இந்தியா டுடேயில் வெளியான எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த சர்வேயில் திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக்கொள்வது பற்றி குஷ்பு சொன்ன கருத்து ஒழுக்கசீலர்களின் கொம்பை சீவிவிட்டது. அதன்பின் தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் மற்றுமொரு கருத்துச் சொல்லப்போய் வெடித்ததுதான் கற்பு, கலாச்சாரம், பண்பாடு குறித்த செருப்பு, துடைப்பம், கழுதை போராட்டங்கள். அத்தகையதொரு இக்கட்டான சூழலில் எந்தவொரு நடிகையும் நடிகரும் குஷ்பு சொன்ன கருத்துக்கு ஆதரவாக வாய்த்திறக்காத போது, தன் சக நடிகைக்கு இப்படி நேர்ந்துகொண்டிருக்கிறதே என்று பதறிப்போய் அடித்துப் பிடித்து மேடையேறிய சுகாசினி அவருக்கு ஆதரவாய் இவர் ஒரு கருத்துச் சொல்ல செருப்பு, துடைப்பங்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின.

‘கருத்து’ குறித்து இங்கு வெவ்வேறு கருத்துநிலைகள் நிலவிவந்தாலும் வால்டேர் தொடங்கி அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான ஜகந்நாத ஷெட்டி அளித்த தீர்ப்பு வரைக்கும் அவதானிக்க வேண்டிய விசயங்கள் நிரம்பியிருக்கின்றன. இந்நிலையில் “பெண்கள் மீதான கருத்தியல் வன்முறை” என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் - தென்சென்னை மாவட்டக் குழு சார்பில் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் தமிழகத்தின் முக்கிய படைப்பாளிகள் பங்கேற்று கருத்துரையாற்றினார்கள். இனி அதிலிருந்து...

Kushbooபத்திரிகையாளர் மயிலை பாலு: தாய்வழிச் சமுதாயத்தை அழித்து தந்தை வழிச் சமுதாயம் என்றைக்கு உருவாக்கப்பட்டதோ அன்று முதல் பெண்களை அடக்கி ஒடுக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள காலம் காலமாக பெண்களுக்கு எதிரான கருத்துக்கள், செயல்கள், நடவடிக்கைகள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. பெண்களுக்கு எதிரான கருத்தியல் வன்முறை என்பது தொல்காப்பிய இலக்கண காலத்திலேயே தொடங்கிவிட்டது. தமிழுக்கே முதல் இலக்கணம் தந்த தொல்காப்பியர் ஆரம்பிக்கும் போது, “அச்சமும் நாணும் மடமும் முந்துறுத்தல்/ நிச்சமும் பெண்பாற்குரிய என்ப”. இது அங்கேயே ஆரம்பித்துவிட்டது. அதன்பிறகு ஆண்களுக்கு எது இலக்கணம் என்று தெளிவாக தொல்காப்பியர் சொல்லிவிட்டார். “பெருமையும் உறனும் ஆடூஉமேன” - பெருமை, திடகாத்திரம் இதுதான் ஆணுக்கு இலக்கணம். பெண்களுக்கு என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லும்போது “ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோனாயினும் கடிவரையின்றே” என்கிறார். அதாவது ஆண் ஒருபடி உயர்வாய் இருக்கலாம். ஆனால் பெண் இருக்கக்கூடாது என்பதுதான். அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் இருந்துதான் வள்ளுவரும் கூறுகிறார். “பெண்ணிற் பிறந்தக்க யாவுள கற்பென்னும்/ திண்மை உண்டாகப் பெறின்” என்கிறார். இதில் ஊறித்திளைத்தவர்கள்தான் தமிழ் கற்பு போய்விட்டது, கலாச்சாரம் போய்விட்டது என்கிறார்கள்.

கவிஞர் சுகிர்தராணி: காரக்கொழம்பு, கப்பக்கெழங்கு, அச்சுமுருக்கு, பூக்கடை, ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, அல்வாக்கடை, குட்டி, பிகரு, பார்ட்டி, விபச்சாரி, விதவை, வேசி என்று பெண்களை சமூகம் நுகர்வுப் பொருளாகவும் காட்சிப் பொருளாகவும் ஆணாதிக்கச் சொல்லாடல்களை முகத்திலே வரைந்து வைத்து பிம்பங்களாகவும் பார்த்துக் கொண்டிருக்கின்ற, காட்டிக்கொண்டிருக்கின்ற இந்த சமூகத்தினுடைய இன்றைய பேசுபொருள், விவாதப் பொருள், போராட்டப் பொருள் எது என்று கேட்டால் கற்பு, கலாச்சாரம், ஒழுக்கம், பண்பாடு. இன்றைய அரசியல் சூழ்நிலையில், சமூக சூழ்நிலையில் வெள்ளத்தால் ஏறி உட்காருவதற்கு கூரைகூட இல்லாத ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்காகப் போராட்டத்தை முன்னெடுக்காமல் அவர்களுடைய வாழ்வியல் ஜீவாதாரப் பிரச்சனைகளைப் பற்றிகூட கலைப்படாமல் இவர்கள் கற்பைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சென்னை கலைக்குழு பிரளயன்: நவீன பார்பனீயத்தை இந்த மண்ணிலே கொண்டுவருவதற்காக கருப்புப் பூணூல் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். மாற்று அரட்டை, மாற்று வாழ்க்கையை சமூக சிந்தனையை இந்த மண்ணிலே சொன்ன சமணர்கள் 60 ஆயிரம் பேரை கழுவில் ஏற்றினீர்களே, அந்த கலாச்சாரத்தை பண்பாட்டை இங்கு நிலை நிறுத்தப் பார்க்கிறீர்களா? அதை அனுமதிக்க முடியாது. அனுமதிக்க மாட்டாம்.

கவிஞர் அ.வெண்ணிலா: பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பிற்கும் ஒரேயொரு யோசனை மட்டும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கின்ற போராட்டத்தை குஷ்பு, சுகாசினிக்கு எதிராகக்கூட நடத்தட்டும். ஆனால் அதற்கு முன்னோடியாக முதன் முதலில் பெண்களைப் பற்றி குறிப்பாக தமிழகப் பெண்களின் கற்பைப் பற்றி கருத்துத் தெரிவித்த சங்கராச்சாரியாருக்கு எதிராகத்தான் முதன்முதலில் அவர்கள் தங்களுடைய போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். “விதவையானவர்கள் எல்லாம் தரிசு நிலங்கள், வேலைக்குச் செல்பவர்களில் 80 சதவீதம் பேர் ஒழுக்கங்கெட்டவர்கள்” என்று தமிழகப் பெண்களைப் பற்றி முத்தாய்ப்பாக கருத்து தெரிவித்த சங்கராச்சாரியாருக்கு எதிராக எந்த தெருமுனையில் இதுவரை இவர்கள் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். பாலியல் கல்வி என்பது வெளிச்சமாக்கப்படும்போது இவர்கள் கட்டிக் காத்துக் கொண்டிருக்கின்ற பொய்மைத்தனமான கற்புக் கலாச்சாரம் எல்லாம் காப்பாற்றப்படுமா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன்: உலகத்தினுடைய வேலைப் பிரிவினையின் போது தன்னுடைய உரிமைகளை முற்றிலும் இழந்த பெண்தான் உலகத்தினுடைய முதல் அடிமை. எனவே பெண் விடுதலையையோ அல்லது தலித் விடுதலையையோ நிச்சயமாக ஆண் சமூகமோ அல்லது ஆதிக்க சாதியினரோ ஒருபோதும் விரும்பமாட்டார்கள். தலித் என்ற சொல் பெண்ணையும் உள்ளடக்கியதுதான். அதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இருக்க முடியாது. 1920 களில் முதன்முதலில் தேவதாசி தடைச்சட்டத்தை கொண்டுவரும்போது, அதற்கு யார் எதிராக நின்றார்கள்? சத்தியமூர்த்தி ஐயரைப் போன்றவர்கள்தான் எதிராக நின்றார்கள். இதைவிட கொடுமை, அம்பேத்கர் சட்டவரைவினை ஏற்படுத்துகிறபோது பெண்களுக்கு தத்தெடுக்கிற உரிமை, மணவிலக்குப் பெறுகிற உரிமை, எந்தவொரு ஆணை அவள் தேர்ந்தெடுக்கிறாளோ அந்த ஆணை திருமணம் செய்துகொள்கிற உரிமை, இவையெல்லாம் வேண்டுமென்றுசொல்லி ஏற்கெனவே ராவ் போன்றவர்கள் ஏற்படுத்திய சட்ட முன்வரைவுகளைபடித்து அதன் பிறகு அவர் ஒரு சட்ட முன்வரைவினை ஏற்படுத்துகிறார். ஆனால் அந்தச் சட்ட முன்வரைவு இறுதிவரை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இறுதியில் அம்பேத்கரின் ராஜினாமாவோடு முடிவடைகிறது. இன்றைக்கு இவ்வளவு பெரிய போராட்டங்கள் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. ஏன் 33 சதவீதத்திற்காக இந்தப் போராட்டங்கள் நடத்தப்படவில்லை. பெண்கள் அரசியல் ரீதியான அதிகாரத்தை பெற்றுவிடக்கூடாது என்பதில் பெரும்பான்மையான ஆண்கள் ஒரேவிதமாகத்தான் சிந்திக்கிறார்கள்.

பத்திரிகையாளர் விடுதலை ராசேந்திரன்: சமூகத்திலே ஆரோக்கியமாக நடத்தவேண்டிய பிரச்சனையை சூடான அரசியல் பிரச்சனையாக்கி அதை மலிவுவிலை விளம்பரமாக்குகின்ற போக்கு சமூகத்திற்கு ஒரு வகையிலும் பயன்படாது என்பதிலே நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வேதத்தைப் பற்றிய ஆராய்ச்சியையே மேற்கொள்ளக்கூடாது. வேதத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். வேதத்தை மீறுகிறவன்தான் நாத்திகன் என்று சொல்லி வேதத்தை எதிர்த்தவர்களெல்லாம் படுகொலை செய்யப்பட்ட வரலாறு இந்த மண்ணிலே நடந்திருக்கிறது. நாத்திகன் என்று சொன்னால் அவன் கடவுளை மறுப்பவன் அல்ல வேதத்தை மறுப்பவன் என்று சொல்லப்பட்ட அந்த பண்பாடுதான் பார்ப்பண பண்பாடு. இன்றைக்கும் கற்பைப்பற்றி விவாதகளமே இருக்கக்கூடாது. அது பெண்களுக்கு கட்டாயம் இருந்தாக வேண்டும் என்று சொல்வது தமிழக கலாச்சாரம் என்ற பெயரிலே திணிக்கப்படுகின்றன பார்ப்பண பண்பாடு.

பேராசிரியர் அ.மார்க்ஸ்: கலைஞர் சொல்லியிருக்கிறார் “பெரியார் கற்புப் பற்றி பேசியதை புரிந்து கொள்வதற்கு கற்பு வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். இந்தப் பிரச்சனையையொட்டி மீண்டும் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் உருவாகும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தின் தேவை இன்றைக்கு இல்லை என்று கருதுகிறவன் அல்லன் நான். ஆனால் அந்த இயக்கத்தினுடைய தேவையை வலியுறுத்துவதற்கான இதைவிட ஆபத்தான சந்தர்ப்பங்கள் வந்தபோதெல்லாம் வாய்மூடி மௌனமாக இருந்த கலைஞர், பாபர்மசூதி இடிக்கப்பட்டபோதெல்லாம் அமைதியாக இருந்த கலைஞர், இன்று குஷ்பு சுகாசினி பிரச்சனையை முன்வைத்து இங்கு பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் உருவாகிவிடும் என்று சொல்வது என்பது அவருடைய குறுகிய அரசியல் நோக்கமும் சன்டிவி குழுமம் நடத்தக்கூடிய அரசியலுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய ஒரு குடும்ப அரசியலும் இதற்குள் இணைந்து நிற்கிறது என்பதை நாம் இங்கே மறந்துவிட முடியாது. இந்தச் சூழலில் இடதுசாரிகள் இந்த கருத்துச் சுதந்திரத்திற்காக நிற்பது என்பது பாராட்டுக்குரிய விசயம். இந்தப் பிரச்சனை மட்டுமல்ல அண்ணா யூனிவர்சிட்டியின் டிரஸ் கோர்டுக்கு எதிராக எஸ்எப்ஐ நடத்திய போராட்டமும் இத்துடன் இணைத்துப்பார்க்க வேண்டிய விசயமாக இருக்குமென்று கருதுகிறேன்.

இந்தப் பிரச்சனையை ஒட்டி முதன்முதலில் நாங்கள் குஷ்பு சொன்ன கருத்தும் சரி, கருத்து சொல்வதற்கான உரிமையும் சரி என்று துண்டறிக்கை வெளியிட்டோம். அப்படி வெளியிட்டதற்கான கூலியையும் நாங்கள் சுமந்தோம். எனவே இதுபோன்ற ஒரு அச்சுறுத்தக்கூடிய சூழல் இங்கு உருவாகியிருக்கிறது. நாங்கள் நினைத்தால் குஷ்பு சுகாசினி மட்டுமல்ல, குஷ்பு, சுகாசினியை ஆதரிப்பவர்கள்கூட தமிழ்நாட்டில் நடக்கமுடியாது என்று சொல்வதும், செருப்பு, துடைப்பத்தை எடுத்துக்கொண்டு போராட்டம் நடத்தவேண்டுமா? என்ற கேள்விக்கு இங்கிருப்பதனால் செருப்புத் துடைப்பக்கட்டை இதே ஈழமாக இருந்திருந்தால் துப்பாக்கியாக இருந்திருக்கும் என்று பதில் சொல்வதும் எவ்வளவு மோசமான வன்முறை சூழலை நோக்கி இட்டுச்செல்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்: திருமாவளன் மீது இருந்த படிமங்களை உடைப்பதாகவே அவரது நடவடிக்கைகள் இருந்துவருகின்றன. பெண்கள் கற்பு குறித்து பேசும் அவர் பத்திரிகைகளின் கற்பு குறித்து பேசியதுண்டா? குஷ்பு துவக்கி வைத்த விவாதம் பாலியல் உறவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட உதவியுள்ளது. அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவராக இருக்கும்போது கருத்து சுதந்திரத்தை மதிக்காமல் பெண்களை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. இதன்மூலம் அவர் மீது இருந்த படிமங்கள் அனைத்தும் தகர்ந்து போய்விடுகின்றன. எதற்காக இத்தகைய போராட்டங்களை எல்லாம் நடத்துகிறீர்கள் என்று கேட்டால் அதெல்லாம் தன்னெழுச்சியாக நடக்கிறது என்று பொறுப்பில்லாமல் பதில் சொல்வதும், கூட்டங்களில் பத்திரிகையாளர் நீலகண்டனை தாக்குவது போன்ற செயல்களை கண்டிக்கிறோம். இந்த நிலையில் திருமாவளவன் கருத்துக்கு ஆபத்து ஏற்பட்டால் கூட நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம். ஒடுக்கப்பட்ட பெண்கள் டீக்கடைக்கு கூட செல்ல அஞ்சுகின்ற சூழல் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்கள் வெளியே வந்துகொண்டிருக்கின்ற நிலையில் திருமாவளவனே அவரது தொண்டர்களை திசைதிருப்பி அழைத்துச் செல்வது என்பது முற்போக்கான நடவடிக்கைக்கு உகந்ததல்ல.

பேராசிரியர் சந்திரா: குஷ்பு மீது பெரம்பலூரில் தான் அதிகம் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. பெரம்பலூரில் தலித் பெண்கள் சைக்கிள் ஓட்ட முடியாத நிலை உள்ளது. பெண்ணடிமைத்தனமான இந்த நடவடிக்கையை எதிர்த்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியுள்ளது. கலாச்சார காவலன் போல் பேசும் பழ.கருப்பையா பெண்கள் மேயக்கூடாது என்று அசிங்கமாக பேசுகிறார்.

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்: “ஆணைவிட பெண்ணுக்கு எப்போதுமே ஒரு பிரச்சனை கூடுதலாகவே இருக்கிறது. ஆணுக்கு ஒரு பிரச்சனை என்றால் பெண்ணுக்கு இரண்டு பிரச்சனை; ஆணுக்கு இரண்டு பிரச்சனை என்றால் பெண்ணுக்கு மூன்று பிரச்சனை; ஆணுக்கு மூன்று பிரச்சனை என்றால் பெண்ணுக்கு நான்கு பிரச்சனை. பெண்ணிற்கு இருக்கும் அந்த ஒரு கூடுதலான பிரச்சனை ஆண்தான்.” என்ற மாவோ கூற்று நினைவுக்கு வருகிறது. அரசியல் கட்சிகளின் இந்த போராட்டம் தன்னிலையில் முடிவெடுக்கிறது. இதனால் கருத்து சொல்லும் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது.

பேராசிரியர் சரஸ்வதி: கற்பு உடல் சார்ந்ததா, மனம் சார்ந்ததா? பெண்ணுக்கு ஆதரவான போராட்டத்தில் குஷ்பு கலந்துகொண்டதால் அதை பொறுத்துக் கொள்ளாத ஆணாதிக்கத்தினர் பெண்களாலேயே எதிர்க்கும் பெண்ணாக குஷ்புவை மாற்றிவிட்டனர். கலாச்சாரத்தைவிட மனித உரிமை முக்கியமானது. கலாச்சாரம் மாறும் மனித உரிமை மாறாதது. பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கக் கருவிதான் கற்பு. பெண் உரிமையை சமையல் அறைக்கும் படுக்கையறைக்கும் தள்ளும் நடவடிக்கை இது.

Sudhasiniகவிஞர் சுகுணாதிவாகர்: பத்தினி என்ற வார்த்தை எப்படி அபத்தமோ அதேபோல விபச்சாரி என்பதும் அபத்தம்தான். கலாச்சாரம் காக்கப்பட வேண்டுமானால் அதை எப்படி காப்பது என்பதுதான் முக்கியம்.

எழுத்தாளர் சு.வெங்கடேசன்: சங்கராச்சாரி என்ற முழுநீளப்படத்தின் இரண்டாவது பாகம் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தில் பம்மிக்கொண்டிருந்தவர்களின் சுயரூபம் இப்போது நன்றாகத் தெரிகிறது. துரதிர்ஷ்டவசமாக அது விஜயேந்திரர் போலவும் தெரிகிறது. சங்கராச்சாரிக்கு எதிராக அவ்வளவு பெரிய இயக்கம் நடத்திக்கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் மிகமுக்கியமான அரசியல் அமைப்பு வாயையே திறக்கவில்லை. அதுமட்டுமல்ல சங்கரமடத்தற்குப் போய் சங்கராச்சாரியை சந்தித்துவிட்டு அவர் வந்தார். ஆனால் அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்று தமிழகத்தின் சில அறிவுஜீவிகள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஏனென்று கேட்டபோது, அவர்தான் இந்துத்துவாவுக்கு எதிராக தமிழிலே பெயரை சூட்டுகிறார் என்று சொன்னார்கள். பெயரை தமிழிலே சூட்டிவிட்டு தலையில் சகதியை சுமக்கிற கூட்டத்தைப்போல இன்றைக்கு தமிழ்நாட்டில் அவர்கள் அம்மணமாய் இருக்கிறார்கள்.

மாலுமி சரியில்லை என்பதற்காக மாலுமியை மாற்ற வேண்டுமே தவிர கப்பலை வீழ்த்தக்கூடாது என்று ஒரு குரல் தமிழ்நாட்டில் ஒலித்தது. ஆனால் அந்தக்கப்பல் மக்கள் கப்பலல்ல. மக்களுக்கு எதிரான யுத்தக்கப்பல், அதை தகர்த்து நொறுக்குவது என்பது தமிழ்ப்பண்பாட்டின் ஒரு முக்கியமான பகுதி என்று சொன்னோம். ஆனால் அன்றைக்கு கப்பலுக்காக யார் இறங்கினார்களோ, இறக்கப்பட்டார்களோ அவர்கள்தான் இன்றைக்கும் பேசுகிறார்கள், துடைப்பத்தைவிட செருப்பைவிட சுகாசினி பேசியது மிக மோசம் என்று. இன்றைய உலகமயமாக்க சூழலில் சீரழிவு கலாச்சாரத்தை முன்வைத்த இந்தியாடுடேவிலிருந்து விசயம் துவக்கப்பட வேண்டும். சிலர் அந்தப் பகுதியை வேண்டுமென்றே மறைக்கிறார்கள். அல்லது மறுக்கிறார்கள். திருமணத்திற்கு முன் 54 சதவீதப் பெண்கள் உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள் என்ற கணக்கெடுப்பை இந்தியாடுடே வைத்தது. அது மேல்தட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு. ஆனால் மொத்தத் தமிழ் சூழலுக்கும் அது பொருந்துவதைப்போல அவர்கள் ப்ரொஜக்ட் பண்ணினார்கள், முன்வைத்தார்கள். உண்மையில் கண்டிக்கப்பட வேண்டியது அங்கிருந்துதான். அதில் வசதியாக சிலர் குஷ்புவை மட்டும் குறித்துக் கொள்கிறார்கள்.

கருத்தரங்கிற்கு தமுஎச தென் சென்னை மாவட்டத் தலைவர் கே.பி.பாலச்சந்தர் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் கவின்மலர் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் வ.ராமு நன்றி கூறினார்.

“பலராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் கருத்துக்களைக் கூறுவது மட்டும் கருத்து கூறும் சுதந்திரமாக ஆகிவிடாது. அரசையோ மக்களில் ஒரு பகுதியினரையோ பாதிக்கக்கூடிய அல்லது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடியவைகளும் கருத்து கூறும் உரிமைக்குள்ளானவை. பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை, பரந்த மனப்பான்மை ஆகியவற்றின் தேவைகள் அப்படிப்பட்டவை. அவை இல்லையென்றால் ஜனநாயக சமுதாயம் இருக்க முடியாது” - உச்சநீதிமன்ற நீதிபதி ஜகந்நாத ஷெட்டி அளித்த தீர்ப்பு.

கற்பு குறித்து இங்கு நிலவி வரும் கருத்துக்கள் அனைத்தும் தமிழ் மக்களின் சுயானுபவத்திலிருந்து வெளிவருபவையா? அல்லது அவர்களின் சுயத்தையும் அறிவையும் அரசியல் சந்தைப்பொருளாக்கிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து வருபவையா? என்று கேள்வியை எப்படி கேட்டாலும் பதில் என்பது கற்பு, கலாச்சாரம் பேசி மக்களை திசைத்திருப்புவதற்கும் அவர்களின் மனோநிலையை மாற்றி ஓட்டு வங்கியாக்குவதற்குமே இந்த கற்பு, கலாச்சார, பாண்பட்டுக் காவலர்கள் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

- இலாகுபாரதி

Pin It