கார்ப்பரேட் கொள்ளைக்கும் - பார்ப்பனியக் கொள்கைக்கும்

1956 ஆம் ஆண்டு இந்திய அரசால், பல்கலைக் கழக கல்வியினை ஒருங்கிணைக்கவும், தரக்கட்டுப்பாடு செய்யவும், பல்கலைக் கழகங்களுக்கு நிதி வழங்குதல் மற்றும் நேரடி ஆய்வின் மூலம் மதிப்பீடு செய்து தரத்தை உத்தரவாதப் படுத்துவது போன்றவற்றிற்காக துவங்கப்பட்டதே பல்கலைக்கழக மானியக் குழு (UGC). அதனை கலைத்து விட்டு தேசிய உயர்கல்வி ஆணையத்தை கொண்டுவருகிறது மோடியின் அரசு. பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்தவே தேசிய உயர்கல்வி ஆணையம் கொண்டு வரப்படுகிறது என அரசு தரப்பில் கூறினாலும் உண்மை அதுவல்ல. பல்கலைக்கழக மானியக் குழு தன்னாட்சி பெற்ற அமைப்பு.  அதன் அதிகாரத்தில் அரசாங்கம் அதிக அளவில் குறுக்கிட முடியாது என்பதால் அரசு தன்னுடைய சித்தாந்தங்களை, கொள்கை முடிவுகளை தன் விருப்பம் போல் செயல்படுத்த முடிவதில்லை. கல்விநிலையங்களுக்கு தன்னாட்சி அளித்தல், கல்வியில் கார்ப்பரேட்டுகளை அனுமதித்தல்,  மானியங்களைக் குறைத்தல், இந்தி - சமக்கிருதத்தை திணித்து பார்ப்பனியமயமாக்குதல்  போன்றவற்றை தீவிரப்படுத்தியுள்ள மோடி அரசு இவற்றை தடையில்லாமல் செயல்படுத்தவே  தேசிய உயர்கல்வி ஆணையத்தை அமைக்கவுள்ளது.

முழுக்க அதிகாரிகளை கொண்டு அமைக்கப்படவுள்ள இவ்வாணையத்தின் தலைவரும்  அதிகாரிகள் மூலமே தேர்ந்தெ டுக்கப்படுவார். அவர் வெளிநாடு வாழ் இந்தியராகவும் இருக்கலாம். மேலும் குழுவில் ஆசிரியர்கள் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டு மத்திய மாநில அதிகாரிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவுள்ளது. இதன் மூலம். அரசின் தலையீடு இல்லாத பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தில் உள்ள வாய்ப்புகள் அனைத்தையும் ஒதுக்கிதள்ளப்பட்டுள்ளது.  இந்த   ஆணையம் முழுக்க கல்வி தொடர்பான பணிகளை மட்டுமே கவனிக்கும்.  நிதி ஒதுக்குதல் போன்றவற்றை மனிதவள மேம்பாட்டுத்துறை எடுத்துக் கொள்ளும்.      

மேலும் கல்வி நிதி  ஒதுக்கீட்டை தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் (NAAC) உடன் இணைப்பது போன்ற முன்மொழிவுகள் உள்ளது. இது புதிய கல்வி நிலையங்கள் மற்றும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய கல்வி நிலையங்களுக்கு எதிரானதாகவும், அதன் வளர்ச்சியில் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

உயர்கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அங்கீகாரம் அளித்தாலும் அதனுடைய அதிகாரம் முழுமையும் உயர்கல்வி ஆணையத்திடமும், மத்திய அரசிடமே இருக்கும். மேலும் ஆலோசனை, விசாரணை அல்லது ஆணையத்தின் முடிவுகளை எதிர்த்து மேல் முறையீடு செய்வது போன்ற எந்தவொரு அதிகாரமும் தனிப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. உயர்கல்வியில்  உயர்கல்வி ஆணையம் மற்றும் மத்திய அரசு மட்டுமே சர்வாதிகாரம் கொண்ட சட்டங்களை தன்னகத்தே கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது உயர்கல்வியில் ஊழலை பெருக்கவும் , கல்வியை உலக சந்தைக்கு திறந்துவிடவுமே வழிகோலும்.

தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயம் போன்றவற்றால் கல்வி பெரும் வணிகமாகியுள்ள சூழலில் அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலும், கார்ப்பரேட்களுக்கான சந்தையை திறந்துவிடும் வகையில் மட்டுமே உள்ளது உயர்கல்வி ஆணையம். மேலும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மாணவர்களை உயர்கல்வியிலிருந்து  வெளியேற்றி பணம் உள்ள மேட்டு குடியினருக்கு மட்டுமே  கல்வி எனும் நிலையை இது உருவாக்கும்.

மோடி அரசானது ஏற்கனவே தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை தொழில்நுட்ப கல்லூரிகளில் நிறுத்திவிட்டது. அரசுக்கல்லூரிகளில் உதவித்தொகையை குறைத்துவிட்டது. அரசாணை 92 மூலம்கிடைத்து வந்த இலவசக் கல்விக்கும் குழி பறித்து விட்டது.  பாதிக் கட்டணத்தை மாணவர்களே கட்ட வேண்டுமென சட்டத்தை மாற்றிவிட்டது. இவ்வாணையம் இத்தகைய உரிமைகளையும் பறிப்பதோடு இடஒதுக்கீடு உரிமையை முற்றாக ஒழித்துக்கட்டிவிடும்.  இந்திய பார்ப்பனக் கல்வி முறையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர்கல்வி முழுமையாக சென்று சேராத நிலையில் இது போன்ற ஆணையங்கள் அவர்களை கல்வியிலிருந்து திட்டமிட்டே வெளியேற்றும் நடவடிக்கை ஆகும். மேலும், மாநில பல்கலைக்கழக நிதியைக் குறைத்து மெதுவாக உயர்கல்வியிலிருந்து அரசே விலகிக் கொள்ளும். இலாப வெறிபிடித்த கார்ப்பரேட் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களை கபளீகரம் செய்யும். இன்னும் தொட்டங்கப்படாத ஜியோ கல்வி நிறுவனத்திற்கு 5000 கோடியை ஒதுக்கியதிலிருந்தே இவர்களின் இலட்சணத்தை நாம் புரிந்துக் கொள்ள முடியும்.

தற்போது உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவும் உயர்கல்வியில் மாநில உரிமைகளை பறிப்பதையும், தனியார்மயமாக்களையும் தான் செய்துவந்தது. மிக மோசமான நிலையில் உள்ள உயர்கல்வியை படுமோசமான நிலைக்கு கொண்டு செல்லத்தான் இந்த உயர்கல்வி ஆணைய மசோதா.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதன் மூலமே இத்தகைய தனியார்மய, பார்ப்பனியமய நடவடிக்கைகளை தற்காலிகமாகவாவது தடுக்க முடியும்.

Pin It