கோயில்கள் பக்தர்களுக்குரிய வழிபாட்டுத் தலம் என்பது உண்மை என்றால், அதில் வழிபடும் உரிமையும் வழிபாடுகளை நடத்தும் உரிமையும் அதே மதத்தைச் சார்ந்த அனைத்துப் பிரிவு மக்களுக்கும் இருக்க வேண்டும் என்பதே நியாயம். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் முறையாக, ஆகமம் வழிபாட்டு முறைகளைப் பயின்றவர்களில் 24 பேருக்கு தமிழ்நாட்டுக் கோயில்களில் உப-அர்ச்சகர் - ஓதுவார் உள்ளிட்ட கோயில் பணியாளர்களாக நியமித்துள்ளது. ஒட்டு மொத்தமாக இப்போது நியமிக்கப்பட்டுள்ள 58 அர்ச்சகர்களில் உரிய பயிற்சி பெற்று, 13 ஆண்டுகாலம் காத்திருந்த 24 பேருக்கு மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஏனைய 29 பேர் ஏற்கனவே பாரம்பர்யமாக அர்ச்சகர்களாக அதாவது அரசு பள்ளியில் உரிய பயிற்சிப் பெறாதவர்களுக்குத் தான் பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
முறையான பயிற்சிப் பள்ளிகளில் படிக்காமல், தங்களுக்குத் தாங்களே வேத மந்திரங்களைப் படித்து, எந்தக் தேர்வுக்கும் உட்படாதவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக்க வேண்டும் என்பதுதான், இப்போது ‘பிராமண புரோகிதர்கள்’ - பார்ப்பனியர்கள் முன்வைக்கும் வாதம். அனைத்துத் துறைகளிலும் ‘தகுதி-திறமை’ பேசுகிறவர்கள், ‘நீட்’ போன்ற நுழைவுத் தேர்வுகள் வழியாக வடிகட்டி திறமையானவர்களை மருத்துவப் படிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என்று வாதிடுவோர், ‘அர்ச்சகர்’ பதவிக்கு மட்டும் ‘குரு’விடம் பயில்வோர்தான் தகுதியானவர், முறையாக பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறவர்கள் தகுதியற்றவர்கள் என்று பேசுவது இவர்களின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
மற்றொரு உண்மைக்கு மாறான செய்தியையும் பரப்பி வருகிறார்கள். பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை நியமித்து, அன்றாட ஊதியத்தில் நியமிக்கப்பட்ட ‘பாரம்பர்ய’ பார்ப்பன புரோகிதர்களை பணி நீக்கம் செய்துள்ளார்கள் என்று பேசி வருகிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த ‘சிவாச்சாரியார்கள் சங்கம்’ சார்பில் வாதாடிய வழக்கறிஞர் இதே கருத்தை நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். இது உண்மையல்ல; அப்படி ஒருவர்கூட பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்று நீதிமன்றத்திலேயே அரசு தலைமை வழக்கறிஞர் மறுத்துள்ளார். தமிழக சட்டமன்றத்திலும் தமிழக முதல்வரும் அறநிலையத் துறை அமைச்சரும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பழைய அர்ச்சகர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அறநிலையத் துறையும் தெளிவு படுத்தியிருக்கிறது.
வீண்புரளியைக் கிளப்புவது அவர்களுக்கு வாடிக்கையானதுதான். காந்தியார், சிதம்பரம் வருகை தந்தபோது நடராசர் கோயிலுக்குள் ‘தீண்டப்படாத’ மக்களை’ அழைத்து வரப் போகிறார் என்று புரளி கிளப்பி, கோயிலுக்கே பூட்டு போட்டார்கள் தீட்சதர்கள் என்பது வரலாறு.
தற்போது தமிழ்நாட்டுக் கோயில்கள் ஆகமவிதி முறையைப் பின்பற்றி முறையாக வழிபாடுகள் நடக்கின்றனவா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்று எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது நியமிக்கப்பட்ட நீதிபதி மகராஜன் குழு பல்வேறு சான்றுகளுடன் சுட்டிக் காட்டியது.
1960ஆம் ஆண்டு ஒன்றிய ஆட்சியே இந்தியா முழுமைக்கும் உள்ள கோயில்களைப் பற்றி ஆராய, இந்து சமய அறக்கட்டளைக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவின் தலைவர் வைதீகத்தில் ஊறிப்போன சி.பி.ராமசாமி அய்யர். அந்த அறிக்கையில் கோயில் வழிபாட்டுச் சடங்குகள் முறையாக நடக்க வேண்டுமானால் அது குறித்துப் பயிற்சி பெற்றவர்களாக ஆகமங்களை முறையாகப் படித்தவர்களாக இருத்தல் வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, பயிற்சிக்குப் பயன்படுத்த வேண்டிய ஆகம நூல்களையும் பிற பிரதிகளையும் பட்டியலிட்டுள்ளது. பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்களாக இருப்பவர்கள் தங்களை பயிற்சிக்குள்ளாக்கி தகுதிக்குள்ளானவர்களாக நிரூபிக்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக வலியுறுத்தியது. பெரும்பாலான கோயில்களில் பரம்பரை அர்ச்சகர்கள் நடத்தும் வழிபாட்டு முறைகள் திருப்தி அளிக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டியது. இதற்குப் பிறகாவது, ‘பரம்பரை அர்ச்சகர் உரிமை’களை ஆகம சாஸ்திரப் பயிற்சிப் பள்ளிகளில் படித்து தங்கள் தகுதியை உறுதிப்படுத்திக் கொள்ள வைதீகப் பார்ப்பனர்கள் முன்வரவில்லை. மாறாக, இப்போது முறைப்படி பயிற்சி பெற்று வரும் அர்ச்சகர் நியமனங்களை எதிர்க்கிறார்கள்.
பார்ப்பன ஆதிக்கத்தில் கை வைக்காமல் எந்த மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ள தயாராகவே இருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். ஆகமங்களுக்கு எதிராக கோயில்களின் மின் விளக்கு, சி.சி.டி.வி. கேமராக்கள், ஆன்லைன் பிரசாதங்கள் என்று எத்தனை மாற்றங்கள் வந்து விட்டன. தமிழக அரசு இதில் மிகவும் நிதானமாகவே செயல்பட்டு வரும் நிலையில், ‘கோயில் பிரச்சினைகளில் கோளாறுகளை’ இந்த ஆட்சி உருவாக்கி வருகிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
இவ்வளவுக்குப் பிறகும் நீதிமன்றங்கள் வழியாக தங்கள் ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்று கருதாமல், மக்கள் மன்றம் இப்போது விழித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
- விடுதலை இராசேந்திரன்