இருப்பு கொள்ளா எரிச்சலோடு
வெறுப்பை உமிழ்வதே சிலருக்கு வேலை
மூத்திரப் பையை முக்கிச் சுமந்து
சூத்திரத் தமிழன் இழிவு தொலைக்க
பன்னூ றாண்டின் பழிக்குழி மூட
தொண்ணூறைக் கடந்தும் தொண்டில் துலங்கினார்
தந்தை பெரியார் என்றொரு தலைவர்; அவர்
இந்த மண்ணில் இருந்தார் இயங்கினார்!
என்னடா யார்அவர் என்று கேட்டால்
கன்னடர் எனச்சில கிறுக்கர் கழறுவார்
திராவிடர் என்றசொல் தேள்கொட்டு போலக்
குடையு தென்று குறுக்குச்சால் ஓட்டுவார்
ஆரியம் என்னும் அழும்பு தொலைக்க
நேர்எதிர் நின்ற கருத்தியல் திராவிடம்
சவடால் விட்ட சனாதனப் பார்ப்பான்
பிடரி உலுக்கிய சொல்பேர் திராவிடம்
அதுவரை அமுக்குண்ட மக்கட்கெல்லாம்
முதுகுத் தண்டாய் முகிழ்த்தது திராவிடம்
“உருப்படாய் பாரத இராமாயணத்தால்
திருக்குறள் படிபடி!” என்றது திராவிடம்
சாஸ்திரிக் கிணையாய்ச் சம்பளம் உயரப்
புலவரைப் போற்றிப் புரந்தது திராவிடம்
காட்டு மிராண்டிமொழி தமிழ்என்ற தெல்லாம்
பிள்ளையைக் கடியும் பெற்றவள் சாடல்.
அறிவின் உச்சத்தைத் தமிழ் அவாவிட
விரும்பிய நெஞ்சின் வேதனைப் புலம்பல்
பெரியார் முதலில் திராவிடம் கேட்டதும்
பின்னர் அதுவே தமிழ்நா டானதும்
சரியான இடத்தில் வந்து சேர்ந்த
தன்னலம் மறுத்த தத்துவ முடிவே
வாக்குச் சுவைதேடி வழிமாறிப் போன
நாக்கு வணிகரை நினைந்து பேசாதீர்.
நோண்டி, நோண்டி நொட்டை சொல்வது
தோண்டிப் புளுகர்க்குத் தோதான வேலை
இனநலக் காப்பாளர் என்போர் இந்தப்
பிணமறுக்கும் தொழில் பிழைத்தும் செய்யார்
பெரியாரியலை முன்னோக்கிப் பெயர்த்தலே
அறிவாளர் தம்மின் ஆக்கப் பணியாம்
ஒடுக்கப் பட்டோர் விடுதலைக்கு
முடுக்குவோம் போர் முனைந்து வருகவே!

Pin It