ஆகம விதிகளை மீறக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குப் போடும் சிவாச்சாரியார்களே, இப்போது ஆகமவிதிகள் முறையாகத்தான் நடக்கிறதா?
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பின்போது நள்ளிரவில் பல பெரிய கோயில்கள் பூஜைக்கு திறந்துவிடப்படுகிறது. இதைக் கண்டித்து பா.ஜ.க. பொதுச் செயலாளராக இருந்த இல.கணேசன், ‘தினமணி’ நாளேட்டில் (4.1.2001) இவ்வாறு கடிதம் எழுதினார்.
“ஹிந்து ஆகமப்படி ஆலயங்களில் சுவாமியை இரவு பள்ளி கொள்ள அனுப்பி விட்டால் மறுநாள் காலை பள்ளி எழுச்சிதான். எந்த ஜாதியினரையும் அர்ச்சகராக்கிக் கர்ப்ப கிரகத்துக்கு உள்ளே அனுமதிக்கலாம் என்ற கோரிக்கை வரும்போது பாதுகாப்புக்கு ஆகம விதிக்குள் புகுந்து கொள்பவர்கள், இந்த விஷயத்தில் ஆகம விதியை மீறத் துணிவது எப்படி எனப் புரியவில்லை?” - இது இல.கணேசன் எழுப்பிய கேள்வி.
• அர்ச்சகர்களாக இருப்பவர்களுக்கான உடல் தகுதி மற்றும் இருக்கக்கூடாத குறைபாடுகள் குறித்தும் ஆகமம் கூறுகிறது. அதிகமாக உடல் பருத்து குண்டாக இருப்பவர்களும், அதிக குள்ளமாக இருப்பவர்களும், மொட்டைத் தலை, செம்பட்டை மயிர், உடலில் அதிக உரோமம் இருப்பது, ஊனமுற்றோர், பல் இல்லாதவர், அதிகம் உண்ணுபவர் போன்றவர்கள், அர்ச்சகர்களாவதற்கு தகுதி இல்லாதவர்கள் என்று காரணாகமம், பூர்வ பாகம் 26ஆவது படலம் ஆச்சாரிய இலட்சணம் விதிப்படலம் ஆகிய ஆகம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. இந்த அளவுகோலின்படி தான் அர்ச்சகர்கள் இருக்கிறார்களா? அப்படி இல்லாதவர்களை கண்டறிந்து அர்ச்சகர் பொறுப்பிலிருந்து நீக்கிட ஏதேனும் கண்காணிப்பு அமைப்பு இருக்கிறதா?
• சிவன் கோயில்களில் அர்ச்சகர்களாக இருக்கும் பார்ப்பனர்களில் இரு பிரிவினர் உண்டு. ஒன்று - சிவாச்சாரி அல்லது ஆதி சைவர் என்று அழைக்கப்படும் பார்ப்பனர்கள். இவர்கள் ‘சிவபெருமான்’ அய்ந்து முகங்களிலிருந்து சிவனாலேயே உருவாக்கப்பட்டவர்களாம். மற்றொரு பிரிவினர் ‘ஸ்மார்த்த பார்ப்பனர்’. இவர்கள் ‘பிரம்மா’வின் நான்கு முகங்களிலிருந்து ‘பிரம்மாவால்’ உருவாக்கப் பட்டவர்களாம்.
சிவன் கோயில்களில் பூஜை செய்ய சிவாச்சாரியார்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. 'ஸ்மார்த்த பிராமணர்களுக்கு' உரிமை கிடையாது என்றும், அப்படி ஆகம விதிகளை மீறி செயல்பட்டால் அரசனுக்கும் நாட்டுக்கும் உடனே கேடு வந்துவிடும் என்றும் ஆகமங்கள் திட்டவட்டமாக கூறுகின்றன. (காடிகாகமம், காரணாகமம் ஆகிய ஆகமங்கள்) இந்த ஆகமவிதிகள் பின்பற்றப்படுகிறதா? சிதம்பரம், இராமேசுவரம், திருவிழி மிழலை, கன்யாகுமரி, திருவானைக் காவல், திருச்செந்தூர் போன்ற பிரபலமான சிவன் கோயில்களில் சிவாச்சாரியார் அல்லாத 'ஸ்மார்த்த பிராமணர்களே' காலம்காலமாக பூஜை நடத்துகிறார்கள். இது ஆகம விதிமீறல் இல்லையா?
• கருவறைக்குள் சிவாச்சாரியார் அல்லாத பிரிவினர் நுழைந்தால், சிலையைத் தொட்டால், சிலையின் புனிதம் கெடும் என்று ஆகமம் கூறுகிறது. ஆனால் பல சிவன் கோயில்களில் ‘ஸ்மார்த்த பிராமணர்களே’ அபிஷேக தீர்த்தம் தருதல்; பரிவட்டம் துவைத்தல்; திருவிளக்கு இடுதல் போன்ற வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனர்கள் மட்டும் ஆகமங்களை மீறிக் கொள்ளலாமா?
• அர்ச்சகர்கள் ஊதியம் பெறக் கூடாது; அதனால் ‘தேவலோகத் துவேஷம்’ வரும். கோயிலின் புனிதம் கெடும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. (ஆதாரம்: காரணா கமம், பூர்வபாகம், புண்ணியாபிஷேக விதிப்படலம்) ஆனால், என்ன நடக்கிறது? அர்ச்சகர் மாத ஊதியம் வாங்குகிறார்கள்; சங்கம் அமைத்துக் கொண்டு ஓய்வூதியம் கேட்கிறார்கள்; கோயில் வருமானத்தில் ஒரு பங்கு தங்களுக்கு ஊக்க ஊதியமாக தரவேண்டும் என்கிறார்கள். இது ஆகமத்துக்கு எதிரானது அல்லவா?
• மனைவி இல்லாதவன் (அபத்திகன்), பிரம்மச்சாரி ஆகியோர் ‘நைமித்திகம்’ போன்ற பூஜைகள் செய்யக் கூடாது என்கிறது ஆகமம். ஆனால், பல கோயில்களில் இவர்கள் நைமித்திக பூஜை செய்கிறார்கள். இவர்களை பரிசோதிக்க ஏதேனும் அமைப்பு இருக்கிறதா? மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?
• கோயில்களில் கடவுளை ‘பிரதிஷ்டை’ செய்வது ஆகமப்பபடி நடந்திருக்கும். அதே கோயிலில் ஆகம பூஜையே நடத்த வேண்டும். அதற்கு பதிலாக ‘ஸ்மார்த்த பிராமணர்கள்’ வைதீக பூஜை நடத்துகிறார்கள். நடராசர் - தெட்சிணாமூர்த்தி போன்ற பெரும் கடவுள்களுக்கு தனித்தனி மந்திரங்கள் இருந்தும்கூட - அர்ச்சகர் ஒரே மந்திரத்தைக் கூறுகிறார். தேவி மந்திரத்தை காளிக்கும், மாரியம்மனுக்கும் வித்தியாசமின்றி கூறுகிறார்கள் - இவை ஆகமத்துக்கு எதிரானவை அல்லவா?
• பெருங்கோயில்களிலுள்ள மடப்பள்ளியில் (படையல் உணவு தயாரிக்கும் இடம்) சிவாச்சாரியார்களே நிவேதனம் (படையல் உணவு) தயாரிக்க வேண்டும் என்பது ஆகமவிதி. பல பெரிய கோயில்களில் தீட்சைகூட இல்லாத 'ஸ்மார்த்த பிராமணர்கள்' உணவு தயாரித்து படையல் செய்வது வழக்கமாக இருக்கிறது. இது ஆகம விரோதம் இல்லையா?
• பழனி முருகன் கோயிலில் பார்ப்பனரல்லாத பண்டாரங்கள்தான் காலம் காலமாக பூஜை நடத்தி வந்தார்கள். திருமலை நாய்க்கன் காலத்தில் அவனது பார்ப்பன தளபதி இந்த பண்டாரங்களை துரத்தி அடித்துவிட்டு பார்ப்பனர்களை உள்ளே கொண்டு வந்தான். திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் பார்ப்பனர்கள் பூஜை செய்கிறார்கள்; இவை ஆகமங்கள் மீறல் இல்லையா?
• ஆகமங்களின்படி ‘சிவன்-விஷ்ணு’வை இணைத்து கோயில் கட்ட முடியாது. சென்னையில் ‘சிவ-விஷ்ணு’ கோயில் கட்டப்பட்டு, அதில் பார்ப்பனர்கள் பூஜைகளும் நடத்துகிறார்களே! இதை எந்த ஆகமம் அனுமதிக்கிறது?
• ஆகமக் கோயில்களில் மின்சாரம், கண்காணிப்புக் கேமிரா, ‘தரிசனத்துக்கு ஆன்லைன் பதிவு’ என்றெல்லாம் விஞ்ஞான கருவிகள் பயன்படுத்தப்படுகிறதே; இவற்றை யெல்லாம் ‘ஆகமம்’ அனுமதிக்கிறதா?
• வேத பூஜை என்பதும், ஆகம பூஜை என்பதும் வெவ்வேறானது. அக்னி, வாயு, வருணன், இந்திரன் - இவை எல்லாம் வேதக் கடவுள்கள். இந்தக் கடவுளுக்கான படையல் (நிவேதனம்) நெருப்பின் வழியாகவே நடத்தப்படும். நெருப்பான ‘அக்னி’ தேவன், படையல் பொருள்களை அந்தந்தக் கடவுள்களுக்குக் கொண்டு செல்லும் ‘கூரியர்’ ஆக செயல்படுகிறானாம் - சிவன் - திருமால் என்ற கடவுள்களுக்கு மட்டுமே உரித்தானது ஆகமம்.
• இந்தக் கடவுள்களுக்கு நேரடியாகவே படையல் செய்ய வேண்டும். பார்ப்பனர்கள் கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்ட பிறகு, ஆகமத்தையும் வேதத்தையும் ஒன்றாக்கிக் கொண்டார்கள். அதன்படி வேத பூஜைகள் நடத்துகிறார்கள். இவை ஆகம விதிமீறல்கள் இல்லையா?
(தொடரும்)
- விடுதலை இராசேந்திரன்