'ஜெயலலிதா திருந்தவில்லை; திருந்தவும் மாட்டார்' என்று தேர்தலுக்கு முன்பே கொந்தளித்தார் வைகோ.

'ஆட்சி மாற்றத்தால் மிகப்பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை; அமைச்சரவையில் மட்டும் தான் மாற்றம் ஏற்பட்டுள்ளது' என்று தேர்தலுக்குப் பின்பு கிண்டலடித்தார் தா.பாண்டியன்.

வைகோவின் கொந்தளிப்பை மெய்ப்பிக்கும் வகையிலும், தா.பாண்டியன் கிண்டலடிக்கும் நிலையிலும் இருக்கிறது, நூறு நாட்களைக் கடந்திருக்கும் ஜெயலலிதாவின் சாதனை ஆட்சி. மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்கள் ஏமாளிகள் என்பதையும், ஜெயலலிதா துளி கூட மாறவில்லை என்பதையும் அண்மைக்கால நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

jayalalitha_modi_600

உலக நாடுகளால் துரத்தியடிக்கப்படும் ஓர் இனப்படுகொலை குற்றவாளியை குஜராத்திலிருந்து அழைத்து வந்து போயஸ் தோட்டத்தில் விருந்து கொடுத்தார் பழைய ஜெயலலிதா. அந்தக் குற்றவாளியின் பதவியேற்பு விழாவுக்கு குஜராத் வரை சென்று பூங்கொத்து கொடுத்தவரும் அதே பழைய ஜெயலலிதா தான்.

'இதெல்லாம் பழங்கதை; எங்கள் கூட்டணித் தலைவி மாறிவிட்டார்' என்று தமிழக வீதிகளில் கூவித் திரிந்த முஸ்லிம் கட்சியின் முகத்தில் கரி பூசினார் பழமை மாறாத புதிய ஜெயலலிதா. தம் பதவியேற்பு விழாவுக்கு மோடியை அழைத்ததன் மூலம் தமது புதிய அரசு எந்த வழித்தடத்தில் பயணிக்கப் போகிறது என்பதை தெளிவாக போட்டுடைத்து விட்டார்.

டில்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் பங்கேற்று, அனைத்து மாநில முதலமைச்சர்களின் முன்னால் எழுந்து நின்று 'அயோத்தியில் ராமர் கோவிலை எழுப்ப வேண்டும்' என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார் பழைய ஜெயலலிதா. கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து 'ராமர் கோவிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கே கட்டுவது' என்று காட்டமாகக் கேட்டவரும் அதே பழைய ஜெயலலிதா தான்.

இப்போது, மதக்கலவர தடுப்பு மசோதாவை எதிர்த்து அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அவசரக் கடிதம் எழுதியதோடு, அம்மசோதாவுக்கு எதிராக தேசிய அளவில் ஓர் ஒருங்கிணைவை ஏற்படுத்துவதற்கு அளவற்ற ஆர்வத்தோடு களத்தில் இறங்கியிருக்கிறார் பழமை மாறாத புதிய ஜெயலலிதா. மதக்கலவரங்களால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட ஒரு மசோதாவை தொடக்க நிலையிலேயே எதிர்ப்பதன் மூலம் தாம் யார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார்.

ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு பதவியேற்று நூறு நாட்கள் கடந்திருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு; விலைவாசி உயர்வு; மின்வெட்டு என கடந்த ஆட்சியில் மக்கள் அனுபவித்த கொடுமைகள் அனைத்தும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர்கின்றன. போதாக்குறைக்கு சமச்சீர் கல்வி குளறுபடிகள் வேறு. இத்தகையப் பொதுப் பிரச்சனைகளுடன் சிறுபான்மை முஸ்லிம்களின் பிரச்சனைகள் பலவும் புறந்தள்ளப்பட்டு கிடக்கின்றன.

முஸ்லிம்களின் ஜீவாதாரப் பிரச்சனைகள் குறித்து தமது தேர்தல் அறிக்கையில் ஒரு வரி கூட வைக்காதவர் ஜெயலலிதா. புதிய பேரவையின் ஆளுநர் அறிக்கையிலும், நிதிநிலை அறிக்கையிலும் கூட முஸ்லிம்களின் பிரச்சனைகள் குறித்து எதுவும் குறிப்பிடாமல் அலட்சியப்படுத்தியிருக்கிறார் அவர்.

முஸ்லிம்களின் பிரச்சனைகள் குறித்து எழுத்துப் பூர்வமான உத்தரவாதமோ, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளோ இல்லாதது ஒருபுறம். முஸ்லிம்களை கருவறுக்கும் மோடியுடன் இணைந்து அவரது குரலாக ஒலிப்பது மறுபுறம் என ஜெயலலிதாவின் அசைவுகள் ஒவ்வொன்றும் முஸ்லிம்களை வஞ்சிக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன.

இந்தக் கையறு நிலையில் தமது பிரச்சனைகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதற்கும், தமது கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்கும் முஸ்லிம்கள் தயாராக வேண்டும். அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும். அரசு முரண்டு பிடிக்கும் அம்சங்களில் நீதிமன்றத்தை நாட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, தமது பிரச்சனைகள் என்னென்ன என்பது குறித்த தெளிவான அறிதல் முதலில் முஸ்லிம்களுக்கு வேண்டும்.

தமிழக முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று கடந்த திமுக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது. திமுக அரசு வழங்கிய அந்த இடஒதுக்கீடு தமிழக முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப அமையவில்லை என்றாலும், தங்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு கிடைத்த முதல் வெற்றியாகக் கருதி முஸ்லிம்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.

முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது போலவே கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அச்சமூகம், 'உரிய பயனளிக்கவில்லை' என்று சொல்லி திரும்ப ஒப்படைத்தது போல முஸ்லிம்கள் திரும்ப ஒப்படைக்காததற்கு அதை 'முதல் படி' என்று கருதியதே காரணம்.

இந்நிலையில், குறைவாக வழங்கப்பட்ட அந்த ஒதுக்கீட்டிலும் கூட ஏகப்பட்ட குளறுபடிகள். அரசு அறிவித்த ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் போதிய ஆர்வம் காட்டாமல் அலட்சியப்படுத்தி வந்தனர். இடஒதுக்கீட்டிற்காக போராடிய முஸ்லிம் சமூகம், இடஒதுக்கீட்டை சரியாக நடைமுறைப்படுத்தவும் போராட வேண்டி வந்தது.

இறுதியாக, இடஒதுக்கீட்டின் பயன் முஸ்லிம்களை முழுமையாக சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் ஓர் உயர்மட்ட கண்காணிப்புக் குழுவை அமைத்து கடந்த ஜனவரியில் ஓர் உத்தரவை பிறப்பித்தார் கலைஞர்.

இந்தச் சூழலில்தான் தேர்தல் வந்தது. முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலித்தது. முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட திமுக, மீண்டும் தங்களின் அரசு அமைந்தால் முஸ்லிம் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங்குவோம் என தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதிமுகவோ தனது தேர்தல் அறிக்கையில் எந்த வாக்குறுதியும் அளிக்காமல் முஸ்லிம்களின் கோரிக்கையைப் புறந்தள்ளியது.

முஸ்லிம் இடஒதுக்கீட்டை ஆதரிப்பது குறித்து திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும்போது, அதிமுக குறிப்பிடாதது அந்த அணியில் இடம்பெற்ற முஸ்லிம் கட்சிகளை கலக்கமடையச் செய்தது. அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாகவோ என்னவோ திடீரென தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முஸ்லிம்களின் பிரச்சனைகள் குறித்து முழங்கினார் ஜெயலலிதா. நெல்லை மாவட்டத்தில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்த அவர், சிறுபான்மை மக்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வித்திட்டது தனது தலைமையிலான முந்தைய ஆட்சிதான் என்றும் கூறினார். மேலும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாகவும், தாம் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.

ஆனால் ஆட்சி அமைந்த பிறகு அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவது பற்றிய எந்த அறிகுறியும் அவரிடம் தெரியவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் மீண்டும் ஒரு சமூகநீதிப் போராட்டத்தை முன்னெடுக்க முஸ்லிம்கள் தயாராக வேண்டும்.

தமிழக முஸ்லிம்களின் அண்மைக்கால பிரச்சனைகளில் முதன்மையான ஒன்று, திமுக அரசு கொண்டு வந்த கட்டாயத் திருமண பதிவுச் சட்டம் [தா.நா.சட்டம் 2 -9 -2009] ஆகும். முஸ்லிம் தனியார் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தமிழக அரசின் இச்சட்டம் அமைந்துள்ளது. இச்சட்டத்தினால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக் காட்டி தமிழக முஸ்லிம் அமைப்புகளின் கூட்டுக் குழு, அப்போதைய சட்டத் துறை அமைச்சர் துரை முருகனை சந்தித்து சட்டத் திருத்தத்தை வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து உடனடியாக திமுக அரசு ஓர் அரசாணையைப் பிறப்பித்தது. ஆனால் அந்த ஆணையில் முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை. ஏதோ கண் துடைப்புக்கு ஓர் ஆணையைப் பிறப்பித்தார்களே தவிர, அதனால் முஸ்லிம்களின் குறைகள் தீர்க்கப்படவில்லை.

திமுக அரசு கொண்டு வந்த கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தின் மூலம், இந்திய அரசியல் சாசனம் தமக்கு வழங்கியுள்ள தனித்த உரிமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து, உரிய சட்டத் திருத்தத்தை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தை கட்டுவதற்கு முஸ்லிம்கள் முயல வேண்டும்.

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த திமுக அரசு ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருந்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்தது. அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொடூர குற்றப் பின்னணி உடையவர்களாக இருந்தபோதிலும் அவர்கள் திமுகவை சார்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கடந்த அரசு அவர்கள் மீது கருணை காட்டியது. அதே சமயம் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் வாடிவரும் அப்பாவி முஸ்லிம் கைதிகளை மட்டும் விடுவிக்காமல் பாரபட்சமாக நடந்து கொண்டது. திமுக அரசின் இத்தகைய பாரபட்சப் போக்கை சுட்டிக் காட்டி முஸ்லிம் அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் கொந்தளித்து குரல் எழுப்பியபோதும் அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க திமுக அரசு மறுத்து விட்டது.

கடந்த அரசு இழைத்த இந்த அநீதியை களையும் வகையில் இந்த அரசு, எதிர்வரும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளின் போது முஸ்லிம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம்கள் மீண்டும் எழுப்ப வேண்டும்.

அதிமுக அரசு அமைந்தவுடன் ஜெயலலிதா செய்த முதல் வேலை அதிகாரிகள் இடமாற்றம். திமுக அரசு நியமித்த பல்வேறு அதிகாரிகளை மாற்றி விட்டு புதிய அதிகாரிகளை நியமிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பான தமது கோரிக்கையை வலுவாக எழுப்ப முஸ்லிம்கள் முனைய வேண்டும்.

அரசுப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினராக இருக்கும் ரத்தின சபாபதி அப்பட்டமான முஸ்லிம் வெறுப்பு உடையவர். அவர் காவல்துறை உதவி ஆணையராக இருந்தபோது அப்பாவி முஸ்லிம்கள் மீது பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டு தனது இந்துத்துவச் சார்பை அப்பட்டமாக வெளிக்காட்டியவர். அத்தகைய முஸ்லிம் விரோத நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானவர். இப்படிப்பட்டவர் அங்கம் வகிக்கும் ஒரு துறை; அதுவும் அரசு வேலைவாய்ப்புகளை வழங்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறை எப்படி நேர்மையாக இயங்கும்? ரத்தின சபாபதி போன்ற அதிகாரிகள் இந்தத் துறையில் இருப்பதனால்தான் 3.5 சதவீத முஸ்லிம் இடஒதுக்கீடு கூட சரியாக நடைமுறைப் படுத்தப்படாமல் இருக்கிறது. எனவே ரத்தின சபாபதி போன்ற அதிகாரிகளை இந்து அறநிலையத் துறைக்கு இடமாற்றம் செய்யச் சொல்லி, ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டிப் போராடுவதற்கு முஸ்லிம்கள் களம் அமைக்க வேண்டும்.

திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது உரையாற்றிய ஜெயலலிதா, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வக்பு வாரிய சொத்துக்களை சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு இஸ்லாமியர்களின் சமூக மேம்பாட்டுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார். அவர் அறிவித்தபடி ஆட்சிக்கு வந்தவுடன் நில அபகரிப்புகள் தொடர்பான வழக்குகள் வேகம் பெற்று நொடிக்கு நொடி கைதுப் படலங்கள் நடந்து வருகின்றன. ஆனால் வக்பு நிலங்களை அபகரித்த யாரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.

jayalalitha__263தமிழகத்திலுள்ள வக்பு வாரிய சொத்துக்கள் ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதில் பெரும்பகுதி சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கொடும் பிடியில் சிக்கியுள்ளன. அரசியல்வாதிகள்; தொழிலதிபர்கள்; ஜமாஅத் நிர்வாகிகள் என முழுக்க முழுக்க தனி நபர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் வக்பு சொத்துக்களை மீட்கமுடியாமல் வக்பு வாரியம் திணறிக் கொண்டிருக்கிறது. இந்த அவல நிலையை சரி செய்ய இதுதான் பொருத்தமான தருணம் என்பதை உணர்ந்து முஸ்லிம்கள் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும்.

திமுக அரசு கொண்டுவந்த பல நல்ல திட்டங்களில் சமச்சீர் கல்வியும் ஒன்று. அதை முடக்க நினைத்த ஜெயலலிதாவின் முயற்சிகளுக்கு முடிவுரை எழுதப்பட்டு மீண்டும் சமச்சீர் கல்வியே நடைமுறைக்கு வந்து விட்டது. அத்தகைய சமச்சீர் கல்வியில் சரி செய்யப்பட வேண்டிய பல கோரிக்கைகள் முஸ்லிம்களிடம் உள்ளன.

வழக்கமாக பள்ளிப் பாடப் புத்தகங்களில் ஒளரங்கஜீப் போன்ற முஸ்லிம் மன்னர்கள் குறித்து மோசமான கருத்துக்களும் தவறான தகவல்களும் கூறப்பட்டிருக்கும். முஸ்லிம்கள் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக முகம்மதியர் என்ற தவறான பதம் பிரயோகிக்கப்பட்டிருக்கும். கடவுள் வாழ்த்து என்ற பெயரில் இஸ்லாமிய மார்க்கவியலுக்குப் புறம்பான இலக்கியப் பாடல்கள் இடம் பெற்றிருக்கும். நாட்டிற்காகப் போராடிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பகுதியில் திப்பு சுல்தான், அபுல்கலாம் ஆசாத், காயிதே மில்லத் போன்ற முஸ்லிம் தலைவர்களின் வரலாறு மட்டும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருக்கும். பொன்மொழிகள் பகுதியில் நபிகளாரின் கருத்துக்கள் புறந்தள்ளப்பட்டிருக்கும். காலங்காலமாக பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெற்று வரும் இத்தகைய முஸ்லிம் விரோதச் செயல்கள் புதிய சமச்சீர் கல்வியில் முழுமையாக களையப்பட வேண்டும்.

மேலும், கடந்த அரசு கொண்டுவந்த சமச்சீர் பாடத் திட்டத்தில் மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகள் கேள்விக்குறியாக்கப் பட்டிருந்தன. உருதுவைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மொழிப் பாடமாக உருதுவைப் படிக்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டிருந்தது. மொழிச் சிறுபான்மையினருக்கு எதிரான திமுக அரசின் இத்தகைய நடவடிக்கையால் ஏற்பட்ட கடும் கொந்தளிப்பையடுத்து சமச்சீர் கல்வியில் உருது, அரபி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பாடங்கள் இடம்பெறவும், தேர்வுகள் நடத்தவும், மதிப்பெண்கள் வழங்கவும் அன்றைய முதல்வர் கலைஞர் அரசாணை பிறப்பித்தார். கலைஞர் அப்படி செய்தால் நான் இப்படி செய்வேன் என்று எல்லா விசயங்களிலும் எதிர் நிலைப்பாடுகளை எடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்திலும் அவ்வாறு செயல்பட்டு கலைஞரின் ஆணையைப் புறந்தள்ள வாய்ப்புள்ளது. அத்தகைய விபத்து நடந்து விடாமல் தடுக்கவும், சமச்சீர் கல்வியில் தமது கோரிக்கைகள் வெல்லவும் முஸ்லிம்கள் இதர மொழிச் சிறுபான்மையினரோடு இணைந்து போராட வேண்டும்.

அதிமுக அரசு அமைந்த அடுத்த அரைமணி நேரத்தில் மதுரை மீட்கப்படும் என்று அறிவித்து அதன்படி நடவடிக்கைகளில் இறங்கியவர் முதல்வர் ஜெயலலிதா. முந்தைய திமுக அரசு கண்டு கொள்ளாமல் விட்ட பல்வேறு வழக்குகளையும், மூடி மறைத்த பல படுகொலைகளையும், தப்ப விட்ட ஏராளமான குற்றவாளிகளையும் தோண்டித் துருவுவதில் இன்றைய அரசு படு வேகமாக செயல்பட்டு வருகிறது. மதுரை தொடர்பான பைல்களை தூசு தட்டிக் கொண்டிருக்கும் தமிழக அரசு, நெல்லையில் ஒரு முக்கிய வழக்கிலும் தூசு தட்ட வேண்டுமென முஸ்லிம்கள் குரல் எழுப்ப வேண்டும்.

1999 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது பாளையங்கோட்டையில் தப்லீக் ஊழியர் அப்துல் ரஷீத் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அந்தப் படுகொலையில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை கைது செய்வதில் முனைப்பு காட்டாத அன்றைய அரசின் காவல்துறை, கொலையான அப்துல் ரசீதின் மகனையே கொலையாளி எனக்கூறி கைது செய்தது. 12 ஆண்டுகள் கடந்து விட்ட பிறகும் இதுவரை உண்மைக் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. முந்தைய அரசு அலட்சியப்படுத்திய இந்தக் கொலை வழக்கை இன்றைய அரசு மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

தமிழக அரசின் சார்பில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் ஆகிய தலைவர்களின் பெயரால் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தத் தலைவர்களின் சிந்தனைகளை உள்வாங்கி மக்களுக்கு அருந்தொண்டாற்றி வரும் சான்றோர்களுக்கு அவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

தமிழுக்கும், தமிழ் சமூகத்துக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கும் காலமெல்லாம் கடமையாற்றிய உன்னத தலைவர்கள் பலரது பெயரில் வழங்கப்படும் தமிழக அரசின் விருதுகள் பட்டியலில் கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் பெயரில் ஒரு விருது இல்லை.

காயிதே மில்லத் அன்னைத் தமிழுக்காக அரசியல் நிர்ணய சபையில் உரிமைக் குரல் எழுப்பியவர்; நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திற்கு அடித்தளமிட்டவர்; மக்களவையிலும் மாநிலங்களவையிலும் வாதாடி போராடி தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களைத் தந்தவர்; தமிழகத்தில் அண்ணாவின் தலைமையில் ஒரு திராவிட இயக்க ஆட்சி மலருவதற்கு அச்சாணியாய் இருந்தவர்; மொழி மற்றும் பிராந்திய வேற்றுமைகளுக்கு மத்தியில் கேரளாவின் மஞ்சேரித் தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக மூன்று முறை வென்ற சாதனைத் தமிழர். அப்படிப்பட்ட பெருந்தகையின் பெயரில் அரசு விருது அறிவிக்கக் கோரி முஸ்லிம்கள் குரல் எழுப்ப வேண்டும்.

மேலும், காயிதே மில்லத் மணிமண்டபம் என்ற பெயரில் யாருக்கும் பயன்படாமல்; எதற்கும் உபயோகமில்லாமல் வெறுமனே கிடக்கும் பிரம்மாண்ட கட்டிடத்தை, காயிதே மில்லத் வாழ்க்கை குறித்த வரலாற்று ஆய்வகமாக மாற்றுவதற்கு அரசை வலியுறுத்த வேண்டும்.

உள்நாட்டில் அதிகாரத்தின் வாசனையை நுகர முடியாதவர்களாகவும், வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாகவும் வெளிநாடுகளுக்குத் துரத்தியடிக்கப்பட்ட தமிழக முஸ்லிம்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. ஈன்ற பெற்றோரையும், கட்டிய மனைவியையும், பெற்ற பிள்ளைகளையும், உற்றாரையும் சுற்றாரையும் பிரிந்து தன்னந்தனியே வளைகுடா மண்ணில் தினக் கூலிகளாய் வியர்வை சிந்தும் தமிழக முஸ்லிம்களின் துயரம் வார்த்தைகளில் அடங்காதது.

போலி விசாவில் சென்று சிக்கிக் கொள்வது, தவறான ஏஜெண்டுகளிடம் பணத்தைக் கட்டி ஏமாறுவது, டிரைவர் வேலைக்குச் சென்று வீட்டு வேலைகள் செய்வது, ஸ்டோர் கீப்பர் எனச் சென்று ஒட்டகம் மேய்ப்பது, முறையான உணவும் தங்குமிடமும், உரிய சம்பளமும் கிடைக்காமல் திண்டாடுவது, பணியிடங்களில் ஏற்படும் பிரச்சனைகளால் விரட்டியடிக்கப் பட்டாலோ; முதலாளிகளால் தாக்கப்பட்டாலோ; நோய்வாய்ப்பட்டாலோ; மரணமடைந்தாலோ இந்திய தூதரகத்தின் வழிகாட்டுதலோ உதவியோ இல்லாமல் தவிப்பது என வெளிநாடு வாழ் தமிழ் முஸ்லிம்களின் அவலம் நீண்டு செல்கிறது.

இத்தகைய அவலங்களைத் துடைக்கவும், அந்தத் துயரங்களுக்கு விடை கொடுக்கவும் அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கைக் குரல்கள் எழுந்ததையடுத்து கடந்த அரசு 'வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்' என அறிவிப்பு செய்தது. எனினும் நலவாரியத்தை விட வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்குவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்த விசயத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளை முன்மாதிரியாகக் கொண்டு தமிழக அரசும் செயல்பட வலியுறுத்தி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவுடன் போராட முஸ்லிம்கள் தயாராக வேண்டும்.

அண்மைக்காலமாக தமிழக காவல் துறையினர் ஒத்திகைகளில் ஈடுபடும் போது தீவிரவாதிகளைப் பிடிப்பது போன்ற சித்தரிப்பு நடவடிக்கைகளில் தீவிரவாதிகள் வேடத்தில் முஸ்லிம்களைக் காட்டும் போக்கு அதிகரித்துள்ளது. காவல்துறையின் இத்தகைய முஸ்லிம் விரோத செயல்களுக்கு எதிராக கடும் கண்டனங்கள் கிளம்பிய போதும் தமிழக காவல்துறை தம்மை திருத்திக் கொள்ள முன்வரவில்லை.

முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் தொடர் போக்கின் விளைவாக முஸ்லிம் சமூகம் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. படிக்கவும் பணி செய்யவும் வெளிநாடுகளுக்குச் செல்லும் முஸ்லிம்கள் பாஸ்போர்டுக்கு விண்ணப்பித்தால் மற்றவர்களைப் போல அவர்களுக்கு உரிய நேரத்தில் பாஸ்போர்ட் கிடைப்பதில்லை. காவல்துறையினரால் சந்தேகத்தோடு பார்க்கப் படுகிறார்கள். ஒன்றுக்கு மூன்று முறை தீர விசாரிக்கப்படுகிறார்கள். காவல் நிலையத்தில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகிறார்கள். பாஸ்போர்ட் கிடைத்தால் பாகிஸ்தானுக்குப் போவாயா என்ற கேள்வியை எதிர்கொள்கிறார்கள்.

பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் முஸ்லிம்களின் விண்ணப்பங்களை தனியே எடுத்து அவற்றின் மீது சிறப்பு கவனம் செலுத்தி தீர விசாரித்த பிறகே பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு அதிகார மட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது மட்டுமின்றி வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்றவைகளை விண்ணப்பிக்க முஸ்லிம்கள் தமது பெயர் மற்றும் முகவரிகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் தெளிவாக எழுதி விண்ணப்பித்தாலும் வாக்காளர் அட்டையிலும் குடும்ப அட்டையிலும் பெயர் தவறாகவே வருகிறது. தவறான பெயருடைய அந்த அட்டைகளை வைத்து அவர்கள் பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. பெயர் திருத்தம் செய்தால் மட்டுமே பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு பெயர் திருத்தம் செய்யச் சென்றால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பணியில் இருப்பதில்லை. அவர் இவரைப் போய் பார் என்பார்; இவர் அவரைப் போய் பார் என்பார். இவ்வாறு அங்கும் இங்கும் பந்தாடப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு ஒருவழியாக பெயர் திருத்தம் செய்கிறார்கள். இதனால் கால விரயம்; பொருளாதார விரயம்; மன உளைச்சல் ஆகிய பிரச்சனைகளுக்கு முஸ்லிம்கள் உள்ளாகிறார்கள்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு இயல்பாகவும் இலகுவாகவும் நடைபெறும் எல்லா விசயங்களும் முஸ்லிம்களுக்கு அவர்கள் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக கடும் சிரமங்களை சந்திக்க வேண்டி வருகிறது. சமய சார்பற்ற ஒரு நாட்டில் இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் இன்னலுக்கு உள்ளாக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் தமக்கு இழைக்கப்படும் இத்தகைய அநீதி குறித்து வெளிப்படையாக பேசவும், துணிச்சலாக வெளிப்படுத்தவும், ஊடகங்களில் பதியவும் முஸ்லிம்கள் தயாராக வேண்டும். பாரபட்சத்துடனும் துவேச உணர்வுடனும் நடந்து கொள்ளும் அதிகாரிகளையும் அரசு அலுவலர்களையும் தண்டிக்க வலியுறுத்தி அரசுக்கு நெருக்கடி தரவேண்டும்.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கலைஞர் குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழ்த் திரையுலகை மீட்பேன் என்று சொல்லி அவ்வாறே அதிரடிகளில் இறங்கியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. கலைஞர் குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழ்த் திரையுலகை மீட்பது ஒரு புறமிருக்கட்டும். முதலில் தமிழ்த் திரையுலகின் பிடியிலிருந்து முஸ்லிம் சமூகத்தை மீட்கக் கோரி அரசுக்கு அழுத்தம் தர முஸ்லிம் அமைப்புகள் முன்வர வேண்டும்.

வழக்கமாக மணிரத்னம் படங்களிலும் விஜயகாந்த் படங்களிலும் மட்டுமே முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவார்கள். ஆனால் இப்போது கோடம்பாக்கத்தில் இருந்து வெளிவரும் அத்தனை சினிமாக்களும் முஸ்லிம்களை கொச்சைப்படுத்தியே வருகின்றன. அண்மைக்காலமாக இது அதிகரித்தும் விட்டன. உன்னைப்போல் ஒருவன், பயணம், வானம் என ஒவ்வொரு தமிழ் சினிமாவிலும் முஸ்லிம்கள் குறித்த சித்திரம் பயங்கரமாகவும், வெகுமக்களிடமிருந்து முஸ்லிம்களை அந்நியப்படுத்தும் வகையிலும் சித்தரிக்கப்படுகின்றன.

அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையக் கூடிய வலிமை மிகுந்த ஊடகமான சினிமாவில் இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்துக் குதறுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழ்த் திரையுலகின் முந்தைய முஸ்லிம் விரோத செயல்களை விமர்சித்து கட்டுரைகள் எழுதியும், சந்திப்புகள் நடத்தியும், உரையாடல் நிகழ்த்தியும் பல்வேறு முயற்சிகளை முஸ்லிம்கள் செய்த போதும் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மாறாக முஸ்லிம் வெறுப்பு அதிகரிக்கவே செய்கிறது. எனவே இப்பிரச்சனையில் இனி அரசு தலையிடுவதைத் தவிர வேறு வழியில்லை. அரசு தலையிட வேண்டுமெனில் முஸ்லிம்கள் அதற்கேற்றார் போல் வியூகங்களை வகுத்து இயங்க வேண்டும். முதலில் திரைப்பட தணிக்கை குழுவில் ஊடுருவுவதற்கு முஸ்லிம்கள் முயல வேண்டும்.

முஸ்லிம்களின் பிரச்சனைகளை களைவதில் இந்த அரசு முனைப்பு காட்டாமல், கோரிக்கைகளை புறந்தள்ளும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டால் அரசை எப்படி பணியவைப்பது என்றக் கேள்விக்கு விடையாக அமைந்துள்ளது சமச்சீர் கல்வி வழக்கு. சமச்சீர் கல்வி விசயத்தில் ஜெயலலிதா தலை கீழாய் நின்று தண்ணீர் குடித்த போதும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

 'ஒரு முடிவு எடுத்து விட்டால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்' என்ற சினிமா வசனத்தின் குறியீடாக விளங்கும் ஜெயலலிதாவையே பணிய வைத்து விட்டது நீதிமன்றம். 'சமச்சீர் கல்விதான் வேண்டும்' என்று உரத்து முழங்கி, வலுவான போராட்டங்களை கட்டமைத்து, ஊடகங்களின் ஆதரவைப் பெற்று இறுதியில் வெற்றி பெற்றுள்ளார்கள் சமச்சீர் கல்வி ஆர்வலர்கள்.

தனியார் கல்வி நிறுவனக் கொள்ளையர்களின் குரலாக ஒலித்த தமிழக அரசின் குரல்வளை எப்படி அறுபட்டதோ, அது போலவே மோடியின் குரலாக ஒலிக்கும் ஜெயலலிதாவின் இந்துத்துவச் சார்புக்கும் ஒரு முடிவு வரும். அதற்கு சமச்சீர் கல்வி ஆர்வலர்களைப் போல வியூகத்துடன் போராட முஸ்லிம்கள் தயாராக வேண்டும்.

சமச்சீர் கல்வி விசயத்தில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் [இடதுசாரிகள் தவிர] அடக்கி வாசித்தது போலவே, முஸ்லிம்களுக்கு எதிரான ஜெயலலிதாவின் நடவடிக்கைளை எதிர்க்காமல் முஸ்லிம் கட்சி அமைதி காக்கிறது. நமக்காக கட்சி பேசும் என்று கருதி முஸ்லிம்கள் அமைதி காத்தால் ஏமாற்றமே மிஞ்சும். சமச்சீர் கல்வி ஆர்வலர்கள் எப்படி அரசியல் கட்சிகளை நம்பாமல் தன்னெழுச்சியாய் போராடினார்களோ, அதுபோல முஸ்லிம்களும் போராட வேண்டும்.

மோடியை பதவியேற்பு விழாவுக்கு அழைத்ததைப் பற்றியோ, மதக்கலவர தடுப்பு மசோதாவுக்கு எதிராக ஜெயலலிதா களமிறங்கியிருப்பது பற்றியோ கருத்தே கூறாமல் முஸ்லிம் கட்சி அமைதி காக்கிறது.

சமச்சீர் கல்வி விசயத்தில் ஜெயலலிதா காட்டிய இறுக்கம் குறித்தோ, புதிய தலைமைச் செயலகத்தை இழுத்துப் பூட்டிய ஜெயலலிதாவின் அடாவடி பற்றியோ வாயே திறக்காமல் விஜயகாந்த் கட்சி பேரமைதி காக்கிறது.

'கலைஞர் குசு விட்டால் கூட கொந்தளித்துக் கிளம்பியவர்கள், ஜெயலலிதாவின் அதிரடிகளுக்கு மட்டும் அமைதியும் பேரமைதியும் காக்கின்றார்களே ஏன்?' என்று ஒரு நண்பரிடம் கேட்டேன். 'எல்லாம் உள்ளாட்சித் தேர்தலை அதிமுகவுடன் இணைந்து எதிர் கொள்வதற்கான தந்திரம் தான்' என்றார் அவர்.

எல்லா தந்திரங்களும் எல்லா நேரங்களிலும் எடுபடுவதில்லை என்பதை அவர்களுக்கு யார் எடுத்துச் சொல்வது?

- ஆளூர் ஷாநவாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)