அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஒன்று - சமூக நீதியைப் புதைகுழிக்கு அனுப்பி வந்த மத்திய தேர்வாணையத்தின் பார்ப்பனப் போக்குக்கு எதிரானது; (22.3.2008) மற்றொன்று - தமிழ்நாட்டுக் கோயில்களில் சமஸ்கிருதத்தில் மட்டுமே வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்ற பார்ப்பன இறுமாப்புக்கு எதிரானது; இரண்டுமே வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்புகள்; பார்ப்பன ஆதிக்கத்தின் முகமூடியைக் கிழித்துக் காட்டும் தீர்ப்புகள்.

மத்திய அரசும், மத்திய அரசின் தேர்வாணையமும், அகில இந்திய சர்வீசுகளில் இழைத்து வந்த அநீதியை எதிர்த்து சமூகநீதி கோரும் பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வந்திருக்கின்றன. பெரியார் திராவிடர் கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பார்ப்பன அதிகாரவர்க்கம் - நாட்டை எப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இந்த வழக்கு, மிகச் சிறந்த சான்றாக நிற்கிறது.

அய்.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய சர்வீசுகளில் தகுதி அடிப்படையில் திறந்த போட்டியிலேயே தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை, திறந்த போட்டியிலிருந்து விலக்கி, இடஒதுக்கீட்டுக்குரிய இடங்களில் நிரப்பும் தில்லுமுல்லுகளை மத்திய தேர்வாணையம் தொடர்ந்து செய்து வருகிறது. இதனால், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மேலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்படுவதோடு, திறந்த போட்டியில், தகுதி அடிப்படையில் தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தகுதியான பணி வாய்ப்புகள் கிடைப்பதும் மறுக்கப்பட்டு வந்தது.

இத்தனைக்கும் உச்சநீதிமன்றம் - இப்படி மாணவர்களை தேர்வு செய்வது முறையற்றது என்று ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. (ஆர்.கே. சபர்வாலா வழக்கு மற்றும் சத்ய பிரகாஷ் வழக்கு) ஆனாலும் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கிய பிறகும், அதைத் தூக்கி, குப்பைக் கூடையில் வீசிவிட்டு, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் சட்ட விரோதமாக, தனது விதிகளில் 16(2) என்ற திருத்தத்தைக் கொண்டு வந்து, இடஒதுக்கீட்டுக்குரிய வேட்பாளர்கள் - தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டாலும், இடஒதுக்கீடு கோட்டாவின் கீழே தான் நிரப்பப்படுவார்கள் என்று திமிரோடு அறிவித்தது. மத்திய சமூக நீதித் துறை அமைச்சகங்கள் இந்த சூழ்ச்சியைக் கண்டறிந்து, முதுகெலும்புடன் தட்டிக் கேட்கத் தவறி விட்டன. இத்துறைகளின் பார்ப்பன அதிகார வர்க்கம், தனது அதிகாரச் செல்வாக்கினால் துறை அமைச்சர்களைக்கூட கண்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட 32 விண்ணப்பதாரர்கள் தகுதி போட்டியில் தேர்வு பெற்றிருந்தும்கூட, அவர்கள், இடஒதுக்கீடு கோட்டாவில் சேர்க்கப்பட்டு விட்டனர்.

இதனால், தகுதியான பணி வாய்ப்புகளை ஒதுக்குவதில் இவர்கள் புறந்தள்ளப்பட்டனர். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தேர்வு பெறக்கூடிய 31 பேர் வாய்ப்பும் பறிக்கப்பட்டது. மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் முறைகேடான 16(2) வது விதி திருத்தம் சட்டவிரோதமானது என்று, பாதிக்கப்பட்ட ஆர். அருளானந்தம் மற்றும் இரமேஷ்ராம் என்ற மாணவர்கள் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். பார்ப்பனத் திமிருடன், நிர்வாகத் தீர்ப்பாயம், அந்தக் கோரிக்கைகளை புறந்தள்ளியது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர, வழக்கை விசாரித்த நீதிபதிகள், எலிப் தர்மாராவ், எஸ்.ஆர். சிங்காரவேலு ஆகியோர் ‘நெத்தியடி’ தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கொண்டு வந்த திருத்தம் சட்ட விரோதமானது. அது செல்லத்தக்கதல்ல என்று கூறிய நீதிபதிகள், 2004 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட தகுதியடிப்படையிலான பட்டியலை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் கொண்டு வந்த திருத்தம் சமூக நீதியை முன்னெடுப்பதற்குப் பதிலாக, பின்னுக்குத் தள்ளி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கான பயன்களைத் தடுப்பதாகும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். என்னதான் சமூக நீதிக்கான சட்டங்கள் வந்தாலும், அதை அமுலாக்கும் அதிகாரத்தில் உட்கார்ந்துள்ள பார்ப்பன அதிகார வர்க்கம் நந்திகளாக மாறி ‘நங்கூரம்’ போட்டு நிற்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரத்தின் ‘கடிவாளம்’ ‘அவாள்’களிடமே தங்கி நிற்கிறது.

மற்றொரு முக்கிய தீர்ப்பு - தமிழில் அர்ச்சனை வழிபாடு நடத்துவது, ஆகமங்களுக்கு எதிரானது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தர்மராவ், கே. சந்துரு ஆகியோர் வழங்கியுள்ள தீர்ப்பாகும் (20.3.2008) இந்து கோயில் பாதுகாப்புக்குழு தலைவர் வி.எஸ். சிவகுமார், முகவை மாவட்டம் உத்திரகோச மங்கை கோயில் அர்ச்சகர் பிச்சை பட்டர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இது.

“பக்தர்கள் தங்கள் விருப்பத்தைக் கடவுளிடம் தெரிவிக்கும் போது, அவர்கள் விருப்பத்தில் குறுக்கிட்டு, சமஸ்கிருதத்தில் மட்டுமே கூற வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. தேவநாகரி (சமஸ்கிருதம்) மட்டும் தான் கடவுளுக்கு தெரியும் என்றும், அந்த மொழிக்கு இணையாக தமிழ் இல்லை என்பது போல் மனுதாரர்கள் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். இந்த வாதத்தை நிராகரிக்கிறோம். தமிழ் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டால், இந்து மதம் மியூசியத்தில் அடங்கிப் போகும் நம்பிக்கையாகி விடும் என்று டாக்டர் ராதாகிருஷ்ணனே கூறியுள்ளார் என்று, நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எப்போதாவது, நீதிமன்றங்கள் இத்தகைய நம்பிக்கைகள் தரும் நல்ல தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

பார்ப்பன மேலாதிக்கம், தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவே தொடர்ந்து முயற்சிக்கிறது என்பதைத் தான் இந்த இரு வழக்குகளும் உணர்த்துகின்றன.

Pin It