ஆகமங்களைத் தடை செய்யக் கோரி - இனி ஆகம எரிப்புப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை வந்துவிட்டது என்று கூறிய தி.வி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஆகம விதிகள் பார்ப்பனர்களால் மீறப்பட்டதைப் பட்டியலிட்டுக் காட்டினார்.

வயலூர் முருகன் கோயில் அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட இரண்டு பார்ப்பனரல்லாத அர்ச்சகர் நியமனத்தை செல்லாது என்று அறிவித்து விட்டது மதுரை உயர்நீதிமன்றக் கிளை. ஏற்கனவே 10 ஆண்டுகளாக எவ்வித வேத ஆகம தகுதித் தேர்வுகள் இல்லாமல் குல வழி அர்ச்சகர்களாக இருக்கும் இரண்டு பார்ப்பன அர்ச்சகர்கள் தொடர்ந்த வழக்கு, இந்த இருவரும் முறைப்படி அறநிலையத் துறை நியமனம் பெறாவிட்டாலும் அந்தக் கோயிலின் காமிகா ஆகமப்படி ஆதி சிவாச்சாரியார், ஆதி சைவர் குலத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குத் தான் அர்ச்சகர் தகுதி உண்டு என்று நீதிபதி

ஜீ.ஆர். சாமிநாதன் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார். அறநிலையத் துறை நியமித்த மூன்றாவது அர்ச்சகர் பார்ப்பனர் என்பதால் அவரை எதிர்த்து வழக்கு இல்லை.Madurai High Courtஅரசியல் சட்டத்தைவிட அதிக அதிகாரம் படைத்தது ‘ஆகம விதிகள்’ என்று பார்ப்பனர்கள் அதைத் தங்கள் ஆதிக்கத்துக்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆகம விதிகளில் அப்படி ஜாதி, குலம் பற்றிய குறிப்புகள் இருக்கிறதா என்ற கேள்விக்கு தமிழ் ஆகமங்களில் அப்படி இல்லை என்று ஆகமப் பண்டிதர்கள் கூறுகிறார்கள். அதற்காக ‘பழக்க வழக்கப்படி’ (Custom and usages) என்ற சட்டத்தில் இடம் பெற்ற சொல்லை ஆகமத்தோடு இணைத்துக் கொண்டு பார்ப்பன ரல்லாத மக்கள் மீது கருவறைத் தீண்டாமையைத் திணித்துக் கொண்டிருக்கிறது பார்ப்பனக் கூட்டம். நீதிமன்றங்கள் இதற்குத் துணை போகின்றன.

சரி; ஆகமவிதிகள் இதுவரை மீறப்பட்டதே இல்லையா? காலத்துக்கேற்ப அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்படவில்லையா?

  • 1947இல் தான் இந்து கோயில்களுக்குள் அனைத்து இந்துக்களும் உள்ளே சென்று வழிபடும் சட்டம் வந்தது. கோயிலுக்குள் அனைவரும் போகலாம்; கோயில் குளத்தில் அனைவரும் குளிக்கலாம் என்ற அந்தச் சட்டமே ஆகமத்துக்கு எதிரானதுதான். அதற்கு முன்பு பார்ப்பனரல்லாதவர்களுக்கு வீதியில் நின்று கோபுர தரிசனம் செய்யவே அனுமதித்தார்கள். ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று அதற்குப் புனிதம் கற்பித்தார்கள்.
  • ஆகமப்படி கோயில்களில் இறுதி பூஜையாக ‘நிருத்தியம் உபச்சாரம்’ என்ற பூஜை நடக்கும். இதை கோயில்களில் தேவதாசிகள் செய்ய வேண்டும்; பிறகு கடும் எதிர்ப்பு வலுத்த பிறகு கோயில்களில் ‘தேவதாசி’ தடைச் சட்டத்தை அரசே கொண்டு வந்தது. இது ஆகமத்தை மீறிக் கொண்டு வரப்பட்ட சட்டம்.
  • வைணவத்தில் புரட்சி செய்த இராமானுஜர் திருவரங்கம் கோயிலில் நடந்து வந்த வைகாசன ஆகம பூஜை முறைகளை நிறுத்தினார். அதற்குப் பதிலாக ‘பஞ்ச ராத்திர பூஜை’ முறையை அறிமுகம் செய்தார். அப்படி கோயிலின் ஆகமமே மாற்றப்பட்டிருக்கிறது; பழக்க வழக்கமும் தான்!
  • திருவரங்கம் ரங்கநாதனிடம் அன்பு காட்டிய துலுக்க நாச்சியார் என்ற இஸ்லாமியப் பெண்ணை கோயிலுக்குள் அழைத்து வழிபாடு செய்யும் முறையை அறிமுகப்படுத்தினார் இராமானுஜர். இப்போதும் பகவான் ரெங்கநாதன், துலுக்க நாச்சியார் வீட்டுக்குப் போகும் சடங்கு திருவரங்கம் கோயிலில் நடக்கிறது. அதே இராமானுஜர் வழி வந்த தென்கலைப் பார்ப்பனர்கள்தான் இப்போது ஆகமங்களை, பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது என்று நீதிமன்றம் ஓடுகிறார்கள்.
  • சென்னை தியாகராயர் நகரில் சிவா- விஷ்ணு ஆலயம் ஒன்று உள்ளது. கவிஞர் கண்ணதாசன் முயற்சியால் கட்டப்பட்ட கோயில். சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரே கோயில் கட்டக் கூடாது; அது ஆகமத்துக்கு எதிரானது.
  • ஆகமங்கள் எப்படி வந்தன? எத்தனை ஆகமங்கள் இருக்கின்றன? சைவ ஆகமங்கள் 28. அதிலிருந்து பிரிந்த ஆகமங்கள் 207. பல தமிழ் வடிவ ஆகமங்கள் அழிக்கப்பட்டு விட்டன. தற்போது தமிழ்நாட்டில் இருப்பது காமிகம், காரணம் மகுடம், வாதுளம், சுப்ரபேதம் என்பவை தான். இவற்றுள் காமிகம், காரணம் இரண்டுமே பெருமளவில் பின்பற்றப்படுகிறது.
  • முதலில், தமிழில் இருந்த ஆகமங்களை பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்தில் மாற்றி தங்கள் வைதீகக் கருத்துகளையும் புகுத்தி விட்டார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
  • தமிழில் ஆகமங்கள் தனித்த மதக் கொள்கைக் கொண்டவை என்றும், வடமொழிக்கு மாற்றியவர்கள் வைதீகக் கருத்துகளைத் திணித்தார்கள் என்றும் சென்னை பல்கலைக் கழகத்தில் தத்துவப் பேராசிரியராக பணியாற்றிய சூரிய நாராயண சாஸ்திரி (பரிதிமாற்கலைஞர்) தனது ‘சிகண்டான் சிவாத்து வைதம்’ நூலில் பதிவு செய்துள்ளார். மறைமலையடிகளார் போன்றோரும் இதே கருத்துடையவர்கள்.
  • தமிழிலிருந்து களவாடிய வடமொழி ஆகமம் காமிகா ஆகமத்தை மீண்டும் வடமொழியிலிருந்து தமிழ்மொழிக்கு மொழி பெயர்த்தவர் கோ. சண்முக சுந்தர முதலியார். 1899இல் வெளியிடப்பட்டது.
  • வயலூர் முருகன் கோயிலில் காமிகா ஆகமம் பின்பற்றப்படுகிறது; அதை மீறக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் தீர்ப்பில் கூறியிருக்கிறார். அதே காமிகா ஆகமம் 109ஆவது படலத்தில் ‘ஸ்நான விதிப் படல’த்தில் ஒரு தீண்டாமை கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. புத்த மதத்தினரான சாக்கியர் மற்றும் பிற மதத்தினரிடம் உணவு பெற்று சாப்பிட்டால் அது தீண்டாமைக் குற்றம். உடனே தீட்டு கழிக்க குளிக்க வேண்டும். காமிகா ஆகமப்படி, இந்த விதியையும் மதுரை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறதா? சூரிய நாராயண சாஸ்திரியும் இதே கருத்தை உறுதி செய்கிறார். ஆகமம் ரிஷிகளால் உபதேசிக்கப் பட்டதாக கூறுகிறார்கள். ரிஷிகள் காலத்தில் புத்த மதமும் பிற மதங்களும் தோன்றி விட்டதா? இல்லை. இந்த மதங்கள் 3, 2ஆம் நூற்றாண்டில் வந்தவை. ஆகமத்தில் பார்ப்பனர்கள் இத்தகைய பார்ப்பனிய தீண்டாமையை இடையில் திணித்துள்ளார்கள் என்பதற்கு இது சான்று.
  • ஆகமங்களை சிவபெருமான் ‘லெமூரியா கண்டத்தில் (தற்போதைய கன்யாகுமரிப் பகுதி) மகேந்திர மலையிலிருந்து ரிஷிகளுக்கு உபதேசித்தாகக் கூறுகிறார்கள். இந்த 5 ரிஷிகளில் பரத்துவாஜர் என்பவர் ஒருவர் மட்டுமே பார்ப்பனர். ஒடுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மற்றவர்கள், கொல்லர், நாவிதர், வேடர் மரபுகளைச் சார்ந்தவர்கள். இவர்கள் தான் சிவபெருமான் கூறிய ஆகமத்தைப் பிறருக்கு பரப்பினார்கள் என்கிறார்கள். பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட ரிஷிகள் ஆகமங்களை மக்களிடம் கொண்டு செல்லும் உரிமைகளைப் பெற்றிருந்தார்கள் என்றால், அதே ஆகமங்கள் பார்ப்பனரல்லாதவர்களை கோயில்களில் புறக்கணிப்பது நியாயம் தானா?

ரிஷிகள் காலத்து ஆகமங்களை இப்போதும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிற பார்ப்பனர்கள், நீதிமன்றங்கள் கோயிலில் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்த மட்டுமே பயன்படுத்துகிறார்கள். மற்ற பிரச்சினைகளில் தங்கள் வசதிக்காக ஆகமங்களை சாஸ்திரங்களை மீறுகிறார்கள். பிராமணன், கடல் தாண்டக் கூடாது என்பது சாஸ்திரம். வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்கச் சென்ற தீவிர பார்ப்பனியவாதி மாளவியா, இதற்குப் பரிகாரமாக கங்கை நீரையும் மண்ணையும் எடுத்துச் சென்று இலண்டனில் பூஜை செய்து தீட்டுக் கழித்து பரிகாரம் செய்தார். இந்துக் கடவுள்களையே வெளிநாடுகளுக்குக் கொண்டு போய் அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் முஸ்லீம்கள் வாழும் மத்திய கிழக்கு நாடுகளிலும் கோயில்களைக் கட்டுகிறார்கள். அதற்கு பார்ப்பன அர்ச்சகர்கள் கடல் தாண்டி விமானத்தில் பறக்கிறார்கள். அந்த நாடுகளின் குடிமகன்களாகவே பதிவு செய்து கொள்கிறார்கள்.

கோயில்களில் மின் விளக்கு, கண்காணிப்பு கேமிரா, ஆன்லைன் தரிசன டிக்கட் என்றெல்லாம் வந்துவிட்டது. ஆகமங்களில் இவை கூறப்பட்டுள்ளனவா? சொல்லப்போனால் ‘பிராமணர்கள்’ சாஸ்திரப்படி வேதம் ஓத வேண்டும். வேதத்தைப் பயிற்றுவிக்க வேண்டும். சாஸ்திரங்களை மீறி நீதிபதிகளாகவே வந்து உட்கார்ந்து கொண்டு சாஸ்திரம், ஆகமங்களை மீறக்கூடாது என்கிறார்கள்.

தமிழர்கள் அதுவும் பார்ப்பனரல்லாத இந்துக்கள் இந்த இழிவை எத்தனை ஆண்டு காலம் சுமப்பது! இனி ஆகமங்களை தடை செய்! என்ற போராட்டத்தை நாம் தொடங்கியாக வேண்டும்.

கேரள கோயில்களில் பாகுபாடு காட்டும் ஆகமங்களைப் பின்பற்ற வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 1969ஆம் ஆண்டிலிருந்து அங்கே ஆகமங்களைப் புறந்தள்ளி அனைத்து ஜாதியினரும் அர்ச்கராக இருக்கிறார்கள்; வடநாட்டுக் கோயில்களில் ஆகமங்கள் பின்பற்றப்படுவதில்லை.

இப்போது மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு அது குறித்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பது ஏன்? அவர் நம்பிக்கையாளராக இருக்கலாம். அதற்காக அரசின் கொள்கையை பலிகடாவாக்கினால் அதை நாம் அனுமதிக்க முடியாது. பெரியாரின் ‘நெஞ்சில் தைத்த முள்ளாக’ இருந்த இந்த இழிவை நீக்குவதற்கு தமிழக முதல்வர் பதவியேற்ற 100 நாட்களுக்குள் செயல்படுத்திக் காட்டிய ‘இந்த சமூக நீதிப் புரட்சித்’ திட்டத்தை அறநிலையத் துறையில் ஊடுறுவியுள்ள அதிகாரிகளும் அமைச்சரும் துணை போகக் கூடாது; அது முதல்வருக்கு செய்யும் மாபெரும் துரோகம் என்றார் விடுதலை இராசேந்திரன்.

Pin It