பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் இளைஞர் அமைப்பான ‘யுவமோர்சா’ தேசிய தலைவருமான தேஜஸ் வி சூர்யா என்பவர், “பெரியாரிசத்தை முடிவுக்குக் கொண்டு வரவே தமிழ்நாட்டில் பா.ஜ.க. தேர்தலில் போட்டியிடுகிறது” - என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், தனது ‘ட்விட்டரில்’ பதிலடி தந்துள்ளார்.

“பெரியார் எங்கள் மண்ணோடு, மனதோடு, உயிரோடு, உணர்வோடு கலந்தவர். எங்கள் பிணங்களின் மீது தான் அது நடக்கும். நாங்கள் இல்லாமல் அது எப்படி ‘இந்தியா’வாகும்?” என்று பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க பொதுச் செயலாளர் ‘ஆதவன் தீட்சண்யா’ கோவில்பட்டியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் இதை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் - “சனாதன தர்மத்தை பெரியாரும் காமராசரும் அண்ணாவும் கலைஞரும் இங்கே நுழைய விடாமல் தடுத்திருக்கிறார்கள். நானும் ஒரு பெரியாரிஸ்ட்” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் ‘பெரியாரிசம்’ (பெரியார் கொள்கையை) ஒழிக்கவே பாஜக இங்கு வந்திருக்கிறது என்று பாஜக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்

‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார்; தமிழ் நாகரிகத்தையும் தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார்.

காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் பேரறிஞர் அண்ணா. தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அஇஅதிமுக, பாஜக தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை?

தந்தை பெரியாருக்கு பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக ஈ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். கட்சி ஏற்றுக் கொண்டு விட்டதா? என்று கேட்டுள்ளார்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It