தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்டக் கிளை ஜனவரி 8-9 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்த “புத்தகங்கள் வாசிப்பு முகாமில்” பங்கேற்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். நாற் பதற்கும் மேற்பட்ட இளம் ஆசிரியர்களும் அறிவியல் இயக்க ஆர்வலர்களும் பங்கேற்ற இம் முகாமை திட்டமிட்டு நடத்திய பேராசிரியர் மணியும் அவருடைய நண்பர்களும் அனைத்துப் பாராட்டுகளுக்கும் உரியவர்கள் ஆவர். ஈரோடு மாநகர அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் இம்முகாமினை நடத்திட அனுமதி அளித்திருந்ததோடு முகாமிற்கான அனைத்து உதவிகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பொன் குமார் அளித்திருந்தார்.
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுhரி தமிழ்த் துறைத் தலைவர் பேரா.மு.முருகேசனின் துவக்கவுரை யுடனும், மூட்டா இயக்கத்தின் முன்னாள் தலைவர் பேரா.ராஜு ஆற்றிய சிறப்புரையுடனும் முகாம் துவங்கியது. இந்திய நாட்டின் ஆறு பெரிய ஆளுமை களின் கல்விச் சிந்தனைகள் பற்றிய புத்தகங்கள் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. காந்தி, தாகூர், விவேகானந்தர், பாரதியார், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கல்விச் சிந்தனைகள் பற்றி பாரதி புத்தகாலயமும் இந்திய மாணவர் சங்கமும் இணைந்து வெளியிட்டுள்ள புத்தகங்களின் வாசிப்பும் அவைகளின் மீதான விமர்சனமுமே முகாமின் குறிக் கோளாகும். இதற்கு முன் நடந்திருந்த முதல் முகாமில் பிரேசில் நாட்டு கல்விச் சிந்தனையாளர் பாவ்லோ பிரேயரின் “ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி”வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பங்கேற்ற ஆசிரியர்கள் ஆறு குழுக்களாகப் பிரிந்து வட்டமிட்டு உட்கார்ந்து படித்த காட்சியைப் பார்த்த அப்பள்ளி மாணவியர்கள் பிரமித்துப் போயினர். ஒவ்வொரு குழுவின் சார்பிலும் ஒருவர் தாங்கள் வாசித்த புத்தகத்தின் சாரத்தை தொகுத்து வழங்கினர். அம்பேத்கர் பற்றி ரவிக்குமார் தொகுத்திருந்த புத்தகத்தை ஆசிரியை சாந்த சீலாவும், பாரதியார் பற்றி ஞாலன் சுப்பிரமணியன் எழுதிய புத்தகத்தை ஆசிரியை சுடர்ஒளியும், விவேகானந்தர் பற்றி பேரா.அ.கருணா னந்தன் தொகுத்திருந்த புத்தகத்தை ஆசிரியர் ஸ்ரீதரனும், தாகூர் பற்றி ஞாலன் சுப்பிரமணியன் தொகுத்திருந்த புத்தகத்தை பேரா.முருகேசனும், காந்தி பற்றி அ. அண்ணாமலை தொகுத்திருந்த புத்தகத்தை ஆசிரியர் பாலசரவணனும், பெரியார் பற்றி அ.மார்க்ஸ் தொகுத் திருந்த புத்தகத்தினை ஆசிரியர் செல்வேந்திரனும் தங்கள் குழுவின் சார்பில் புத்தகங்களைப் பற்றிய விரிவான விளக்கங்களை விமர்சனத்துடன் வழங்கினர்.
இதற்கும் மேலாக இப்புத்தகங்களைப் பற்றிய மதிப்பீடும் ஒப்பீடும் செய்யப்பட்டன. பாரதியார்-விவேகானந்தர் பற்றிய ஒப்பீட்டை பொதுப் பள்ளிக்கான மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவும், பெரியார்-அம்பேத்கார் பற்றிய ஒப்பீட்டை இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஜி.செல்வாவும், தாகூர்-காந்தி பற்றிய ஒப்பீட்டை மூட்டா சங்க முன்னாள் பொறுப்பாளர் பேரா. பெ.விஜயகுமாரும் செய்தனர்.
முகாமின் ஒரு பகுதியாக தந்தை பெரியார் வாழ்ந்த வீட்டினைப் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தன் வாழ் நாள் முழுவதை யும் சமூக நீதிக்கான போராட்டத்திற்கு செலவழித்த அந்த உயர்ந்த மனிதரின் வாழ்க்கை வரலாறு அவ் வீட்டில் காட்சியாகப் படுத்தப்பட்டுள்ளது. பெரியாரின் நினைவுகளில் கழிந்த அந்த மாலைப் பொழுது வாழ்க்கையில் மறக்க முடியாத பொழு தாகும்.
பாவ்லோ பிரேயரின் “வாசிப்பு, எழுத்து, யதார்த்தம்” என்ற கட்டுரை பற்றிய விளக்கத்தை ஜே.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். கல்வி ஒரு அரசியல் நடவடிக்கை என்று பாவ்லோ பிரேயர் உறுதியுடன் நம்பினார். வாழ்க்கையைப் புரிவதற்கே கல்வி என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். படிப்பதென்பது உலகைப் புரிந்து கொள்வதற்கான வழியாகவும் எழுதுவதென்பது செயலாக்கத்திற் கான வழியாகவும் பாவ்லோ பார்த்தார். கல்வி சமூக மாற்றத்திற்கான ஆயுதமாக விளங்கிட வேண்டும். யாருக்கான கல்வி? யாருக்கு எதிரான கல்வி என்பதில் தெளிவு இருந்திட வேண்டும். இதில் நடுநிலை என்ற பேச்சுக்கே இடமில்லை. என்றும் பாவ்லோ உறுதியாக இருந்தார். கல்வி சம்பந்தமான தெளிவான பார்வை இல்லை யெனில் ஆசிரியர்கள் ஆட்சியாளர்களின் சேவகர் களாகவே இருக்க நேரிடும். உரையாடல் வழிக் கல்வியே உண்மையான கல்வியாக இருக்க முடியும். வகுப்பறையில் ஆசிரியர் மாணவராக மாறியும், மாணவர்கள் ஆசிரியர்களாக மாறியும் நிற்க வேண்டும். அப்போதுதான் இருவருக்குமான இடைவெளி குறைந்து இருவரும் ஒரு புள்ளியில் சேர்ந்து நிற்பதற்கான இடம் தோன்றிடும். நாம் வாழ்ந்ததற்கான சான்றும் நியாயமும் நம் சமூகத்திற்கு ஆற்றிடும் கடமையிலேயே இருக்கின் றது என்கிறார்.
இறுதி அமர்வில், முகாமைப் பற்றிய தங்களின் கருத்துக்களை பங்கேற்றவர்கள் பகிர்ந்து கொண்டனர். ஆழமான வாசிப்பு தரும் இன்பத்தை யும் ஆக்கப் பூர்வமான விமர்சனத்தின் தேவையை யும் உணர்ந்து பூரிப்படைந்தனர். மாற்றுக் கல்விக் கான தேடுதலில் ஈடுபட சபதமேற்றனர். கற்றல்-கற்பித்தல் குறித்த பல்வேறு பரிமாணங்கள் பற்றி யும் விவாதித்தனர். ஆசிரியை சுடர்ஒளி “குழந்தை களுடன் கொண்டாடுவோம்” என்று, தான் நடத்தி வரும் மாற்றுக் கல்விக்கான இயக்கம் பற்றிக் கூறினார். இவ்வியக்கத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் மாதந்தோறும் கூடி மாற்றுக் கல்வி குறித்து விவாதிப்பதை அனைவரும் பாராட்டினர். தன கொட்டி, மூர்த்தி, ஜெயரமன், ஆகியோர் இயக்கப் பாடல்கள் பாடி மகிழ்வித்தனர். முகாமில் கலந்து கொண்ட பேரா.மு. முருகேசனும் ஆசிரியர் தன கொட்டியும் கண் பார்வையற்றவர்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அயல் மொழித் துறை பேராசிரியர் வெற்றிச்செல்வன் தன்னுடைய தொகுப்புரையில் ஒடுக்கப்பட்டவர் களின் விடுதலைக்கான கல்வியை நோக்கிய நம்முடைய பயணத்தை தொடங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்திய கல்வி சிந்தனையாளர்களில் தந்தை பெரியாரும், அம்பேத்கரும் மட்டுமே பாவ்லோ பிரேயர் வரையறைக்குள் வருகின்றனர் என்பதை சுட்டிக் காட்டினார்.
இறுதியாக பேராசிரியர் மணி புத்தகங்கள் வாசிப்பு முகாமின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். மே மாதத்தில் மீண்டும் கூடுவோம்; அயல் நாட்டுக் கல்விச் சிந்தனை யாளர்கள் குறித்து விவாதித்திடுவோம் என்று கூறி முகாமினை முடித்து வைத்தார். அனைவரும் கனத்த மனத்துடனும், கல்வி குறித்த சிந்தனை களுடனும் கலைந்து சென்றனர்.