தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களான முஸ்லிம்களுக்கு, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திண்டிவனத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 9.12.2005 அன்று நடைபெற்ற இக்கூட்டத்தை, முஸ்லிம் மக்கள் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் கு. கம்மது அலி, ஜா. அப்துல் பாபு, கொளத்தூர் மணி, பேரா. கல்விமணி, ரா. முருகப்பன், தி.அ. நசீர் அகமது, வழக்கறிஞர் மு. பூபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முஸ்லிம் மக்கள் கழகம், ஏழை எளிய முஸ்லிம்களுக்காகவும், பழங்குடி இருளர் மற்றும் தலித் மக்களுக்காகவும் மனித உரிமைகளின் அடிப்படையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. சமூக ஒற்றுமைக்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இக்கழகத்தின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழாவில், முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்டு, தமிழகத்தில் விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்த எந்தக் கட்சிகளும் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட இஸ்லாமியர்களின் கல்வி, அரசு வேலைவாய்ப்புகளுக்கு எந்த முன் முயற்சியையும் எடுக்கவில்லை. 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்குள் இஸ்லாமியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிக்க முடியும். ஆனால், முக்கிய கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளையே அளித்து வருகிறது.
முஸ்லிம்கள், ஒரு சமூகக் குழு என்ற அடிப்படையில் அவர்களுக்குரிய உரிமைகளை அல்லது இடஒதுக்கீட்டை, இந்திய அரசியல் சட்டத்திற்குட்பட்டுப் பெறுவதற்கு உரிமை படைத்தவர்கள். இந்திய அரசியல் சட்டப் பிரிவு 15(4) மற்றும் 16(4)இன் வரையறைக்குள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்க்கவும், 5 சதவிகித இடஒதுக்கீட்டை கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் தற்போது மாநிலத்தில் உள்ள ஏ, பி, சி, டி பிரிவுகளுடன் ‘இ' பிவு என கூடுதலாக இடஒதுக்கீடு வழங்க ஆந்திரப் பிரதேச பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஆணை வழங்கப்பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தில்தான் முதன் முதலில் அரசு ஆணை ஒன்றின் மூலம் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. நீதிமன்றம் முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும் என வாதாடியது; வெளியிலும் போராடியது.
கல்வி நிலை உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், முஸ்லிம்களின் பங்கெடுப்பு மற்றும் குறைந்துகொண்டே போகிறது. இந்த அறிகுறிகள் மிகவும் மோசமானது. இதற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். ஏனெனில், கல்வித் தரம் வளர, வளர அவர்களின் பங்கு குறைந்து கொண்டே செல்கின்றது. விளக்கமாகச் சொன்னால், முஸ்லிம்கள் அதிகமாகப் படிக்கப் படிக்க உயர் பதவிகளில் அவர்களுக்குத் தரப்படும் இடங்கள் குறைந்து கொண்டே செல்கின்றன.
ஆந்திர மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் குழு, முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்ணுங்கருத்துமாய் கவனித்து வந்திருக்கின்றது. மேலும், இடஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே முஸ்லிம்கள் உயர் பதவிகளில் அமர முடியும் என்பதையும் அது அறிவித்துள்ளது. இதைப் பிற மாநில அரசுகளும் பரிசீலிக்க வேண்டும்.
முஸ்லிம் மக்கள் தங்களுடைய கடமைகளை நன்கு புரிந்து கொண்டு, ஆதிக்க சக்திகளுக்கு பயப்படாமல் இந்திய அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட்டு, தங்களுடைய பிரச்சனைகளை தாங்களாகவே தீர்த்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருந்து தங்களுக்கு வேண்டிய உரிமைகளைப் பெற முயல வேண்டும். அதற்காகப் போராட்டக் களத்தில் இறங்கிப் போராட வேண்டும். ஏழை, எளிய ஒடுக்கப்பட்டோர் முஸ்லிம்களின் கல்விக்காகவும், மனித உரிமைக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என முஸ்லிம் மக்கள் கழகம், ஆறாம் ஆண்டு தொடக்க விழாவில் கேட்டுக் கொள்கிறது
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு
- விவரங்கள்
- தலித் முரசு செய்தியாளர்
- பிரிவு: தலித் முரசு - ஜனவரி 2006