கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

1993ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புகள் வழக்கில் ஒரு வழியாக தீர்ப்புகள் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தக் கொலை பாதகர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பலர் கோரிக்கை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். நியாயம்தான் ஆனால் விளைவுகளுக்கு மட்டும் தண்டனை வழங்கி விட்டு விதைகளை அப்படியே விட்டு விட்டால் என்ன ஆகும் என்பது பற்றியும் யோசிக்க வேண்டாமா?

இங்கே பேசிக்கொண்டிருப்பது பிரதான குற்றவாளிகளான தாவுத் இப்ராஹிம் மற்றும் டைகர் மேமனைப் பற்றி அல்ல. அவர்கள் இன்னும் பிடிபடவில்லை. அவர்களுக்கு தண்டனை வழங்காமல் இந்த வழக்கில் என்ன நீதி கிடைத்துவிடப் போகிறது என்று சிலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது சரிதான்.

அந்த ஆண்டு மார்ச் 12ம் தேதி குண்டுகள் வெடித்தன. ஆனால் அதற்கு முன்பு 1992 டிசம்பர் 7லிருந்து 1993 ஜனவரி 21 வரை மும்பை மாநகரம் நரவேட்டையாடும் மிருகங்கள் நிறைந்த காடாக இருந்ததே அதைச் சொல்கிறோம். அப்போது நடந்த கலவரங்களில் 1000 பேர் கொல்லப்பட்டதாகவும், பல்லாயிரம் பேர் காயமடைந்ததாகவும், லட்சம் பேர் இருப்பிடங்களை விட்டு பிய்த்து எறியப்பட்டதாகவும் அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சுயேச்சையான மதிப்பீடுகள் எல்லாமே இன்னும் அதிகம் என்கின்றன.

அந்த பயங்கரத்திற்கும் ஒரு விதை உண்டு. அது பாபர் மசூதி இடிப்பு. மசூதியை இடித்து முஸ்லிம்களை ஆத்திர மூட்டியதும், அதற்கு பலியாகாத முஸ்லிம்களை கேலி செய்து, தாக்குதல் நடத்தி ஆத்திர மூட்டியதும் நாமறிந்த வரலாறு. எந்த பயங்கரமும் குண்டு வெடிப்பு பயங்கரத்தை நியாயப்படுத்தாதது. எனினும், கலவரங்கள் என்ற பெயரால் முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்டது தான் குற்றவாளிகளைக் குண்டு வைக்கத் தூண்டியது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அதையும் இதையும் ஏன் ஒப்பிடுகிறீர்கள் என இன்னும் கேட்பவர்கள் கலவரங்களை விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையைப் படிக்க வேண்டும்.

“கலவரங்களுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் ஒரு பொதுவான தொடர்பு இருப்பது தெரிகிறது. கலவரங்கள் குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் போல் தெரிகிறது. டிசம்பர் 92லிருந்து ஜனவரி 93 வரை அயோத்தியிலும் மும்பையிலும் நடந்த மொத்த சம்பவங்களுக்குமான ஒட்டு மொத்த எதிர்வினையே தொடர் குண்டு வெடிப்புகள். அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் எதிராக பெரும் பகுதி முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த கோபம் பாகிஸ்தான் உதவி பெறும் தேச விரோத சக்திகளால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. பழி வாங்க வேண்டும் என்று அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டனர். தாவுத் இப்ராஹிம் தலைமையில் சதி தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டது”.

மிகவிரிவான அந்த அறிக்கை மேலும் பல விவரங்களைக் கூறுகிறது. அன்றைய காங்கிரஸ் அரசாங்கமும் காவல்துறை உள்ளிட்ட அரசு எந்திரமும் எப்படி பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு விரோதமாக பாரபட்சமாக செயல்பட்டன என்பது பற்றியும். கலவரங்களைத் தூண்டி விட்டதிலும், முன்னின்று நடத்தியதிலும் பால்தாக்கரேவிற்கும் அவரது சிவசேனாவிற்கும் இருந்த பிரதான பங்கைப் பற்றியும் ஆதாரங்களோடு எடுத்துரைக்கிறது.

அந்த அறிக்கையின் மீது இன்று வரை எந்த உருப்படியான நடவடிக்கையும் இல்லை. மகாராஷ்டிரத்தில் சிவசேனை-பாஜக கூட்டணி அதிகாரத்தில் இருந்தபோது அறிக்கை சமர்பிக்கப்பட்டது. மதச்சார்பற்ற சக்திகளின் நிர்பந்தம் காரணமாக அதை ஏற்றுக் கொண்ட அந்த அரசாங்கம் அதைக் கீழே போட்டு அதன் மீது உட்கார்ந்து கொண்டது. அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்ள மதவெறியர்கள் ஒன்றும் சாதாரண கொலைகாரர்கள் இல்லையே?

ஆனால், மதப்படுகொலைகள் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் - தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி என்ன செய்தது? சிறப்பு நடவடிக்கை குழு, (எஸ்.டி.எப்.) அமைத்தது. அதன் பணி என்ன? சட்ட விரோதமாக மூடப்பட்ட கலவர வழக்குகளை பரிசீலித்து ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் பரிந்துரைத்தபடி புதிதாக வழக்குகளைத் தொடுப்பது.

ஆம். குஜராத் கலவர வழக்குகளை “ராமபானம்” ஊற்றி மூடினார்களே அது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே மும்பையிலும் இதர கலவரங்களின் போதும் செய்ததுதான். மும்பை கலவரங்கள் சம்பந்தமாக அன்றே மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஒன்று அவசர அவசரமாக மூடப்பட்டு விட்டன அல்லது இன்று வரை நீதிமன்றத்திற்கு வரவேயில்லை. ஆனால் சம்பவம் நடந்த எட்டே மாதங்களில் குண்டு வெடிப்புகள் விஷயத்தில் பத்தாயிரம் பக்கங்களுக்கு குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது!

கலவர விஷயத்திலோ இன்று வரை அதாவது 13 வருடங்களுக்கு பின்னும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது! அப்படியே நீதிமன்றம் சென்ற ஓரிரு வழக்குகளும் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றன. மதச் சார்பற்ற கட்சிகளின் ஆட்சி நடந்து கொண்டிருந்தாலும் இதுதான் நிலைமை!

சிறப்பு நடவடிக்கை குழு என்ன செய்தது?

ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் உண்மையில் நடந்தது, ஆனால் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படவில்லை என்று குறிப்பிட்ட 1300 முதல் வகை வழக்குகளில் வெறும் நூறை மட்டும் எடுத்துக் கொண்டது. அதில் 15ஐ மட்டும் மறு விசாரணை செய்தது. புதிதாக எட்டு வழக்குகள் மட்டும் பதிவு செய்துள்ளது. அவ்வளவுதான். எஸ்டிஎப் அலுவலகம் இப்போது பேய் பங்களா போல் இருக்கிறது. அதாவது அதற்கும் கிட்டத்தட்ட சங்கு ஊதிவிட்டார்கள். இனி யாராவது அது பற்றி குரல் கொடுத்தால் தான் ஏதாவது நடக்கும்.

அரசு எந்திரமும், அரசாங்கங்களும் எப்படி இந்துத்துவத்தின் பிடியில் மயங்கிக் கிடக்கின்றன என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் கொடுக்க முடியும்.

கலவரங்களின் போது இணை ஆனையராக இருந்த ஆர்.டி.தியாகி அப்போது “தேவையின்றியும் அளவுக்கு அதிகமாகவும் துப்பாக்கி சூடு” நடத்தியதாக கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர். சுலைமான் பேக்கரி சம்பத்தில் அதனால் ஒன்பது முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. பின்னாளில் அவர் மாநகர ஆனையராக ஆனது மட்டுமின்றி 2003ல் அவர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கவும் பட்டார்! மதச்சார்பற்ற அரசாங்கமோ மேல் முறையீடு செய்யவில்லை.

வாடலா ஹாரி மசூதி சம்பவத்தில் “மனிதாபிமானற்ற வகையிலும் காட்டுமிராண்டித் தனமாகவும் நடந்து கொண்டதாகவும், அனாவசியமாகவும் துப்பாக்கி சூடு” நடத்தியதாக கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட நிகில் காப்சே என்கிற துணை ஆய்வாளர் துறை விசாரணையில் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். அந்த சம்பவத்தில் ஏழு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். எஸ்டிஎப் அதை மறு விசாரணை செய்யவில்லை. ஸ்ரீகிருஷ்ணா கமிஷனல் குற்றவாளிகள் என்று பட்டியலிடப்பட்ட 32 காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.

அதாவது பரவாயில்லை என்று தோன்றுகிறது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சிலர் மீதே பொய் வழக்குகள் போடப்பட்டு அவர்கள் அதிலிருந்து வெளியேற பாடாய்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொலைகாரர்களோ சுதந்திரமாய் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

எஸ்டிஎப்பின் தலைவர் கே.பி.ரகுவன்சி இப்போது பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவராக ஆகிவிட்டார். அதாவது, எல்லா பயங்கரவாதிகளும் முஸ்லிம்கள் என்ற காவிப் பார்வை நிலவும் சமயத்தில் இதற்கு ஒரு அர்த்தம் உண்டு. கலவரங்களில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு நியாயம் வழங்க வேண்டிய பொறுப்பிலிருந்து சிறுபான்மையினருக்கு எதிராகச் சாத்தியம் உள்ள பொறுப்பிற்கு மாற்றப்பட்டுவிட்டார்.

இதை ஒன்றும் நாம் சும்மா சொல்லவில்லை. கடந்த ஜுலையில் மும்பையில் குண்டுகள் வெடித்த போது காயம்பட்ட ரயில் பயணிகளைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகித்த சேரி வாழ் முஸ்லிம்களையே விசாரணை என்ற பெயரில் இம்சித்தவர் அவர்.

அன்றைய கலவர வழக்குகள் என்றில்லை. சமீபத்திய விஷயங்களிலும் மகாராஷ்டிர காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் போக்கு சிறுபான்மையினருக்கு எதிரானதாகத் தான் இருக்கிறது.

மாலேகான் குண்டு வெடிப்புகளில் பஜ்ரங்தள் என்ற இந்துத்துவ குண்டர் படைக்கு சம்பந்தம் இருக்கிறதோ என்று சந்தேகம் இருக்கிறது. இந்தச் சம்பவம் போல 2003 மற்றும் 2004ல் மகாராஷ்டிரா மாநிலம் பார்பானி மற்றும் புர்னா, ஜால்னா ஆகிய ஊர்களில் மசூதிகள் குண்டு வீசி தாக்கப்பட்டுள்ளன. அதைச் செய்தது அந்த வானரப்படை தான் என்பது மாநில காவல் துறைக்குத் தெரியும். அது மட்டுமல்ல. இவ்வருடம் ஏப்ரல் மாதம் நாந்தேட் என்ற ஊரில் குண்டு செய்து கொண்டிருந்தபோது அது எதிர்பாராமல் வெடித்து அதைச் செய்து கொண்டிருந்த இரண்டு பஜ்ரங்தள் குண்டர்கள் பலியாயினர்.

அங்கு போலி தாடிகளும் குல்லாக்களும் கண்டு பிடிக்கப்பட்டன. மாலேகானில் குண்டு வெடிப்பிற்குப் பலியானவர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் போது அதில் ஒரு உடலின் முகத்தில் இருந்த தாடி போலி தாடி என்பது தெரிய வந்தது. அதாவது முஸ்லிம் வழிபாட்டு தலத்துக்கு யாரோ முஸ்லிம் அல்லாதார் வேடம் போட்டு வந்துள்ளனர். இரண்டு சைக்கிள்கள் இந்து வாசகங்களோடு கண்டு பிடிக்கப்பட்டன. இவ்வளவு ஆதாரங்கள் இருந்த போதும் விசாரணை அந்த திசையில் நடக்க மாட்டேனென்கிறது. ஏன்?

மொத்தத்தில் இந்துத்துவம் ஆட்சியில் இருந்தாலும் சரி. இல்லா விட்டாலும் சரி உண்மையான அதிகாரம் அதனிடத்தில்தான் இருக்கிறது. இதுதான் மகாராஷ்டிர மாநில நிலைமை. (பெரும்பாலான மாநிலங்களில் அதுதான் நிலைமை என யாரோ சொல்வது காதில் விழுகிறது). அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அதை வைத்துக் கொண்டு மதவெறி அரசியல் நடத்துவார்கள். அதனால்தான் எடுக்கவில்லை என்று காங்.-என்.சி.பி. காரணம் சொல்வதாகக் கூறப்படுகிறது. உண்மையில் மத வெறியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட போதெல்லாம் அவர்கள் மக்கள் ஆதரவை இழந்திருக்கிறார்கள் என்பதே வரலாறு.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் நான்கு மாநில பா.ஜ.க அரசாங்கங்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டன. இது அக்கட்சிக்கு சாதகமாகும் என்று அன்று பயந்தவர்கள் உண்டு. ஆனால் பின்னர் நடந்த தேர்தலில் மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது. இன்னொன்றில் பெரும்பான்மையை இழந்தது. தனிப்பெரும் கட்சி என்ற முறையில் மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

மாறாக, மதவெறியர்கள் தாஜா செய்யப்பட்ட போதெல்லாம் அது அவர்களுக்குச் சாதகமாகவே ஆனது. 1988-89களில் காங்கிரஸ் அரசாங்கம் செங்கல் பூஜை நடத்த அனுமதி வழங்கியது. உள்ளே கள்ளத்தனமாக வைக்கப்பட்டிருந்தராமல் சிலையை வழிபட அனுமதி வழங்கியது. ஜனதா தளம் 1989 தேர்தலில் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்துக் கொண்டது போன்றவை சில உதாரணங்கள். இவையெல்லாம் மதவெறியர்கள் வளரவே துணை புரிந்தன என்பதே அனுபவம்.

1993 குண்டு வெடிப்புகளின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் அன்று கலவரங்களை நடத்திய குற்றவாகிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும். கலவரங்களும் குண்டுவெடிப்புகளும் என்றென்றும் நிகழாமல் தடுக்க வேண்டுமெனில் இரண்டையுமே செய்தாக வேண்டும். விதையை அப்படியே விட்டுவிட்டு மரத்தை மட்டும் வெட்டினால் மரம் மீண்டும் மீண்டும் வளரும்.