சுயமரியாதை இயக்கம் 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் நடந்தேறிய மாநாடு, முதல்நாள் மாநாடு என்பது பெரிய ஊர்வலம் வந்து சேர்வதற்கு நீண்ட நேரமானது. தலைமையுரை வரவேற்புரையுடன் முதல்நாள் நிகழ்வு நிறைவு பெற்றது.

அடுத்தநாள் காலை 10 மணிக்குத் தொடங்கி 3 மணிவரை தீர்மானத்தை பற்றி விவாதித்து நிறைவேற்றுவது என்ற முறையின் படி தீர்மானங்கள் நிறைவேறியது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைத் தேர்ந்தெடுத்து அந்த நாளில் இப்படிப்பட்ட கருத்தரங்கத்தை நடத்த வேண்டும் என்ற தோழர்களின் முயற்சிக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய தோழர் இராஜிவ் காந்தி சொன்னதை போல வரலாற்றை நாம் மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டியவர் களாக இருக்கிறோம். நமக்கென்று ஒரு அழுத்தமான அரசியல் வரலாறு இருக்கிறது. கொள்கை வரலாறு இருக்கிறது. போராட்ட வரலாறு இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை மாற்றியமைப்பதற்கான தொடக்கப் புள்ளியாக இருந்தது சுயமரி யாதை இயக்கம்.

அது முன்னெடுத்துச் சென்ற வீச்சான நடவடிக்கைகளை பலரும் பாராட்டி யிருக்கிறார்கள், பேசியிருக்கிறார்கள். சம்பந்தமில்லாமல் யாரோ ஒரு வெளிநாட்டுக்காரர் அமர்த்தியா சென் என்ற வங்கத்து பொருளாதார அறிஞர் நோபல் பரிசு பெற்றவர். ஜீன் டிரெஸ் தமிழ்நாடு திட்டக் குழுவின் அறிவுரையாளராக இருக்கிறார். இருவரும் சேர்ந்து ஒரு நூலை எழுதினார்கள். “Uncertain Glory” என்ற தலைப்பிலே அந்த நூலை எழுதினார்கள். அதில் தமிழ்நாட்டின் சிறப்புகளைப் பற்றி ஒப்பீட்டளவில் இந்தியாவில் இருக்கிற நாடுகளோடு அரசியல் முறையில் மாநிலங்களோடு ஒப்பிடுகிற போது இது எவ்வளவு முன்னேற்றமாக இருக்கிறது என்பதைச் சொல்லி தமிழ்நாடு கேரளா இமாச்சலப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களைப் பற்றியும் பாராட்டுகிறார்கள், கடைசியாக சொல்கிறார் தமிழ்நாடு மட்டும் இந்தியாவோடு இணைந்திருக்காமல் இருந்திருந்தால் அய்ரோப்பிய நாடுகளுக்கு இணையாக வளர்ந்திருக்கும் என்று முடிக்கிறார்கள்.

kolathoor mani 413அவர் நோபல் பரிசு பெற்ற அறிஞர். அதற்குப் பிறகு எழுதுகிறார். இந்தச் சாதனையின் தொடக்கப் புள்ளியாக இருந்தது பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்று எழுதுகிறார். அண்மையில் கூட நாராயணன் என்ற ஒரு பார்ப்பனர். அவர் தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ் அதிகாரியாக நிதிச் செயலாளராக இருந்தார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ஆலோசகராக இருந்தார். இப்போது சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் இருக்கிறார். அவர் Dravidian years என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். திராவிட ஆட்சியில் தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக் கிறது என்பதைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்த நூலிலும் அவர் அதைத்தான் சொல்கிறார் அது திமுக வெற்றி பெற்ற பின் எழுதிய நூல் அல்ல, அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அந்த நூல் வெளி வந்து விட்டது, அதில் எப்படி இந்த நாட்டில் புத்துணர்ச்சி ஏற்பட்டது. அண்ணா அவர் களின் குறுகிய கால ஆட்சி முடிந்தபின் எழுது கிறார். அவர் எழுதுகிறார் “அப்போது ஆட்சியில் இருந்தவர்களெல்லாம் திராவிடக் கொள்கைக்கு எதிரான வர்கள் தான் அதை நிறைவேற்றுகிற நிர்வாகப் பொறுப்பில் அமர்ந்திருந்த காலம்” என்று எழுதுகிறார்.

அதனால் தான் பெரிய வெற்றிகளை அண்ணா காலத்தில் நாம் பெறவில்லை. அடுத்த வந்த கலைஞர் அரசு நிர்வாகத்தின் கட்டமைப்பை மாற்றியமைக்கிறார். மக்களுடைய பிரதிநிதிகளை உட்கார வைத்துவிட்டு சிறுபான்மை பிரதிநிதிகளை கீழே கொண்டு வருகிறார். அவர்கள் தான் தடையாக இருப்பார்கள். அதைப்பற்றி எழுதுகிறார் இந்த நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் உலகம் முழுவதும் அதைப்பற்றி பேசினார்கள். அதை நடைமுறைப்படுத்தினார்கள். இந்திய அரசு அந்த ஆய்வறிக்கையை ஆய்வு செய்து வெளியிட்டார்கள். தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு காரணம் சுயமரியாதை இயக்கம் தொடக்க காலத்தில் இருந்தே இதைப்பற்றி பேசியது. அது குடும்ப நலன் என்ற பொருளில் பேசவில்லை, பெண் விடுதலை என்ற பொருளில் பேசியிருந்தாலும் அதுதான் எளிதில் தமிழ் மக்களை ஏற்கச் செய்தது என்று எழுதியிருக்கிறார்கள்.

யாரோ எங்கே இருக்கிற ஆய்வாளர்கள், நம்முடன் ஒத்த கருத்தில்லாத அரசியல் அமைப்பின் கீழ் பணியாற்றுகிற அதிகாரிகள் அல்லது துறை, இவ்வளவு பேரும் சொல்லுகிற சுயமரியாதை இயக்கம் போதிய அளவு மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறதா? அதைப்பற்றிய புரிதல் இந்த மக்களுக்கு உண்டா? ஏற்படுத்தியிருக்கிறோமா? என்றால் மிகக் குறைவாகக் தான் ஏற்படுத்தியிருக்கிறோம். அரிதாக கிடைக்கிற சில நூல்களின் வழியாக எங்கேனும் நடக்கிற கூட்டங்களில் பேசப்படுகிற செய்திகளின் வழியாக ஓரளவு தெரிந்திருக்கிறோம். தேடிச் சென்று படிக்கும் ஆவல் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் இப்படிப்பட்ட குறிப்பின் மீது வைக்கிற போதுதான் அதுகுறித்து நாம் மேலும் மேலும் சிந்திக்க வேண்டியவர்களாக பேச வேண்டியவர் களாக இருக்கிறோம்.

இதன் தலைப்பு சுயமரியாதை மாநாடு மட்டுமல்ல. தமிழ்நாட்டு அரசியலும் என்று இணைத்து தான் சொல்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியலில் பேசப்படுகிற செய்திகளாக இருக்கிற செய்திகளைப் பார்த்தால் தெரியும், அதிகமாக இட ஒதுக்கீட்டைப் பற்றி உரையாடிக் கொண்டு இருக்கிறோம். வரலாற்றுக் காலத்தில் இருந்து வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கொள்கை முடிவெடுக்கிற இடத்திலோ அல்லது நிறைவேற்றுகிற இடத்திலோ அது சரியா தவறா என்று பரிசீலிக்கிற நீதித்துறையிலோ வரலாற்றுக் காலத்தில் வஞ்சிக்கப்பட்ட மக்கள் அமர்ந்தால் தானே உண்மையான நீதியை மீட்டெடுக்க முடியும். அந்த நோக்கத்திற்காகத் தான் வகுப்புவாரி உரிமை என்று பேசப்பட்டது, இப்போது இட ஒதுக்கீடு. சதவீதம் எல்லாம் பேசவில்லை, பெரியார் காலம் பேசியது. அந்தந்த சமுதாய மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கு இடங்களை ஒதுக்கி கொடுங்கள். இதைத்தான் பெரியார் கேட்டார். பார்ப்பனர்களுக்கும் மூன்று சதவீதம் கொடுங்கள் என்று கேட்டார். இன்னும் சொல்லப்போனால் பெரியார் பொறியியல் கல்லூரியில் 3 சதவீத இடங்கள் பார்ப்பன மாணவிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது, இன்றைக்கு வரைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. வகுப்புவாரி உரிமை பின்பற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்போது அந்த முறை முக்கியமாக பேசப்பட்டு வந்தது.

அடுத்தது பெண்ணுரிமையைப் பற்றி சொத்துரிமைக்கான சட்டங்களை எல்லாம் பார்க்கிறோம். இப்போது ஒரு காலத்தில் பெண் என்றாலே அவள் நினைத்துப் பார்ப்பது திருமணம், பெற்றோர்கள் திருமணம் வரைக்கும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்காகத் தான் தாலி கொடுத்தால் பெரிய செய்தி. தாலிக்கு பவுன் கொடுத்து விட்டார்கள் என்று சொன்னார்கள். அது அல்ல செய்தி பெரியார் சொல்கிறார் “பெண்களை விரும்புகிற வரை படிக்க வையுங்கள்” என்று சொல்கிறார். தாலிக்குப் பவுன் கொடுப்பதற்கு பதிலாக அவர்களது கல்விக்கு உதவித் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்ற ஒரு பெரியத் திட்டம். இப்போது தமிழக முதல்வர் அமுல்படுத்தி வருகிறார். இது நமக்கு எளிதாக தெரியலாம். ஆனால் பத்தாண்டுகளுக்கு பின்னால் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நம்மால் எண்ணிப்பார்க்க கூட நமக்கு மலைப்பாக இருக்கும். அவ்வளவுத் தாக்கத்தை ஏற்படுத்திய திட்டங்களைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறோம்.

அடுத்தது இந்தி, சமஸ்கிருதம் பற்றி பேசப் படுகிறது. இப்போதும் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். இருமொழிக் கொள்கையை பேசிக் கொண்டு இருக்கிறோம். சுயமரியாதை திருமணத்தைப் பற்றி பேசுகிறோம். இப்போது பேசப்படுகிற செய்திகள் ஜாதிய ஏற்றத் தாழ்வுகள், அதனால் நடக்கிற கொடுமைகள் இப்படிப் பேசப்படுகிற செய்திகளை எல்லாம் அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வைக் கண்ட மாநாடு தான் செங்கல்பட்டு மாநாடு, தீர்வைக் கொடுத்தது. அதுதான் முதல் மாநாடு என்று இல்லை, பல மாநாடுகள் நடந்திருக் கின்றன. அப்போது அது மாகாண மாநாடாகத் தான் நடத்தினார்கள். திருநெல்வேலி, மதுரையில் மாநாடு நடந்திருக்கிறது. ஆனால் செங்கல்பட்டு மாநாட்டில் முக்கியமான செய்தி உண்டு. கலந்து கொண்டோர் எல்லாம் யார்? அதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் பெரியாரின் பார்வை எப்படி இருந்தது என்பதற்காக சொல்லுகிறோம். சமுதாயத்தில் யார் யாரெல்லாம் நாம் ஒதுக்கி வைத்தோமோ அந்த மக்களுக்கு எல்லாம் முன்னுரிமை கொடுத்தார் என்பதற்கு அந்த மாநாடு முன்னுதாரணம்.

மாநாட்டுக்கு அழைக்கிறார். யார் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம் என்று அழைப்பைப் படித்தாலே நமக்குத் தெரியும். இலண்டனில் Rationalist Press Association என்று ஒரு அமைப்பு உள்ளது, அமெரிக்காவில் Free Thinkers Association என்ற அமைப்பு. பெரியார் எழுதுகிறார் இரஷ்யாவில் Anti God's Society இருக்கிறது, சீனாவில் Young Chinese என்ற அமைப்பு இருக்கிறது, ஆப்கானிஸ்தான், துருக்கி முதலிய அநேக இடங்களில் சர்க்காரால் குருட்டு நம்பிக்கைகளையும், மூடப் பழக்க வழக்கங்களையும் ஒழிக்கும் வேலை நடக்கிறது, அதுமாதிரி நாமும் இங்கு ஒன்று செய்தாக வேண்டும், அழுத்தமாக செய்தாக வேண்டும். அதற்குத்தான் அடுத்த பிப்ரவரி மாதத்தில் இரண்டாம் வாரத்தில் மூன்றாம் வாரத்தில் மாநாடு நடத்தவிருக்கிறோம் என்று சொல்லி அந்த மாநாட்டிற்கு வர வேண்டும் என்று சொல்கிறார். எப்படி வர வேண்டும் என்பதையும் சொல்கிறார். ஒவ்வொருவரும் தங்களது மனைவி மக்களுடன் வர வேண்டியது மிகவும் அவசியமானது என்று மிகவும் அழுத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மட்டும் வந்தால் போதாது, மூடநம்பிக்கையை ஜாதியை கட்டிக் காப்பதற்கு பயன்படுத்துவதே பெண்களைத் தான். அதிகமாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்கிறார். அதனால் அவர்களை முதலில் அழைத்து வாருங்கள் என்று அது மிக அவசியம், அதோடு அவர் நிற்கவில்லை தனிப்பட்ட ஸ்திரீகளும் தங்களை விதவைகள் என்றோ வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும் அவசியம் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்கிறார். அப்புறம் சொல்கிறார், ஆதலால் செங்கல்பட்டு மாநாட்டிற்கு முக்கியமாக வாலிபர்களும் பெண்களும் தாழ்த்தப்பட்டவர்களும் அவசியம் வர வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.

இது யாருக்காக நடத்தப்படுகிற மாநாடு என்று கருதுகிறார்கள் என்றால் உரிமைப் பறிக்கப்பட்டு கிடக்கிற பெண்கள், சமூகத்தில் கடைநிலைக்கும் கடைநிலையில் ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிற தாழ்த்தப் பட்ட சமுதாய மக்கள், இதை மாற்றுவதற்கு தன்னலமில்லாமல் போராடக் கூடிய இளைஞர்கள் இவர்கள் கட்டாயம் வாருங்கள். உங்களால் தான் ஏதேனும் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று அழைப்பில் சொல்கிறார். இதற்கு முன்னால் சில மாநாடுகளை பெரியார் நடத்தி இருக்கிறார். அவர் காங்கிரஸ்காரராக இருந்த போது வைக்கம் போராட்டம், சேரன் மாதேவி குருகுலப் போராட்டம் நடத்துகிறார்.

அண்ணா ‘ஆரிய மாயை’ நூலில் பார்ப்பனர் பற்றி “பேராசை பெருந்தகையே போற்றி! பேச நா இரண்டுடையாய் போற்றி! வஞ்சக வேந்தே போற்றி! வண்கன நாதா போற்றி!” என்று எழுதுவார். பேச நா இரண்டுடையாய் போற்றி என்றும் எழுதுகிறார். இங்கொன்று பேசுவார்கள். அங்கொன்று செய்வார்கள், இதை ஆங்கிலத்தில் Double tounge என்று சொல்வார்கள். வ.வே.சு. அய்யர் காங்கிரஸ் கட்சிப் பணத்தில் நடத்திய குருகுலத்தில் பார்ப்பனர் குழந்தைகளுக்கும் பார்ப்பனரல்லாத குழந்தைகளுக்கும் தனித்தனி இடத்தில் பிரித்து உணவு வழங்கினார். பார்ப்பனக் குழந்தை சமஸ்கிருத சுலோகம் பாடும். பார்ப்பனரல்லாத குழந்தை தேவாரம், திருவாசகம் தான் பாடும்.

இதே வ.வே.சு. அய்யர் இங்கிலாந்தில் இருந்த போது என்ன செய்தார்? டி.எஸ்.எஸ்.ராஜன் என்ற ஒருவர், இராஜாஜி அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர். இங்கு மருத்துவம் படித்துவிட்டு மேற்படிப்புக்காக இலண்டன் போகிறார். அங்கு தங்கியிருந்து சைவ உணவு சாப்பிட வேண்டும் என்றால் அதிக செலவாகும். அசைவ உணவு என்றால் குறைவான செலவு தான். மரக்கறி உணவு என்றால் தேடி கண்டுபிடிக்க வேண்டும், அதனால் அதிகம் செலவாகிறது. மிகவும் கஷ்டப்படுகிறார். அப்போது இதே வ.வே.சு.அய்யர் இலண்டன் வருகிறார். மூன்றாமாண்டு பாரிஸ்டர் படிப்புக்கு வருகிறார், அவரிடம் பிரச்சினையைக் கூறி ஆலோசனை கேட்கிறார். எப்படி சமாளிக் கிறீர்கள் என்னால் முடியவில்லை என்று சொல்கிறார். அவர் பேசாமல் நீங்கள் கறி சாப்பிடுங்கள் என்கிறார். அவர் அய்யய்யோ என்கிறார். நீ சாப்பிடு, இந்தியாவில் போய் அதையெல்லாம் வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். அதோடு நில்லாமல் நானும் மூன்றாண்டுகளாக அதைத்தான் செய்து வருகிறேன் என்று சொல்கிறார். நீயும் அதையே செய் என்று கூறினார். அதற்கு பிறகு சாப்பிட்டேன். மூன்றாண்டுகள் சாப்பிட்டு எனக்கு மாமிசம் மீது ஈர்ப்பு வரவில்லை என்று அவர் ‘நினைவலைகள்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதி இருக்கிறார். அப்படி ஆலோசனை சொன்ன வ.வே.சு. அய்யர், குருகுலத்தில் பார்ப்பனரல்லாத மாணவர்கள் பக்கத்தில் அமர்ந்துகூட சாப்பிடக் கூடாது என்று சொல்கிறார்.                               

(பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.)

(தொடரும்)

Pin It