மனிதகுல முன்னேற்றத்தின் வரலாறு என்பது மாற்றுக் கருத்துகளின் வரலாறு என்பதில் தீவிர நம்பிக்கை கொண் டிருந்தவர் விஞ்ஞானி புஷ்ப பார்கவா (1928- 2017). அறிவியல் சிந்தனைக்கு (சைன்டிஃபிக் டெம்பர்) எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து வந்த இந்தப் புரட்சிக் குரல், கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி ஓய்ந்து விட்டது.
உயிரி வேதியியலாளராகப் பணியைத் தொடங்கிய பார்கவா, இந்தியாவில் உலகத் தரத்திலான உயிரித் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று நம்பினார். அவரின் முயற்சியால்தான் 1977ஆம் ஆண்டு ஹைதராபாதில் ‘உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம்’ தொடங்கப்பட்டது. ‘ஆர்ட்டிஸ்ட் இன் ரெஸிடென்ஸ்’ எனும் திட்டத்தைத் தொடங்கிய முதல் அறிவியல் மையம் இதுவாகத்தான் இருக்கும்.
மேலும், ஓவியர் எம்.எஃப்.ஹுசைனை அழைத்து, இந்த மையத்தில் சுவர் சித்திரத்தை வரையச் செய்தார். அதேபோல 1986ஆம் ஆண்டு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், உயிரித் தொழில்நுட்பத் துறை ஒன்றையும் ஏற்படுத்தினார். இந்த அமைப்புகள் மூலம், மக்களுக்குப் பயன்படும் விதத்தில், பல உயிரித் தொழில்நுட்ப ஆய்வுகளை, வணிக மயமாக்குவதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
எனினும், இலாபம் ஒன்றையே குறிக் கோளாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் வணிக மயமாக்கலில் அவருக்கு உடன்பாடில்லை. ‘மரபணுப் பொறியியல்’ என்ற பதத்தைப் பயன்படுத்திய முன்னோடிகளில் ஒருவர் இவர். ‘இந்திய நவீன உயிரியலின் வடிவமைப்பாளர்’ என்று போற்றப்படுகிறார்.
தான் ஏற்படுத்திய உயிரித் தொழில் நுட்பத் துறை, உயிரித் தொழில்நுட்ப விதி முறைகளை முறையாகச் செயல்படுத்தாத போது, அதற்கு எதிராக வந்த முதல் குரல் பார்கவாவினுடையது. போபால் விஷவாயுத் தாக்குதலினால் ஏற்பட்ட நீண்ட காலப் பாதிப்புகளை ஆய்வு செய்ய பல மத்திய அறிவியல் அமைப்புகள் தயங்கியபோது, பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றவர் பார்கவா.
1966ஆம் ஆண்டு கோல்வால்கர், பசு வதைத் தடைச் சட்டம் கேட்டு நாடாளு மன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, பார்கவாவின் தலைமையில், ‘பசு வதைத் தடைச் சட்டம் ஏன் கூடாது?’ என்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதனால் ஆத்திர மடைந்த கோல்வால்கர், பார்கவாவிடம், “பசு எப்படி உண்ணும் பொருளாகும்?” என்று கேட்க, பார்கவாவோ, “பசுவின் மாமிசத்தில் புரதம் இருக்கிறது. அந்தப் புரதம், அமினோ அமிலமாக மாறி, இரத்தத்தில் கலந்து, பல்வேறு உறுப்புகளுக்குச் சென்று, மீண்டும் அவை புரதமாக மாறுகின்றன” என்றார்.
தொடர்ந்து, “அப்படி யென்றால் பால் எப்படி?” என்கிறார் கோல்வால்கர். “பாலும் இப்படித்தான் செயல்படுகிறது” என்றார் பார்கவா. உடனே, கோல் வால்கர், “அப்படியெனில், பசு மாமிசத்துக்குப் பதி லாகப் பசுவின் பாலைக் குடிக்கலாமே?” என்று கேட்க, பார்கவா அமைதியாக இப்படிச் சொன்னார்: “பாலைப் போலவே நீங்கள் ஏன், மாமிசத்தையும் விரும்பி உண்ணக் கூடாது?”
‘வேத காலத்திலேயே விமானம் விட்டவர்கள் நாம்’, ‘புராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்தவர்கள் நாம்’ என்று அறிவியல் மாநாடுகளின்போது சொல்லப்படும் பொய்களைக் கேட்டுக் கொதிப்படைந்தார் பார்கவா. சி.எஸ்.ஐ.ஆர்., உள்ளிட்ட அரசு அறிவியல் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அளவு குறைக்கப்பட்டதையும் எதிர்த்தார் அவர். இது போன்ற விஷயங்கள்தான், அவரை, தனக்கு அளிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதைத் திருப்பித் தர உந்தித் தள்ளியது.
‘தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ எனும் புத்தகத்தில் ‘சைன்டிஃபிக் டெம்பர்’ (அறிவியல் சிந்தனை) எனும் பதத்தைப் பயன்படுத்தினார் ஜவஹர்லால் நேரு. ‘இந்திய அறிவியல் பணியாளர்கள் சங்க’த்தின் தலைவராகவும் நேரு இருந்தார். பிரதமர் ஒருவர், தொழிற் சங்கத்தின் தலைவராகவும் இருந்தது அதுவே முதலும் கடைசியும்! அந்தச் சங்கத்தில் உறுப்பினராக இருந்த பார்கவா, 1964-ல் ‘தி சொசைட்டி ஃபார் சைன்டிஃபிக் டெம்பர்’ எனும் அறிவியல் சிந்தனைக்கான ஒரு அமைப்பை உருவாக்கினார்.
1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42ஆவது அரசியலமைப்புத் திருத்த நிகழ்வில், ‘கூறு 51ஏ’வில், “அறிவியல் சிந்தனையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை ஆகும்” என்ற திருத்தத்தைச் செய்ய வலியுறுத்தும் படி, அன்றைய கல்வித் துறை அமைச்சர் நூருல் ஹசனிடம் வேண்டினார் பார்கவா.
‘கடந்த 85 ஆண்டுகளில் இந்தியா, நோபல் பரிசு வெல்லும் தகுதி உடைய ஒரு விஞ்ஞானியைக்கூட உருவாக்க முடியாமல் போனதற்கு, அறிவியல் சிந்தனை இல்லாமல் போனதே’ என்று தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் பார்கவா. அது உண்மைதானே?
நன்றி : ‘தமிழ் இந்து’