விடுதலைப் புலிகள், ராஜீவ் படுகொலை வழக்கு, கச்சத் தீவு, இலங்கை பிரச்சினையில் இந்திய அரசின் அணுகுமுறை ஆகிய அனைத்து கோணங்களிலும் 12 கேள்விகளுடன் விரிவானதொரு சர்வே நடத்தியது ‘ஆனந்த விகடன்’ குழு. இணைய தளத்தில் 2,130 பேர், சர்வே டீம் நேரடி விசிட்டில் தமிழகம் முழுவதும் பதில் அளித்தவர்கள் 2065 பேர். ஆக, மொத்தம் 4195 பேர். ஆண்கள், பெண்கள், நகர்ப்புறம்- கிராமப்புறம் என்று பலதரப்பட்டவர்கள் கலந்துகெண்ட இந்த சர்வேயின் பிரமிப்பூட்டும் முடிவுகளை இங்கே தருகிறோம். “ஈழத் தமிழர் விவகாரத்தில் இங்கே நிலவும் மனநிலை இதுதான்!” அடித்துச் சொல்லும் சர்வே முடிவுகள் என்ற முன்னுரையுடன் சர்வே முடிவுகளை கீழ்க்கண்டவாறு வெளியிட்டுள்ளது ‘ஆனந்த விகடன்’.
• விடுதலைப்புலிகள் இயக்கத்தை எப்போதும் ஆதரிக்கிறேன் என 54.24 சதவீதமும், எப்போதும் எதிர்க்கிறேன் என 17.40 சதவீதமும், ராஜீவ்காந்தி படுகொலைக்கு முன்பு ஆதரித்தேன் என 28.34 சதவீதமும் -
• இலங்கைத் தமிழர்களுக்கான தமிழீழம் அமைப்பது என்ற கேள்விக்கு சரியான தீர்வு என 55.44 சதவீதமும், தேவை இல்லை என 9.91 சதவீதமும், சுயாட்சி அதிகாரம் கொடுத்தால் போதும் என 34.63 சதவீதமும் -
• இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை என்ற கேள்விக்கு தடையை நீக்க வேண்டும் என 47.65 சதவீதமும், தொடர வேண்டும் என 27.43 சதவீதமும் பொறுத்திருந்து பார்க்கலாம் என 24.91 சதவீதமும் -
• விடுதலைப் புலிகள் இயக்கத்தை வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் போன்றவர்கள் ஆதரிப்பது பற்றிய கேள்விக்கு ஆதரிப்பது சரியான நிலைப்பாடுதான் என 49.36 சதவீதமும், ஆபத்தான கொள்கை என 13.61 சதவீதமும், வேறு லாப நோக்கத்துக்காக என 37.02 சதவீதமும் -
• தரைப்படை, கடற்படை, வான் படை என்று விடுதலைப்புலிகள் வளர்ச்சி அடைவது பற்றிய கேள்விக்கு பெருமைக்குரிய விசயம் என 46.24 சதவீதமும், இந்தியாவுக்கு ஆபத்து என 18.59 சதவீதமும், இரண்டுமே இல்லை என 35.16 சதவீதமும் -
• விடுதலைப் புலிகளை தி.மு.க. ...... என்ற கேள்விக்கு ஆட்சியைப் பற்றி கவலைப்படாமல் ஆதரிக்க வேண்டும் என 47.48 சதவீதமும், இன்னும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என 22.71 சதவீதமும், இப்போது போலவே பட்டும் படாமலேயே இருக்கலாம் என 29.79 சதவீதமும் -
• தண்டனைக் காலத்துக்குப் பிறகும் சிறையில் இருக்கும் நளினியை.... என்ற கேள்விக்கு விடுதலை செய்ய வேண்டும் என 41.64 சதவீதமும், விடுவித்துக் கண்காணிப்பில் வைத்திருக்கலாம் என 37.64 சதவீதமும், சிறை தண்டனை தொடரட்டும் என 20.71 சதவீதமும் -
• கச்சத்தீவை இந்தியா ... என்ற கேள்விக்கு திரும்பப் பெற வேண்டும் என 66.76 சதவீதமும், விட்டுவிடலாம் என 6.26 சதவீதமும், குறைந்த பட்சம் அந்தப் பகுதிக்குப் போகும் உரிமையையாவது பெற வேண்டும் என 27.96 சதவீதமும் - என பதிலளித்துள்ளனர். மேலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தவர் விவரம்:
இலங்கைக் கடற்படையால் நமது மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் பிரச்சினைக்கு... என்ற கேள்விக்கு ஆயுத ரீதியாக பதிலடி கொடுக்கலாம் என 29.65 சதவீதமும், பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கலாம் என 34.89 சதவீதமும், சர்வதேச அரங்கில் இலங்கையைக் கடுமையாகக் கண்டிக்கலாம் என 35.44 சதவீதமும் – ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரன்... என்ற கேள்விக்கு, கைது செய்யப்பட வேண்டும் என 43.02 சதவீதமும், குற்றமற்றவர் என 16.90 சதவீதமும், குற்றத்தை மன்னித்து விட்டுவிடலாம் என 40.07 சதவீதமும் இலங்கை பிரச்னையில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு - தலையிட்டு தீர்வு காணலாம் என 62.59 சதவீதமும், தலையிடவே கூடாது என 12.58 சதவீதமும், நிலைமை கை மீறினால் மட்டுமே தலையிட வேண்டும் என 24.81 சதவீதமும் - கருத்துகளை தெரிவித்ததாக ‘ஆனந்த விகடன்’ 6.8.08 இதழில் வெளியிட்டுள்ளது.