தமிழகத்தில் நடுவண் அரசுப் பணிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு பிற மாநிலத்தவர் குறிப்பாக வடநாட்டுக்காரர்கள் ஏராளமாகக் குவிக்கபட்டு வருவதற்கு தமிழ்நாட்டில் வலிமையான போராட்டங்கள் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பல்வேறு மொழி பண்பாடு இனங்களின் கூட்டமைப்பான இந்திய துணைக் கண்டத்தில் மொழி வழி மாநிலப் பிரிவினருக்குப் பிறகு அரசுகளின் இறையாண்மை காக்கப்படவேண்டும். அரசியல் சட்டமே இந்தியாவை அரசுகளில் ஒன்றியம் என்று தான் (ருniடிn டிக ளுவயவநள) வரையறுக்கிறது. அதன் காரணமாகவே நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிறுவனங்கள் மண்டலவாரியாகப் பிரிக்கப்பட்டு அந்தந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் நோக்கத்தோடு வேலைவாயப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தன. 145 மத்திய அரசு நிறுவனங்களுக்கான பதவிகள் மத்திய தேர்வாணை யத்தால் 7 மண்டலங்கள் 2 துணை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்ட முறைகளை மாற்றி அகில இந்தியத் தேர்வுகள் வழியாக தோந்தெடுக்கப்படும் முறைக்கு மாற்றப்பட்டதால் மாநில பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டு வடநாட்டுக்காரர் திணிப்புக்கு வழி திறந்து விடப்பட்டது.

இந்தி பேசும் மக்களை அதிகமாகக் கொண்ட மாநிலங்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பதால் அவர்கள் தேர்வுகளில் முறைகேடுகள் மோசடிகள் செய்து கூடுதல் இடங்களைப் பிடித்து விடுகிறார்கள். இந்த மோசடிகள் கண்டறியப்பட்டு நீதிமன்றங்களால் தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் தேர்வுகள் இந்தி, ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்படுகின்றன. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படுவது இல்லை. அய்.ஏ.எஸ். போன்ற அகில இந்திய சர்வீசுகளுக்கு தமிழில் தேர்வு எழுத அனுமதி இருக்கும்போது மத்திய அரசு தேர்வாணையம் மட்டும் ஏன் இந்த உரிமையை வழங்க மறுக்கிறது என்ற கேள்வியில் உள்ள நியாயத்தை மறுக்க முடியாது.

மூன்றாவதாக அதிகாரிகள் அல்லாத பணியாளர்கள் தேர்வுகள் மாநில அளவிலே நடத்தப்பட்டு அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்கிய உரிமையும் மாற்றப்பட்டு அகில இந்திய தேர்வு முறையைக் கொண்டு வந்து விட்டார்கள்.

மாநில மொழியில் தேர்வு எழுதுவோருக்கு பணியாளர்கள் வேலைக்கு முன்னுரிமை என்ற விதியை ‘பாரதஸ்டேட் வங்கி’ மாற்றி ஆங்கில மொழி மட்டும் தெரிந்தால் போதும் என்று அறிவித்து தமிழர்கள் வேலை வாய்ப்புகளைப் பறித்துவிட்டது.

பொன்மலை இரயில்வே பணிமனையில் சமீபத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட 325 பேர்களில் ஒருவர்கூட தமிழர் இல்லை. கடந்த செப்டம்பர் மாதம் தென்னக தொடர்வண்டித்துறை 4429 பயிற்சியாளர்களுக்கு (அப்ரண்டிஸ்) அழைப்பு விடுத்தது. ‘ஆன்லைனில்’ விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்திலிருந்து விண்ணப்பித்தவர் களுக்கு இணைய தளம் ‘ஹேக்’ ஆகி, விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வந்த 1765 விண்ணப்பங்களை சரி பார்த்து, அதில் 1600 வட மாநிலத்தவர்களை தேர்வு செய்துள்ளனர். ஏற்கனவே ‘அப்ரன்டிஸ்’ பயிற்சி எடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகும் ‘பணி ஆணை’ கிடைக்கப் பெறாததால் மனமுடைந்து பெரம்பூர் இணைப்புப் பெட்டி தொழிற்சாலை முன்பு ஹேமந்த் குமார் என்ற இளைஞர் தீக்குளித்து மாண்டார். இந்த நிலையை தமிழர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

தமிழர்களின் வேலை வாய்ப்புகள் உரிமைகளைப் பெற மாநில வாரியாக மாநில மொழிகளில் தேர்வு எழுதும் உரிமையையும் பணியாளர்களை மாநிலங்களிலிருந்து மட்டுமே தேர்வு செய்யும் உரிமையையும் மீட்டெடுக்கும் இயக்கங்களைத் தமிழர்கள் கட்சி வேறுபாடின்றி நடத்த முன் வரவேண்டும்.

Pin It