ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன், கடந்த ஜூலை 24, 2019 அன்று ஆந்திர சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். ஆந்திர தொழிற்சாலை மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் சட்டம் இது. மாநிலத்தில் முதலீடு செய்வோருக்கு உதவக் கூடியதாகவும், நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாகவும் இந்தச் சட்டம் இருக்கும் என்றும், இது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் எழுமானால் முதலீட்டாளர்களுடன் பேசித் தீர்க்கத் தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார். ஆந்திர மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஜி.ஜெயராமன், இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசும்போது, இந்தச் சட்டம் மாநிலத்திலுள்ள அனைத்துத் தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அரசு தனியார் கூட்டு முதலீட்டுத் திட்டங்களுக்கும் பொருந்தும் என்று கூறினார்.

வேலைக்கு உரிய தகுதியுடன் உள்ளூர் இளைஞர்கள் கிடைக்கவில்லை என்ற காரணம் காட்டி, சட்டத்திலிருந்து விதிவிலக்கு கேட்டால், அரசு தலையிட்டு இரண்டு வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மசோதா கூறுகிறது. அந்தந்தப் பகுதியில் உரிய தகுதி உள்ள இளைஞர்கள் கிடைக்காவிட்டால், உள்ளூர் இளைஞர்களுக்கு தேவையான தொழில் திறன் பயிற்சிகளை அளிக்க தொழிற்சாலைகள் முன்வரவேண்டும். மூன்று ஆண்டுகளுக்குள் இளைஞர்களை தயார் செய்ய வேண்டும் என்றும், அதற்கான தொழில்நுட்ப உதவிகளையும் நிதி உதவிகளையும் அரசு வழங்கும் என்றும் முதலமைச்சர் கூறினார். ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த இளைஞர்கள்தான் உள்ளூர்காரர்கள் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆந்திர முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து சில வடநாட்டு தொழில் நிறுவனங்கள் ஆந்திராவிலிருந்து வெளியேறத் தொடங்கியிருக்கின்றன. ஆந்திர முதல்வரின் இந்த சீரிய திட்டத்தை தமிழ்நாடு அரசு பின்பற்றுமா?

Pin It