கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் மதம் மாற்றம் செய்வது ஒரு புறம் இருக்கட்டும்; இவர்கள் எல்லாம் இங்கு வந்து மத மாற்றம் செய்வதற்கு முன்னதாகவே சைவர்கள் சமணர்களிடையே மதமாற்றமெல்லாம் நடை பெற்றதே, அதற்கெல்லாம் யார் காரணம்? என்ன பதில்?
இதே கும்பகோணத்துக்காரர் தானே காளமேகப் புலவன் வடமணமாகிய பார்ப்பனக் குலத்தில் பிறந்தவன் தானே? அவன் எப்படிச் சைவத்துக்கு மாறினான்?
அந்தக் கதை தெரியுமா? நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துப் போகலாம். இந்தப் பார்ப்பனக் கும்பலுக்கு மானமாவது மண்ணாங்கட்டியாவது. வைணவத்தைப் பின்பற்றுபவனாக ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் சமையல் தொழில் செய்பவனாக, ஏவற் தொழில் செய்பவனாக வரலாற்றைக் கழுவி வந்தான் அவன்.
அவனுக்கும் திருவானைக்காவிலுள்ள சம்புகேசுவரர் கோயில் தாசியான மோகனாங்கிக்கும் எப்படியோ தொடர்பு ஏற்பட்டு விட்டது. அவனது இரவுப் பொழுது தாசி மடியின் மீது தான் வைணவப் பக்தனுக்கு சிவபக்தையின் இன்பம் கேட்கிறது. தாசி மோகனாங்கி திருவானைக்கா சம்பு கேசுவரர் சந்நிதியில் திருவெம்பாவை பாடினாள். உங்கையிற் பிள்ளை என்று தொடங்கும் பாடல். அதில் ஒரு வரி வருகிறது.
‘எங் கெங்கை நின்னன்பர். அல்லார் தோள் சேரற்க’ - என்பதுதான் அந்த வரி!
கடவுளிடம் பக்தைகள் என்னென்ன விடயங்களை எல்லாம் பரிமாறிக் கொள்கிறார்கள்.... பக்தியின் இரகசியமே இங்கேதான் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
சிவன் கோயிலைச் சேர்ந்த தாசி மோகனாங்கி இப்படிப் பாடியதைக் கேட்டுப் பக்கத்தில் இருந்த தாசிகள் எல்லாம் கொல்லென்று சிரித்தனராம். ஏன் சிரிக்கிறீர்கள்? சிரிக்காமல் என்ன செய்வது? சொல்லிவிட்டுச் சிரியுங்களேன்!
‘எங்கொங்கை கின்னன்பர் அல்லா தார் தோள் சேரற்க’ என்று பாடிவிட்டு, அதற்கு மாறாக சிறீரங்கத்து வைணவன் (காளமேகம்) தோளைத் தானே தினமும் தழுவிக் கொண்டு இருக்கிறாய்? படிக்கிறது திருவாசகம், இடிக்கிறது சிவன் கோயிலா? என்று நறுக்கென்று கேட்டு விட்டனர். தாசி மோகனாங்கிக்குச் சுருக்கென்று தைத்தது.
‘இன்றைக்கு வரட்டும் இந்தப் பெருமாள் கோயில் சமையற்காரன்... வைத்துக் கொள்கிறேன்’ என்று பொருமினாள். இரவு வந்தான் பெருமாள் கோயில் பரிசாரகன். வழக்கம் போல் வாயிலில் காத்து இருக்கும் மோகனாங்கியைக் காணவில்லை. உள் கதவும் தாழிட்டுக் கிடந்தது. துணுக்குற்றான்.
என்ன... இது... என்றும் இல்லாக் கோலம்? கதவைத் தட்டினான் பொறுக்க மாட்டாமல், கோயில் தோட்டத்திலிருந்து காமக் கோட்டத்தை நோக்கித் தாவி வந்தவனாயிற்றே! வெகு நேரம் கழித்து உள்ளேயிருந்து குரல் வந்தது.
ஓ, பரிசாரகரே, நீயோ விஷ்ணு பக்தன். நானோ சிவன் பக்தன். ஆகவே, உன் சம்போகம் எனக்கு ஆகாது! ஆகாது!! என்று கத்தினாள்.
காமமா? கடவுளா? பள்ளி கொண்ட அரங்கநாதனா? அணங்கின் பள்ளியறையா? எது முக்கியம் என்கிற கேள்வி எழுந்தது. கணநேரம்கூட யோசிக்கவில்லை காளமேகன்.
‘வைணவத்தைத் தூக்கி எறிந்து சிவதீட்சை பெற்று உன் செவ்விதழ் கொஞ்சுவேன்’ என்றான்.
சிற்றின்பம் பேரின்பம் பற்றியெல்லாம் பேசுவதில் மட்டும் குறைச்ச லில்லை. ஒரு தாசியின் நேசத்துக்காக மதம் மாறினான் காளமேகப் புலவன். இந்த யோக்கியதையில் இருக்கிறது இவர்களின் பார்ப்பனத் தனம்.
இவர்கள் போய், ‘அய்யய்யோ கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்கிறார்களே, முஸ்லீம்கள் இந்துக்களை அள்ளிக் கொண்டு போகிறார்களே’ என்று அலறுகிறார்கள்.
யார் எந்த மதம் என்று தீர்மானித்துக் கொள்ள அவனவனுக்கும் உரிமை உண்டு. மதமே கூடாது. கடவுள் என்பது மூடதனம் என்று கருதுவதற்கும், கொள்வதற்கும் பகுத்தறிவுவாதிகளுக்கு உரிமையுண்டு.