கேள்வி : இலங்கையில் போராடும் தமிழர்கள் - தமிழகத்திலிருந்து சென்றவர்கள் தானே; வேறு ஒரு நாட்டில் போய் அங்கே போராடுவது நியாயமா?

பதில் : இது உண்மையல்ல; போராடும் தமிழர்கள் - ஈழத்தின் மண்ணின் மைந்தர்கள்; சிங்களர்கள் இலங்கைக்கு குடியேறுவதற்கு முன்பே, அந்நாட்டின் பூர்வீகக் குடிகள், சங்க இலக்கியங்களான அக நானூறு மற்றும் குறுந் தொகையில், தமிழ் ஈழத்தில், தமிழர்களின் வாழ்க்கையை விளக்கிடும் பாடல்கள் உண்டு. எல்லாளன் என்ற தமிழ் மன்னன் - இலங்கை முழுவதையும், அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு தமிழர் - சிங்களர் இருவரையுமே 44 ஆண்டுகள் ஆட்சி செய் துள்ளான். (கி.மு.161-117) பின்னர் துட்டகைமுனு எனும் சிங்கள சிற்றரசன் போருக்கு வந்தபோது, எல்லாளன் படைகள் சிங்களப் படைகளை சிதறடித்தன.

தந்திரமாக நேருக்கு நேர் தனியாகச் சமரிட இளைஞனான சிங்கள சிற்றரசன் அழைத்த போது, அதில் ஏமாந்த வயது முதிர்ந்த எல்லாளன், போரிட்டு தோற்றான். தனி மனிதன் தோல்வி - தமிழ் அரசின் தோல்வி யாகியது. சிங்களர் வெற்றி பெற்றாலும் சில காலமே அவர்கள் ஆட்சி நீடித்தது. மீண்டும், பாண்டிய மன்னன் உதவியுடன் தமிழர் ஆட்சி தமிழ் ஈழத்தில் அமைந்தது. தமிழ் மன்னர்கள், தமிழர் பகுதியிலும், சிங்களர் சிங்களப் பகுதியிலும் ஆட்சி நடத்தினர். தமிழர் ஆட்சி, சிங்களர் ஆட்சிகள் தனித் தனியாக நடந்ததை அக்காலங்களில் வெளி யிடப்பட்ட வரைபடங்களே சான்று கூறுகின்றன.

போர்த்துகீசியர்கள் 177 ஆண்டுகளும், தொடர்ந்து டச்சுக்காரர்கள் 112 ஆண்டு களும், அதைத் தொடர்ந்து பிரிட்டிஷார்கள் 112 ஆண்டுகளும் இலங்கையை தங்கள் காலனிகளாக வைத்திருந்தனர். அப்போதும் தமிழ் ஈழப் பிரதேசம் தனியாகவே இருந்தது.

சிங்களர் தமிழர் பிரதேசங்களை ஒன்றாக, தனது நிர்வாக வசதிக்காக இணைத்தது, பிரிட்டிஷ் ஆட்சி தான். இணைப்புக்கு முன் பிரிட்டிஷ் அரசு அனுப்பி வைத்த கோல்புரூக் மற்றும் ஜே.எப்.டிக்சன் என்ற அதிகாரிகள் தலைமையிலான குழு, தமிழர், சிங்களர் என்ற வெவ்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்களாக வாழ்வதால், இரண்டையும் இணைக்க வேண்டாம் என்றே பிரிட்டிஷ் அரசுக்கு பரிந்துரை செய்தனர். அதையும் மீறி பிரிட்டிஷ் ஆட்சி, தனது நிர்வாக வசதியை மட்டுமே கருத்தில் கொண்டு ஒரே நிர்வாகத்தின் கீழ் இணைத்தது.

1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றபோது பெரும்பான்மையினராக விளங்கிய சிங்களர்களிடம் அதிகாரத்தைக் கொடுத்து விட்டு வெளியேறி விட்டது.

எனவே, இலங்கையில் இப்போது போராடும் தமிழர்கள், தங்களின் பூர்வீகப் பிரதேசத்துக்காகவே போராடுகிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக சென்ற தமிழர்கள் இவர்கள் அல்ல. அவர்கள் கொழும்பில் தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாக வேலை செய்வோர். அவர்கள் மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். இப்போது போராட்டம் நடத்துவது மலையகத் தமிழர்கள் அல்ல; ஈழத்தின் பூர்வீகக் குடிகளான ஈழத் தமிழர்கள்.

கேள்வி : இலங்கையோ மிகச் சிறிய தீவு. இதில் நாட்டை கூறுபோட முடியுமா? ஒன்றுபட்டு வாழக் கூடாதா?

பதில் : இந்தக் கேள்வியில் நியாயம் உள்ளதாகத் தோன்றலாம்? ஆனால், உண்மை வரலாறுகளை அறியும் போது, தமிழர்கள் தங்களின் தாயக உரிமைக்குப் போராடுவதன் நியாயம் புரியும்.

தொடக்கத்தில் தமிழர் தலைவர்கள், சம உரிமையுடன் ஒரே நேரத்தில் சிங்களர்களுடன் சேர்ந்து வாழவே விரும்பினார்கள். அதிகாரப் பகிர்வு பற்றி கருத்து கேட்க வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் குழுவிடம் (சோல்பரி ஆணைக்குழு) 1945 இல் சேர்ந்து வாழும் கருத்தையே தமிழர்கள் முன் வைத்தனர்.

1970 ஆம் ஆண்டு வரை தமிழர்கள் தங்களின் பூர்வீகத் தாயகத்தைப் பிரித்துக் கொள்ளும் கோரிக்கையை முன் வைக்கவே இல்லை. இலங்கைக்கானஅரசியல் சட்டத்தை உருவாக்கும் அரசியல் நிர்ணய சபைக்கும் ஒத்துழைப்பு தந்தனர். இந்தியாவில் அரசியல் நிர்ணய சபையை ஜின்னா புறக்கணித்தது போல் புறக்கணிக்கவில்லை.

இடையில், தமிழர்களுக்கு எதிரான எவ்வளவோ நடவடிக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் நடத்தி முடித்தனர். சுதந்திரம் கிடைத்த உடனேயே மலையகத் தமிழர்களின் குடி உரிமைகளைப் பறித்து, அவர்களை நாடற்றவர்களாக்கினர். அப் போது தான் ஈழத் தமிழரான செல்வநாயகம், தமிழரசு கட்சியைத் தொடங்கி, மலையகத் தமிழர் குடி உரிமைப் பறிப்பைக் கண்டித்தார்.

1956 இல் தமிழைப் புறக்கணித்து விட்டு, சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று சட்டம் இயற்றிக் கொண்டார்கள். தமிழ் மட்டுமே படித்திருந்த தமிழர் வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. உரிமைக்குக் குரல் கொடுத்த தமிழர்களை சிங்களர்கள் வன்முறையால் எதிர்கொண்டனர். இலங்கை - சிங்களருக்கான ஒற்றையாட்சியாக அறிவிக்கப்பட்டு, பவுத்தம் தான் அரசு மதம் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் செல்வாவுடன், தமிழர் களுக்கு சில உரிமைகள் வழங்க ஒப்பந்தம் செய்து கொண்ட சிங்கள பிரதமர் சாலமன் பண்டார நாயகாவை 1959-இல் சிங்கள வெறியர்கள் சுட்டுக் கொன்று ஒப்பந்தத்தை செயலிழக்கச் செய்தனர். 1960-ல் நீதிமன்றத் தில் சிங்களம் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.

1972 இல் உருவான புதிய அரசியல் சட்டம், தமிழர் உரிமை களை முழுமையாகப் புறக்கணித்தது. அப்போதுதான், இனியும் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலைக்கு தமிழர்கள் உந்தப் பட்டனர். அரசியல் சட்டத்தைத் தீயிட்டுப் பொசுக்கி தமிழர்கள் ஏற்க மறுத்தனர். ஈழத் தமிழர்களின் தலைவர் செல்வா, நாடாளு மன்ற உறுப்பினர் பதவியை தூக்கி எறிந்து விட்டு, தாம் ஏற்கனவே போட்டியிட்டு வென்ற காங்கேசன் துறைமுக தொகுதியில் தமிழர்களுக்கு இனி தனித் தாயகமே வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன் வைத்து களத்தில் நின்று பேராதரவுடன் வெற்றி வாகை சூடினார்.

1976 இல் தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி வட்டுக்கோட்டையில் கூடி தமிழர்களுக்கு தனித்தேசம் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியது. 1977 இல் செல்வா மறைந்தார். தொடர்ந்து தமிழர் விடுதலை கூட்டணி அதே தனி நாடு கோரும் கோரிக்கையை முன் வைத்து தமிழர் பகுதியில் போட்டியிட்டு, 19 தொகுதிகளில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது.

தமிழர்கள் தங்களின் ஒருமித்த முடிவாக தங்களின் தாயகத்தை உருவாக்கக் கோரினர். புத்த மதத்தைச் சார்ந்த சிங்களர் மட்டுமே - அந்நாட்டின் பிரதமராக வர முடியும் என்று, இலங்கையில் சட்டம் இயற்றப்பட்டு விட்டது. அரசு மதமும் புத்த மதம் என்றாகி விட்டது. இப்படி தமிழர் மொழியையோ, தமிழர் உரிமைகளையோ அங்கீகரிக்க மறுக்கும் ஆட்சியின் கீழ் ஏற்கனவே தனி ஆட்சி நடத்திய மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் எப்படி அடிமைகளாக வாழ முடியும்?

(தொடரும்)