குரங்கணி சாலையின் முதல் வளைவில் இறங்குகிற போதே கவனித்தான் சேகர். டீ கடை இன்னும் திறந்துதான் இருந்தது. புங்க மர நிழலில் இரண்டுகார்கள் நின்றிருந்தது. யாராவது ரியல் எஸ்டேட்காரர்களாய் இருக்கும் என யூகித்தான். தேசிய நெடுஞ் சாலையாய் அறிவித்த பின் பூதாகரமாய் வளர்ந்து கொண்டிருக்கிற ரியல் எஸ்டேட் வியாபாரம், கட்டங்கரடு, விளைநிலம், தோப்பு தோட்டம் என பேதமின்றி எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருந்தது.

மேலப்பரபு பக்கம் நிலம் பார்க்க வருகிற வியாபாரிகள் புரோக்கர்கள் அமர்ந்து பேச, குரங்கணி மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி தாக சாந்தி செய்ய மா, தென்னை, இலவு, காப்பி என பீச்சாங்கரை வரை விரிந்திருக்கும் விவசாய நிலங்களுக்கு வேலைக்கு செல்லும் கூலி உழைப்பாளிகள் சிறு விவசாயிகள் சிறிது இளைப்பாற தோதான இடமாக ஜமீன்பாண்டி டீ கடை இருந்தது. கூரை வேய்ந்தது போல் இடம் வலமாய் வளர்ந் திருக்கும் புங்கமரமும் வேம்பும் தார்ச்சாலை வரை படர்ந்து குளுமை தந்து கொண்டிருந்தது. கொளுத்தும் வெயிலிலிருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு சரணாலயம் போல் விளங்கியது. இதற்கும்மேல் இந்தப்பக்கம் வருகிற புரோக்கர்கள் சிறிது நேரம் அமர்ந்து பேசிவிட்டு போக காரணமும் இருந்தது. டீ கடையை ஒட்டி சமதளமாய் விரிந்திருக்கும் ஜமீன்பாண்டிக்குச் சொந்தமான தோப்பு.

இப்படி வந்து போகிற அறிமுகத்தில் புரோக்கர் நாகு திடீரென ஒரு நாள் பேச்சை ஆரம்பித்தான்.

“பாண்டிண்ணே, கேரளாக்கார மொதலாளி ஒருத்தரு இந்த ஏரியாவுல மோட்டல் கட்றதுக்கு தோதான எடம் பார்க்கச் சொன்னாரு. பிரியமிருந்தா சொல்லுங்க. நல்ல வெலைக்கு வித்து ரலாம். செண்டு ஐயாயிரமின்னாலும் இருபது லட்சம் ஆச்சு”- இளநீர் சீவிக் கொண்டிருந்த ஜமீன்பாண்டி ஏறிட்டுப் பார்த்தார். ஏளனமா புன்னகையா என விளங்கமுடியவில்லை நாகுவால்.

“அண்ணே சீரெட் கேட்டீங்க...”அவசரமாய் கையில் கிடைத்த இரண்டு சிகரெட்டை எடுத்து நாகு விடம் நீட்டினாள் ராசாத்தியக்கா.

இளநியை இதமாய் சுழற்றி சீவி கண் திறந்து நாகுவிடம் தந்தார். ‘மொதல்ல சாப்டுங்க’.

சொல்லுங்க. ஒக்காந்து பேசுனா, ஒன்னு ரெண்டு சேத்து வச்சுக்கூட முடிக்கலாம் .போன வாரம் வந்தப்ப எடத்தக்கூட காம்பிச் சேன். எடம் அவருக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. ஒரே செட்டில் மெண்டா முடிக்கச் சொல்லீறலாம். அதுக்கு நான் காரண்டி. வார அமௌண்ட பேங்குல போட்டீங் கன்னா வயசான காலத்துல ஒக்காந்து சாப்புடலாம். ஒத்த ரூவா ரெண்டு ரூவா ஏவாரத் துக்கு இப்படி மழையிலயும் வெயில்லயும் அல்லாட வேணாம்.

இடது கையால் மீசையை முறுக்கிய படி “ஹ... ஹ...” எனசிரித்தார் ஜமீன்பாண்டி. கையிலிருந்த அரிவாளை குவியலாய் கிடந்த தென்னங்குலையில் குத்திவிட்டு நிமிர்ந்தார். தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தையும் கழுத்தையும் துடைத்தார். பார்வை நாகுவின் மீது நல்லபாம்பாய் தீவிரம் கொண் டிருந்தது.

ராசாத்தியக்காவின் முகத்தில் கலவரம் படர்ந்ததை கவனித்தான் சேகர். எட்டி நின்று தேநீர் குடித்துக் கொண்டிருந்த பரவு காவல் பெருமாள் திகிலுடன் ஜமீன் பாண்டியின் முகத்தைப் பார்த் தான்.

“ பெருமாளு...”

முன்னால் வந்து பவ்யமாய் “ ஐயா” என்றான்.

“தோப்ப வித்தா இருவ்வ்வது லட்சம் போகுமாம். அம்புட்டு துட்ட எப்படி எண்ணிப் பாக்குறது...?”

சொல்லிவிட்டு கடகடவென சிரித் தார்.

பெருமாள் நிமிர்ந்து நாகுவை முறைத் தான். தான் எசகுபிசகாய் மாட்டிக் கொண்டிருப் பதை அப்போதுதான் உணர்ந்தான் நாகு.

“ம்... அங்க இங்கன்னு சுத்தி கடேசியா எங்கிட்டேயே வந்துட்ட. ஒரு தொத்த கடய வச்சுகிட்டு ஏதோ ஏவாரம் பாத்துக்கிட்டு இருக்கானே. காசுன்னா வாய பொளந்திருவான்னு நெனச்சுபுட்ட. என்னயும் கேக்காம எடத்தை யும் காம்பிச் சிருக்க. பெரிய்ய்ய புரோக்கராயிட்ட இல்ல..?”

அவர் குரலின் உறுதி சேகருள் அதிர்வை ஏற்படுத்தியது. நாகுவைப் பற்றி சொல்லவே வேண்டாம். வாங்கிய இளநீர் தீச்சட்டியை போல் கையிலேயே இருக்க திக்கித்து நின்றான்.

“ஏய் நாகு கொஞ்சம் தள்ளி நின்னு பாரு. தெக்கு கரடு அடிவாரம் வரக்கும் பசேல்னு இருக்கில்ல. தென்னந்தோப்பு. அதுவரக்கும் இருக்குற பூமி யாருதுன்னு தெரியுமா. எம்பாட்டான் பூமி. லட்சக் கணக்குல வெலய சொன்னா விழுந்துருவேன்னு நெனச்சுட்ட. இப்படி காசு ஆச காட்டி எத்தன பேர் நெலத்த கை மாத்தி விட்டிருப்ப. எது எப்படின்னாலும் ஒனக்கு கமிசன் வேணும்....”

வேட்டியை இறக்கிவிட்டு வலப்பக்க மிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தார். அமர்ந்த வேகத்தில் கட்டில் சப்தமிட்டது. ஒரு செம்பு நிறைய தண்ணீரை கொண்டு வந்து தந்தாள் ராசாத்தியக்கா. அவளை உற்றுப் பார்த்தவர் ஒரு மிடறு குடித்து விட்டு கட்டிலின் கீழ் வைத்தார்.

“எப்பிடியோ வெளயுற நெலத்தை யெல்லாம் வெலையாக்கிட்டீங்க. இருந்த மரம் மட்டைகள மொட்டையடுச்சு, தோலான் துருத்தின்னு பேரு வச்சு, அந்த நகர், இந்த நகர்னு பிளாட்டாக்கிட்டீங். ஊரச் சுத்தி பச்ச பசேல்னு இருந்த பூமி பொட்டக்காடா போச்சு. வாங்குன பிளாட்ல எத்தன பேர் வீடு கட்டியிருக்கான். இல்ல எத்தன பேருதான் பேக்ட்டரி கட்டியிருக்கான். ஒரு ஏவாரி கிட்டயிருந்து இன்னொரு ஏவாரிக்கு மாத்தி விடுறீங்க. ஊருல பாதி பேரு ஏவாரி ஆயிட்டான். பாதி பேரு புரோக்கராயிட்டான். எப்படி போனா லும் ஒங்களுக்கு ரெண்டு பெர்சண்டு கமிஷன் வந்துருது...”

நாகுவிற்கு நாக்கு உலர்ந்து கொண்டது. குடிக்காமல் வைத்திருந்த இளநீரை குனிந்து கீழே வைத்தார். விஷ வேளையில் வந்து மாட்டிக் கொண்டோமே எனும் தன்னிரக்கம் எழுந்தது. எப்போதும் வாஞ்சையாய் பேசும் ஜமீன் பாண்டியனை தனது பேச்சு இப்படி ரணகளத்தை ஏற்படுத்தும் என கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. நகன்று போவதா பெஞ்சில் அமர்வதா என குழம்பினான்.

“ விடுங்க ஐயா ஏதோ நிகார் தெரியா பேசிட்டாரு...”

பெருமாள் தணிந்த குரலில் சொன்னான்.

“ நாகு இந்தா பாக்கி...”

சில்லறையை எடுத்து நீட்டிய ராசாத்தி யக்கா கண்களால் போய்விடு என சைகை காட்டி னாள்.

“பாரதத்துல பாஞ்சாலிய வச்சு சூதாட்டம் ஆடுனாப்புல நெலத்த வச்சு சூதாட்டம் ஆடிக் கிட்டு இருக்கீங்க. எல்லாத்தையும் பிளாட்டாக் கிட்டு தானியமில்லாம சாகப் போறீங்கடி...”

நகன்று போகிற நாகுவை பார்த்து பேசிய வர். “இந்தா செம்ப எடுத்து உள்ள வையி” என்று ராசாத்தியக் காவை சத்தமிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப்பின் அங்கு வருகிற எந்த புரோக்கரும் ஜமீன் பாண்டியின் நிலம் சம்பந்தமாக எதுவும் பேசுவதில்லை.

சேகர், நகராட்சி குடிநீர் வழங்கல் பிரிவில் உதவியாளனாக மாற்றலாகி வந்து ஆறு மாதம் தான் ஆகிறது. சாதாரண நாட்களில் வாரம் இரண்டு நாள் குரங்கணி வரை வர வேண்டியதிருக்கும். குடிநீர் குழாய் உடைக்கப்பட்டிருக்கிறதா , வருகிற குடிநீரை விளை நிலங்களுக்கு பாய்ச்சுகிறார்களா என கவனிப்பதும், நீர் தேக்க தொட்டி பராமரிப் பதுதான் வேலை. மழைக்காலமாக இருந்தால் வேலை கூடும். பிற ஊர்கள் எப்படியோ, போடியை பொறுத்தவரை மழைக்காலம்தான் குடிநீர் வழங்குவதில் சோதனைக் காலம். டாப் ஸ்டேசன் சரிவிலிருந்து புரண்டு வருகிற மழை வெள்ளம், துணை சேர்த்து அழைத்து வருகிற மரம், செடி கொடிகள் கொட்டகுடி ஆற்று நீர் தேக்க தொட்டியில் தேங்கி அடைத்துக் கொள்வதால், ஊருக்குள் குடிநீர் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படும். ஒரு குழுவே சேறிலும், சகதியிலும் பணி செய்ய வேண்டியிருக்கும்.

இப்படி வந்து போகிற போது ஏற்பட்ட அறிமுகம் சிறிது சிறிதாய் நெருக்கத்தை ஏற்படுத் தியது. ‘அக்கா அக்கா’ என அழைக்கத் தொடங்கி ராசாத்தியக்காவின் அன்பில் தம்பியாகவே உணரத் தொடங்கினான். “டேய் மாப்ள” என்று தான் ஜமீன் பாண்டியும் உரிமையோடு கூப்பிடுவார்.

நாகுவின் பேச்சால் வெளியே வந்த ஜமீன் பாண்டியின் இன்னொரு முகம் இதுவரை அறிந் திராததாய் இருந்தது. வருகிறவர்களிடம் கேலியும், கிண்டலுமாய் கலகலத்துச் சிரிக்கும் அந்த வெள்ளந்தி முகம்தானா என ஐயமேற்பட்டது. இவ் வளவு பெரிய பூர்வீக நிலத்திற்கு சொந்தமானவர் எப்படி இந்த பெட்டிக் கடைக்கு வந்தார் எனக் குழம்பினான். அங்கு வருகிற விவசாயிகளும், கூலி ஆட்களும் ஒரு வித மரியாதையுடனேயே உறவு வைத்திருந்தது திடீரென உறைத்தது.

பெருமாள் தான் முழுவிபரமும் சொன் னான்.

கீழப்பரவு, மேலப்பரவு என விரிந்திருக் கும் அத்தனை சொத்துக்கும் ஜமீன்பாண்டிதான் ஒரே வாரிசு. குழந்தைகளை பெற்றுப் போட்ட கடமையோடு மனைவி இறந்து போனாள். மூன்று மகளுக்கும் இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. நில மேற்பார்வைக்காக புல்லட்டில் ஏறி தடதடவென வந்தால், அமர்ந்தவர்கள் எழுந்து நிற்பதும், நிற்பவர்கள் தலை தாழ்த்தி கரம் கூப்பு வதும், பரவு காவல்காரர்கள் ஓட்டமும் நடையு மாய் பதை பதைப்பதும் ஒரு குறுநில மன்னனைப் போல்தான் தோற்றம் கொள்ளச் செய்யும். எவரும் நெருங்கிப் பேச அச்சம் கொள்ளச் செய்யும் தோரணை.

ராசத்தியாக்காவும் அவருடைய கணவ ரும், ஜமீன்பாண்டியின் தோப்பு வீட்டில்தான் குடியிருந்து வந்தனர். வேலையாட்களை பிரித்தனுப் புவது இடுபொருள்களை வாங்குவது, விவசாய மேற்பார்வை, விளைந்த பொருட்களை வீடு வந்து சேர்ப்பது என்பதுவரை அவர்தான் பார்த்து வந்தார். ஒரு மதியப் பொழுதில் வீட்டருகே இருந்த தென்னையில் ஏறியவர் பாம்பு கடித்துகீழே விழுந்தவர்தான்... குழந்தை இல்லாத ராசாத்தி யக்கா நிர்க்கதியாய் நிற்க, ஜமீன்பாண்டிதான் இந்த டீகடையை வைத்துத் தந்து தோப்பை பராமரித்துக் கொண்டு இருக்கச் செய்தார்.

ராசாத்தியக்காவை வைத்திருப்பதாய் விஷயம் பரவி வீடுவரை சென்ற போது வீடு கொந்தளித்தது. அம்மாவின் ஸ்தானத்தில் நினைத்து பார்ப்பதே அருவருப்பாய் இருந்தது பிள்ளைகளுக்கு. நேருக்கு நேராய் கேட்கவும் அஞ்சினர். தாய் மாமனிடம் முறையிட்டுப் பேச வைத்தனர்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல மாப்ள. ஒன்னுன்னா ஊரு ஒம்போது பேசும். நம்ம காலச் சுத்தி கெடந்த குடும்பம் , குடும்பம் குட்டி இல்லாம ஆதரவத்து நிக்கிறா. நாமளும் தொறத் திட்டா எங்க போயி சாவா. பெட்டிக்கடயாவது வச்சு பௌச்சுக்கட்டுமேன்னு வச்சு தந்தேன். இருக்கிற வரக்கும் இருந்துட்டுப் போறா...”

முற்றுப்புள்ளி வைத்து விட்டார். பிள்ளை கள் சமாதானமாகவில்லை. ஜமீன் பாண்டி வெளியூர் சென்றிருந்த ஒரு நாளில் மகள்களும், மகன்களும் ராசாத்தியாக்காவிடம் சென்று விவகாரம் செய்தனர். மகள்கள் விளக்குமாறாலும் செருப்பாலும் அடிக்க மகன்கள் ரத்தம் வழிய அடித்து தெருவில் தூக்கிப் போட்டனர்.

“ஆம்பள வேணுன்னா எத்தனையோ எளந்தாரி இருக்கான். எங்கப்பன் தானா கெடைச் சான். நாளக்கி இங்க பாத்தம் கண்டந் துண்டமா வெட்டி காணா பொணமா ஆக்கிடுவோம்..” எச்சரித்தனர்.

ஊருக்கு திரும்பியவர் நடந்ததை கேள்விப் பட்டு குறுகிப் போனார். எல்லா அடையாளங் களும் தன்னை விட்டு நீங்கியதாய் உணர்ந்தார். அன்றைக்கு தோப்பு வீட்டுக்கு வந்தவர்தான். மறுநாள் ஆட்கள் மூலம் பிள்ளைகளை பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வரச் சொல்லி இந்த நான்கு ஏக்கர் தோப்பை தவிர அனைத்தையும் பிரித்து தந்துவிட்டார். எதிர்பார்த்த சந்தோசம் பிள்ளை களுக்கு கிடைத்தது.

அதற்கு மறுநாள் ராசாத்தியக்காவின் கழுத்தில் தாலி ஏறியது.

தோப்பு, டீ கடை என தன் எல்லைகளை சுருக்கிக் கொண்டார். நக்கலும், நையாண்டியுமாய் சிரித்து பொழுது கழிய , எதிரே நிற்க பயந்தவர் களும், சாதாரணமாய் பேசுகிற அளவிற்கு எளிய வரானார். குழந்தையின் குதூகலத்தோடு புதிய பிறப்பெடுத்தார். அகல இடுப்பு வாரால் இறுக கட்டிய வேட்டியும், இறுகிய புஜங்களை மூடும் மேல் தூண்டுமேஆடையானது. அடர்ந்து மு றுக்கிய மீசை மட்டுமே பழைய செருக்கின் அடையாள மாய் நிமிர்ந்திருந்தது.

காலையில் மேலே வருகிறபோதே கடை திறந்திருப்பதைப் பார்த்ததும் எதிர்பாராத மகிழ்ச்சி யில் திளைத்தான் சேகர். இந்த முப்பத்தோரு நாளில் அடைத்து கிடந்த கடையைப் பார்த்து வலி மிகுந்திருந்த மனதில் புது ரத்தம் பாய்ந்தது போல் உணர்ந்தான். ராசாத்தியக்கா சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என விரும்பினான். கோணல் மாணலாய் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்களுக்கிடையில் தனது டிவிஎஸ் 50 வண்டியை நிறுத்தினான். நின்றும் அமர்ந்தும் சிலர் தேநீர் குடித்துக் கொண்டிருந்தனர். எதுவும் நடக்காததுபோல் அவர்கள் ராசாத்தி யக்காவிடம் உரையாடினர். தன்னைப் போலவே அவர்களுக்கும் ராசாத்தியாக்காவின் மேல் அன்பிருக்க வேண்டும்.எல்லோருக்குள்ளும் அடி ஆழத்தில் ஒரு அன்புமயமான நதி ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.

ராசாத்தியக்கா பாய்லர் முன் நின்றிருந் தாள். உடல் மெலிந்து சோர்வு தெரிந்தது. நெற்றி யில் காயம் பட்ட இடங்களில் வெளிர் சிவப்பில் தடம் தெரிந்தது.

“ அக்கா... சுக்குமல்லி...”

வரவழைத்த உற்சாக குரலில் கத்தினான். நிமிர்ந்து பார்த்த ராசாத்தியக்காவின் கண்களில் குபுக்கென நீர் தளும்பியது. தலையை குனிந்த வாறே ஈயச்சட்டியில் கொதிக்க வைத்திருந்த சுக்குமல்லி காப்பியை கண்ணாடி டம்ளரில் ஊற்றி முறுக்கு டப்பாவின் மேல் வைத்தாள். ஏதோ எடுப்பது போல் கீழே குனிந்தாள். கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்க வேண்டும். டம்ளரை எடுத்துக் கொண்டு பக்கவாட்டு பெஞ்சில் அமர்ந்தான். நிற்காமல் சென்றிருக்கலாமோ என நினைவு ஓடியது. 

ஜமீன்பாண்டி இறந்து இன்றோடு முப்பத்தோரு நாள் ஆகிறது. தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருந்தது. சேகர் வந்த போது சிறு கூட்டம் கூடி இருந்தது. கடையை கடந்து அன்றைக்கு யாரும் வேலைக்கு செல்லவில்லை. ஒற்றைப் பறவையாய் கதறிக் கொண்டிருந்தாள் ராசாத்தியக்கா. என்ன செய்வது என யாருக்கும் புரியவில்லை.

“வீட்டுக்குச் சொல்லிவிட்டுருக்கு. வர்றா களான்னு பாப்பம். இல்லைன்னா பெறகு முடிவு செய்யலாம்...”

பெருமாள்தான் சொன்னான்.

கொளுத்தும் நடு மதியத்தில் வேக வேக மாய் ஒரு ஆம்புலன்சும், மூன்று கார்களும் வந்து நின்றது, ‘அப்பா’ எனக் கதறிக் கொண்டு இரண்டு இளம்பெண்கள் ஓட, இறங்கியவர்கள் பின் தொடர்ந்தனர்.

தலைமாட்டில் அமர்ந்து ராசாத்தியக்கா அழுது கொண்டிருப்பதை பார்த்ததும் அவர்களுக்கு வெறி கிளம்பியது.

“ராஜா கணக்கா இருந்த எங்கப்பாவ மயக்கி, இப்பிடி அனாத பொணமா சாக வச்சுட்ட யேடி தேவடியா முண்ட.” என சொல்லிக் கொண்டே முதுகிலும் முகத்திலும் அடித்தாள் மூத்தமகள். தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து வெளியே இழுத்துப் போட்டாள் இளை மகள்.

குடும்பத்த கெடுத்த முண்ட “நீயும் செத்து தொலடி என மூத்த மகன் சரவணன் மிதிக்கவும் வந்த கூட்டமும் வெறி கொண்டு கலந்தது .

விலக்கி விட யாரும் துணியவில்லை. இவனைப் போலவே எல்லோரும் உறைந்து போயினர். காவக்கார பெருமாள்தான் சரவணனை இழுத்து வண்டிக்கு நகர்த்தினான்.

“ஆலமரமே சாஞ்சு போச்சு .இனி இவள அடிச்சு என்ன ஆகப் போகுது. நாய அடிப்பானேன். தூக்கி செமப் பானேன். தலைக்கு மேலே காரியம் இருக்கு. பிரேதத்த தூக்குங் கப்பா..”

ஒரு பெரியவர் சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந் தார். வண்டிகள் நகர ராசாத்தி யக்காவிடம் ஓடி வந்தனர். எப் போதோ மூர்ச்சையாகி இருக்க வேண்டும். சேகர்தான் முகத்தில் தண்ணீர் தெளித்தான். தண்ணீர் பட்டதும் முகம் முழுக்க ரத்தமாய் மாறியது. கண்ணீரின் தாழ் திறக்க ‘அக்கா’ என்று அலறினான். அன்றைக்கு மூடிய கடைதான்.

கடைக்கு அருகில் செல்லும் போதுதான் தெரிந்தது. புங்க மர நிழலில் நிறுத்தப் பட்டிருந்த வாகனங்கள் ஜமீன் பாண்டியின் இரண்டாவது மகன் இளம் வழுதியுடையது. கருப்பு நிற ஸ்கார்பியோ வண்டியின் முகப்பில் கொடி கட்டப்பட் டிருந்தது. அலுவலகத்திற்கு வரும்போது பார்த் திருக்கிறான்.

கயிற்று கட்டிலில் இளம் வழுதி அமர்ந் திருக்க இடப்புற திண்ணையில் கூரை முட்டுக் கம்பில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள் இராசாத்தி யக்கா. நீள பெஞ்சில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். வந்து போகிற சிலர் பராக்கு பார்ப்பது போல் நின்றிருந்தனர்.

சேகர் வண்டியை நிறுத்தியதும் இளம் வழுதி திரும்பிப் பார்த்தான். “என்னா தம்பி இந்த பக்கம்?”

“பைப் லைன் சரி பாத்துட்டு வர்றேன் சார்...”

சொல்லிக் கொண்டே அவனறியாமல் வணக்கம் செய்தான். தொண்டையை விட்டு வார்த்தை வெளியேறியதா என உணர முடிய வில்லை. கேட்டிருக்கும் என்பதற்கும் நிச்சய மில்லை. ஏதோ ஒரு நரம்பு சில்லிட்டு பயம் மேலே றியது. நகர்ந்து விடலாமா என யோசித்தான். ராசாத்தியக்காவிற்கு இன்றைக்கு என்ன நேரவிருக் கிறதோ எனும் பதைப்பு எழ தாமதிப்போம் என முடிவு செய்தான். வண்டி சக்கரத்தை தொட்டுப் பாத்தவாறு குத்துக்காலிட்டு அமர்ந்தான்.

“பேசணும்னு வந்துட்டு அமைதியா இருந்தயினா...”

நடுத்தர வயதுடையவர் துவக்கினார்.

வழுதி கண்களை உயர்த்தி ராசாத்தி யக்காவைப்பார்த்தான். தொண்டையைச் செறுமினான்.

“அப்பா எறந்த அன்னக்கி நான் ஊர்ல இல்ல. மந்திரிய பாக்க சென்னைக்கு போயிருந்தேன். வந்ததுக்கு பெறகுதான் எல்லாம் கேள்விப் பட்டேன். எனக்கே மனசு கஷ்டமா போச்சு. அண்ணனும், தங்கச்சிகளும் அன்னக்கி அப்பிடி நடந்திருக்கக் கூடாது. அப்பா மேல் உள்ள பாசத்துல, குடும்ப கௌரவம் அது இதுன்னு நெனச்சு அப்பிடி நடந்துக்கிட்டாங்க. கடேசி காலத் துல இப்படி காடே பரதேசம்னு வாழ்ந்ததுக்கு விதிய தவிர யார குத்தம் சொல்ல முடியும்...”

நிறுத்தி பெரியவரைப் பார்த்தான்.

மேற்கிலிருந்து வேகமாய் வீசிய காற்று வேம்பு புங்க மரக் கிளைகளை அசைத்து விளையாடி யது. சருகுகள் சாரலாய் உதிர்ந்தது. சேகர் வானத்தைப் பார்த்தான். ராசிமலை முகட்டில் கருக்கொண்டி ருந்த மேகம் மழை வரப் போவதை அறிவித்தது.

“மனசுல இருக்கிறத சொல்லு. என்னா இருந்தாலும் அவளும் ஒரு பொண்ணு. ஆதரவில்லாம நிக்கிறா...”

பெரியவர் எடுத்துக் கொடுத்தார்.

மீண்டும் செறுமினான்.

“இப்பக் குடும்பத்துல எல்லோருகிட்டயும் பேசி ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கேன். அவரா தேடிகிட்ட வாழ்க்க. தாலியும் கட்டிக் கிட்டாரு. ஆயிரந்தேன் இருந்தாலும் இப்ப நீங்க அவரோட சம்சாரம். நல்லது, கெட்டது இனி எங்களுக்கும் பங்கிருக்கு. இனி நீங்க இங்க இருக்க வேனாம். ஊருக்குள்ள எங்களுக்கு சொந்தமான எத்தனையோ வீடு இருக்கு. அதுல ஒரு வீட்ல இருங்க. கடைசி வரைக்கும் நாங்க பாத்துக் குறோம். இது எங்களுக்கு மட்டுமில்ல. எங்கப்பா வுக்கும் செய்யிற மரியாதையா நெனைக்கிறோம்.

சொல்லிவிட்டு திரும்பினான். பெரியவர் கை அமர்த்தி சரி என தலையாட்டினார்.

ராசாத்தியாக்காவின் கன்னங்களில் அருவி யாய் வழிந்து கொண்டிருந்தது கண்ணீர். கண்களை சேலைத் தலைப்பால் துடைத்துவிட்டு முடிவுக்கு வந்தவளாய் நிமிர்ந்தாள். நிதானமாய் எல்லோ ரையும் பார்த்து விட்டு வழுதியை நோக்கினாள்.

“தம்பி பத்திர ஆபீசுக்கு எப்ப வரச் சொல் றீகளோ அப்ப வர்றேன். எங்க கையெழுத்து போடச் சொல்றிகளோ அங்க போடுறேன். இந்த சொத்து மேல எனக்கு எந்த ஆசயும் இல்ல. நிம்மதியா போங்க...”

கருமேகத்தை பிளந்து ‘சுளீர்’ என ஒரு மின்னலும், தொடர்ந்து பெருத்த இடியோசையும் கேட்டது.

வழுதி திகைத்தான்.

Pin It