மதுரையில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு, செஞ்சட்டைப் பேரணியை எழுச்சியுடன் நடத்தி முடித்திருக்கிறது. கருப்புச் சட்டை, நீலச் சட்டைப் பேரணியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மூன்றாவது பேரணி இது. மார்க்ஸ்-பெரியார்-அம்பேத்கர் கருத்தியல்கள் காலத்தின் தேவையாகியுள்ள சூழலில் நாட்டை பார்ப்பனப் பாசிசத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான முப்பெரும் தலைவர்களின் பொதுவான கூறுகளை அடையாளம் காண வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. பார்ப்பனப் பாசிசம், மாநில அடையாளங்களை அழித்து ஒற்றை இந்தியாவாக்கி பிறகு அதை பாரத தேசமாக்கி, பாரத தேசத்தை இந்து இராஷ்டிரமாக்கிட வேண்டும் என்பதையே தனது இயக்கமாக நிர்ணயித்திருக்கிறது.

kolathoor mani su venkatesan kovai ramakrishnanவேதகால பார்ப்பனியம் மனுசாஸ்திரத்தையும் வேதங்களையும் சமூகத்தின் அடையாளங்களாக்கி மக்களை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து மிக எளிதாக அதில் வெற்றியும் பெற்றிருந்தது. மாநில எழுச்சிகள் சமூகநீதிக் கொள்கைகள் மொழி பண்பாட்டு அடையாளங்கள் படிப்படியாக மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கியதன் வழியாக பார்ப்பனியம் கேள்விக்குள்ளானது. அரசியல் சட்டம் மக்கள் சமத்துவத்தையும் மதச்சார்பின்மையையும் உறுதி செய்தாலும் அதில் உடைப்புகளை உருவாக்கிட பார்ப்பனியம் தொடர்ந்து முயன்று வருகிறது. இப்போது ஆர்.எஸ்.எஸ். கொள்கை அதிகாரமே நேரடியாக கோலோச்சும் வாய்ப்பு கிடைத்து விட்டதால் இதைத் தவற விடக் கூடாது என்று உறுதியுடன் செயல்படுகிறார்கள். வரலாற்றில் ஆபத்தான காலகட்டத்தில் நிற்கிறோம். பார்ப்பன எதிர்ப்புடன் கூடிய சமூகநீதி உணர்வு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு மட்டுமே இருக்கிறது.

கேரளா, மேற்கு வங்க மாநிலங்கள், பா.ஜ.க.வின் பாசிச கொள்கைகளை எதிர்த்து நிற்கின்றன. தென் மாநிலங்களில் ஒன்றிய ஆட்சிக்கு எதிரான பொதுவான விழிப்புணர்வு மேலோங்கி வருகிறது. கருநாடகம் மீண்டும் மதவெறிப் பிடிக்குள்ளேயே போய்விட்டது. இந்த நிலையில் வடமாநிலங்களில் மதவாத எதிர்ப்பு சமூகநீதி கருத்துகள் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கினாலும் அது மக்களின் பொதுக் கருத்தாக உருவாக முடியாமல் கண்மூடித்தனமான மதவெறியும் ஜாதி வெறியும் தடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கே வழிகாட்ட வேண்டிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. கேரளாவில் தமிழ்நாட்டைப் போல பாசிச எதிர்ப்பை உள்ளடக்கிய பொது அணி இன்னும் உருவாகவில்லை.

இந்த நிலையில் அரசியலில் மதத்தைக் கலக்கும் முயற்சிகள், தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்தல்; தமிழகக் கல்வி, மருத்துவக் கொள்கைகளை முடக்குதல், இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு; ஒன்றிய ஆட்சியில் கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றிலும் தமிழர்களின் வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் முயற்சிகளை முறியடிக்க பொதுவான செயல் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.

அரசு நடவடிக்கைகள் ஒரு எல்லைக்கு மேல் பயணிக்க முடியாத நிலையில் மக்கள் கருத்தைக் குறிப்பாக இளைஞர்களை முன் வைத்து மக்கள் இயக்கம் ஒன்றை தமிழ்நாட்டுக்கான சமூகநீதி அணியாக உருவாக்கி அந்த அணி குறிப்பான செயல் திட்டங்களை வகுத்து மக்களிடம் செல்ல வேண்டும்; குறிப்பாகப் பெண்களை பெருமளவில் பங்கேற்கச் செய்ய வேண்டும். மதத்தின் பெயரால் மக்களின் சமூக வாழ்வுரிமைகளைப் பறித்து மீண்டும் வேதகால ஆட்சிக்கு அழைத்துச் செல்லும் சூழ்ச்சிகரமான திட்டங்களை அம்பலப்படுத்த வேண்டும்; அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளிடம் மக்களின் பொதுத் துறை நிறுவன சொத்துகளை கொண்டுப் போய் சேர்த்து விட்டால் இந்துத்துவ பார்ப்பனிய ஆட்சிக்கான பொருளாதாரக் கட்டமைப்பை எளிதாக உருவாக்கிட முடியும் என்பதே பாசிச ஆட்சியின் நோக்கம் என்பதை எடுத்து விளக்க வேண்டும். மதத்தைக் குறித்துப் பேசாமலேயே தவிர்த்துவிட்டு மக்களை பாசிச எதிர்ப்புக்கு தயாராக்கிட முடியாது. மத விமர்சனங்களைப் புறந்தள்ளி விட முடியாது. இவை குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.

பேரணியில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் சக்தியை வீணடிக்காமல் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும். பார்ப்பனிய - முதலாளிய - சாதிய எதிர்ப்பு என்ற மூன்று முனைகளில் கவனம் செலுத்துவதே மார்க்சிஸ்ட் - பெரியாரிய - அம்பேத்கரிய கொள்கைகளை வளர்த்தெடுப்பதற்கான அடிப்படையான பணி.

- விடுதலை இராசேந்திரன்

Pin It