அறிவியலாளர்கள் கடும் எதிர்ப்புக்குப் பிறகு மூடநம்பிக்கை கட்டுக் கதைகளைக் கொண்ட ‘காமதேனு பசு அறிவியல்’ தேர்வை ‘இராஷ்டிரிய காமதேனு அயோக்’ என்ற தேர்வை மத்திய அரசு நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. ஆன்லைன் வழியாக பிப். 25இல் இந்தத் தேர்வு நடக்கவிருந்தது.

மாணவர்களை ‘காமதேனு பசு அறிவியல்’ தேர்வு எழுதச் செய்ய ஊக்குவிக்குமாறு பல்கலைக்கழக மான்ய ஆணையம் (யுஜிசி) நாட்டின் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறது. இது மூட நம்பிக்கையைப் பரப்பும் நடவடிக்கை என கேரள அறிவியல் இயக்கம் (கேரள சாஸ்திரிய சாகித்ய பரிசத் - கேஎஸ்எஸ்வி) மற்றும் அறிவியல் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

பல்கலைக் கழக துணைவேந்தர்களுக்கான சுற்றறிக்கையில், “மாட்டு அறிவியலில் ஒரு நபர் எவ்வளவு நிபுணத்துவம் பெற்றிருக்கிறார் என்பதை சோதிக்க ‘காமதேனு கோ விஞ்ஞான் பிரச்சார் தேர்வு’ எழுதுமாறு (யுஜிசி) மாணவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. யுஜிசி செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் கையெழுத்திட்ட சுற்றறிக்கையை துணைவேந்தர்களுக்கு அனுப்பியது.

மூட நம்பிக்கையை பரப்புவதை நோக்கமாகக் கொண்டது காமதேனு தேர்வு என்பதால் யுஜிசி உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” என்று சாஸ்திர சாகித்ய பரிஷத் கோரியுள்ளது.

அரசு நிறுவனமான ராஷ்டிரிய காமதேனு ஆணையம் பிப்ரவரி 25 ஆம் தேதி ஆன்லைன் தேர்வை நடத்த திட்டமிட்டது. இதற்காக மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆய்வுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

எந்த ஆதாரமும், விவாதமும், விஞ்ஞான அடிப்படையும் இல்லாமல் தயாரிக்கப்பட்ட இந்த புத்தகங்களில் அபத்தங்கள் மற்றும் முட்டாள்தனங்களின் நீண்ட பட்டியல் உள்ளது. “நாட்டு மாடுகளின் நரம்புகள் சூரிய ஒளியை உறிஞ்சி வைட்டமின்-டி உற்பத்தி செய்கின்றன; பசுக்களின் கண்கள் நுண்ணறிவின் மையங்கள்; அவற்றின் மடிகளிலிருந்து சுரப்பது அமிர்தமாகும்; அவற்றின் வால்கள் உயர்ந்த ஆன்மீக மண்டலங்களுக்கு செல்வதற்கான ஒரு படிக்கட்டாகும்; நாட்டு மாடுகளின் பால் மனிதர்களை அணுக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது; நாட்டு மாடுகளின் இளம் மஞ்சள் பாலில் தங்கம் உள்ளது; கோமாதாவிலிருந்து கிடைக்கும் பாலும் தயிரும் மூத்திரமும் சாணியும் நெய்யும் சமஅளவில் சேர்த்து தயாரிக்கும் பஞ்ச காவ்யம் ஒரு சித்த மருந்தாகும்; நில அதிர்வுகளுக்கும் பசுவதை செய்யப்படும்போது ஏற்படும் எதிர்மறை ஆற்றல் அலைகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத இணைப்பு உள்ளது” என்றெல்லாம் புத்தகங்களில் அறிவியல் அடிப்படையே இல்லாத கருத்துகளை எழுதி வைத்து உள்ளனர்.

ஒரு அரசு நிறுவனம் இதுபோன்ற புத்தகங்களை வெளியிட்டுள்ளது என்பது அதிர்ச்சியளிப்பதாகும். அத்தகைய ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்வுகளை எழுதுமாறு மாணவர்களை வற்புறுத்த வேண்டும் என உயர்கல்வி அமைப்புக்கு தலைமை வகிக்கும் யுஜிசி கேட்டுக் கொண்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்க நடவடிக்கை. யுஜிசியின் இந்த நடவடிக்கை அறிவியல் விழிப் புணர்வையும், கேள்வி அறிவையும் வளர்ப்பது குடிமக்களின் கடமை என்ற நமது அரசியலமைப்பின் 51ஏ (எச்) பிரிவுக்கு எதிரானது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It