மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வே. மீனாட்சி சுந்தரம், ‘மார்க்சிஸ்ட்’ ஏப்ரல் மாத இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். “பகுத்தறிவு சித்தாந்தமும் - தி.மு.க., அ.தி.மு.க. சீரழிவும்” என்பது அக்கட்டுரை தலைப்பு. இக்கட்டுரை பெரியார் நடத்திய சமுதாயப் போராட்டத்தின் தாக்கம் குறித்து விவாதிக்கிறது.

மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ‘தோழர் ஏ.பி.’ என்று அழைக்கப்பட்ட ஏ.பாலசுப்பிரமணியம், பெரியார் இயக்கம் குறித்து கொண்டிருந்த மதிப்பீடுகளை இக்கட்டுரை பதிவு செய்கிறது. மார்க்சியம் - பெரியாரியத்தை காலத்தின் தேவைக்கேற்ப உள்வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்துகிறது. 

முக்கியத்துவம் கருதி, கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்.  வாசிப்பை எளிமையாக்க, ஆங்காங்கே கருத்துச் சிதையாமல் சொற்றொடர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  (ஆர்)

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 1857-58 சிப்பாய் எழுச்சிக்குப் பிறகு தங்களது நிர்வாக முறையில் மாற்றம் கொண்டுவர இந்திய அரசாங்க சட்டம் என்ற தலைப்பில் ஒரு சட்டமியற்றினர் அன்றைய விக்டோரியா மகாராணியின் மீது இந்திய மக்கள் விசுவாசமாக இருக்க வைக்கும் நோக்குடன் அந்த சட்டம் இயற்றப்பட்டது. மனு சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம் சொல்லும் அதிகார கோட்பாட்டின் அடிப்படை நெறிமுறைகளை அந்தச் சட்டத்தின் விதிகளாக்கினர்.

உழைப்பாளி மக்களும் இராணுவத்தினரும் எசமான விசுவாசத்தோடும் பணிவோடும் இருந்தால் பரிசுகளும், தவறினால் தண்டனைகளும், சல்யூட் அல்லது சலாம் அல்லது நமஸ்காரம் செய்யும் முறைகளும் தவறினால் தண்டனைகளும் அந்த 1858 இந்திய அரசாங்க சட்டத்தின் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.

குழந்தை பருவத்திலேயே “இராஜ விசுவாச சிந்தனையை” உருவாக்க பள்ளிகளிலும் பொது நிகழ்வுகளிலும் பாடு வதற்காக இராஜகீதத்தை உருவாக்கினர் (பிரிட்டிஷ் அரசர், அரசு புகழ் பாடுவது), பாட மறுத்தாலோ, அவமதித்தாலோ தண்டனை வழங்க விதிகள் உருவாயின, அதிகாரம் படைத்த சில பதவிகள் பரம்பரை உரிமை ஆகின. பிரிட்டிஷ் அதிகாரி டல்ஹவுசி அன்றைய மன்னர் பதவிகளுக்கு வாரிசுகளை நியமிக்கும் உரிமைகளை நீக்கினார்.

அவற்றை  மீண்டும் மன்னர்களும் நவாபுகளும் புதிய சட்டத்தால் பெற்றனர். மன்னர்கள், சமஸ்தானங்கள் வரி வசூலிப்பதை பிரிட்டிஷ் அரசு சட்டத்தில் உறுதிபடுத்தியது. அவர்களை அங்கீகரித்து தர்பார் மூலம் கவுரவித்தது. இவர்களை கண்காணிக்க அதிகார வர்க்க அமைப்பையும் உருவாக்கியது. இதனால் மக்களை ஆட்டு மந்தைகளாக கருதி நடத்த உள்ளூர் துறைகளும் உருவாகின. நவீன நாட்டுப் பற்று உணர்வை மழுங்கடிக்கும் இராஜ விசுவாசத்தை அல்லது எசமான விசுவாச பண்பை பிரதிபலிக்கிற சடங்குகள் சம்பிரதாயங்களை திணித்தனர்.

இந்திய பாரம்பரியம் என்று  மொகலாயர்கள் காலத்து தர்பார் சடங்குகளையும் பழங்கால மன்னர்கள் காலத்தில் சோசியம் கூறும் பார்ப்பனர்களை நிர்வாக ஆலோசகர்களாக நியமிக்கும் நடைமுறையை யும் அவர்களது நடை உடை பாவனைகளையும் வலிந்து திணித்தனர். மனு சாஸ்திரத்தையும்,  அர்த்த சாஸ்திரம், பகவத் கீதைகளையும் தூசி தட்டி எடுத்தனர்.

இவற்றையும் வேதங்களையும் நம்பிய மன்னர்கள் காலத்து நடைமுறைகளையும் அதிகார அமைப்பின் நடைமுறை ஆக்கினர். இதன் விளைவாக ஒரு முரண்பாடு உருவானது, வெள்ளை நிர்வாகிகள் முன்பாக முழங்காலிட்டு நிற்பதோடு மட்டுமல்ல ஒரு குட்டி ஜமீன்தார், குறுநில மன்னர்கள், வர்த்தகர்கள் மற்றும் வட்டிக்கு விடும் உரிமை பெற்ற சாதியினர் ஆகியோர் ஒரு பார்ப்பன தாசில்தார் முன் மண்டியிட்டால் மட்டுமே பகட்டாக வாழ முடியும் என்ற நிலை இருந்தது.

சுருக்கமாக 1858ஆம் வருட இந்திய அரசாங்க சட்டம் வல்லமை மிக்க அதிகார வர்க்க அமைப்பை உருவாக்கியது. அதில் பார்ப்பன ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை விடுதலை உணர்வின் பகுதியாக பார்ப்பன ஆதிக்க எதிர்ப் புணர்வை பார்க்க வேண்டும். இன்று நிலைமை  வேறு  ஜாதிகளை திரட்டும் வாக்கு வங்கி அரசியலாக திரிந்து கிடக்கிறது. அதற்கு பாதுகாவலாக தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் உள்ளன.

பெரியாரின் பங்களிப்பு  குறித்து இங்கே ஒரு செய்தியை பதிவு செய்வது அவசியம். இந்த கட்டுரை எழுதுபவர் 35 வருடங்களுக்கு முன்னர் மார்க் சிஸ்ட் கட்சிக்கு வந்த புதிதில் மாநில செயலாளர் ஏ.பாலசுப்பிரமணியம் (ஏ.பி.) அவர்களோடு ஒரு முறை கலந் துரையாட நேர்ந்தபொழுது தி.மு.க. போன்ற கட்சிகள் இன, ஜாதி உணர்வுகளில் குளிர்காய முடிவதற்கு காரணம் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை நட்டாற்றிலே விட்டதுதான் என்று கூறி விட்டேன்.

ஏ.பி. கோபத்தோடு உனக்கென்ன தெரியும்? அவரது சொல்லும் செயலும்தான் மூடநம்பிக்கை களால் மூடப்பட்ட மக்களின் மனக் கதவுகளை நல்ல பகுத்தறிவு சிந்தனையை நோக்கிய அறிவை திறந்து விட்டது. அன்றைய சூழலில் பகுத்தறிவு இயக்கத்தை தொடர அவர் கையாண்ட உத்திகளே சரியானது என்று அவர் விளக்கினார்.

வரலாற்றை ஆய்வு செய்தால் வேந்தர்களும் வேதாந்திகளும் இணைந்து தொடுத்த தாக்குதலால் வரலாற்று தொடர்பற்று இருண்டு கிடந்த அறிவுச் சுடரை ஏற்றிட பெரியாரின் பங்களிப்பு மகத்தானது என்பது தெரியும். அதன் வேரைத் தேடி அறிவுலகத்தைத் தூண்டினார். விடுதலைக்குப் பிறகும் இராமர் பட எரிப்பு, பிள்ளையார் உடைப்பு போரட்டங்களை அவர் நடத்திய போது - கடவுளை அவதூறு செய்கிறார் என்று அவர் மீது வம்படியாக முத்திரை குத்தினார்கள்.

ஆனால் அப்படி அவதூறு முத்திரைகளை அவர்மீது வேண்டு மென்றே எதிரிகள் திணித்தபோது  பெரியார் இத்தகைய இயக்கங்கள் வழியாக அறிவுலகத்தை தத்து வார்த்தப் போரில் ஈடுபட வைத்தார்.  இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் ஆகியவைகளை மத சார்பற்ற ஆய் விற்கு உட்படுத்த அறிவுலகம் அவரால் ஊக்கம் பெற்றது. பழைய சமூக உறவு களைப் பற்றிய புரிதலுக்கு உதவும் தடையங்களாகின. எனவே பெரியார் மக்களும் பங்கு பெறும் வகையில் பகுத்தறிவு மூலம் சித்தாந்த போரை நடத்த கற்றுக் கொடுத்த ஆசான்; அப்படித்தான் வரலாறு கூறும்.

அவரது திராவிட நாடு, தமிழ்நாடு திராவிட இன கருத்துக்கள் இவைகளை வைத்தும் அவரது வாரிசுகள் என்று சொல்பவர்களின் நடை முறையை வைத்தும், பகுத்தறிவு இயக்கத்திற்கு அவரது மகத்தான பங்களிப்பை எடைபோடக் கூடாது என்பதை ஏ. பாலசுப்பிரமணியம் விளக்கிய பிறகு எனக்குப் புரிந்தது.

சித்தாந்த போர் இல்லாமல் போனால் ஒரு சமூகம் நாற்றமும் சேறும், பாசியும் புதைந்து பயன் நீர் இல்லாது நோய்க்களமாகி அழியும் என்கிறது மார்க்சியம். இந்தியாவில் மக்களும் பங்கு பெறுகிற முறையில் சித்தாந்த போரை நடத்திட காரல் மார்க்ஸ்சிடம் மட்டுமல்ல, இந்தியாவின் தத்துவ போரின் வரலாற்று தொடர்ச்சியை தொடர பெரியாரிட மிருந்து அப்படியே காப்பி அடிக்காமல் கற்றுக் கொள்வது அவசியம்.(யாரையும் காப்பி அடிக்கக் கூடாது, ஆய்ந்து கற்க வேண்டும் என்பது மார்க்சிய லெனினிய நடைமுறை)

எனவே சுயமரியாதை, பகுத்தறிவு இயக்கத்தை காலத்திற்கேற்ப செம்மையாக்கி பேணுவது மார்க்சிஸ்டுகளின் கடமையாகும். ஹெகலின் எழுத்துக் களும், கற்பனாவாத சோசலிச எழுத் துக்களும் மார்க்சையும் எங்கெல்சையும் இயக்க இயல் பொருள் முதல் வாதத்தையும் விஞ்ஞான சோசலி சத்தையும் உருவாக்கிட எழுச்சியூட்டியது போல் பெரியாரின் எழுத்துக்கள் நமக்கு உதவும் என்று அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.