தலித் க. சுப்பையா மதுரை மாவட்டம் முனியாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். தினசரி விவசாயக் கூலி குடும்பத்தின் சொந்தக்காரர். தமிழக தலித் கலை இலக்கியப் போராட்டங்களில் முன்னோடியாகத் திகழ்பவர். குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளாக, தலித் பாடல்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உதடுகளில் காந்த அதிர்வுகளை உருவாக்கியவர். போராட்டக்களங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் தலித் இயக்க மேடைகளிலும், தலித் கலைவிழா மேடைகளிலும் தனது விடுதலைக் குரல் மூலம் இசைப்போர் நிகழ்த்தி வருபவர். சாதி ஒழிப்பை ஓங்கி ஒலிக்கும் தீவிர அம்பேத்கர் சிந்தனையாளர். பெரியார் இயக்கப் பாசறையில் வளர்ந்தவர். மார்க்சிய சிந்தனைகளில் தன்னைப் பாடமாக்கியவர். ஒரு கலை இலக்கியப் போராளியாக இருந்து சமகால தலித் இயக்கங்களினூடாக நிழலாக இயங்கி வருபவர். "கலைத் தளத்தில் மனநோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது' என நெஞ்சு நிமிர்த்தி விமர்சிக்கும் தோழர் சுப்பையா அவர்களிடம் எதிர்கால தலித் கலை இலக்கிய அரசியலைப் பற்றிய ஒரு நேர்காணல்.
- அன்பு செல்வம்

தங்களின் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்...

பூமிக்கு எனது அறிகம் எனது தாயின் ஓவென்கிற அழுகைச் சத்தத்தோடுதான் நிகழ்ந்திருக்க வேண்டும். உள்ளங்கையில் அடங்கும் ஒரு சதைப் பிண்டத்தை ரத்தக் குளத்திலிருந்து வெளியேற்றும் பிரசவப் போல் என் தாய் மட்டுமல்ல, நானும்கூட மொழியற்ற ஒருவகை அழுகுரலோடுதான் இந்த அழகிய உலகிற்கு அறிகமாயிருப்பேன். இயற்கை விதியான பிறப்பு குறித்த இவ்வினை, மனிதகுலம் முழுமைக்கும் பொதுவான ஒன்றாகவே இருக்கிறது.

Dalith Subbiah மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், முனியாண்டிப்பட்டி எனும் சிற்றூர்ச் சேரிதான் எனது பிறப்பிடம். எனது தந்தையின் தந்தை பெயர் சுப்பன். எழுதப் படிக்கத் தெரிந்த எனது தந்தை பெயர் கருப்பன். வாகான உடலமைப்பும், வேகமாக நடக்கும் திறனுடைய என் தந்தைக்கு கள்ளர்கள் வைத்த கேலிப் பெயர் நொண்டி என்பதாகும். என் தந்தைக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பெயர் பழனி. இவருக்கு வெள்ளையம்மாள், பூச்சியம்மாள் எனும் இரண்டு மகள்கள் உண்டு. ஆண் குழந்தை கிடையாது. அக்காலத்தில் ஆண் குழந்தை இல்லாத குடும்பங்களைப் பார்த்து "தலை சிரைக்க பிள்ளையில்லாத குடும்பம்'' என்று ஏளனம் பேசுகிற வழக்கம் இருந்தது. இத்தகைய அவமானத்தைப் போக்கவே இருதார மணம் அங்கீகக்கப்பட்ட ஒன்றாக இருந்தது.

இதன் அடிப்படையில்தான் என் அப்பாவுக்கு என் அம்மா இரண்டாம் தாரமாக வாக்கப்பட நேர்ந்தது. என் அம்மாவுக்கு ஒரே மகனான என்னைத் தவிர, குழந்தைகள் கிடையாது. என் தாத்தாவுக்கு என் அப்பா ஒரே மகன். என் அப்பாவுக்கு நான் ஒரே மகன். எனக்கு இரண்டு மகன்கள். நான் தமிழகத்தில் பிறந்தவன். எனது மனைவி சுப்புலெட்சுமி மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். எனது மகன்கள் இருவரும் புதுச்சேயில் பிறந்தவர்கள். வரலாற்றில் அடிமைத்தனத்தை எதிர்த்த முதல் மனிதனும், பேராசான் காரல் மார்க்சின் கவனத்தை ஈர்த்த போராளியும், வெள்ளை அடிமையுமான ஸ்பார்டகசை நினைவு கூறும் வகையில், அப்பெயரை என் மூத்த மகனுக்கு வைத்திருக்கிறேன். சோவியத் புரட்சியின் கண்ணாடி என்று பேராசான் லெனினால் அழைக்கப்பட்ட கார்க்கியின் நினைவாய் அப்பெயரை என் இளைய மகனுக்கு வைத்திருக்கிறேன்.

எனது பெரியம்மா தாலாட்டுப் பாடுவார். ஒப்பாரி வைப்பார். கதைகள் சொல்லுவார். ஆனால், என்னைப் பெற்ற அம்மா பேசுவதற்கும், பிறர் பேசுவதைக் கேட்பதற்குமான சக்தியை இயற்கை வழங்கவில்லை. என் அம்மா பிறவி ஊமையாக, செவிடாகப் பிறந்து வாழ்ந்து செத்துப் போனவர். ஈனக்குரலாய் என் அம்மாவிடமிருந்து வெளிப்பட்ட சிரிப்பும் அழுகையும்தான் எனக்கும் என் அம்மாவுக்குமிடையிலான உறவை நேசத்தை பத்திரப்படுத்தி காப்பாற்றி வந்தது. எனக்கான முதல் அடையாளம் நான் ஓர் விவசாயத் தொழிலாளியின் மகன் என்பதுதான். பிறகே மற்ற அனைத்தும்.

நீங்கள் அந்தக் காலத்தில் கல்வி பயின்ற பின்னணியை சற்று விரிவாகச் சொல்லுங்கள்...

முதன் முதலில் எனக்கு எழுத்தைக் கற்றுக் கொடுத்தது பள்ளி ஆசியர்களல்லர். அதேபோல், நான் எழுதியது சிலேட்டுக் குச்சி அல்லது பென்சிலும் அல்ல. மேலும், நான் எழுதுவதற்குப் பயன்படுத்தியது சிலேட் அல்லது தாளும் அல்ல. பள்ளியில் என்னைச் சேர்ப்பதற்கு முன்பாக எங்கள் வீட்டு வாசலில் 56 படி நெல் கொள்ளளவுள்ள ஒரு மூட்டை நெல்லைக் கொட்டி வட்டமாகப் பரப்பி, என் சுட்டுவிரலைப் பிடித்து "அ' எனும் முதல் எழுத்தை நான் எழுதுவதற்கு என் தந்தை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். எனக்கான கல்விச் சிந்தனை நெல்லின் மீது எழுதிய எழுத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது. பள்ளியில் என்னைச் சேர்ப்பதற்கு முன்பு வீட்டில் நெல் சேமித்து வைத்திருக்கும் மச்சுக்குக் கீழே வாழை இலையில் தேங்காய், வாழைப்பழம் வைத்து படி நிறைய நெல்லும், பனை ஓலையில் எழுதப்பட்ட வீட்டுப் பத்திரம், வெற்றிலைப் பாக்கு, நூல் சுற்றப்பட்ட செப்புக் குவளையில் தண்ணீர், இவைகளுடன் சூடம் கொளுத்தி சாம்பிராணி புகை போட்டு, முன்னோர்களை நினைத்து என்னைக் கும்பிடச் சொல்லி அதன் பிறகே என் தந்தை என்னைப் பள்ளியில் சேர்த்திருக்கிறார்.

பணப்புழக்கம் அதிகமில்லாத அக்காலத்தில், எனது பள்ளிப் படிப்பின் முதல் ஆசியரான திரு. இருதயம் அவர்களுக்கு மூன்று மரக்கால் நெல்லை என் தந்தை குரு காணிக்கையாகக் கொடுத்திருக்கிறார். என் தாய் தந்தை நான் ஒரே மகன் என்பதால், எனக்கு வைத்த பெயர் பிச்சை. பிச்சை என்று பெயரிடுவது இலவசம் என்கிற அர்த்தம் சார்ந்ததல்ல. ஆண் குழந்தை வேண்டுவோர் அக்காலத்தில் மடிப்பிச்சையேந்துவது என்கிற ஒரு சடங்கைச் செய்து வந்தனர். ஆண் குழந்தையில்லாத தாயும் தகப்பனும் நாலு வீட்டின் முன்பு நின்று மடிப்பிச்சையேந்தி நெல்பெற்று அதைக் குத்தி அரிசியாக்கித் தங்கள் குல சாமிக்குப் பொங்கலிட்டு, தங்கள் வேண்டுதலை சாமியிடம் ன்வைப்பார்கள். நம்பிக்கை சார்ந்து செய்யப்படும் இதுபோன்ற சடங்குகளால் பல வருடங்கள் கடந்து குழந்தைப் பேற்றை அடையும்போது, பிறப்பது ஆணாக இருந்தால் பிச்சை என்றும் பெண்ணாக இருந்தால் பிச்சையம்மாள் என்றும் பெயரிடுவது வழக்கம்.

என் அம்மாவைத் திருமணம் செய்து பல வருடங்கள் கடந்த நிலையில் நான் பிறந்ததால், மேற்கண்ட மடிப்பிச்சை சடங்குகள் செய்யப்பட்ட பின்னணியில்தான் எனக்குப் பிச்சை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிறித்துவரான இருதயம் ஆசியர் எனக்கு வைத்த பெயர்தான் சுப்பையா. தலித்துகள் "ஈ' விகுதியுடன் முடிவதாகப் பெயர்கள் வைப்பது முன்பு குற்றச் செயலாகக் கருதப்பட்டது. என் தாத்தா, தந்தையின் பெயர்கள் "ன்' விகுதியுடன் முடிபவை. எனக்கு "ன்' விகுதியுடன் பெயரிடாததற்கு இருதயம் ஆசியர்தான் காரணமாக இருந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

எங்கள் கிராமத்தில் அய்ந்தாம் வகுப்பு வரை இயங்கி வந்த அரசு ஆரம்பப் பள்ளியில்தான் எனது படிப்புத் தொடங்கியது. எனது பள்ளிப் படிப்பின் முதலாவது ஆசியர் திரு. இருதயம். வலதுகால் ஊனமான நிலையில் சற்றுக் காலை இழுத்து இழுத்து நடப்பார். மெலிந்த உடம்பு, அரைக்கை சட்டை, மடித்துக்கட்டிய நாலுமுழ வேட்டி, கையில் குடை, மாணவர்களிடம் கண்டிப்பு, பெற்றோர்களிடம் இலவசமாக எதையும் எதிர்பார்க்காத நேர்மை போன்றவைதான் இருதயம் ஆசியருக்கான அடையாளம். இவர் செருப்பணிந்து நான் பார்த்ததில்லை. கள்ளர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்த பள்ளியில் படித்த என்போன்ற சிறுவர்களை சேரிக்கு வந்து அழைத்துச் செல்வார். இருதயம் ஆசியருக்கு மூன்று பிள்ளைகள. மூத்த பெண் ரெஜினா நல்ல உயரத்துடன் சிவப்பு நிறத்தில் அழகுப் பதுமையாகக் காட்சியளிப்பார். இரண்டாவது பெண் ரெஜினாவுக்கு நேர்எதிராக கருப்பு நிறத்துடன் குள்ளமாக இருப்பார். ஒரே மகன் செல்லத்துரை. நான் மேலூருக்குப் படிக்க வந்து பல வருடங்களுக்குப் பிறகுதான் இருதயம் ஆசியர், ஒரு தலித் கிறித்துவர் என்பதாக அறிய நேர்ந்தது. எளிமையுடன் வாழ வேண்டும் என்பதை எனக்கான முன்னோடிகளில் இருதயம் ஆசியரும் ஒருவராவார்.

ரெஜினா டீச்சர் எனக்கு கணக்கு ஆசியர். அவர் எங்கள் கிராமத்தில் தங்கியிருந்தபோது, எதிர் வீட்டைச் சேர்ந்த கள்ளர் சாதி இளைஞர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் அந்த இளைஞன் மாமனார் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தன் மகளுக்கு நேர்ந்த அவமானத்தால் மனமுடைந்த இருதயம் ஆசியர், மறுவாரமே எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி மேலூரில் குடியேறி விட்டார். மதுரையில் நான் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் இருதயம் ஆசிரியரை மேலூரில் ஒருநாள் சந்திக்க நேரிட்டது. கல்லூரியில் நான் படிப்பதாகக் கூறியபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அத்துடன் படிப்பை முடித்த பிறகு கிராமத்தில் வசிக்காதே என்று எனக்கு ஆலோசனையும் கூறினார். படித்த தலித்துகள் கிராமச் சாதியக் கட்டமைப்பிற்குள் சுதந்திரமாக வாழ முடியாது என்பதற்கு ஆசியர் இருதயம் அன்று கூறிய அறிவுரை, பிற்காலத்தில் கிராம வாழ்வில் நான் எதிர்கொண்ட பல்வேறு அவமானங்கள் சாட்சியாக அமைந்தன.

ஆரம்பக் கல்வியை முடித்த நிலையில் மேலூர் நகல் 6 ஆம் வகுப்பில் சேர்ப்பதற்கு என் தந்தை முயற்சி செய்தார். மேலூரில் சுந்தரேஷ்வரா வித்யசாலை எனும் தனியார் பள்ளியில் படிப்பதற்கு எனக்கு மிகுந்த விருப்பமிருந்தது. அப்பள்ளியில் வசதி படைத்தவர்கள் குறிப்பாக பார்ப்பனர், செட்டியார், நாயுடு, கள்ளர் சாதியில் சொந்த நிலம் வைத்திருப்பவர்களின் பிள்ளைகள்தான் பணம் கட்டிப் படித்து வந்தனர். உயர் கல்வி படிப்பதற்கு அடிப்படைக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்வதற்கான திறன் இல்லாத நிலையிலும்கூட, கல்லூரிப் படிப்புவரை நான் தொடர வேண்டுமென்பதில் என் தந்தை மிகவும் உறுதியாக இருந்தார். மேலூர் அழகர் கோவில் சாலையில் அரசுப் பொது மருத்துவமனை அருகில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். அப்பள்ளியில் நான் படித்த காலத்தில் 70% பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில்தான் படித்து வந்தனர். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தனியார் பள்ளிகள் அப்போது மிகவும் குறைவு. அப்பள்ளிகளில் பணம் கட்டிப் படிக்க வைக்க முடியாத ஏழைகளின் எண்ணிக்கை மிகமிக அதிகம். மற்றொன்று தலித் மற்றம் பிற்படுத்தப்பட்ட சாதியினர் தங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு அரசுப் பள்ளிகளையே பெரிதும் நம்பியிருந்தனர். இந்த நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தவர் காமராசர்.

நான் படித்த காலத்தில் கிராமத்திலிருந்து நகரத்திற்குச் சென்று படித்துவரும் மாணவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கும். இவர்களில் சேரிப்பிள்ளைகளின் எண்ணிக்கை அரிதாகவும், பெண்களோ அறவே இல்லாத நிலையும் இருந்து வந்தது. தினம் மூன்று மைல் தொலைவுள்ள மேலூருக்கு சக மாணவர்களுடன் புத்தகப்பை, தூக்குச் சட்டியுடன் நடந்து சென்று படித்து வந்தேன். அப்போது காலில் செருப்பணியும் வழக்கமில்லை. வாரத்தில் 6 நாட்கள் தினம் 6 மைல் நடந்து படித்து வந்தது, என் உடம்பை பல்வேறு நிலைகளில் பாதிப்புக்குள்ளாக்கியது. இதனால் என் கண்பார்வை குறையத் தொடங்கியது.

Dalith Subbiah எங்கள் கிராமத்தின் வசதிபடைத்த கள்ளர் சாதி குடும்பப் பிள்ளைகள், கூட்டுவண்டியில் பள்ளிக்கு வருவார்கள். அந்த வண்டியை பிடித்துக்கொண்டே பின்புறமாக ஓடுவோம். என் புத்தகப் பைகளை அந்த வண்டியில் வைப்பதற்குக்கூட அப்பிள்ளைகள் அனுமதிக்க மாட்டார்கள். சில சமயங்களில் வண்டியைக்கூட தொடவிட மாட்டார்கள். சைக்கிளில் செல்பவர்களிடம் நானும் வருகிறேன் என்றால், என்னை உட்காரச் சொல்லி அவர்கள் மிதிக்க மாட்டார்கள். நான்தான் சைக்கிள் ஓட்டுவேன். கள்ளர்கள் உட்கார்ந்து வருவார்கள். என்னுடன் படித்த கள்ளர்கள் உள்ளிட்ட பிற சாதி மாணவர்கள் எவரும் என்னை அண்ணன் தம்பி என்று அழைத்ததில்லை. வயதில் மூத்தவர்கள் வாடா போடா என்றும், சிறியவர்கள் வா, போ என்று பெயரைச் சொல்லித்தான் அழைத்தார்கள். என் புத்தகப் பையைத் தொட்டு தூக்குவார்கள். தூக்குச் சட்டியை தொடமாட்டார்கள். நான் கொடுக்கும் அரிசியை, கேழ்வரகுப் புட்டை, தின்னக் கொடுத்தால் வாங்க மாட்டார்கள். பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் நான் படித்த 3 வருடங்களிலும் எனக்குத் தமிழாசியராகவும், 6 ஆம் வகுப்பில் வகுப்பாசியராகவும் இருந்தவர் செல்வி. பச்சையம்மாள் ஆவார். மரவேலை செய்யும் ஆசாரி வகுப்பைச் சேர்ந்த இவர், வகுப்பறையில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார். நான் பாடுவதற்கு ஊக்கப்படுத்தியவர்களுள் இவரும் ஒருவர்.

பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் தேர்வு பெற்ற நிலையில், மேலூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பில் சேர்ந்தேன். உயர்நிலைப் பள்ளியில் நான் படித்த காலம் துயரமானது. திங்கட் கிழமையன்று வெள்ளைச் சட்டை, நீலநிறக் கால்சட்டையணிந்து சீருடையுடன் பள்ளி செல்ல வேண்டும். சீருடை வாங்க இயலாத நிலையில், திங்கட்கிழமை பள்ளி செல்வதைப் பல மாதங்கள் தவிர்த்திருக்கிறேன். செவ்வாய்க்கிழமை பள்ளிக்குப் போனால் வகுப்பாசியர் மோசமாகத் திட்டுவார்; அடிப்பார்; முதல் வகுப்பு முடியும் வரை வெளியில் வெயிலில் நிற்க வைப்பார். இத்துயரத்தை மாலையில் வீடு திரும்பிய பிறகு பெரியம்மாவிடம் கூறி அழுவேன். என் அம்மா கண்ணீர் வடிப்பார். அடிபட்டு வீங்கிப்போன இடத்தில் சாணத்தைச் சுட்டு ஒத்தடம் கொடுப்பார். இப்படியெல்லாம் அடிவாங்கிக்கிட்டு படிக்கிற படிப்புத் தேவையில்லே; நாளையிலேருந்து பள்ளிக்கூடம் போக வேணாம் என்று பெரியம்மா சொல்வார். அப்பா மவுனமாக இதைக் கேட்டுக் கொண்டிருப்பார். எனக்கு நினைவு தெரிய எஸ்.எஸ்.எல்.சி. படிப்பு முடியும்வரை நான் உடுத்திய ஆடையில் பள்ளிச் சீருடை மட்டும்தான் துணி எடுத்து தையற்கடையில் கொடுத்து தைத்துப் போடப்பட்டவையாகும். திங்கட்கிழமை மேலூரில் நடைபெறும் மாட்டுச் சந்தையின்போதுதான் சாலையோரத்தில் விற்கப்படும் சட்டை டவுசரை அப்பா வாங்கித் தருவார். அப்பா வாங்கித் தரும் உடைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவை சிவப்புச் சட்டையும் பச்சை டவுசரும்தான்.

எனது சொந்த கிராமத்தைச் சேர்ந்த பெரிய கருப்பன் என்பவர், அப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசியராகப் பணி செய்தார். அவர் என்னைக் கண்டுகொள்ள மாட்டார். கள்ளர் சாதியைச் சேர்ந்த இவர், கள்ளர் சாதி மாணவர்கள் விளையாட்டின் மீது ஆர்வம் செலுத்த தனிக்கவனம் செலுத்துவார். கள்ளர் சாதி மாணவர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் பல்வேறு சமயங்களில் மோதல்கள் நடந்துள்ளன. அவர்கள் சற்றும் யோசிக்காமல் என் நெஞ்சில் கைவைத்து தள்ளுவார்கள். சட்டையைப் பிடித்து உலுக்குவார்கள். கைநீட்டி அடிப்பார்கள். அவர்களுடைய தாய் தந்தையர் தலித் மக்களை திட்டுவதைப் போல வாடா, போடா என்று என்னைத் திட்டுவார்கள். பெரிய கருப்பன், சாதிப் பெருமையுடன் இதையெல்லாம் பார்த்து ரசிப்பார்.

பல்வேறு அவமானங்களைச் சுமந்து கொண்டுதான் அப்பள்ளியில் படிப்பை முடித்து வெளியேறினேன். கள்ளர் சாதி மாணவர்களால் பல்வேறு சமயங்களில் நான் மிரட்டப்பட்டபோது, அவர்களைக் கடுமையாக எச்சரித்து எனக்கு ஆறுதலாகப் பேசிய ஆசியர்களும் உண்டு. அவர்களில் திரு. கன்னியப்பன், திரு. அரசன் ஆகிய செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இருவரால்தான் மூன்று வருடங்களும் நான் அப்பள்ளியில் தொடர்ந்து படிக்க நேர்ந்தது.

இதன் பிறகு கல்லூரியில் படிக்கும் பொறுப்பை எனது தாய் மாமன் திரு. மகாலிங்கம் ஏற்றுக் கொண்டார். மதுரை வெள்ளைச்சாமி (நாடார்) கல்லூயில் நான் புகுமுக வகுப்பில் சேர்ந்து படிப்பதற்கு மாமா உதவி செய்தார். இளங்கலை முதலாமாண்டு சேருவதற்கு முன்பாகவே மாமா விபத்தில் இறந்துவிட்டார். கல்லூரியில் பணம் கட்டுவதற்கு இயலாத நிலையில், அப்பாவும் அம்மாவும் வீட்டுப் பத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு உடன் என்னையும் அழைத்துக் கொண்டு கள்ளர்கள், கோனார் வீட்டு வாசல்களில் நின்று கடன் கேட்டு கெஞ்சியதை நான் ஒருபோதும் மறக்க முடியாது.

என்னைப் பண்ணை வேலைக்கு சேர்த்துவிட்டால் கடன் கொடுப்பதாகச் சிலர் கூறினார்கள். வாங்கும் கடனைத் திரும்பச் செலுத்த முடியாத பட்சத்தில், புறம்போக்கு இடத்திற்காக வாய்க்கப்பட்ட மனைப்பட்டாவை வைத்து நாக்கு வழிக்கவா முடியும் என்ற சிலர் கேட்டார்கள். பல வருடங்களாக மாட்டுச் சாணம் அள்ளி அம்மா உழைத்து வந்த கோனார் சாதி குடும்பங்களும், உழவுப் பண்ணைக்காக அப்பா வேலை செய்து வந்த கள்ளர் சாதிக் குடும்பங்களும்கூட, உதவ முன்வரவில்லை. தலித்துகள் படிக்கக் கூடாது என்பதில் சாதி இந்துக்கள் தொலை நோக்குடன் சிந்திக்கிறார்கள் என்பதைக் காலம்தான் எனக்கு உணர்த்தியது. அதற்கான வழியைத் திறந்தது, மார்க்சியமும் பெரியாரியம்தான்.
- பேட்டி அடுத்த இதழிலும் தொடர்கிறது

Pin It