சமுதாயத்தில் நம் மக்கள் சூத்திர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் ஆக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே அதே நிலையில் இழி ஜாதி மக்களாகவே இருந்து வருகிறோம்.

இழி ஜாதி மக்கள் என்று இருப்பதால்தான் நம் மக்களே தொழிலாளர்களாகவும், கூலி வேலை செய்பவர்களாகவும், உடல் உழைப்புக் கொண்டு உழைத்தும் போதிய வருவாய் இன்றி அரை வயிற்றுக் கஞ்சிக்கு மட்டும் போதிய வருமானம் கொண்டவர்களாக வாழுகிறோம்.

ஒரு சிலர் உயர்ந்த ஜாதி என்ற காரணத்தால், ஒருவித உடல் உழைப்பும் இன்றிச் சுகமான வாழ்க்கை கொண்டு வாழ்கிறார்கள்.

இன்றைக்கு அரசாங்கம் முதற்கண் பார்ப்பனர்களிடமும், வடவர்களிடமும் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறது. பார்ப்பனர்கள் இயற்றி வைத்த சாஸ்திர புராணத்தில் மட்டுமின்றி இன்றைக்குள்ள ஜனநாயக ஆட்சி என்று கூறப்படும் பார்ப்பனர்களும், வடவர்களும் ஆளுகின்றன ஆட்சியின் சட்டத்தில் கூட நாம் சூத்திரர்கள் என்று தான் எழுதப்பட்டு இருக்கிறது. பார்ப்பனருக்கு ஒரு நீதியும் சூத்திரர்களுக்கு ஒரு நீதியுமாக வழங்கப்படுகிறது.

ஒரு நாட்டின் நலனுக்கும், நாட்டு மக்கள் பிழைக்கவும், சுகமாக வாழ்வும் தொழிலாளர் மக்கள் தேவை. இவ்வூர் சுத்தமாக இருக்க கக்கூஸ் எடுக்கும் தொழிலாளியும், குப்பை கூட்டும் தொழிலாளியும் தேவை. வீடு கட்டிக் கொடுக்க கொல்லத்துக்காரன் தேவை. விவசாயி இல்லையேல், உணவு கிடைக்காது. நாவிதன் இல்லையேல், நாகரிகத்துக்குத் தகுந்தபடி தலை அலங்காரமோ, முக அலங்காரமோ செய்து கொள்ள முடியாது.

அப்படி ஒவ்வொருவராலும் ஒவ்வொரு விதத்தில் நன்மை கிடைக்கிறது. யாராவது ஒரு தொழிலாளி இல்லாவிடினும் அந்தத் தொழில் தடைப்பட்டுவிடும். ஆனால், பார்ப்பான் இல்லையேல் எந்த வேலை நின்று போய்விடும்? பார்ப்பானால் என்ன வேலை நடை பெறுகிறது?

ஆனால், இப்படி ஒருவித வேலையும் இன்றி இருப்பவன் மேல் ஜாதிக்காரன் என்றும், நாட்டின் நலனுக்கென்று பாடுபடுகிறவன் கீழ் ஜாதி, தாழ்ந்த ஜாதி, இழி ஜாதி என்றும் ஆக்கப்பட்டிருக்கிறான். இவ்விதக் கொடுமை எந்த நாட்டிலும் இல்லை. இந்நாட்டில்தான் அப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடக்கின்றன.

மதம், சாஸ்திரம், புராணம் இவையெல்லாம் என்றைக்கு ஒழிகிறதோ அன்றுதான் நம் மக்களுக்குள்ள சூத்திரப்பட்டம் போகும். எந்தக் கடவுள்கள் பேரால் ஜாதி உண்டாக்கப்பட்டனவோ அந்தக் கடவுள்கள் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும். எவை எவை ஜாதியை நிலை நாட்டுகின்றனவோ அவை ஒழிந்தால் அன்றி ஜாதியும், மதமும் அழியப்போவதில்லை. இப்படிப்பட்ட அடிப்படைகளை அழித்தால்தான் நம்மிழிவு நீங்கி வாழ முடியும்.

ஆனால் இன்றைக்கு என்னைப் போன்று இப்படிப்பட்ட காரியத்தில் இறங்கியவர்கள் ஒருவர் கூடக் காண முடியாது. எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன என்றாலும், அவை அத்தனையும் பார்ப்பனத் தெருக்களில் பொறுக்கும் எண்ணத்துடன்தான் இருக்கின்றன. எத்தனையோ தேசபக்தர்கள், தியாகிகள், அரசியல் தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாம் ஜாதியைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ கவலை கொள்பவர்கள் இல்லை. அவரவர்களுக்கு ஏதாவது தன்னைப் பொறுத்த மட்டில் சுகம் கிடைத்தால் போதும் என்று பார்த்துக் கொள்ளுகிறார்கள்.

இப்போதுதான் இதுபோன்று இருக்கிறார்கள் என்றால், முற்காலத்தில் கூட யாரும் தோன்றவில்லை. எத்தனையோ சித்தர்கள், யோகிகள், மகான்கள், மகாத்மாக்கள், ரிஷிகள், வெங்காயங்கள் எல்லாம் தோன்றி இருக்கின்றனர். அவர்கள் அத்தனை பேரும் ஜாதியைப் பற்றிய கொடுமையை உணர்ந்து கண்டிக்கவே இல்லை.

புத்தரும் வள்ளுவரும் தோன்றினார்கள் என்றால், அவர்களின் கொள்கைகள் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் போய்விட்டன. வள்ளுவர் என்பவரும் புத்தர் என்பவரும் நம் நாட்டில் இருந்ததாகவே தெரியாதபடி அழித்துவிட்டனர். இப்படி அவர்களைத் தவிர வேறு யாரும் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்பதற்கே புராணங்களை ஏற்படுத்தினார். மதத்துக்கும், ஜாதிக்கும் புறம்பாக நடந்தால் கடவுள் அவதாரம் எடுத்துக் கொன்று விடுவார் என்ற பயம் காட்டுவதற்குக் கடவுள் அவதாரம் எடுத்ததாகக் கட்டுக் கதைகள் எழுதினார்கள். இராமாயணமும் அப்படித்தான். இராமாயணத்தில் புத்த தர்மத்தைக் கடைப்பிடித்த புத்தபிட்சுக்களைக் கண்டிக்க வேண்டும், துரத்த வேண்டும், அழிக்க வேண்டும் என்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. எனவே இராமாயணமும் புத்தரின் காலத்திற்குப் பிறகு எழுதப்பட்ட கதை என்பதுடன் இனி புத்தரைப் போன்று வேறு யாரும் பேசக்கூடாது என்பதற்காகவே இராமாயணம் எழுதப்பட்டது என்றும் கூறலாம். இப்படி ஓரிருவர் தோன்றி பார்ப்பனப் புரட்டுகளை வெளிப்படுத்தி இருந்தாலும் அவர்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டனர்.
இன்னமும் முற்காலத்தில் மூவேந்தர்கள் என்பவர்களும் மற்றும் பல பிரக்கியாதி பெற்ற வீரர்களும், சூரர்களும், அயல் நாடுகளில் சென்று கூட வெற்றி கொண்ட தமிழ் மன்னர்களும், இமயம் கண்ட வீர அரசர்களும் இருந்ததாகச் சரித்திரத்தின் மூலம் காணுகிறோமே அப்படிப்பட்ட அரசர்களின் புத்தியும் பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டதாகத்தான் இருந்திருக்கிறது.

இன்றைக்குள்ள கோயில்களும், மடாலயங்களும் அந்த மூடர்கள் கட்டியவைதான். அவர்களும் பார்ப்பனர்கள் வலையில் சிக்கி இருக்கிறார்கள். எப்படிப்பட்ட வீரனாகவோ சூரனாகவோ இருந்திருந்தாலும் அப்படிப்பட்ட மன்னாதி மன்னர்கள் எல்லாம் பார்ப்பனர்களின் மாய்கையில் எப்படியோ சிக்கிச் சீரழிந்து விட்டார்கள்; அந்த மன்னர்கள் காலத்தில் பொருளை வாரி இறைத்து கோவில்களைக் கட்டி இருக்கிறார்கள். கோடிக்கணக்கில் பொருளைச் செலவிட்டு கோவில்களைக் கட்டி அதன் மூலம் பார்ப்பனர்கள் வாழும் வகையைத்தான் அமைத்து விட்டுப் போயினர். இதைப் போன்றே எல்லாரும் பார்ப்பனர்களின் புரட்டை அறிந்து கொள்ளாததும் அன்றி பார்ப்பனர்களுக்குச் சாதகமாகவே எதையும் செய்திருக்கின்றனர்.

இது மட்டுமல்ல - இன்றைக்குள்ள படித்தவர்களும், பட்டம் பெற்றவர்களும் கூட அப்படித்தான் இருக்கின்றனர். முற்காலம் தான் பகுத்தறிவற்ற காட்டுமிராண்டிக் காலம் என்றால், இன்றைக்கு ஆராய்ச்சியும் விஞ்ஞானமும் கண்ட இப்படிப்பட்ட காலத்தில் கூட அறிவிழந்திருத்தல் மிகவும் பரிதாபப்படத்தக்கதாகும். அதுவும் சயின்ஸ் படித்த மேனாட்டுப் படிப்பு படித்தவன் எல்லாம் கூட நம் நாட்டுக் கடவுள்களையும், புராணங்களையும் நம்புகிறேன் என்றால் மிகவும் வெட்கக்கேடானதாகும்.

சுயராஜ்யம் அடைவதற்கென்றும் நாட்டின் விடுதலைக்கென்றும் பாடுபட்ட தலைவர்கள் கூட இதில் கைவைக்க முடியவில்லையே? எங்களைத் தவிர வேறு யாரும் துணிந்து மதத்தையும், புராணத்தையும், கடவுளையும் ஒழிக்க வேண்டும் என்று பேசக்கூட முடியவில்லையே? இதுவரை எங்கள் முயற்சி இல்லையேல் பார்ப்பனர்கள் நம் நெற்றியில் சூத்திரர்கள் என்று சட்டம் கூட இயற்றியிருப்பார்கள். நாட்டு மக்களுக்கும், நாட்டு விடுதலைக்கும் பாடுபட்ட காந்தியார் கூட ஜாதி ஒழியவேண்டும் என்று கூறவில்லை. காந்தியும் சாதாரண ஆசாமிதானே? உள்ள ஒரு ஆள் "மகாத்மாவாக" ஆனார் என்றால் காரணம் வேண்டும் அல்லவா? மகாத்மா என்ற பட்டம் கொடுத்தவர்கள் அவருக்கு சும்மா கொடுத்துவிடவில்லை. அது மட்டுமல்ல; அவருடைய மூத்திரம் பன்னீர் வாசனை அடிக்கும். அவருடைய மலம் ஜவ்வாது வாசனை வீசும் என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்தார்கள். காந்தி படம் இல்லாத பார்ப்பான் வீடே கிடையாது.

ஏனெனில் காந்தியார் பாடுபட்டது "ராமராஜ்யம்" அமைக்க வேண்டும் என்பதற்கே ஆகும். விஷ்ணு ராமன் அவதாரம் எடுத்தது ஜாதியைக் காப்பாற்ற என்று எழுதியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வர்ணாசிரம ஆட்சியை நிலைநாட்டத்தான் காந்தியும் பாடுபட்டார். ஆதலால்தான் அவர் மகாத்மாவானார்.

ஆனால், எப்படியோ ஒரு சமயம் அவரும் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்தை உணர்ந்து கொண்டார். பார்ப்பனர்கள் செய்யும் கொடுமையை வாய்விட்டுக் கூறவும் துணிந்தார். அதுவரை சும்மா இருந்ததும் அன்றி அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினர். விஷ்ணு மறுஅவதாரம் எடுத்து வந்திருக்கிறார் என்று கூடக் கூறினர்.

இப்படியெல்லாம் புகழ்ந்துவிட்டு அவர் ஜாதியில் கைவைக்க ஆரம்பித்தவுடன் இனிமேல் விட்டு வைத்தால் ஆபத்து என்று கருதி ஒரு பார்ப்பானே அவரைச் சுட்டுக் கொன்றான்!

நம் மக்கள் ஒரு சில பார்ப்பனர்கள் மட்டுமே திட்டம் செய்து கொன்றனர் என்று கருதலாம். ஆனால் அந்த விஷயத்தை வெளியே தெரியாதபடி அப்படியே மறைத்து விட்டனர். காந்தியைக் கொல்லத் திட்டம் போட்டவர்கள் இந்நாட்டிலுள்ள பார்ப்பனர்கள் அத்துனை பேரும்தான்!

காந்தி அன்றைய தினம் சுட்டுக் கொல்லப்படப் போகிறார் என்ற செய்தி முன் கூட்டியே இந்த ஊரில் (அரிமளம்) இருந்த பார்ப்பனர்களுக்குச் கூட தெரிந்திருக்கிறது. அன்று இத்தனை மணிக்கு சுடப்படுவார் என்று முன்கூட்டியே திட்டத்தின் மீது அறிந்திருந்த இங்கிருந்த பார்ப்பனர் அத்தனை பேரும் சரியாக சுடப்படும் அந்த நேரத்தில் மிட்டாய் வழங்கினார்கள்! அது மட்டுமல்ல, பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் என்ற பார்ப்பனர்கள் எல்லாம் அதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள்! காந்திக்கு உற்ற நண்பர்களைப் போல் இருந்த பெரிய பணக்காரர்கள் முதற்கொண்டு அரசியல் தியாகிகள், தேச பக்தர்கள் முதற்கொண்டு திட்டம் போட்டுச் செய்த காரியம்தான். அப்படி இருந்தும் ஒரு சிலர் மட்டும்தான் தண்டிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்கள். அவர்கள் மட்டும்தான் அப்பாவி மனிதர்கள்.

ஆனால், உண்மையில் தண்டனை கொடுத்திருக்க வேண்டுமானால் இந்நாட்டுப் பார்ப்பனர்கள் அத்தனை பேரையும் தூக்கிலிட்டிருக்க வேண்டும். அப்படி பார்ப்பனர்களில் ஒரு குஞ்சு கூட தவறாமல் அத்தனையும் சேர்த்துதான் காந்தியின் உயிருக்கு உலை வைத்தன. இன்னமும் கூறவேண்டுமானால் அவருக்கு நல்ல பிள்ளைகள் போல் நடந்து கொண்டு அவருடன் உறவாடிக் கொண்டிருந்த வடநாட்டு பெரும் தனக்காரர்கள், அரசியல் தலைவர்கள் பார்ப்பனர் கூட்டத்தில் கலந்து சேர்ந்து செய்த தீர்மானமேயாகும். எனவே, அப்படி இருந்தும் அப்பேர்ப்பட்ட மலையைப் போன்ற சதித் திட்டம் வெளியே வராமல் காற்றில் பறந்து போய்விட்டது. இன்றைக்குக் காந்தியைச் சுட்டுக் கொன்றவன் ஒரு பார்ப்பனன் தான் என்பதை யார் கூறுகிறார்கள்.

காந்தியாருக்கு நினைவுச் சின்னங்களும் ஞாபகார்த்த ஸ்தூபிகளும் கட்டுகிறார்களே தவிர அவரைச் சுட்டுக் கொன்ற பார்ப்பன வம்சத்தை அடியுடன் களைந்தெறிய யார் முற்பட்டார்கள்? எப்படியாவது ஒரு பார்ப்பான் கொன்றான் என்ற செய்தி பரவாமலிருக்க வேண்டுமே என்பதற்காக மேற்பூச்சு வேலை செய்கிறார்கள். காந்தியைச் சுட்டவனின் வர்க்கம் இந்நாட்டில் இருக்க இடம் கொடுக்கலாமா? நாட்டின் விடுதலைக்குப் போராடிய தன்னலம் கருதாத அரும்பெரும் தியாகி காந்தியாரின் உயிரைக் குடித்த ஒருவன் இந்நாட்டில் இருக்க இடம் கொடுக்கலாமா? இன்றைக்கும் காந்தியின் பெயரைக் கூறிக் கொண்டு காங்கிரஸ் என்ற வார்த்தையை ஒலித்துக் கொண்டு அதன் மூலம்தான் வாழுகிறதே அன்றி அதை யார் சிந்திக்க முடிகிறது?

காரணம் அப்படிப்பட்ட தன்மையில் காந்தியின் நிலையை யாரும் கவனிப்பார் அற்றுப் போய்விட்டது. பார்ப்பனர்கள் அவரைக் கொண்டாடியதெல்லாம் வெறும் வாய் ஜாலங்கள் தில்லு முல்லுகள் நிறைந்த பாசாங்கு வித்தைகளேயாகும்.

எப்படியோ நாட்டை வாங்கி பார்ப்பனர்கள் கையில் ஒப்படைத்தார். அதை நிரந்தரமாக தங்கள் கையைவிட்டு நழுவ விடாமல் செய்து கொள்ள வேண்டுமே என்பதற்காகச் செய்த திட்டங்களில் ஒன்றுதான் காந்தியைச் சுடும்படி ஆனது.

இப்படி அவருடைய பக்கத்தில் இருந்து கொண்டே அவரைப் போற்றிப் புகழ்ந்த பார்ப்பனர்களே அவருக்கு வெடி வைத்தவுடன் வேறு யார் அதைக் கவனிக்க முடியும்? கவனிப்பதற்கு ஆள் இல்லாமல் போய்விட்டது. அனுதாபப்படுவதைப் போல பாசாங்கு செய்தனர். அவர் சுடப்பட்டவுடன் பார்ப்பனன் சுட்டுக் கொன்றிருப்பான் என்று யாருமே நினைக்கவில்லை. ஒன்றும் அறியாத முஸ்லிம்களின் தெருக்களில் ஒரு சில காலிகள் சென்று அட்டூழியங்கள் செய்தனர். காரணம் அப்போதிருந்த நிலையில் முஸ்லிம்தான் கொன்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. ஆனால் உண்மையில் முஸ்லீம் கட்டியிருப்பானேயானால் இப்போது பார்ப்பனன் சுட்டதைப் போல நடந்திருக்காது. இந்தப் பார்ப்பனர்களே இன்னமும் பறைசாற்றிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், பார்ப்பனன் கொன்ற காரணத்தால் அதைக் கவனிக்க ஆளே இல்லாமல் போய்விட்டது. அப்பேர்ப்பட்ட காந்தியார் கேட்பதற்கு நாதியற்ற நிலையில் உயிர் விட்டார். யாருமே லட்சியம் செய்யாமல் செய்து விட்டனர். ஏதோ பொதுமக்கள் கேள்வி கேட்பார்களே என்பதற்காக வீண் கண் துடைப்புக்காகிலும் வழக்கு நடத்தினார்கள்.

அந்த வழக்கு நடத்தும் போது கூட எவ்வளவு அயோக்கியத்தனங்கள் நடந்தன என்பதை பொது மக்கள் அறியமாட்டார்கள். எல்லாத் தலைவர்களும் பயந்து கொண்டேதான் இருந்தார்கள். எங்கே நமது விஷயம் வெளிப்பட்டு விடுமோ என்று வடநாட்டு மார்வாரி பணக்காரர்களும், இன்றைக்குள்ள அரசியல் தலைவர்களும் பயந்து கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், தந்திரமாக மறைத்துவிட்டார்கள். அதன் சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜிகளை ரயிலில் கொண்டு வருகையில் யாரோ ஒரு திருடன் அவற்றை எடுத்துப் போய்விட்டானாம். உடனே கேட்டதற்கு நான் என்ன செய்வேன் திருடன் தூக்கிக் கொண்டு போய்விட்டான் என்று சொல்லிவிட்டானாம். உண்மையில் அவை திருடனால் கொண்டு போகப்படவில்லை. அவற்றை மட்டும் அலசி ஆராய்ந்து பார்த்திருப்பார்களானால் எல்லா பேர்வழிகளும் அகப்பட்டிருப்பார்கள். இன்றைக்குப் பெரிய தியாகி, தேசபக்தன், அரசாங்கத் தலைவன் என்றெல்லாம் பெருமை அடித்துக் கொள்ளும் அத்தனை பேர்களின் அயோக்கியத்தனமும் அன்றைக்கு வெளிப்பட்டிருக்கும். சுருங்கக் கூறினால் பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ்காரர்கள் அதுவும் காந்தியின் சமீபத்திலேயே இருந்து நல்ல பிள்ளையாக நடந்து கொண்ட அத்தனை பேர்களும் அன்றைக்குக் கூண்டுடன் தூக்கிலிடப்பட்டிருப்பார்கள்.

ஆனால், அவ்வளவு அக்கறையுடன் அந்த வழக்கை நடத்துவதற்கு யாரும் பொறுப்பு கொண்டவர்கள் இல்லாமல் நேராக அகப்பட்டுக் கொண்ட ஒரு சிலர் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டார்கள். இப்படி காந்தியாரின் நிலை கவனிப்பாரற்ற அனாதை போல் ஆகிவிட்டது.

ஆனால், இன்றைக்கு என்னுடைய பிரசாரத்தைக் கண்டு பார்ப்பனர்கள் எல்லாம் ஆத்திரம் அடைகிறார்கள். என்றைக்கு நான் இறந்து போவேன் அன்றைய தினத்தை தீபாவளி போல கொண்டாடலாமே என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய மனதில் மட்டும் உறுதியான நம்பிக்கை ஒன்று உண்டு. என்றைக்காவது என்னுடைய முடிவு ஒரு பார்ப்பனன் அல்லது பார்ப்பனன் அடிமை ஒருவனால்தான் முடியும் என்பது தெரியும். பார்ப்பான் இல்லாவிட்டாலும், பார்ப்பனத் தெருவில் பொறுக்கித் தின்னும் எவனாவது முற்படுவான் என்பது தெரியும். ஆனால் அப்படி நேருமானால் நான் காந்தியின் நிலையை அடைய மாட்டேன். காந்தியைப் போல அனாதையாக செத்துப் போக மாட்டேன்.கொலை செய்யப்பட்டவுடன் கேட்பாரற்ற பிணமாக ஆகமாட்டேன்.

என்னுடைய முடிவு ஒரு நல்ல காரியத்தைச் செய்தே தீரும். என்னுடைய உயிர் போனால் அந்த நிமிடத்திலேயே நம் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். நான் இறந்து பிணமாகும் அந்த வினாடியிலேயே ஆயிரக்கணக்கான பார்ப்பனப் பிணங்கள் அங்கங்கே சுடுகாட்டுக்கு இழுத்துச் செல்லப்படும். என்னுடைய பிணத்தைத் தொடர்ந்து எண்ணிறந்த பார்ப்பனப் பிணங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பதை நான் உறுதியாகக் கூற முடியும்.

ஏனெனில் அவ்விதம் என் மீது பற்றுக் கொண்ட தன்மான வீரர்கள் மலிந்து விட்டார்கள். பார்ப்பனச் சேரிகளுக்கு இறுதிக் காலம் வரும் வழியை நான் வகுத்துக் கொடுக்கும் அந்த நேரத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் எண்ணிறந்த தமிழர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், என்னுடைய கிளர்ச்சியோ, போராட்டமோ சாந்தமான முறையில் நடைபெற வேண்டும் யாருக்கும் துன்பம் இன்றி பிறருக்கு இன்னல் இன்றி பொருள் நஷ்டமின்றி உயிர் நஷ்டமின்றி நடைபெற வேண்டும் என்ற குறிக்கோள்களின் மீதே இதுவரை செய்து வந்திருக்கிறேன். இனியும் அப்படிப்பட்ட கிளர்ச்சிகள் நடத்துவதையே விரும்புகிறேன். ஆனால் தீராத முடிவுக்கு எல்லை இல்லை என்பதையும், அப்படிப்பட்ட நிலை வந்தால் சமாளிக்க வேண்டும் என்ற மன தைரியத்தையும் கொண்டுதான் இருக்கிறேன்.

-----------------------------------

23.01.1956-இல் புதுக்கோட்டை - அரிமளம் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. ”விடுதலை”05.02.1956

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா