சென்னையில் மத்திய அரசு அலுவலக வளாகமான சாஸ்திரி பவனில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை ஜூன் 5இல் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது.
இந்தியே இந்தியாவின் ஆட்சிமொழி என்பதை வலியுறுத்தும் 1976ஆம் ஆண்டு ஆட்சி மொழி விதிகள் இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பிலேயே 1 (ii)ஆவது பிரிவில் “They shall extend to the whole of India, except the state of Tamil Nadu” - என்று தெளிவாக குறிப்பிடப்பட் டிருந்தது. 1987, 2007, 2011இல் திருத்தங்கள் செய்யப் பட்டன. 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு தந்த விதிவிலக்கை நீக்கிவிட்டார்கள். இந்த உள்துறை அமைச்சக ஆவணத்தில் மாநில ஆட்சி மத்திய ஆட்சி களில் இந்தியைப் பயன்படுத்துதல் இரண்டு ஆட்சி களுக்கிடையிலான தகவல் தொடர்புகளில் இந்தியைப் பயன்படுத்துதல் குறித்து ஆட்சி மொழிச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள பிரிவுகள் விளக்கப்பட்டுள்ளன.
ஆட்சி மொழி சட்டத்தின்படி இந்தியாவின் மாநிலங்கள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவு மண்டலங்களில் பீகார், அரியானா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரகான்ட், ராஜஸ்தான், உ.பி. மற்றும் யூனியன் பிரதேசங்களான டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் (இவை இந்தி பேசும் மாநிலங்கள்). ‘பி’ பிரிவு மண்டலத்தில் குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் யூனியன் பிரதேசங்களான சண்டிகார், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹேவலி, ‘சி’ பிரிவு மண்டலத்தில் மேற்குறிப்பிட்ட மண்டலங் களில் இடம் பெறாத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இடம் பெற்றுள்ளன. ‘ஏ’ பிரிவு மண்டலங் களில் மாநில அரசின் தொடர்புகள் கட்டாயம் இந்தியில் இருத்தல் வேண்டும். ஆங்கிலத்திலும் இருக்குமானால், இந்தி மொழி பெயர்ப்போடும் இருக்க வேண்டும். ‘பி’ மண்டலத்தில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான தொடர்புகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும். ‘சி’ மண்டலங்களில் உள்ள மாநிலங்களில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் என்று ஆட்சி மொழி சட்டம் கூறுகிறது. மத்திய அரசோடு ஏ, பி பிரிவு மண்டலங்களின் தொடர்புகளில் இந்தி கட்டாயம். ஆங்கிலத்தை தேவைப்பட்டால் பயன்படுத்தலாம்.
இந்த நிலையில் நடுவண் பா.ஜ.க. ஆட்சி இந்தி மொழி பேசாத மாநிலங்களின் உரிமைகளில் குறுக்கிட்டு, இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரு மொழிக் கொள்கை அமுலில் உள்ள தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்கள், தமிழ்நாட்டில் செயல்படும் கேந்திர வித்யாலயா மற்றும் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகள், தமிழ் நாட்டில் இயங்கும் விமான நிலையங்களில் இந்தியைத் திணிக்க பா.ஜ.க. ஆட்சி முடிவு செய்துள்ளது. 2011ஆம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக் குழு சமர்ப்பித்த பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதாக பா.ஜ.க. ஆட்சி கூறுகிறது. இது குறித்து சென்னையில் கடந்த மே 6ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடிய தலைமைக் குழுவில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஆட்சி மொழிச் சட்டத்திலிருந்து தமிழ் நாட்டுக்கான விதிவிலக்கு நீக்கப்பட்டதோடு தமிழ் நாட்டில் இரு மொழிக் கொள்கை நடை முறையில் இருப்பதற்கு முரணாக இந்தி திணிப்பு நடக்கிறது. இது இந்தி பேசாத மாநிலங்களுக்கு நேரு தந்த உறுதிமொழிக்கு எதிரானது. இதை எதிர்க்கும் நோக்கில் தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலக வளாகமான சாஸ்திரி பவனில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் பெயர்ப் பலகை இந்தியிலேயே இருப்பதை தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தை ஜூன் 5ஆம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதுவரை இந்தி திணிப்பு குறித்து மக்களிடையே பரப்புரை இயக்கங்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கொளத்தூர், திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் முதல்கட்டமாக கொள்கைப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு மே 20, 21 தேதி களில் விழுப்புரம் மாவட்டத்திலும், மே 23, 24 தேதி களில் கொளத்தூரிலும், ஜூன் 11, 12 தேதிகளில் திருப்பூர் மாவட்டத்திலும் நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது. பெண்களுக்கான தனி பயிற்சிப் பட்டறை, பெங்களுரில் நடைபெறவிருக்கும் குழந்தைகள் பழகு-மகிழ்வு முகாம், உணவு உரிமைகளில் குறுக்கிடும் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக மாட்டுக்கறி விருந்து நடத்துதல் குறித்தும் கழகப் பரப்புரைக்கான அணுகுமுறைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப் பட்டது.
கழகத்தின் இணையதளம் சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இதன் பயன் மேலும் கூடுதலாக சென்றடைய கழக ஆதரவு இணையதள முகவர்களின் மண்டல சந்திப்புகளை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.