் கூடியவர்கள் போராடத் தேவையே இல்லாத சமூகத்திலிருந்து வருகிறார்கள். எனவேதான் அவர்கள் போராடக் கூடாது; கூட்டம் நடத்தக் கூடாது; ஊர்வலம் போகக் கூடாது என்று தீர்ப்பளிக்கிறார்கள்.  நாம் போராடித்தான் உரிமைகளைப் பெற வேண்டிய நிலையில் இருப்பவர்கள். அப்படிப் போராடித்தான் உரிமைகளைப் பெற்றிருக்கிறோம். தான் கொண்டு வந்த இந்துச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் முடக்கியபோது அம்பேத்கர் கூறினார்: “மசோதாவை அழுகை இல்லாமல், சடங்குகள் இல்லாமல் கொன்று புதைத்து விட்டார்கள்” என்றார். அதுதான் இப்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் நடந்திருக்கிறது.

தொகுத்துச் சொல்வது என்றால் ஜாதி ஒழிப்புக்கான செயல்திட்டங்களாக வன்கொடுமைகளுக்கு எதிர்வினையாற்றுவது - ஜாதியமைப்பை நியாயப்படுத்தும் கருத்தியலுக்கு எதிராக இயக்கம் நடத்துவது; தீண்டாமை ஒழிப்புக்கான சட்டங்களை நீர்த்துப் போகாமல் பாதுகாப்பது; மேலும் வலிமையான சட்டங்களைக் கொண்டுவரப் போராடுவது என்ற தளங்களில் நமது செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

சொந்த ஜாதியில் படுகொலைகள், வன்முறைகள் கருத்துரிமைப் பறிப்புகள் நடக்கும்போது ஜாதி எதிர்ப்பாளர்கள்  ‘மவுனம் சாதிக்காமல், பொது வெளியில் அதற்கு எதிர்ப்புகளைப் பதிவு செய்ய வேண்டும். திருச்செங்கோட்டில் பெருமாள் முருகனுக்கு ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் அவரது நூலுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது அதே ஜாதியைச் சார்ந்த ஒரு மருத்துவர் சொந்த ஜாதியினரின் நடவடிக்கைகளைத் துணிவுடன் கண்டித்தார். இந்த முன்னுதாரணத்தை ஜாதிய எதிர்ப்பாளர்கள் பின்பற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம் என்றார் கொளத்தூர் மணி.

Pin It