அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆக முடியும்; அவர்கள் உரிய பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் ஓராண்டுக்கு முன் (ஆக. 14, 2021) தமிழக அரசு உரியப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினர் 27 பேருக்கு அர்ச்சகர் நியமன ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிலான அமர்வு, அர்ச்சகர் பதவிக்கு வயது வரம்பு, உரிய பயிற்சி தேவை என்ற அரசு பிறப்பித்த விதியை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், ஆகம முறை பின்பற்றப்படாத கோயில்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறியதோடு ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோயில்களுக்கு அந்தந்த ஆகமம் கூறும் முறையில் தான் வழிபாடு, சடங்குகள் மட்டுமல்ல; அர்ச்சகர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறிவிட்டது. எந்தெந்த ஆகம கோயில்களில் எந்த வகை ஆகமம் பின்பற்றப்படுகிறது என்பதைக் கண்டறிய 5 பேர் கொண்ட குழுவும் அமைத்து அதில் இருவர் பெயரையும் நீதிமன்றமே பரிந்துரைத்துள்ளது.
அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்கிறது அரசியல் சட்டம்; ஆனால் ஆகமம் அதை ஏற்கவில்லை. அர்ச்சகர் பதவியை பாரம்பரிய சொத்தாகவே பார்ப்பனர்கள் வைத்திருந்தனர். பாரம்பரிய முறை செல்லாது என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் (1971) ஏற்கனவே பார்ப்பன உட்பிரிவின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் அதை மாற்றியமைக்க முடியாது; அது ஆகம விரோதம் என்று கூறிவிட்டது.
தீண்டப்படாதவர்கள் கோயிலுக்குள் நுழைவதே ஆகமத்துக்கு எதிரானது தான். ஆகமத்துக்கு எதிராக சட்டம் வந்தது. கோயில்களில் இரவு பூஜை நடத்தும் உரிமை ஆகமப்படி கோயிலில் உள்ள தேவதாசிகளுக்கு மட்டுமே உண்டு என்கிறது ஆகமம். தேவதாசி முறை ஒழிக்கப்பட்டு ஆகமம் மாற்றி யமைக்கப்பட்டது. காலத்தின் தேவைக்கு ஏற்ப ஏன் அனைத்து இந்துக்களும் இந்துக் கோயில்களில் உரிய பயிற்சி பெற்று அர்ச்சகராகலாம் என்று ஆகமத்தை மாற்றினால் என்ன குடி முழுகிப் போகும்? ஏற்கனவே எந்தெந்தக் கோயில்களில ஆகமங்கள் எப்படி மீறப்பட்டு வருகின்றன என்று நீதிபதி மகாராசன் குழுவும் நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவும் பட்டியலிட்டுள்ளதே; அதனால் கோயிலுக்கள் இருந்த கடவுள்கள் கோயிலை விட்டு ஓடிப் போய் விட்டார்களா?
இந்துக்களின் ஒற்றுமை; இந்துக்களின் பண்பாடு பற்றி எல்லாம் பேசுகிறவர்கள் அர்ச்சகர் ஆகும் உரிமை மட்டும் அனைத்து இந்துக்களுக்கும் கிடையாது என்று கூறுவதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட ஜாதி இந்துக்களை இது புண்படுத்தாதா? அவமானப்படுத்தாதா?
கடவுளையும் அதற்கு இருப்பதாகக் கூறப்படும் சக்தியையும் தங்களது பூணூலுக்குள் முடிச்சுப் போட்டுக் கொண்டு கடவுளிடம் நெருங்கும் தகுதி தங்களுக்கே உண்டு என்று கூறுவதைவிட பாசிசம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? என்று கேட்கிறோம்.
தமிழக முதல்வர் அனைத்து இந்துக்களையும் அர்ச்சகராக்கும் சமூகப் புரட்சியில் மிகவும் உறுதியாக இருப்பதோடு 9 புதிய அர்ச்சகர் பள்ளிகளையும் திறந்துள்ளார். ஆனால், ஆகமம் பின்பற்றப்படாத கோயில்களில் அர்ச்சகர் ஆவது என்றால் அது வேலை வாய்ப்பு பிரச்சினையாகி விடும். பெரியார் அந்தக் கண்ணோட்டத்தில் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவும் இல்லை. ‘ஆகமம்’ பின்பற்றப்படும் கோயில்களில் உள்ள பார்ப்பன மேலாதிக்கத்தைத் தகர்த்து அங்கே ‘சூத்திரன்’ பூஜை செய்தால் கருவறை தீட்டாகி விடும் என்ற தீண்டாமை இழிவை துடைத்து எறியவே பெரியார் இந்த இயக்கத்தை முன்னெடுத்தார்; கலைஞர் வழி மொழிந்தார்.
இந்த இலட்சியம் நோக்கி சட்டப் போராட்டம் - மக்களை அணி திரட்டும் போராட்டம் இரண்டுமே தேவைப்படுகிறது. கலைஞர் கூறியதுபோல் பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படும் வரை இதை முன்னெடுப்போம்; சனாதனிகளின் முகத்திரையையும் மக்கள் மன்றத்தில் கிழித்தெறிவோம்!
- விடுதலை இராசேந்திரன்