கடவுள் உண்டு என்று சொல்லத் தொடங்கிய காலத்திலேயே கடவுள் இல்லை என்கிற குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அதேபோல் “வேதங்கள்” என்று சொல்லப்படும் பார்ப்பனர்களின் பழைய நூல்கள் இயற்றப்பட்டக் காலந்தொட்டே அவ்வேதங்களை மறுத்தவர்களும் இருந்து வந்திருக்கின்றனர். அவர்களைத்தான் பார்ப்பனர்கள் “நாத்திக வேத நிந்திக” என்று குறிப்பிடுகிறார்கள்
ஒவ்வொரு காலகட்டத்திலும் பார்ப்பனியத்தை எதிர்த்து உருவாகிய தத்துவச் சிந்தனைகளில், வேத மரபும் வேத மறுப்பும் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பதைப் பற்றி எளிய வடிவிலும் அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையிலும் வெளிவந்திருக்கும் நூல்தான் “இந்தியத் தத்துவச் சிந்தனையில் வேத மரபும் வேத மறுப்பும்”. எழுத்தாளர் எழில்.இளங்கோவன் அவர்களின் இந்நூலைக் கருஞ்சட்டைப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
இந்தியா என்னும் அமைப்பில் சாதி எப்படிச் சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்து வருகிறது என்பதை வரலாற்று ரீதியாகப் பார்க்க வேண்டுமானால், அது எந்தத் தத்துவத்தின் அடிப்படையில், யாரால் எந்தக் காலம் தொட்டு உருவாக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதனால் தத்துவார்த்த ரீதியாக இங்கு நிலைப்பெற்றிருக்கும் வாழ்வியலை அதன் வரலாற்றை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்நூல் பெரிதும் துணைபுரியும். இந்தியத் தத்துவச் சிந்தனைகள் பற்றிய, தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா போன்ற அறிஞர்களின் பெரிய பெரிய ஆய்வு நூல்களைத் தனித்தனியே படித்துத் தெரிந்து கொள்வது என்னும் கடினமானப் பணியை எளிமையாக்கித் தந்திருக்கிறார் இந்நூலில் நூலாசிரியர் எழில்.இளங்கோவன் அவர்கள்.
தத்துவ நூல்களின் ஆழ்ந்த வாசிப்போடு, மணிமேகலை, நீலகேசி, தொல்காப்பியம், புறநானூறு போன்ற பழந்தமிழ் இலக்கியங்களின் புலமையும் நூலாசிரியரின் ஆய்வுகளுக்குக் கூடுதல் வலு சேர்க்கின்றன.
எப்படி, கடவுள் நம்பிக்கை என்பது மனிதருக்கு மனிதர் அளவில் மாறுபடுகிறதோ, அதேபோல் ஒவ்வொரு தத்துவச் சிந்தனையிலும் வேத மரபும் வேத மறுப்பும் வெவ்வேறு அளவுகளில் மாறுபடுகின்றன. பல்வேறு தத்துவங்களிலும் வேத மரபு என்பது பெரும்பாலும் அத்தத்துவத்தின் பிற்கால நூல்களில் இடம் பெற்றிருப்பதைச் சான்றுகளோடு சுட்டிக்காட்டும் ஆசிரியர், வேத மரபு என்பது எவ்வாறு இடைச்செருகலாக வந்து சேர்ந்திருக்கிறது என்பதையும் விளக்குகிறார்.
கடவுளால் உண்டாக்கப்பட்டதுதான் உலகம் என்னும் கருத்து முதல் வாதத்தை அறிவார்ந்த வாதங்கள் மூலம் ஒதுக்கித் தள்ளிய பல்வேறு தத்துவங்களிலும் பின்னாட்களில் வேதத்தின் சாயல் வந்து சேர்கிறது. அனைத்துத் தத்துவங்களையும் அதன் மூலத் தத்துவம் என்றும் பிற்காலத் தத்துவம் என்றும் பிரித்துப் பார்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நூலாசிரியர் அனைத்து இயல்களிலும் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
வேதம், உபநிடதம், பிரம்ம சூத்திரம் போன்ற பார்ப்பனத் தத்துவங்களை முதலில் எளிமையாக விளக்கி விட்டு இந்தத் தத்துவங்களோடு வாதம் புரிந்த மற்ற தத்துவங்களை அறிமுகப்படுத்துகிறார். அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டிராத அந்தக் காலத்திலும் வலிமையான கடவுள் மறுப்பு உரையாடல்கள் நடைபெற்றிருப்பதை சாங்கியம், பௌத்தம், சமணம், மீமாம்சம், நியாய வைசேடிகம், ஆசிவகம், உலகாயுதம் போன்ற சித்தாந்தங்களில் நாம் காணமுடிகிறது. ஆனால் தத்துவச் சிந்தனைகளாக எழுப்பப்பட்டக் கேள்விகள் பொருள்முதல்வாதத்தை முன் வைத்தாலும், அச்சமயங்கள் அல்லது மதங்கள் வரையறுக்கும் சூத்திரங்கள் கருத்து முதல்வாதத்தைச் சொல்பவையாக இருக்கின்றன.
இத்தத்துவச் சிந்தனைகள் பலரால் பல காலங்களில் மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றன என்பதையும் பின்னால் வந்த உரையாசிரியர்கள் பல்வேறு பொருள்களை மாற்றி உரை எழுதி இருப்பதையும் நூலாசிரியர் சான்றுகளோடு விளக்குகிறார். குறிப்பாக, சாங்கியத்தில் 24 தத்துவ பொருள்களுடன் 25 ஆவதாக ‘புருஷன்’ என்ற ஆன்மாவைக் கொண்டுவந்து சேர்த்தது பொருந்தாதது என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். “சாங்கியக் காரிகை”, “சங்கியச் சூத்திரம்” ஆகிய சாங்கிய நூல்கள் வேத மரபுக்கு ஆதரவாக இருப்பதையும் இந்நூல்களுக்கு உரை எழுதியவர்கள் வேத சிந்தனைகளைப் புகுத்தி வேத மரபுக்கு ஆதரவாக மாற்றியதையும் விளக்கி இது பிற்காலச் சாங்கியம் என்றும் நிறுவுகிறார்.
சடங்குகள் அல்லது வாழ்வியல் முறை என்று வரும்போது உலகாயதம் தவிர்த்த மற்ற சமயங்கள் அல்லது மதங்கள், குறிப்பாக நிறுவனமயமாகி இன்று வரையிலும் நிலைத்திருக்கும் பௌத்தம் சமணம் ஆகியன, அவற்றின் மூலத் தத்துவங்களுக்கு முரணாக இயங்கி வருவதையும் காண முடிகிறது. பல்வேறு தத்துவச் சிந்தனைகள் பற்றிச் சொல்லியிருக்கும் நூலாசிரியர் வேத காலத்தில் இருந்து தொடங்கி கிபி 10-11ஆம் நூற்றாண்டு வரையிலான தத்துவச் சிந்தனைகளைச் சொல்லியிருக்கிறார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் பார்ப்பனர்கள் அனைத்துச் சித்தாந்தங்களையும் சிதைத்து அழிப்பது அல்லது உள்வாங்கிக் கொள்வது என்கிற சூழ்ச்சியைக் கையாண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக வந்திருக்கும் இன்றைய மத்திய அரசு, தகவல் தொழில்நுட்பம் அறிவியல் வளர்ந்த இந்தக் காலகட்டத்திலும் கூட, அத்தகைய சூழ்ச்சியைத் தொடர்ந்து செய்து வருகிறது. அண்மையில் யுஜிசி சொல்லியிருக்கும் வரலாற்றுப் பாடத் திட்டத்திற்கான வழிகாட்டுதல்களில், ஒற்றைத் தன்மை கொண்டதாக, இந்து-முஸ்லிம்-பிரிட்டிஷ் என்ற மூன்று பெரும் பிரிவுகளில் வரலாற்றை எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். வேத மரபையும் வேத மறுப்பையும் ஒன்றாக்கி, முகலாயர் ஆட்சிக்கு முன்னர் ஒற்றை இந்து நாடாகவும் ஒற்றை இந்து மதமாகவும் வரலாற்றை எழுதுகின்றனர். இதுபோன்ற திரிபுகள் நடைபெற்று வரும் வேளையில், இந்தியத் தத்துவச் சிந்தனை என்றும் ஒன்றாக இருந்தது இல்லை, அவை பலவாக இயங்கி வந்திருக்கின்றன, பல்வேறாக இருந்த போதும் தத்துவ அடிப்படையில் முரண்பட்டு மோதிக் கொண்டுதான் அவை இயங்கி வந்திருக்கின்றன என்பதை நிறுவியிருக்கும் இந்நூல் அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் அரிச்சுவடியாகக் கற்க வேண்டிய நூலாகும்.
நூல் பெயர்: இந்தியத் தத்துவ சிந்தனையில் வேத மரபும் வேத மறுப்பும்
ஆசிரியர் : எழில்.இளங்கோவன்
விலை : ரூ.110
வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம்
தொடர்புக்கு: 044 24726408 / 9940407468
- மா. உதயகுமார்