சென்னை மாநாட்டில் கோரிக்கை 

அய்.நா.வின் சர்வதேச கோரிக்கையை ஏற்று, இந்தியாவில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னையில் நடை பெற்ற மரண தண்டனை ஒழிப்பு கோரிக்கை மாநாடு, மக்களின் கரவொலிக்கிடையே ஒருமித்து தீர்மானம் நிறைவேற்றியது. ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2.8.2008 சனிக்கிழமை மாலை தியாகராயர் நகர் சர். பிட்டி. தியாகராயர் அரங்கில் மரணதண்டனை ஒழிப்பு மாநாடும், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் எழுதிய ‘சிறை கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ (ஆங்கில பதிப்பு) நூல் வெளியீட்டு விழாவும், எழுச்சியுடனும் உணர்ச்சியுடனும் நடந்தது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை, இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

பிற்பகல் நான்கு மணியிலிருந்தே அரங்கம் நிரம்பி வழியத் தொடங்கி விட்டது. ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது தலைமை தாங்கினார். ஜெயலலிதா பார்ப்பன ஆட்சியில் ‘பொடா’வில் சிறைப்படுத்தப்பட்டு, ஒன்றரை ஆண்டுகாலம் சிறையிலிருந்தவரான சாகுல் அமீது, தனது வரவேற்புரையில் சிறையில் வாடும் பேரறிவாளன் பற்றியும், அவரது பெற்றோர்களும், தமிழின உறவுகளும், சந்திக்கும் துயரங்கள் பற்றியும் குறிப்பிடுகையில் நெகிழ்ச்சியுற்று, கண்ணீர் மல்கி உரையைத் தொடர முடியாமல் நிறுத்திக் கொண்டார்.

அன்புத் தென்னரசன் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதற்கான வாதங்களை முன் வைத்து, தனது வரவேற்புரையை நிகழ்த்தியதோடு நிகழ்ச்சிகளையும், தொகுத்து வழங்கினார். பேரவையின் பொறுப்பாளர்கள் கயல் தினகரன், எழில். இளங்கோவன், அ.இல. சிந்தா ஆகியோர் உரையைத் தொடர்ந்து தோழர் தியாகு உரையாற்றினார்.

தூக்கு தண்டனைக்கு எதிராக கவிஞர் தாமரை எழுதிய சிறப்பான கவிதையைப் படித்து, தனது உரையைத் தொடங்கிய தியாகு, ராஜீவ் கொலை வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டியதோடு, ‘அரிதிலும் அரிதான வழக்கு’ என்ற வரையறைக்குள், இந்த வழக்கு எப்படி வர முடியும் என்ற வினாவை எழுப்பினார்.

தமிழக முதல்வர் கலைஞர், அண்ணா பிறந்த நாளில் ஒவ்வொரு முறையும் 10 ஆண்டுகாலம் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை கைதிகளை அரசியல் சட்டத்தின் 161வது பிரிவு வங்கியுள்ள உரிமையின் கீழ், விடுதலை செய்து வந்ததை சுட்டிக்காட்டினார். கைதிகளின் மனித உரிமையிலும், தூக்குத் தண்டனை ஒழிப்பிலும் கொள்கைப் பூர்வமாக ஏற்புடைய முதல்வர் கலைஞர், அண்ணாவின் நூற்றாண்டில் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இயக்குனர் சீமான் தனது உரையில், இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் எவராவது பார்ப்பனர் இருந்திருந்தால் தூக்குத் தண்டனையை ரத்து செய்திருப்பார்கள். தூக்கு தண்டனையானாலும் ஆயுள் தண்டனையானாலும், சிறையை நிரப்பிக் கொண்டிருப்பவர்களானாலும் அதில் தொடர்புடையவர்கள் எல்லோரும் பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதால் இங்கே மனித உரிமைச் சட்டங்கள் திரும்பிப் பார்க்க மறுக்கின்றன என்று குறிப்பிட்டார்.

“மரணம் என்பது ஒரு முடிவு; அது எப்படித் தண்டனையாகும்? உண்மையில், தூக்கு தண்டனையில் தண்டிக்கப்படுபவர், தூக்கிலிடப்படுபவர் அல்ல; அவரது வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஆனால், அதில் தண்டிக்கப்படுவோர், தூக்கிலிடப்பட்டோரின் குடும்பத்தார் தான். இங்கே பேசிய தோழர் தியாகு - தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் தான்; அவர் தூக்கிலிடப்பட்டிருப்பாரேயானால், மார்ஸ் எழுதிய ‘மூலதனம்’ என்ற பெரும் தொகுதி நமக்கு தமிழில் கிடைத்திருக்குமா?” - என்று கேட்டார்.

தூக்கு தண்டனை என்பதே - கடவுள் நம்பிக்கைக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டிய சீமான், “ஒருவன் கொலை செய்யப்படுவான் என்று ஆண்டவன், அவன் தலைவிதியை நிர்ணயித்து விட்டால், பிறகு கொலை செய்தவனை ஏன் தண்டிக்க வேண்டும். எல்லாம் ஆண்டவன் விதிப்படி நடக்கும் என்று நம்புகிறவன், குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று கூறுவதே, ஆண்டவனுக்கு எதிரானது அல்லவா? நல்லவன் சொர்க்கம் போவான்; கெட்டவன் நரகம் போவான் என்று நம்பிவிட்டால், பிறகு, கடவுள் தண்டனையை மீறி இங்கே சிறைத் தண்டனை கொடு என்று உண்மையான பக்தர்கள் ஏன் கேட்கிறார்கள்! ‘ஒருவன் கொலை செய்யப்பட்டு சாவான்’ என்று தலையில் எழுதி வைத்த ஆண்டவனைத் தண்டிக்காமல், ஆண்டவன் விதித்த விதிப்படி செயல்பட்டவனை ஏன் தண்டிக்க வேண்டும்?” என்று பகுத்தறிவு அடிப்படையில் வினாக்களைத் தொடுத்தார்.

“தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற போராட்டத்துக்காக தமிழ்நாட்டில் படையை உருவாக்கியவர் புலவர் கலியபெருமாள். அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தவர், நமது முதல்வர் கலைஞர். நக்சல்பாரி இயக்கத்தில் சேர்ந்து, சாதி வெறி நிலப் பிரபுவை அழித்தொழிப்பு செய்த குற்றத்தின் கீழ் தூக்கு தண்டனைக்குள்ளானவர் தோழர் தியாகு.

அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்தவரும், நமது தமிழக முதல்வர் கலைஞர் தான். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பேரறிவாளன் உட்பட தூக்கு தண்டனைக்கு உள்ளான எனது தமிழின சொந்தங்களை விடுதலை செய்யுமாறு, நாங்கள் கலைஞரிடம், கோரிக்கை வைக்காமல் வேறு யாரிடம் கோரிக்கை வைக்க முடியும்?” என்று சீமான் கேட்டபோது, அரங்கமே கைதட்டி வரவேற்றது.

தொடர்ந்து பேசிய தோழர் தமிழச்சி மரணதண்டனைக்கு எதிரான ஏராளமான வரலாற்று செய்திகளை முன் வைத்து விரிவான உரை நிகழ்த்தினார். மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி தனது உரையில் ஜனநாயகத்திலும், பகுத்தறிவிலும் நம்பிக்கைக் கொண்டவர்கள், மரணதண்டனையை ஏற்க முடியாது என்றார்.

“தீவிரவாதம் உருவாவதைத் தடுக்க மரண தண்டனை தீர்வாகாது. அதற்கு சமூகப் பிரச்சினைகளில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். சாட்சிகளை வைத்து, குற்றங்களை தீர்மானிக்கின்றன நீதிமன்றங்கள். சாட்சிகள் நூறு சதவீதம் சரியானவை என்பதை எப்படி உறுதி செய்ய முடியும்? மரண தண்டனை தந்த பிறகு, அவர் நிரபராதி என்று தெரிய வந்தால், மீண்டும் உயிரைத் திருப்பித் தர முடியுமா? காந்தியார் கடவுள் தந்த உயிரை எடுப்பதற்கு, மனிதனுக்கு உரிமை இல்லை என்றார்.

புத்தரும், மனிதரைக் கொல்லும் தண்டனைகளை ஏற்க மறுத்தார். அந்த காந்தியும், புத்தரும் பிறந்த இந்த தேசத்தில், மரண தண்டனையை ஒழிக்க ஏன் தயங்க வேண்டும்? ஏன் சிலருக்கு, அந்தத் துணிவு வரவில்லை? என்று கேள்வி எழுப்பிய கனிமொழி, சிலப்பதிகார இலக்கியமே தூக்கு தண்டனைக்கு எதிரானதுதான் என்று சுட்டிக்காட்டினார்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசுகையில் - நாம் தூக்குத் தண்டனையை எதிர்ப்பது அது ஒரு அரச பயங்கரவாதம் என்ற அடிப்படையில்தான். அதே நேரத்தில் நாம் வெளிப்படையாகவே ஒரு கோரிக்கையை முன் வைக்க வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே இந்த மாநாடு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” - என்று வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேரறிவாளன் சிறையிலிருந்து எழுதிய ‘சிறை கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ நூலின் ஆங்கில பதிப்பை தொல். திருமாவளவன் வெளியிட, பொள்ளாச்சி உமாபதி பெற்றுக் கொண்டார். உமாபதி தனது உரையில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 28 பேரில் 17 பேர் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இத்தனை ஆண்டுகளில் இவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டாவது வந்திருக்கிறதா? குற்றம் சாட்டப்பட்டவர் எல்லோருமே நேர்மையானவர்கள் என்பதற்கு, இது சான்று அல்லவா?” என்று கேட்டார்.

இறுதியில் சுப. வீரபாண்டியன் நிறைவுரையாற்றினார். தீர்மானத்தை வழிமொழிந்து பேசிய அவர், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் பொய் சாட்சி கூறியவருக்கு தூக்கு தண்டனை உண்டு என்று சட்டம் கூறுகிறது. பொய்யான சாட்சியம் என்று தெரிந்த பிறகு, அவரை தூக்கில் போட்டுவிட்டால், ஏற்கனவே குற்றச்சாட்டில் தூக்கில் போட்டவர் உயிரை மீண்டும் கொண்டு வர முடியுமா? ஆக, பொய்யான சாட்சியங்கள்கூட ஒருவருக்கு தூக்கு தண்டனைக்கு வழி வகுக்கிறது என்பதை, இந்த சட்டப் பிரிவுகளே ஒப்புக் கொள்வதாகத் தானே பொருள்? என்ற கேள்வியை எழுப்பினார்.

நூலில் பேரறியாளன் சுட்டிக் காட்டிய ஒரு கருத்தையும், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் குறிப்பிட்டார். “வழக்கில் புலன் விசாரணை நடத்திய சி.பி.அய். அதிகாரி ரகோத்தம்பன் ‘ஜுனியர் விகடன்’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில், இந்த வழக்கில் இறுதி வரை விடுபடாத புதிர் தணுவின் இடுப்பில் கட்டியிருந்த பெல்டை தயாரித்தவர் யார் என்பதுதான் என்று குறிப்பிட்டிருந்தார். பெல்டை தயாரித்தது யார் என்பதை கண்டுபிடிக்கவே முடியாத நிலையில், அதற்கு பேட்டரி வாங்கித் தந்ததாக குற்றம் சாட்டி எனக்கு தூக்குத் தண்டனை விதித்தது நியாயம் தானா, என்ற கேள்வியை பேரறிவாளர் முன் வைத்துள்ளதை சுட்டிக் காட்டினார்.

மாநாட்டில் - கவிஞர்கள் தணிகைச் செல்வன், ஜெயபாஸ்கரன், கவிஞர் பச்சியப்பன் உணர்ச்சியான கவிதைகளை முழங்கினர். மு. மாறன் நன்றி கூறி இரவு 9.45 மணியளவில் நிகழ்ச்சி முடிவடைகிறது. 

Pin It