தமிழ்நாட்டு வேலை வாய்ப்புகளில் வடநாட்டார் குவிக்கப்பட்டு வரும் ‘உரிமைப் பறிப்பு’ கொடுமைகள் குறித்து கடந்த வாரம் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் எழுதியிருந்தோம்.

அதைத் தொடர்ந்து மற்றொரு அதிர்ச்சித் தகவலும் வெளி வந்திருக்கிறது.

தெற்கு இரயில்வே சென்னை தேர்வு வாரியத்தில் ‘குரூப் டி’ பணியாளர்களுக்கு 1550 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று முடிந்திருக்கிறது. இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்புச் தேர்ச்சி. நாடு முழுதும் ஒரு கோடியே 7 இலட்சம் பேர் விண்ணப்பித்தார்கள். தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 4ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் சென்னை தேர்வு வாரியத்தில் 1550 தேர்ச்சி பெற்றவர்களில் 90 சதவீதம் பேர் வடநாட்டினர்.

தேர்வுக்கான விதிகள் இருக்கின்றன. விதி எண். 11இன்படி இந்தக் கீழ்நிலைப் பதவிகளுக்கு தொடர்புடைய மாநிலங்களைச் சார்ந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும். மாநில மொழியிலும் இந்தி, ஆங்கில மொழியிலும் இந்தத் தேர்வுக்கான விளம்பரத்தை செய்ய வேண்டும். இந்த விளம்பரங்களை மண்டலங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வழியாகவே செய்ய வேண்டும்.

இந்த விதிகள் எதையுமே இரயில்வே நிர்வாகம் பின்பற்றவில்லை.

இந்தியா முழுமைக்கும் சேர்த்து பொதுவான விளம்பரம் மட்டுமே செய்யப்பட்டது. - இது முதல் தவறு.

கணினி பற்றாக்குறையைக் காரணம் காட்டி பல கட்டங்களாகத் தேர்வுகளை நடத்தியது. இதனால் ஒரே நபர் பல இடங்களில் தேர்வு எழுதினார்கள். அதைக் கண்காணிக்க முடியவில்லை. - இது இரண்டாவது தவறு.

தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைப்பு என்ற கொடூரமான விதிமுறையையும் இதில் புகுத்தினார்கள். 10ஆம் வகுப்புப் படித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக வரும் இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட முறைகளைப் புகுத்துவது மாபெரும் அநீதி!

விடைகளுக்கு மதிப்பெண்கள் - எந்த அடிப்படையில் வழங்கப்படும் என்பதை திட்டமிட்டே தேர்வு வாரியம் தெரிவிக்கவில்லை. இதனால் 100க்கு 350 மதிப்பெண்களைக்கூட வடநாட்டுக்காரர்கள் பெற முடிந்திருக்கிறது. பீகார் மாநிலத்தில் பல இலட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு நடத்தும் பயிற்சி மய்யங்களைச் சார்ந்தவர்கள் குறுக்கு வழிகளில் இப்படி வேலைகளைத் தட்டிப் பறித்துக் கெண்டு விட்டார்கள். பாட்னாவிலும் இராஜஸ்தானிலும் நடத்தப்படும் பயிற்சி மய்யங்கள், தேர்வு நடத்தும் அமைப்புகளோடு கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு முறைகேடாக வடநாட்டுக்காரர்களை தமிழ்நாட்டுக்குள் நுழைத்து விடுகின்றன.

தமிழே தெரியாத ஒரு இராஜஸ்தான் பேர்வழி அஞ்சல்துறைக்கான தேர்வில் தமிழில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் வேலையில் நுழைந்த அவலமும் ஏற்கெனவே அம்பலமானது.

தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகளை வடநாட்டானுக்குத் தாரை வார்த்த கும்பல் மீண்டும் தமிழ்நாட்டை சூறையாட தேர்தலில் ஓட்டு கேட்டு வருகிறது.

தமிழர்களே எச்சரிக்கை!

Pin It