கீற்றில் தேட...

 

தேச விடுதலை விஷயத்தில் பார்ப்பனரல்லாதார் (திராவிடர்) பொது நன்மையை உத்தேசித்து அநேக பார்ப்பனர்களுடைய கொடுமைகளையும், சூழ்ச்சிகளையும் கூட்டாக்காமல், கபடமற்றுப் பார்ப்பனர்களுடன் ஒத்துழைத்து வந்திருந்தாலும், அவர்களுடைய உழைப்பை யெல்லாம், அவர்கள் தங்கள் வகுப்புச் சுயநலத்திற்கென்று அனுபவித்துக் கொள்வதல்லாமல், உழைக்கின்ற பார்ப் பனரல்லாதாருக்கு (திராவிடருக்கு) எவ்வளவுக்கெவ்வளவு கெடுதிகளையும், துரோகங்களையும் செய்து வந்திருக் கிறார்களென்பதை- செய்து வருகிறார்களென்பதைப் பொறுமையோடு படித்து அறிய வேண்டுமாய்க் கோருகிறோம்.

முதலாவது பழைய காலத்திய தேசீயவாதிகளில், சிறந்தவர்களில் தோழர் சர். சி. சங்கரன் நாயர் என்கிற திராவிடர் முக்கியமானவர் ஆவர். அவர் காங்கிரசிலும் தலைமை வகித்தார். அப்பேர்பட்டவரை முன்னுக்கு வரவொட்டாமல் தடுப்பதற்காகப் பார்ப்பனர்கள் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்துவந்தார்கள்.

அவருக்குக் கிடைக்கவிருந்த அய்க்கோர்ட் ஜட்ஜ் பதவியைக் கிடைக்கவொட்டாதபடிக்குச் செய்ய, எவ்விதப் பொதுநலத்திலும் ஈடுபட்டிராத தோழர் சர். வி. பாஷ்யம் அய்யங்கார் போன்றவர்களும் மற்றும் அநேக பார்ப்பன வக்கீல்களும் சீமைக்கெல்லாம் தந்தி கொடுத்த தோடல்லாமல், அவர்பேரில் எவ்வளவோ பழிகளையெல்லாம் சுமத்திக் கஷ்டப்படுத்தினார்கள். அதன் காரணமாக நான்கு, அய்ந்து வருடங்களுக்கு முன்னதாகவே கிடைக்கவேண்டிய அய்க்கோர்ட் ஜட்ஜ் பதவி, வெகுகாலம் பொறுத்துத்தான் கிடைத்தது.

டாக்டர் டி.எம்.நாயர் அக்காலத்திய தேசீயவாதிகளில் மிகவும் முக்கியமான திராவிடத் தேசீயவாதி. அவர் எவ்வளவோ பொதுக் காரியங்களில் ஈடுபட்டிருந்தவர். அவரையும் மைலாப்பூர் பார்ப்பனர்கள் ஒரு முனிசிபாலிட்டியில் கூட அவர் உட்காருவதைப் பொறுக்காமல், அவருக்கு விரோதமாகச் சூழ்ச்சிகளைச் செய்து, அவரையும் உபத்திரவப்படுத் தினார்கள். ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு நமது நாட்டில் ஏற்பட்ட முக்கியமான காரணங்களில் இவையிரண்டும் முதன்மையானதென்று, ஒரு காங்கிரஸ் பார்ப்பனப் பிரசிடெண்டே நம்மிடம் சொல்லியிருக்கிறார்.

இவ்விதமான கஷ்டங்களிலிருந்து பார்ப்பனரல்லாதாரைக் காப்பாற்றுவதற்காக வேண்டி, முக்கிய காங்கிரஸ்வாதிகளாயிருந்த டாக்டர், நாயர் போன்ற பார்ப்பனரல்லாத தலைவர்களால், ஜஸ்டிஸ் கட்சியென்று ஓர் ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது. அதை ஒழிப்பதற்காகப் பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து, அதற்கு, எதிரிடையாகப் பார்ப்பனரல்லாதார் சிலரைப் பிடித்தே சென்னை மாகாணச் சங்கம் என்று ஒன்றை ஆரம்பிக்கச் செய்து, அதற்கு வேண்டிய பொருளத்தனையும் பெரும்பான்மையாகப் பார்ப்பனரே உதவி தேசபக்தன் என்ற தமிழ்த் தினசரிப் பத்திரிகையும், இந்தியன் பேட்ரியட் என்ற ஆங்கிலத் தினசரிப் பத்திரிகையும், ஜஸ்டிஸ் கட்சியைக் கொல்லுவதற்காகவே பிரசாரம் செய்யும் பொருட்டு ஏற்பாடு செய்து கொடுத்து, ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும் செல்வாக்கில்லாமல் அடித்தார்கள்.

இந்தியன் பேட்ரியட் பத்திரிக்கையைத் தங்கள் வேலையை முடித்துக் கொண்டவுடனே, ஒழித்து விட்டார்கள். எஞ்சியிருந்த தேசபக்தன் பத்திரிகையை, தேசத்தில் அதற்குக் கொஞ்சம் செல்வாக்கு ஆரம்பித்தவுடனே அதில் தமிழ்ப் பெரியார் கலியாணசுந்தரமுதலியார் ஆசிரியராயிருப்பதை ஒழிக்க வேண்டுமென்னும் முக்கிய கருத்துடன், அவருக்கு விரோதமாகச் சில பார்ப்பனரல்லாதாரையே கிளப்பிவிட்டு, சில பார்ப்பனர்களும் இரகசியமாக, அப்பத்திரிகைக்கு விரோதமாகத் தமிழ் நாட்டில் பிரசாரம் செய்து, தமிழ்ப் பெரியார் முதலியாரவர்களே தேசபக்தனைவிட்டு ஓடிப்போகும்படியாகச் செய்துவிட்டார்கள். அதற்குப் பிறகு அப்பத்திரிகைக்குப் பார்ப்பனர்களே ஆசிரியர்களும், எஜமானர்களுமாகி மெதுவாக நழுவவிட்டுக் கொண் டார்கள். இந்த மாதிரியே சென்னை மாகாண சங்கத்திலும், பார்ப்பனர்களின் சொற்படி நடந்து கொண்டிருந்த சிலர் ஆதிக்கம் பெற்றிருந்ததை ஆதாரமாக வைத்து, அவர்களைக் கொண்டே தங்கள் காரியமெல்லாம் முடிந்து போனவுடன் மறையும்படி செய்துவிட்டார்கள்.

இவையெல்லாம் பழைய காங்கிரஸின் கொள்கைப்படி ஏற்பட்ட திருவிளையாடல்கள் என்றாலும், ஒத்துழையாமை ஏற்பட்ட காலத்தில் பார்ப்பனரல்லாத திராவிடத் தேசபக்தர்களுக்குச் செய்த கொடுமைகளில் சிலவற்றைக் கீழே குறிக்கிறோம்.

ஒத்துழையாமை ஆரம்பிப்பதற்குக் கொஞ்ச நாளைக்கு முன்பதாகச் சென்னையில் தேசீயவாதிகளின் சங்கம் (Nationlist’s Association) என்று ஒன்றை ஆரம்பித்தார்கள். அதற்குத் தோழர் சி. விஜயராகவாச்சாரியார் அவர்களை அக்கிராசனராக வைத்து, உப அக்கிராசன ஸ்தானத்துக்குத் தோழர் வி. ஓ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் பெயரைப் பிரரேபித்தவுடன், அவருக்கு அந்த ஸ்தானத்தைக் கொடுக்க இஷ்டமில்லாதவர்களாகி, அதை அவர் அடையவிடாமற் செய்வதற்கு எவ்வளவோ பிரயத்தனங்களைப் பார்ப்பனர்கள் செய்தார்கள். இதைப் பார்ப்பனரல்லாதவர்களில் சிலர் தெரிந்து, அப்போதே கூச்சல் போட்டதின்பலனாக, அநேக உப அக்ராசனாதி பதிகளை ஏற்பாடு செய்து, அந்த ஸ்தானத்திற்கே ஒரு மதிப்பில்லாமல் அடிக்கப்பார்த்தார்கள். இதன் பலனாக அதன் நிர்வாகசபைகளில் பார்ப்பனரல்லாதாரை அதிக மாகப் போடும்படி நேரிட்டது. இதன் காரணமாகத் தேசீயவாதிகளின் சங்கமென்பதைக் குழந்தைப் பருவத் திலேயே கழுத்தைத்திருகிக் கொன்றுபோட்டார்கள்.

பிறகு திருப்பூரில் கூடிய தமிழ்நாடு மாகாண மாநாட்டுக்குத் தோழர் வரதராஜூலு நாயுடு அவர்களைத் தலைமை வகிக்க வேண்டுமென்று சிலர் பிரேபித்தார்கள். அதற்கு விரோதமாக இந்து, சுதேசமித்திரன், சயராஜ்யா ஆகிய மூன்று பத்திரிகைகளும், அதுசமயம் நாயுடு அவர்கள் மாநாட்டில் தலைமை வகிக்கத் தகுதியற்றவர் என்று எழுதி வந்ததோடு, பிரரேபித்தவரும் இம்மாதிரி பிரேரேபித்தது தப்பிதமென்று சொல்லியும், அநேக ஜில்லாக்கள் பெரும்பான்மையாய்த் தோழர் வரதராஜூலு நாயுடுவையே தெரிந்தெடுத்திருந்தும், தோழர் ஆதி நாராயண செட்டியாரவர்களைக் கொண்டும், தோழர் ஏ. ரெங்கசாமி அய்யங்கார் திருப்பூருக்குச் சென்றதின் பலனாகவும், உபசரணைக் கமிட்டியாரை வசப்படுத்தி, இவருடைய தேர்தலை ஒப்புக்கொள்ளாமல் நிராகரிக்கும்படி செய்து விட்டார்கள். பிறகு மாகாணக் காங்கிரஸ் கமிட்டியார் பிரவேசித்து அவரை ஒப்புக்கொள்ள வேண்டுமென்று தங்களுடைய அதிகாரத்தைக் கொண்டு நிர்ப்பந்திக்கப் படுத்தினதின் பேரில் சுயமரியாதையுள்ளவர்கள் ஒப்புக் கொள்ள முடியாதவாறு உள்ள ஓர் தீர்மானத்தைப் போட்டு அவரையே ஒப்புக் கொண்ட மாதிரியாய்த் தெரியப் படுத்தினார்கள். இத்தீர்மானத்தின் போக்கு யோக்கியதை அற்றதாய் இருந்தபடியால் தோழர் நாயுடு அதைத் தமக்கு வேண்டாமென நிராகரிக்கும்படியாயிற்று. பிறகு திடீரென்று தோழர் எம். ஜி. வாசுதேவ அய்யாவர்களைக் கொண்டு அம்மாநாட்டை நடத்திக் கொண்டார்கள்.

அதற்கடுத்தாற்போல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அக்கிராசனாதிபதியாகப் பெரும்பான்மையோரால் என்னைத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தெரிந்தெடுத்த ஒரு மணி நேரத்திற்குள் , தோழர் வ. வே. சு. அய்யர் அவர்கள் நம்பிக்கையில்லை எனும் தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்தச் சமயத்தில் தமிழ்ப் பெரியார் கலியாணசுந்தர முதலியார் எழுத்து, இது ராஜூய நோக்கத்துடன் கொண்டுவந்த தீர்மானமல்ல என்றும், அது ஒரு பார்ப்பனரல்லாதார் இந்த ஸ்தானம் பெறுவதை எப்படியாவது ஒழிக்கவே கொண்டு வரப்பட்ட தீர்மானம் என பொருள்பட உக்கிரமாய் அப்பொழுதே பேசி இருக்கிறார்.

இத்தீர்மானம் தோழர் வ. வே. சு. அய்யர் கொண்டு வந்ததின் பலனாய் சில நாட்களுக்குள் தோழர் எஸ். சீனிவாச அய்யங்காரால் மேற்படி அய்யர் அவர்களுக்குக் குருகுலத்திற்கென்று ரூ. 600 நன்கொடை அளிக்கப் பட்டது.

1925இல் காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ் மாகாண மாநாட்டிற்குத் தமிழ்ப் பெரியாரை சில ஜில்லாக் கமிட்டிகள் தெரிந்தெடுத்திருந்தும், அதை வெளியாருக்குத் தெரிவிக்காமல் இரகசியமாய் வைத்துக் கொண்டு, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஆகும்படி இரகசியப் பிரசாரங்களும் நடைபெற்றன. இதற்கு முன்னெல்லாம் யார் யாரை எந்தெந்த ஜில்லாக்கள் தெரிந்தெடுத்தன என்பது பத்திரிகைகளில் வருவது வழக்கம். அப்பொழுது உபசர ணைக் கமிட்டியாரும் தெரிவிக்காமல் பத்திரிகை காரர்களும் தெரிவிக்காமல் இரகசியமாய் வைக்கப்பட்டது. தவிர, கும்பகோணம் காங்கிரஸ் கமிட்டி தோழர் வரதராஜூலு நாயுடு தமது காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினமாச் செய்யவேண்டுமென்று தீர்மானம் ஒன்று செய்தது. சென்னைக் காங்கிரஸ் கமிட்டியோ, என்னையும் சுரேந்திரனாத் ஆரியாவையும் கண்டித்து ஒரு தீர்மானம் செய்தது. நன்னிலம் பொதுக்கூட்டத்தில் என்னையும், தமிழ்ப் பெரியார், ஆரியா ஆகியோரையும் காங்கிர சினின்று வெளியாக்க வேண்டுமெனத் தோழர் சீனுவாச அய்யங்கார் பேசினார்.

சட்டசபையில் காங்கிரஸ் பார்ப்பன மெம்பருடைய வேலை, பார்ப்பனரல்லாதவருடைய ஆதிக் கத்தை ஒழிக்க வேண்டுமென்பதும், பார்ப்பனரல்லா தாருக்கு எதிரிடையாய் நிற்க வேண்டுமென்பதுமே என்று, சட்டசபையில் எலெக்ஷன் ஆன உடனேயே சுதேச மித்திரன் பத்திரிகை எழுதியது. இந்த நேரத்தில் சட்ட சபையில் ஒரு பார்ப்பனர், எங்களுக்கு உத்தியோகம் கொடுக்காவிட்டால், ஒத்துழையாமைக் கட்சியில் சேர்ந்துவிடுவோமென சர்க்காரை மிரட்டினார். அன்றி சத்தியாக்கிரகத்தின் மூலமாய் அடைந்த தண்டனை யிலிருந்து நான் விடுதலையாகித் தமிழ்நாட்டிற்கு வந்த உடன், மறுபடியும் வைக்கம் போகாமலிருப்பதற்காக வேண்டி ஒரு பார்ப்பனச் சட்ட மெம்பரையும், ஒரு பார்ப்பன அட்வகேட் ஜெனரலையும் கொண்ட கவர்ன்மெண்ட், எட்டு ஒன்பது மாதங்கட்கு முன்னால் பேசிய பழைய குப்பைகளை ஆதாரமாக வைத்து, ராஜ துரோகம் முதலிய கேஸ் எடுத்து, அதன் மூலமாகக் கைதியாக்கிக் கொண்டு போனார்கள். பார்ப்பனர்களின் பொல்லாத வேளையாய் ஒரு பார்ப்பனரல்லாத மாஜிஸ்திரேட்டிடம் அந்தக் கேஸ் நடந்தபடியால், கேஸ் ஒழன்றும் ருஜுவாகவில்லை என்று அவர் கேசை முடித்துத் தண்டிக்காமல் ஒட்டி விட்டார். இவ்வளவுமல்லாமல் பார்ப்பனரல்லாத மந்திரிகள் பெரிய உத்தியோகஸ்தர்கள் லஞ்சகம் வாங்குகிறார்கள், லஞ்சம் வாங்குகிறவர்கள் அது செய்கிறார்கள், இது செய் கிறார்கள் என்று கிராமம் கிராமமாய், ஊர் ஊராய்ப் பிரசாரம் செய்வதற்குப் பணம் செலவு செய்து ஆட்களை ஏற்படுத்தி பிரசாரம் செய்து, அவர்கள் பேரில் தப்பிப்பிராயத்தைக் கற்பித்து வந்தார்கள்.

குருகுலம் சம்பந்தமாய் நடந்த கூட்டங்களில், பார்ப்பனர்கள் கல்லெடுத்துப் போட்டார்கள். சென்னைக் கார்ப்பரேஷன் தேர்தல்களில் தோழர் ஆரியாவை ஆட் களைவிட்டு அடித்தார்கள். பொதுவாய் ஏழைகளுக்கும், முக்கியமாய்ப் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் அவசிய மானதாகிய மது விலக்கு, தீண்டாமை முதலிய திட்டங் களைக் காங்கிரசைவிட்டு ஓட்டி விட்டார்கள்.

பார்ப்பனரல்லாதார், தெய்வத்தின் பேராலும் க்ஷேத்திரங்களின் பேராலும் காணிக்கை, வேண்டுதல் மூலமாகக் கொடுக்கின்ற பணங்கள், ஒழுங்கான வழியில் செலவழிப்பதற்காக ஏற்பட்ட தேவஸ்தான ஆக்டானது, பார்ப்பனர்களுடைய எவ்வளவோ எதிர்ப்புக்களுக்கும் கண்டனங்களுக்கும் தப்பி நிறைவேறி விட்டபடியினால், அந்த ஆக்டே செல்லாதென்றும், அதை எடுத்துவிட வேண்டுமென்றும், (இப்போது அதன் திருத்தத்தை எப்படி எதிர்க்கிறார்களோ அப்படியே) அதை அமலில் இல்லாமல் சஸ்பெண்டு செய்வதற்கு இன்சக்ஷன் தடை கோரி, அய்க்கோர்ட்டில் மகந்துக்கள் பேரால் வியாஜ்யந் தொடுத்தார்கள். இதற்கு வக்கீல்களோ தோழர்கள் எஸ். சீனிவாசய்யங்கார், டி. ரங்காச்சாரியார், டி. ராமச்சந்திர அய்யர் மகந்துப் பக்கமும், இதற்கு எதிர் வக்கீலாய் ஏற்பட்டவரோ அட்வகேட் ஜெனரலான தோழர் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரிகள் என்கிற பார்ப்பனருமே.

இந்த ஆக்ட் ஒழிய வேண்டுமென அய்க்கோர்ட்டில் பிராது தொடுத்திருந்தாலும், இந்த ஆக்டின் மூலமாய் ஏற்பட்ட உத்தியோகங்கள் எல்லாம் தங்களுக்கே கிடைக்க வேண்டுமென்று, தேவஸ்தான போர்டு ஆபீசையும், மந்திரி வீடுகளையும் பார்ப்பனர்கள் மற்றொரு பக்கம் சுற்றிக் கொண்டுதான் வந்தார்கள்.

இவையெல்லாமிருக்க, உலகப் பெரியார் காந்தியாரையே ஒழிப்பதற்காக, ப்ராமணன் என்கிற ஒரு பத்திரிகையையும், சங்கராச்சாரியார்கள் மகந்துக்கள் முதலிய பார்ப்பன சிரேஷ்டர்கள் என்போரின் ஆதர ணையில் ஆரம்பித்ததும் இப்போதுதான். இதே நேரத்தில் மற்றொரு பக்கம் காந்தியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு பதவிகளையும், சட்டசபை ஸ்தானங்களையும் பெறுவதற்குப், பார்ப்பனரல்லாதாரை ஏமாற்றியும் அலைந்து கொண்டுதானிருந்தார்கள். இதற்குச் சில பார்ப்பனரல்லாதாரையும் மிரட்டிச் சுவாதீனப்படுத்திக் கொண்டார்கள்.

தினசரிப் பத்திரிகைகள் (இன்றைக்குப் போலவே அன்றைக்கும்) தங்கள் கைகளில் இருக்கிற காரணங் களால், பாமர ஜனங்களை ஏமாற்றித் தங்கள் வசப்படுத்திக் கொள்வதோடு, சில முக்கியமான பார்ப்பனரல்லாத திராவிடர்களைத் தலையெடுக்க வொட்டாதபடி, பத்திரி கைகளில் ஊர், பேர் தெரியாத பார்ப்பனரல்லாதாரின் பொய்ப் பெயர்களை இட்டு தூற்றுதலான வியாசங்களை எழுதுவதும், பார்ப்பன வக்கீல்களிடம் (அப்ரென்டிஸ்) அதாவது வேலை படிக்கும் பார்ப்பனரல்லாத வக்கீல் களான, வாலிபர்களின் கையெழுத்தைப் போடச் செய்து, அவர்கள் பெயரால் பார்ப்பனரல்லாதாரை வைது, பத்திரிகைகளில் எழுதுவதும் வயிற்றுக்கில்லாதவர் களினுடையவும், பணத்தாசை பிடித்தவர்களினுடையவும் தேச பக்தியையும் விலைக்கு வாங்கிக் கொண்டு, அவைகளைப் பார்ப்பனரல்லாதா ருக்கு விரோதமாக உபயோகப்படுத்திப் பணச்செருக்கால் செய்து வந்தது சென்னைத் தேர்தல்களிலும் மற்றத் தேர்தல்களிலும் அப்போது நன்றாக அம்பலமாகியது.

ஸ்தல ஸ்தாபனங்களில் பார்ப்பனரல்லாதாருக்குள் கட்சிப் பிரதி கட்சிகளை உண்டாக்கி, இவர்களைக் கோர்ட்டுக்குச் செல்லும்படி அப்போது செய்ததும் பார்ப்பனர்களேயாகும்.

தேசீயப் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாருக்குச் செய்துள்ள கொடுமைகள் இவ்வளவுதானென வரை யறுத்துவிட முடியாது. அவர்கள் செய்தவையும், இன்னும் செய்யப் போகின்றதுமான காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவைகளைச் சமயம் நேரும் போது வெளியிட நாம் பின் வாங்கப் போவதில்லை.

----------
தந்தை பெரியார் - “ குடிஅரசு” 14.5.1949
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா