சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததாகவும், மூன்று சங்கங்கள் மதுரையில் இருந்ததாகவும் தமிழ் இலக்கிய வரலாறு கூறுகிறது. அந்த சங்கங்களின் மூலம் தமிழ் வளர்ந்ததோ இல்லையோ நமக்கு தெரியாது. ஆனால் தற்போது செயல்பட்டு வரும் பல எழுத்தாளர் சங்கங்களால் தமிழ் இலக்கியம் அப்படியயான்றும் பெரிதாக வளர்ந்துவிடவில்லை.
ஏனெனில் ஒரு இலக்கியவாதியின் எழுத்துக்களைப் பொறுத்தவரை மிகச் சிறந்த நீதிபதிகள் வாசகர்களே. எழுத்து முழுக்க முழுக்க வணிக மயமாகிவிட்ட இன்றையச் சூழ்நிலையிலும் கூட நல்ல எழுத்துக்களைப் படிக்கவும் பாராட்டவும் வாசகர்கள் இருக்கவே செய்கின்றனர். ஏனெனில் நல்ல எழுத்து உண்மையை எடுத்துக் கூறுவதாக இருப்பதால் அதை எளிதில் அழிக்க முடியாது. ஏனெனில் அது எத்தனை எதிர்மறைச் சூழ்நிலையிலும் தன் வலு முழுவதையும் திரட்டித் தன்னை அழியாமல் பாதுகாத்துக் கொள்ளவே செய்யும். அது தான் உண்மையின் தன்மை. அப்படிப்பட்ட உண்மையை உயர்த்திப் பிடிக்கும் எழுத்துக்களை வரவேற்கும் சிலராக ஆனால் மேலான சிலராக இருக்கும் வாசகர்களால் பாராட்டப் பெற்ற எழுத்தாளர் சங்க எழுத்தாளர் எவரின் படைப்புகளும் சமீப காலங்களில் வரவில்லை.
எழுத்தாளர் சங்கங்கள் என்று உருவாக்கப்படுபவை ஒரு குறிப்பிட்ட கருத்தோட்டத்தைக் கொண்டவர்களால் உருவாக்கி நடத்தப்படுபவை. அவ்வமைப்புகளை வழிநடத்தும் கட்சிகள் சமூகத்தின் யதார்த்த நிலையை மிகச் சரியாகக் கணக்கிலெடுத்து அவற்றின் அடிப்படை அரசியல் வழிகளை தீர்மானித்தவையாக இருக்கும் போது மட்டுமே அவை வழிநடத்தும் எழுத்தாளர் சங்கங்களுக்கு உண்மையை எவ்விதத் தயக்கமுமின்றி கலை நயத்துடன் எடுத்துரைக்கும் உத்வேகத்தை வழங்க முடியும்.
ஆனால் நாடாளுமன்ற வாதமே தங்களின் ஒட்டுமொத்த அரசியல் என்ற நிலைக்கு இடதுசாரிக் கட்சிகள் சீரழிந்து விட்டால் வாக்கு வங்கி அரசியல் ஏற்படுத்தும் வரையறை அவை வழிநடத்தும் எழுத்தாளர் சங்கங்களின் உறுப்பினர்களின் எழுத்துக்களையும் கட்டுப்படுத்தவே செய்யும். இவ்வாறு எழுத்தாளர் சுதந்திரம் கட்டுப்படுத்தப் படுவதற்கும் அராஜக தனிநபர் வாதம் எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் வருவதைக் கட்டுப்படுத்துவதற்கும் பெரியதொரு வேறுபாடு உள்ளது. இவ்வாறு வழிகாட்டும் அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுவதனால் தானோ என்னவோ நாம் ஏற்கனவே பார்த்தது போல் உயர்ந்த படைப்பிலக்கியங்கள் எவையும் எழுத்தாளர் சங்கங்களில் உறுப்பினராய் இருப்பவர்களிடம் இருந்து வெளிவருவதில்லை.
அதைப்போல் தான் மொழி வளர்ச்சிக்கென போடப்படும் மாநாடுகளும். மாநாடுகள் போட்டதில் எவ்வளவு செலவானது என்ற கேள்விக்கு வேண்டுமானால் அவர்களிடமிருந்து திட்டவட்டமான பதில் கிட்டலாமே தவிர எவ்வளவு தூரம் அதனால் மொழி வளர்ந்தது என்ற கேள்வி மாநாடு ஏற்பாடு செய்தவர்களை, செய்பவர்களைப் பொறுத்தவரை மிகவும் ஆபத்தான கேள்வியாகத்தான் இருக்கும். அக்கேள்விக்கான ஆம் என்ற பதில் அவர்களில் உண்மைக்கு மதிப்பளிக்கும் யாரிடமிருந்தும் கிடைக்காது.
தமிழின் வளர்ச்சிக்கு மாநாடுகள் காரணமாக இருந்ததில்லை
தமிழ் மொழியைப் பொறுத்தவரை அது ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்த நிலையில் இருந்து இன்று எவ்வளவோ வளர்ந்துள்ளது. அது வளர்ந்தது சங்கம் வைத்தோ, மாநாடுகள் நடத்தியோ அல்ல. தமிழ் மொழி மட்டும் அல்ல; அனைத்து மொழிகளின் வளர்ச்சியுமே எப்போது ஏற்படும் என்றால் அந்த மொழியின் மூலம் புதுப்புதுக் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்படும் போது மட்டும் தான். அத்தகைய அவசியங்கள் சமூக மாற்றத்திற்கான எழுச்சிகள் தோன்றும் போது எழுச்சிக்குரிய புதிய கருத்துக் களை மக்கள் மத்தியில் கொண்டு வருவோருக்கு ஏற்படும். அதுவரை மொழியில் இல்லாத புதுக் கருத்துக்களை கொண்டுவரும் போது சொல், பொருள், சுவை அனைத்திலும் புதுமைப் போக்குகள் மொழியில் தலை தூக்கும்; மரபுத் தளைகள் தகர்ந்து போகும்.
ஆங்கிலக் கல்வி மூலம் கிட்டிய ஜனநாயகக் கருத்துக்கள் தமிழ் வளர்ச்சிக்கு உதவின
ஆங்கிலத்தோடு நமது மொழிக்கு பரிச்சயம் ஏற்பட்ட போது அதன் விளைவாகப் பல வளர்ச்சிகள் தமிழில் ஏற்பட்டன. நாவல் இலக்கியம் தலை தூக்கியது, சிறுகதை இலக்கியம் அரும்பி மலர்ந்தது, புதுக் கவிதைகள் இலக்கிய வானில் விண்மீன்களாக மின்னின. இலக்கிய விமர்சனமும், திறனாய்வும் அதன் விளைவாகத் தோன்றி வளர்ந்தன. இதன் காரணம் ஆங்கிலம் வளர்ச்சியடைந்த மொழியாக இருந்தது மட்டுமல்ல. அம்மொழி அறிவைப் பெற்றதன் மூலம் ஜனநாயகக் கருத்துக்களை நம்மவர் அறிந்து கொண்டதே.
அதன் பின்னர் இலக்கியங்கள் மேட்டுக்குடி மக்களுக்காகப் படைக்கப்படுபவை என்ற போக்கு மங்கிப் போனது. அது சாதாரண மக்களைப் பற்றியும், சாதரண மக்களுக்காகவும் எழுதப்படக் கூடியது என்ற சூழ்நிலை தோன்றியது. அவ்வேளையில் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழியின் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டது. இத்தகைய வளர்ச்சியைக் கொண்டுவர மாநாடுகள் எவையும் போடப்படவில்லை.
ஒரு மொழியின் வளர்ச்சிக்குப் பிரிவினை வாதக் கருத்துக்கள் உதவுவதில்லை
அதன் பின்னர் ஒரு காலகட்டம் ஏற்பட்டது. அதில் “மெல்லத் தமிழ் இனி சாகும்” என்பது போன்ற எதிர்மறைக் கருத்துக்கள் பட்டிமன்றப் பொருள்களாக வைத்துக்கூடப் பேசப்பட்டன. ஏன் இந்த வீழ்ச்சி அதிலும் உடல் மண்ணுக்கும் உயிர் தமிழுக்கும் என்று முழங்கியோர் கோலோச்சும் வேளையில்.
பின்தங்கிய நிலவுடமை சமூக அமைப்பில் இருந்து அதைக் காட்டிலும் முன்னேறிய ஒரு சமூக அமைப்பைக் கொண்டு வருவதற்காக ஜனநாயகக் கருத்துக்கள் பொங்கிப் பிரவாகித்த வேளையில் தமிழ் மொழி வளர்ந்தது. அதன் பின்னர் நிலவுடமை இருந்த இடத்தில் அரைவேக்காட்டுத்தனமான முதலாளித்துவம் வந்தது. அது அரைகுறை வளர்ச்சியுடன் நின்றுவிட்டது. அவ்வேளையில் தமிழ் மண்ணில் வடக்கே இருந்து வரும் மூலதனப் போட்டியை முன்னோக்கிப் பார்த்து தமிழ் முதலாளிகள் பயந்தனர். அந்த வடக்கத்தி மூலதனத்தை வரவிடாமல் கட்டுக்குள் வைப்பதற்கான ஒரு புதிய தமிழ் உணர்வு குறித்த எழுச்சி தமிழ் முதலாளி வர்க்கத்தால் விசிறி விட்டு வளர்க்கப்பட்டது.
அதன் ஊது குழல்களாகவே நமது திராவிடக் கட்சியினர் இருந்தனர்.
இந்தப் பின்னணி, புதுக் கருத்துக்கள் எவற்றையும் உருவாக்கும் திராணி கொண்டதாக இல்லை. அதன் விளைவு அரைத்த மாவையே அரைக்கும் அர்த்தம் இல்லாது அடுக்கு மொழிகளைப் பிரயோகிக்கும் ஒரு போக்கு வளர்ந்தது.
ஒன்றுமில்லாமல் மணிக்கணக்கில் பொது மக்கள் மத்தியில் ஒருவர் பேசமுடியும் என்ற போக்கு தலை தூக்கியது. அத்தகு பேச்சாளர்கள் கருத்து எதுவுமின்றி, பேசுவது ஒன்றையே தொழிலாகக் கொண்டு வளர்ந்தனர். பேச்சில் கருத்து இல்லாமல் போனதால் பிறரைப்பற்றி வசை பாடுவதற்கு அவர்களின் உரைகளில் பஞ்சமிருக்கவில்லை.
அர்த்தமில்லாத அடுக்குமொழி அலங்காரச் சொல்லாடல்களுக்காக உண்மைகள் பலி கொடுக்கப்பட்டன. திராவிடக் கட்சியயான்றின் தலைவர், ஒருமுறை தனது உரையில் பொதுவுடைமை பூத்துக் குலுங்கும் போலந்தும், ஹாலந்தும் என்று கூறினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்தப் போக்கு எவ்வளவு தலை தூக்கியிருந்தது என்பதை.
இந்தப் போக்கினை அம்பலப்படுத்தும் அரசியல் குறிப்பாக இடதுசாரிக் கட்சிகளால் கையிலெடுக்கப்பட்டு அடிப்படையான சமூக மாற்றத்தை வலியுறுத்தும் எழுத்துக்கள் தட்டியயழுப்பி விடப்படாத நிலையில் தமிழில் தேசிய அளவிலோ உலக அளவிலோ அங்கீகரிக்கத்தக்க இலக்கியங்கள் எதுவும் தோன்றவில்லை.
செம்மொழிக் கோரிக்கை எழுப்பப்பட்டதன் பின்னணி
இந்த அவல நிலையை மூடி மறைக்க அந்த அமைப்பிற்கு உலகத்தமிழ் மாநாடுகள் தேவைப்பட்டன. சாதாரண மக்களை ஏமாற்றவும் பொது மக்களிடம் அவர்களின் அறியாமையை அடிப்படை யாக வைத்து உச்சபட்சத் தொனியில் கோயபெல்ஸ் பாணிப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டு அரசியல் நடத்தவும் மட்டும் அவை பயன்பட்டன.
உலகத்தமிழ் மாநாடுகள் நடத்தி நடத்தி அலுத்துப்போய் அதன் பின்னர் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்ததால் தமிழுக்கு ஆற்றிய அரும்பணி என்று காட்டுவதற்காக தமிழைச் செம்மொழியாக்கு என்ற கோரிக்கை தி.மு.க. வினரால் முன் வைக்கப்பட்டது. அதனை அறிவிப்பதில் மத்திய அரசுக்கு எந்தவகைத் தயக்கமும் இருக்கவில்லை. ஏனெனில் அதனால் மத்திய அரசுக்கு எந்த ஒரு இழப்பும் இல்லை.
தற்போது இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசுடன் கைகோர்த்து நின்றதன் விளைவாக ஏற்பட்ட தமிழுணர்வு கொண்ட மக்களின் அவநம்பிக்கை மற்றும் அதிருப்தியிலிருந்து தப்பிப்பதற்காகப் பல கோடிக்கணக்கான ரூபாய் செலவில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது.
செம்மொழி அறிவிப்பினால் தமிழ் மொழியின் பக்கம் உலக மக்களின் பார்வை ஒன்றும் பெரிதாகத் திரும்பவில்லை. ஆனால் கேரளக் கல்வி அமைச்சரும், ஆந்திர அரசியல் வாதிகளும் தங்களது மொழிகளையும் செம்மொழிகளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்தடுத்து முன்வைத்தனர். அதற்கே அது உதவியது.
பெயரளவிலான உயர்நீதிமன்ற மொழி அறிவிப்பு
தங்களது தமிழ்ப் பற்று இன்னும் குன்றிவிடவில்லை என்று காட்டுவதற்காக தமிழக அரசு 2004 ல் விடுத்த அறிவிப்பு தமிழ் உயர் நீதிமன்ற மொழியாகவும் ஆக்கப்பட்டு உள்ளது என்பதாகும்.
இது குறித்த மசோதா ஒன்றினை சட்டமன்றத்தில் நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி உள்ளது. ஆனால் அந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்துக் கிடக்கிறது. இதையயாத்த மேற்குவங்க அரசின் வங்க மொழி உயர் நீதிமன்ற மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற மசோதா பல காலம் கிடப்பில் போடப்பட்டு அதன் பின்னர் அது சாத்தியமற்றது என்று சட்ட அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. இந்நிலையில் இதனை முழுமையாக அமலாக்கி உயர்நீதிமன்ற மொழியாக தமிழ் உடனடியாக ஆக்கப்பட வேண்டும் என்று கோரி மதுரையில் வழக்கறிஞர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அது கோவை, சென்னை பகுதிகளுக்கும் பரவியது.
போராடும் வழக்கறிஞர்களின் நோக்கம் செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இது போன்ற தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டால் கோரிக்கையை வென்றெடுத்து விடலாம் என்பதே. அவ்வாறு அவர்கள் நினைத்ததில் தவறொன்றும் இல்லை. ஏனெனில் முக்கிய எதிர்க்கட்சி அமைப்பு ரீதியான வலுவுடன் இருக்கும் கோவையை செம்மொழி மாநாடு நடைபெறும் இடமாகத் தேர்ந்தெடுத்து அரசு செலவில் கூட்டம் கூட்டிக் காட்டி தனது அமைப்பின் வலுவைப் பறைசாற்றி அரசியல் நடத்துவது ஆளுங்கட்சியைப் பொறுத்தவரை புத்திசாலித் தனமானது என்றால் மாநாடு நடைபெறும் தருணத்தை கோரிக்கையை வலியுறுத்தும் தருணமாக வழக்கறிஞர்கள் தேர்ந்தெடுத்ததும் புத்திசாலித் தனமாகத்தானே இருக்கும். ஏனெனில் புத்திசாலித் தனம் யாரும் மொத்தக் குத்தகை எடுத்துவிட்ட விசயமில்லையே.
வழக்கறிஞர் போராட்டத்தை ஆட்சியாளர் எதிர்கொண்ட விதம்
ஆனால் குறைந்தபட்ச நாணயத்துடன் கூட மொழி சார்ந்த இப்பிரச்னையை அணுகாமல் இப்போராட்டம் குறித்து ஊடகங்களை செய்தி வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்யச் செய்து செம்மொழி மாநாடு முடியும்வரை காலம் தாழ்த்தி கோரிக்கையின் வீச்சைக் குறைப்பதிலேயே தமிழக அரசு தனது முழுக்கவனத்தையும் செலுத்தியது.
ஏனெனில் தமிழுணர்வு மிகுந்தவர்கள் என்று தமிழ் நாட்டை ஆளும் கட்சியினர் காட்டுவது சுயலாபத்திற்காக மட்டுமே. அறிவிப்புகளைப் பெரிதாக விளம்பரம் செய்து அதன்மூலம் அரசியல் லாபம் பெறும் உள்நோக்கம் கொண்ட இவர்களின் மொழிப்பற்று உண்மையில் உதட்டளவிலானதே. ஏனெனில் இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது அத்தனை எளிதானதல்ல என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். ஏற்கனவே மேற்கு வங்கத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட பரிந்துரை நடைமுறை சாத்தியமில்லாதது என்று சட்ட அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்டதையும் இவர்கள் அறியாதிருக்க முடியாது.
மேலும் இது குறித்த ஜனாதிபதியின் ஒப்புதல் சங்கிலித் தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் யாரும் அறியாததல்ல.
இந்நிலையில் நான் இதையயல்லாம் தமிழுக்காகச் செய்தேன் என்று மக்களிடம் அரசு மற்றும் தங்கள் கைவசம் இருக்கும் பிரச்சார சாதனங்களை முடுக்கிவிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வரவிருக்கும் தேர்தலில் ஆதாயம் அடையச் செய்யப்பட்டவையே ஆளும் கட்சியின் மாநாடுகளும், அறிவிப்புகளும்.
இந்நிலையில் உண்ணாநோன்பு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பல தினங்கள் நீடித்த சூழ்நிலையில் பல அரசியல் கட்சிகளின் பார்வைகள் போராட்டத்தின் பக்கம் திரும்பின. அனைத்துக்கும் மேலாகப் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் இப்போராட்டத்தை ஆதரித்து அறிக்கை என்றை வெளியிட்டவுடன் இதற்கு மேலும் தாங்கள் மெளனமாக இருக்க முடியாது என்ற சூழ்நிலை ஆட்சியாளர் களுக்கு ஏற்பட்டது. அந்நிலையில் குறைந்தபட்சம் ஒரு உறுதி மொழியை யாவது மத்திய சட்ட அமைச்சரிடம் இருந்து பெற்று இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்து உண்ணா விரதமிருப்பவர்களின் உடல்நிலை அபாய கட்டத்தை எட்டுவதைத் தடுக்கலாம் என்று கூட முயற்சிக்காமல் கைது நடவடிக்கை மூலமே இப்போராட்டத்தை அரசு அணுகியது.
ஹிந்தி உயர் நீதிமன்ற மொழி என்ற அறிவிப்பு
மக்களின் பிரச்னைகள் எதையும் நேரடியாக எதிர்கொண்டு அவற்றை தீர்த்து வைக்கும் நிலையில் நமது ஆட்சியாளர்களை ஆளும் முதலாளி வர்க்கம் வைத்திருக்கவில்லை. அதனால் பிரச்னை எதையும் எண்ணிப் பார்க்காமல் செயற்கையாக விசிறிவிடப்படும் பிரிவினை வாதப் போக்குகளில் மக்களை மூழ்கடிப் பதிலேயே ஆட்சியாளர்கள் அக்கறை யுடன் இருக்கின்றனர். அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றுதான் மத்திய அரசு உயர் நீதிமன்ற மொழியாக ஆங்கிலத்துடன் ஹிந்தியையும் சேர்த்ததாகும். அதற்கு முன்பே ஹிந்திதான் நமது ஆட்சி மொழி என்ற கருத்தை வெளியிட்டு அதன் விளைவாக தமிழ்நாடே அறுபதுகளில் பற்றி எரியும் சூழ்நிலையை உருவாக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது.
இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு. வெள்ளையரை எதிர் கொண்ட அந்த தேசிய இனங்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவாக கிடைத்த விடுதலை வெள்ளையர் இருந்த இடத்தில் இருந்து கொண்டு உள்நாட்டு முதலாளிகள் மக்களை சுரண்டுவதற்குக் கிடைத்த விடுதலையாக ஆகிவிட்டது.
அந்த நிலையில் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த முதலாளிகளிடையே ஒருவரின் பாலான மற்றொருவரின் நம்பிக்கைக்குப் பதிலாக ஒருவர் மீதான மற்றொருவரின் அவநம்பிக்கையே மிகுந்திருந்தது. தங்களது தேசிய இன மக்களின் சந்தையைப் பயன்படுத்துவதில் தங்களுக்கே முன்னுரிமை வேண்டும் என்ற அடிப்படை விருப்புடனேயே அனைத்து தேசிய இனங்களின் முதலாளிகளும் இருந்தனர். அதற்கு வலுச் சேர்ப்பதற்காகத் தங்கள் தேசிய இன மக்களைப் பிரிவினை வாதப் போராட்டங்களில் இறக்கி விடவும் தயங்காதவர்களாக அவ்வினங்களின் தேசிய முதலாளிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சியினர் இருந்தனர்.
இந்த நிலையில் ஹிந்திதான் ஆட்சிமொழி என்ற அறிவிப்பு அது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்று தெரிந்தே வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தை ஆட்சி மொழி அந்தஸ்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் ஆர்வம் ஆங்கிலம் ஒரு மொழி என்ற ரீதியில் மக்களிடையே ஊட்ட வல்லதாக இருந்த அறிவினை மக்களிடம் சென்று சேர விடாமல் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்நிலையில் ஆங்கிலத்துடன் ஹிந்தியை உயர் நீதிமன்ற மொழியாக ஆக்கியதும் அத்தகைய நோக்குடனேயே தான். ஒரு மொழி அதிக எண்ணிகையிலான மக்களால் பேசப்படுகிறதா என்பது அம்மொழிக்கு நீதிமன்ற மொழியாகும் அந்தஸ்தை வழங்கிவிடாது. அவ்வாறு இருந்தால் பிரெஞ்ச் மொழி உலக நீதிமன்றத்தின் மொழியாக ஆக்கப் பட்டிருக்க முடியாது.
தருணத்தைத் தவறவிட்ட போக்கு
இருப்பினும் ஹிந்தி மொழி சில மாநிலங்களில் உயர் நீதிமன்ற மொழியாக அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து தேசிய இன மக்கள் பேசும் மொழிகளும் அந்தந்த மாநிலங்களில் உயர் நீதிமன்ற மொழிகளாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும். ஹிந்தி உட்பட அனைத்து மொழிகளின் துரித வளர்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு அமைப்பு உண்மையிலேயே ஜனநாயகத் தன்மை கொண்டதாக இருந்தால் அதனிடம் இருந்து மக்கள் எதிர் பார்க்கக் கூடியது இதுதான். அதை விடுத்து மத்திய அரசு அடாவடித்தனமாக ஹிந்தியை மட்டும் உயர் நீதிமன்ற மொழியாக அறிவித்தது. அந்தப் பின்னணியில் தமிழக ஆட்சியாளர்கள் அப்போதே ஹிந்திக்கு இருக்கும் உயர் நீதிமன்ற மொழியாகும் அந்தஸ்து தமிழுக்கு இல்லாமல் போய்விடவில்லை என்பதை வலியுறுத்தி உரிமைக் குரல் எழுப்பியிருக்க வேண்டும். அதை அப்போதிருந்த தமிழக ஆட்சியாளர்கள் செய்யவில்லை.
மேலும் தமிழை ஒரு முழுமைபெற்ற சட்ட மொழியாக வளர்க்கும் நடவடிக் கைகளையும் அவர்கள் மேற்கொள்ள வில்லை. ஆனால் இப்போது தங்களது அரசியல் ஆதாயத்திற்காகவும் தங்களை தமிழுணர்வு மிகுந்தவர்கள் என்று காட்டுவதற்காகவும் வெறும் அறிவிப்பினை மட்டும் செய்து விட்டு அதற்கான குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறக்கூட முயற்சி செய்யாது கைது நடவடிக்கைகள் மூலம் அக்கோரிக்கை யைத் நசுக்க முயல்கிறார்கள்.
ஒரு ஜனநாயக உரிமை என்ற ரீதியிலும் தமிழக ஆளும் கட்சியினரின் போலித்தனத்தை தோலுரிக்கவும் தற்போது வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் வரவேற்கவும் ஆதரிக்கவும் தக்கதே. இருந்தாலும் போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் கோபம் போலித்தன்மை வாய்ந்த ஆட்சியாளர்கள் மீது இருக்க வேண்டுமே தவிர ஒரு மொழி என்ற ரீதியில் ஆங்கிலத்திற்கு எதிரானதாக ஆகிவிடக் கூடாது. மேலும் தமிழை உண்மையிலேயே எல்லாத் தகுதியும் பெற்ற நீதிமன்ற மொழியாக ஆக்கும் வகையில் அனைத்து முயற்சிகளும் அவர்களாலும் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்விசயத்தில் கோட்பாடு ரீதியான நிலையயடுத்து ஒரு ஜனநாயக அமைப்பில் நிலவ வேண்டிய மொழி சமத்துவம் பராமரிக்கப்பட என்ன செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்; அதன் பங்கும் பகுதியுமாக தமிழும் உயர் நீதிமன்ற மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும்.
அதை விடுத்து தமிழ் இப்போது மட்டுமல்ல, எப்போதும் எதையும் கற்கவும் எந்த அலுவலையும் நடத்தவும் முடிந்த மொழியாகவே இருந்திருக்கிறது என்று பேசுவதும், அதன் பழமை குறித்துப் பெருமை பேசுவதும் தமிழைச் சட்ட மொழியாக்க உதவாது. முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு தோன்றியவுடன் தோன்றிய சிவில் நிர்வாகமும், நீதி அமைப்பும் அதற்கு முன்பிருந்த நிர்வாக, நீதி அமைப்புகளிலிருந்து குணாம்ச ரீதியிலேயே வேறுபட்டவை. உலக அளவில் அனைத்து நாடுகளும் அந்த நீதி அமைப்பிற்குத் தேவையான அம்சங்களையும், கோட்பாடுகளையும் ரோமானிய நீதிக் கோட்பாடுகளிலிருந்து எடுத்துக் கொண்டன. இன்னும் கூடப் பல கோட்பாடுகளை லத்தீன் மொழியிலேயே அவை பயன்படுத்திக் கொண்டும் உள்ளன.
எனவே பொறுப்புடன் வெறுப்பேதுமில்லாது ஆங்கிலத்தையும் கற்று சட்ட நுணுக்கங்கள் பலவற்றைத் தமிழில் கொண்டுவர முயலவேண்டும்.
மாறாக தமிழ் மொழி இப்போதுள்ள நிலையிலேயே அறிவு சார்ந்த அனைத்துத் துறைகளிலும் எவ்விதப் போதாமையும் இன்றி பயன்படுத்தத் தகுந்த மொழியாக ஆகிவிட்டது என்றும், தமிழில் தற்போதுள்ள நூல்களைக் கற்றாலே போதும் குறைவற்ற அறிவினைப் பெற்றுவிட முடியும் என்றும் எண்ணுவதும் பேசுவதும் தமிழையும் அறிவையும் வளர்க்க உதவாது.
எந்த மொழியும் யாரையும் எப்போதும் அடிமைப் படுத்தியது கிடையாது. நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளை ஆட்சியாளர்களை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடை பெற்றபோது அவற்றில் பங்கேற்காது பல்வேறு காரணங்களுக்காக வெள்ளையர்களை ஆதரித்த தலைவர்களை இன்று தங்களது ஆசான்கள் என்று கருதும் பலரும் அவ்வெள்ளையர்களின் மொழியான ஆங்கில மொழியை மட்டும் அன்னிய மொழி என்று கூறுவது தான் இதில் மிகவும் ஆச்சரியமான விசயம்.
ஆரம்பப் பள்ளியிலிருந்து கற்பிக்கப்படும் ஆங்கிலம் முறையாக ஒரு பாடம் என்ற ரீதியில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்படாமல் போனதன் காரணமாகவே அது கடினமான மொழியாகப் பலருக்கு ஆகிவிட்டது. அதனால் அன்னிய மொழியாகவும் ஆகிவிட்டது. இன்று தமிழுக்கும் தமிழ் நாட்டின் பல்வேறு அறிவுத் துறைகளுக்கும் அரிய வழங்கல்களைச் செய்த பலரும் முழுக்க முழுக்க ஆங்கில வழியில் கற்றவர்களல்ல. மாறாக தமிழுடன் ஆங்கிலத்தையும் ஒரு பாடமாகப் படித்தவர்களே.
தமிழின் பக்கம் உலகின் பார்வை திரும்ப செய்யப்பட வேண்டியவை
உலகத்தமிழ் மற்றும் செம்மொழி மாநாடுகளில் எப்போதுமே பெரிதும் பலராலும் பேசப்படுவது உலகின் பல்வேறு மொழிகளுக்குத் தமிழில் உள்ள உயர்ந்த வியங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதாக இருக்கிறதே தவிர தமிழுக்குப் பிற மொழிகளிலிருந்து கொண்டுவரப்பட வேண்டிய விசயங்கள் எவை என்று பார்ப்பதாக இல்லை. உண்மையில் இது ஒருவகை உணர்வை மட்டும் சார்ந்த வெறிவாதமே தவிர அறிவு சார்ந்த பக்குவமான அணுகுமுறை அல்ல.
மாவீரன் பகத்சிங்கை மிகவும் கவர்ந்த பண்டித ஜவஹர்லால் நேருவின் ஒரு வாசகமே இங்கு நமது நினைவிற்கு வருகிறது. இந்த உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கும் கூட உலகம் முழுவதும் எடுத்துக் கொள்வதற்காக வழங்குவதற்கு நம்மிடம் ஏராளமான விசயங்கள் இருக்கின்றன என்று கூறாததொரு நாட்டைப் பார்க்க முடியாது. ஆனால் நம்மைப் பொறுத்தவரை இந்தியா உலகிற்கு வழங்க வைத்திருக்கும் வியங்களை விட பிற நாடுகளிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய வியங்களே அதிகம் என்று நேரு கூறினார்.
எனவே இத்தகைய வெறிவாத அணுகுமுறைகளின் மூலம் எந்த வளர்ச்சியும் தமிழ் மொழியைப் பொறுத்தவரை ஏற்படப் போவதில்லை. உண்மையான தமிழ் வளர்ச்சியை சமத்துவ சமுதாயத்தை அமைக்க விரும்பும் உண்மையான சமூகமாற்றக் கருத்தாயுதம் தரித்தவர்களாலேயே ஏற்படுத்த முடியும்; சமூகத்திற்குத் தேவைப்படும் அவர்களது புதுக் கருத் துக்களைப் புதிய வடிவில் முன்வைப் பதின் மூலமே தமிழின் வளர்ச்சிக்கான புது இரத்தத்தைப் பாய்ச்ச முடியும்.
அதனைச் செய்ய உழைக்கும் வர்க்க ஆசான்கள் நமக்குக் கற்றுக் கொடுத்த கண்கொண்டு சமூக நிகழ்வுகளைப் பார்த்து அவற்றின் மூலம் நமது அறிவிற்குப் புலப்படும் சமூகத்தில் நிலவும் அடிப்படைத் தன்மைகளை எவ்வகை திரிபும் இன்றி எடுத்துக் கொள்ள வேண்டும்; அதாவது சமூகத்தின் மையமான வேதனை எது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனைப் பிரதிபலிக்கும் விதத்தில் அனைத்து அறிவுத்துறை சார்ந்த நமது படைப்புகளும் அமைய வேண்டும்.
இன்று முற்போக்காளர்கள் என்று தங்களை கூறிக்கொண்டு திரியும் பலரைப் போல் ஜாதிய , இனவெறிவாத வண்ணக் கண்ணாடிகள் போட்டு சமூக நிகழ்வுகளைப் பார்க்கக் கூடாது. அவ்வாறு பார்ப்பது நிலவும் சமூக அவலத்தைப் பிரதிபலிக்க உதவாது.
ஏற்கனவே அதுபோன்ற காமாலைக்கண் பார்வையினால் வெளிப்படுத்தப்பட்ட பல்வேறு சமூகம் குறித்த யதார்த்த நிலைமைக்கு பொருந்திவராத , திரிந்த , சிதைந்த சித்திரங்கள் முற்போக்கு முக விலாசத்தின் மீதே அவநம்பிக்கை முத்திரை விழுவதற்குக் காரணங்களாக இருந்திருக்கின்றன. அதிலிருந்தும் படிப்பினை எடுத்துக் கொண்டு சமூகமாற்ற சக்திகள் களமிறங்கினால் தமிழ் மட்டுமல்ல இந்தியாவில் அனைத்து தேசிய இன மொழிகளும் வீறு நடைபோட்டு வளரும். அவற்றின் வளர்ச்சிக்கு மாநாடுகள் தேவைப்படாது.
இன்றைய உலகமயச் சூழலில் ஆங்கிலம் தவிர்க்க முடியாத வகையில் அவசியம் கற்க வேண்டிய ஒரு மொழியாக ஆகியுள்ளது. எனவே எத்தகைய மொழித் துவேசமுமின்றி முடிந்தவர்கள் முடிந்த அளவு நமது கலாச்சார வாழ்வில் இடம்பெற்று விட்ட அம்மொழியினையும் கற்று அதன்மூலம் கிட்டும் உலக அறிவினையும் தமிழ் மொழிக்குக் கொண்டு வர வேண்டும்.
அந்நிலையில் செம்மொழி அறிவிப்பின் போது தமிழின் பக்கம் திரும்பாத உலக மக்களின் பார்வை தாமாகவே அம்மொழியின் பக்கம் திரும்பும்.
இதற்கு எடுத்துக்காட்டாகத் தமிழ் மொழி அளவிற்கு வளர்ச்சி பெறாத பல ஆப்பிரிக்க மொழிகள் பெற்ற வளர்ச்சியை நாம் பார்க்க முடியும். ஆப்பிரிக்க மக்களின் நிறவெறி, ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களைப் பிரதிபலித்த இலக்கியங்கள் அவற்றின் அசைக்க முடியாத அசல் தன்மையைப் பதிவு செய்த போது எந்த ஆப்பிரிக்க இனம் இலக்கியம் போன்ற நுண்ணறிவு ஒருபோதும் எட்டவியலாத இனமென்று வர்ணிக்கப்பட்டதோ அந்த இனத்தின் இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் அங்கீகரிக்க வேண்டிய அவசியம் அவ்வாறு அவ்வினத்தை வர்ணித்தவர்களுக்கே ஏற்பட்டது.