தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் 4.12.2005 அன்று ஈரோட்டில் முப்பெரும் விழா நடைபெற்றது. "தீரன் சின்னமலை 250 ஆவது பிறந்த ஆண்டு விழா, பாரதி பிறந்த நாள் விழா, ஈரோடு தமிழன்பனுக்குப் பாராட்டு விழா'' என முப்பெரும் விழாக்கள். த.மு.எ.ச.வின் இம்முப்பெரும் விழா, ஈரோட்டில் கடும் விமர்சன விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.

Thamuyesa தோன்றியுள்ள விவாதம் விழாப் பொருள் பற்றியதன்று. தீரன் சின்னமலையைக் கொங்கு இனத் தலைவராகக் கவுண்டர்கள் முடிசூட்டிக் கொண்டாலும், விடுதலைப் போராளியான அவருக்கு விழா எடுப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கப் போவதில்லை. பாரதிக்கு விழா எடுப்பதில் மாற்றுக் கருத்துடையவர்கள்கூட, அது பற்றி இங்குத் திறனாய்வு செய்யவில்லை. இங்குச் சிக்கலே விழாவிற்கு அழைக்கப்பட்டவர்கள், பாராட்டப்பட்டவர்கள் பற்றியதே. அவர்களை அழைத்துப் பாராட்டுச் செய்ததின் மூலம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் "முற்போக்கு' அடைமொழி கேள்விக்குள்ளாகியுள்ளது!
விழா அழைப்பிதழைப் பார்க்கும் எவருக்கும், கொள்கைக் கோட்பாடுகளின் தாக்கத்திற்கு உள்ளாகாத பொதுவானவர்களுக்கும்கூட, ஒரு சில கேள்விகள் இயல்பாகவே தோன்றும். ஈரோடு தமிழன்பன் பாராட்டு விழாவிற்குத் தலைமை தாங்கியவர், செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தாளாளரான ஜே. சுத்தானந்தன் ஆவார். இவர் புதிய நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவராய் இருந்தவர். தீரன் சின்னமலைப் படக் கண்காட்சித் திறப்பாளர், சாதிவெறியரான வி.சி. மோகன் தேவசேனாபதி ஆவார். தீரன் சின்னமலை பிறந்த ஆண்டு வாழ்த்துரை வழங்கியவர்களில் ஒருவர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரும், இந்நாள் காங்கிரசுக்காரரும், எந்நாளும் சாதி ஆதிக்க நிலவுடைமையாளருமான துரை ராமசாமி ஆவார். முதலியாரைப் பாராட்ட முதலியார்? கவுண்டரைப் பாராட்டக் கவுண்டர்களா?

சுந்தானந்தன், சாதியின் பெயரில் (செங்குந்தர்) கல்வி நிறுவனங்களை நிறுவிப் பேணி வருகின்றவர். அவரது கல்வி நிறுவனங்களில் முதலியார் சாதிக்காரர்கள் மேலாண்மை செலுத்ததுவதாகக் குற்றச்சாட்டு உண்டு. ஈரோடு செங்குந்தர் மேனிலைப் பள்ளியில் முதலியார் சாதி ஆசியர்களுக்கும் முதலியார் சாதியைச் சேராத பிற ஆசியர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில், பள்ளி ஆவணங்கள் தீக்கிரையாகிப் போன வரலாறும் உண்டு.

தமிழன்பனைப் பாராட்ட இடதுசாரிக் கருத்தோட்டம் கொண்ட எவரும் ஈரோட்டில் இல்லையா? நாம் தமிழன்பனை சாதிப் பற்றாளர் என்று குற்றம் சாட்ட விரும்பவில்லை. "சாதி அழித்திடல் ஒன்று நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று பாதியை நாடு மறந்தால் மற்றப் பாதி துலங்குவதில்லை'' எனப் பாடிய பாரதிதாசனையே சாதி வட்டத்திற்குள் அடைக்கும் பின்னணியைக் கொண்ட ஒருவர், தமிழன்பனைப் பாராட்டுவது முறையற்றது, கண்டனத்திற்குரியது.

தீரன் சின்னமலை வாசு என த.மு.எ.ச.வால் பாராட்டுப் பத்திரம் வாசித்தளிக்கப்பட்ட மோகன் தேவசேனாபதி, ஊரறிந்த சாதி வெறியர். தேநீர்க் கடையில் பெஞ்சில் அமர்ந்து அருந்ததியர் சாதியைச் சேர்ந்த இருவர் தேநீர் அருந்தினார்கள் என்பதற்காகவே அவர்களையும், அச்சமூக மக்களையும் அடித்து நொறுக்கி ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் துன்புறுத்திய சாதி வெறியர். அவரின் சாதிக் கொடுங்கோன்மையை எதிர்த்து, புரட்சிகர இளைஞர் முன்னணி பெரும் போரட்டம் நடத்தியதுடன் தொடர்ந்து போராடியும் வருகிறது. இவ் விழாவில், த.மு.எ.ச.வைக் கண்டித்து துண்டறிக்கை வழங்கிய பு.இ.மு. தோழர்கள் காவலர் துணையோடு அரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், 13 தோழர்கள் கைதும் செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோகன் தேவசேனாதிபதியின் சாதிவெறி அனைவரும் அறிய அம்பலப்பட்டு நிற்கையில், த.மு.எ.ச.வினருக்கு மட்டும் தெரியாமல் போனதன் மர்மம் என்ன?

முற்போக்கு என்று அடைமொழி இட்டுக் கொள்வதால் முற்போக்காளர் ஆகிவிட முடியாது. செயல் ஒன்றுதான் முற்போக்கா, பிற்போக்கா என்பதைத் தீர்மானிக்கும். ஈரோட்டில் நடைபெற்ற த.மு.எ.ச.வின் முப்பெரும் விழா, அவர்களை முற்போக்காளர்களாய்க் காட்டவில்லை; பிற்போக்காளர்களே என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஒருவேளை, தவறு ஈரோட்டுக் கிளையின் உடையதா? இல்லை! இல்லை! விழாவை ஒட்டி வெளியாகியிருந்த "செம்மலரில்' ராமசாமிகளும், தேவசேனாபதிகளும், சுத்தானந்தன்களுமே நிரம்பி இருந்தனர். சாதி ஒழிப்பை முன்னிறுத்தும் தலித் இலக்கியம் தேவையற்றது என்று முழங்கும் த.மு.எ.ச., சாதி வெறியை ஆராதிப்பதற்குத் துளியும் வெட்கப்படவில்லை.


Pin It