ஒரு அமைப்பின் மீது முற்றாக நம்பிக்கை இழக்கவல்ல நிகழ்வு ஒன்று சமீபத்தில் நடைபெற்றிருக்கிறது. அந்த அமைப்பின் பெயர் இந்திய அரசு. நிகழ்வின் பெயர் போபால் விஷவாயு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு. பாதிக்கப்பட்ட போபால் நகர மக்கள் மட்டுமல்ல, தேசத்தின் ஒட்டுமொத்த மக்களும் அரசு மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் மீது வைத்திருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் குப்பைத் தொட்டிக்குள் போய்விட்டது. விமானத்தில் ஆன்டர்சனை ஏற்றித் தப்பவிட்டது யார்? வழக்கின் சட்டப்பிரிவை மாற்றியதில் யாரின் பங்கு அதிகம்? என்பதற்கான விடைகள் போபால் சம்பவத்தின் 50-வது ஆண்டை ஒட்டி வெளியிடப்படலாம்.

 Bhopal-Gas-Tragedy-01கனடாவிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனம் போபாலில் கடைவிரிக்க சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இரத்தம் தோய்ந்த நெருக்கடி நிலை மாதங்களில்தான் இந்திராகாந்தி அரசு அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. மேலை நாடுகளால் ஒதுக்கித் தள்ளப்பட்ட தொழில் நுட்பத்தைக் கொண்டிருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தை நெருக்கடி கால இந்தியா அரவணைத்துக்கொண்டது.

விவசாயிகளின் நிலங்களைப் பறித்துக்கொண்டு தொழிற்சாலை அமைப்பதெல்லாம் இப்போது நடைபெறும் நிகழ்வுகள். அப்போது போபால் நகரின் மையப்பகுதியிலேயே யூனியன் கார்பைடுக்கு இடம் கிடைத்தது. விபத்து நடந்தது. அதன் பின்னர் மத்திய, மாநில அரசுகளின் கையாலாகாத்தனங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. நாம் உரக்கக் கேட்பதெல்லாம் போபால் வி­வாயு விபத்துக்குப் பிந்தைய நிகழ்வுகளிலிருந்து நமது அரசுகள் என்னப் பாடங்களை கற்றுக்கொண்டிருக்கின்றன என்பதுதான். துரதிருஷ்ட வசமாக அவை எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. மாறாக தேசத்தை மீண்டும், மீண்டும் மீளாத்துயரில் ஆழ்த்தவும், அதன் மக்களை அடிமைத் தனத்தில் தள்ளவும் தயங்க மாட்டோம் என்பதாகவே அவைகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

 போபால் வி­வாயுச் சம்பவத்தை ஒரு சாதாரணமான, முடிந்து போன நிகழ்வாக, அதற்கும் மேலாக சம்பவத்தையே ஒரு கேலிக் கூத்தாக மாற்றிடத்தான் இந்திய அரசும். பாராளுமன்றமும், நீதித்துறையும் அக்கறையாக முயன்று கொண்டிருக்கின்றன. வாரன் ஆன்டர்சனைத் தப்பவிட்டது ஒரு முடிந்து போன கனவாக எல்லோரும் கருதி அதை மறந்துவிட வேண்டும் என மத்திய அரசும், அன்றைக்குப் பொறுப்பான பதவிகளை வகித்த அரசியல்வாதிகளும் விரும்புகிறார்கள். வாரன் ஆன்டர்சனைத் தப்பவிட்டதற்கு அன்றைய சூழல்தான் காரணம். அவ்வாறு செய்தது சரிதான் என்று அமைச்சர் பிரணாப்முகர்ஜி கூறுகிறார். முப்பதாயிரம் அப்பாவித் தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்றொழித்த போது இந்தியா மெளனம் காத்ததும், தமிழக முதல்வர் கருணாநிதியை தான் சந்தித்து தமிழ்நாட்டுத் தமிழர்களின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ததும் சரிதான் என்று பிரணாப் முகர்ஜி கி.பி.2035-ல் சொல்லக்கூடும்.

 சில மாதங்களுக்கு முன்னர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் போபால் வந்தார். விபத்திற்குப் பின்னரும் கூட இன்னமும் சுத்திகரிக்கப்படாமல் போட்டு வைக்கப்பட்டிருக்கும் வி­க்கழிவுகள் நிரம்பிய அந்த ஆலைக்குள் பிரவேசித்த அவர் அங்கிருந்த வி­க்கழிவுகளைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு “இதோ பாருங்கள், நான் இதைக் கையில் வைத்திருக்கிறேன். ஆனால் இன்னமும் உயிருடன் இருக்கிறேன்”  என்று சாகசம் செய்து காட்டினார். அந்த நேரத்தில் குவாலியரை மையமாகக் கொண்ட பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் போபால் ஆலை வளாகத்தில் நடத்திய மண் மாதிரி ஆய்வு முடிவுகளைப் படித்ததுதான் என் நினைவுக்கு வந்தது. அந்த ஆய்வின்படி ஆலைக் கழிவில் எந்தவொரு தீங்குமில்லை என்றும், 70 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் 200 கிராம் ஆலைக் கழிவைச் சாப்பிடலாம் என்றும், அதன் பிறகும் கூட அவர் உயிருடன் இருப்பார் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நல்ல வேலையாக இந்த ஆய்வு முடிவுகளை அமைச்சர் படித்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். இல்லையயனில் அதைச் சாப்பிட்டுத் தொலைத்திருப்பார்.அமைச்சர் வி­யமாகத்தான் வந்தார். ஆலை வளாகத்தில் ரூ.116 கோடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றார். 116 கோடி ரூபாய் எத்தனை கைகளுக்கு செல்லுமோ! தெரியாது.

 நினைவுச் சின்னம் எழுப்பப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்கு ஏன் இவ்வளவு பெரியத் தொகை? குறைவான இழப்பீட்டுத் தொகையோடு தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தொகையை வழங்கலாமே! மிகப்பெரும்பாலான ஏழை மக்களுக்கு தலா 25,000 ரூபாய்தான் வழங்கப்பட்டுள்ளது. இலவச மருத்துவ சிகிச்சை பெற வசதி செய்து தரும் மருத்துவ அடையாள அட்டைகள் பாதிக்கப்பட்ட 5,74,000 பேரில் 3,75,000 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதம் 2 லட்சம் பேருக்கு இன்னமும் அது கூட வழங்கப்படவில்லை. இந்த லட்சணத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் கவனிப்பதற்கென்றே தனி அமைச்சகத்தை மத்தியப் பிரதேச அரசு வைத்துள்ளது.

 எந்தத் தார்மீக அடிப்படையில் நமது அரசுகள் செயல்படுகின்றன என்ற சந்தேகம் சாதாரணக் குடிமகனுக்கு எழவே செய்கிறது. உலகிலேயே மிக மோசமான விபத்து. அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனம் 470 மில்லியன் டாலர்கள் மட்டுமே (அன்றைய மதிப்பு 713 கோடி ரூபாய்) தந்துவிட்டு தப்பித்துவிட்டது. பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த மக்களுக்கு தோல், சுவாசநோய்கள். பிறவிக்குறைபாடுகளோடு பிறக்கும் குழந்தைகள் வேறு. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் மாதந்தோறும் குறைந்தது 500 ரூபாய் அளவிற்கு மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. கொடுக்கப்பட்ட ஈட்டுத் தொகையோ 25000 முதல் 50000 வரை. இதுவரையிலும் சுத்தம் செய்யப்படாத ஆலைக் கழிவுகள். இதன் விளைவாக மாசடைந்துள்ள நிலமும், நீரும். ஆண்டர்சனை நீதிக்கூண்டிலேற்ற (தூக்கு மேடையில் அல்ல) மத்திய அரசு எவ்வித முயற்சிகளும் எடுக்காமை!

 முதலில் மத்திய அரசு போபால் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், தனது மக்களின் உயிர்களை கிள்ளுக்கீரையயன மதித்து நடந்து கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

 தனதுப் பன்னாட்டு வர்த்தக நலன்களும், இங்குள்ள முதலாளிகளின் நலன்களும் பாதிக்கப்படும் என்ற எண்ணமே ஆண்டர்சன் வி­யத்தில் இந்திய அரசு அமெரிக்காவை நெருக்காமல் இருப்பதற்கான முக்கியக் காரணம். ரத்தன் டாடா 2006-ம் ஆண்டு வாக்கில் இது சம்பந்தமாக மன்மோகன்சிங், ப.சிதம்பரம், அலுவாலியா மூவருக்கும் எழுதிய கடித்தில் “நாமே (இந்திய முதலாளிகளே) அவ்விடத்தை சுத்தம் செய்து கொள்ளலாம்”  என்கிறார். அதாவது அமெரிக்காவையும், யூனியன் கார்பைடின் வாரிசான டெளவ் கெமிக்கல் நிறுவனத்தையும் நாம் கோபப்படுத்தக் கூடாது என்பதே டாடாவின் மேலான விருப்பம். அப்போதுதான் ஒவ்வொரு நாட்டிற்கும் டாடா சென்று பலவிதத் தொழிற்சாலைகளையும் தன் வசப்படுத்த முடியும்.

 விபத்து நடந்து முடிந்து கல்லறை காய்வதற்குள்ளாக அன்னிய முதலீட்டிற்கான பேரத்தில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் ஒருபுறமும், கள்ளத்தனமாக ஆன்டர்சனைத் தப்பவிட்டு இன்று அவ்வினை விடாது தன்னைத் துரத்துவதை ஊமையாகி வேடிக்கைப் பார்க்கும் அரசியல்வாதிகள் மறுபுறமும் நம்மை இன்னமும் பாடாய்ப்படுத்துகிறார்கள். அணுவிபத்து நஷ்டஈடு மசோதா என்றப் பெயரில் நம்மை மலினப்படுத்துகிறார்கள்.

 அணுவிபத்து நஷ்டஈடு மசோதாவையும், அதன் மோசமான உள்ளடக்கத்தையும் போபால் வி­வாயு வழக்கின் துக்ககரமான தீர்ப்பின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது அரசின் மோசடிகளும், அலட்சியங்களும் அம்பலப்பட்டு நிற்கின்றன. அணுவிபத்து ஏற்பட்டால் அணு உலைகளை அமைத்த நிறுவனமோ அல்லது அணு உலை எரிபொருட்கள் விநியோகித்த நிறுவனமோ நஷ்டஈடு தர வேண்டியது இல்லை என்பதுதான் மசோதாவின் முக்கியமான அம்சம். அணு உலையை இயக்கும் நிறுவனங்கள்தான் நஷ்ட ஈட்டை கொடுத்தாக வேண்டும். அணு உலைகளின் தவறான வடிவமைப்பினாலும், அதன் விளைவாக அதில் ஏற்படும் குறைகளால் விபத்து ஏற்பட்டாலும் அந்த அணு உலை தயாரிப்பாளர்கள் (அமெரிக்க, ரஷ்ய, பிரான்ஸ் நாடுகளின் அணு உலைத் தயாரிப்பாளர்கள்) எந்த ஒரு நஷ்ட ஈட்டையும் நமக்குத் தர வேண்டியதில்லை. அணு உலைகளை இயக்கும் பொதுத்துறை நிறுவனமான அணுமின் கழகம் மட்டுமே நஷ்ட ஈட்டைத்தர வேண்டும். உச்சபட்ச ஈட்டுத்தொகை 2,300 கோடி ரூபாய். இதில் அணு உலை இயக்குபவர்கள் 500 கோடி ரூபாய்க்கு மேல் தர வேண்டியதில்லை. மீதத்தொகையை அரசு தரும். நஷ்ட ஈட்டை 500 கோடி ரூபாய்க்கும் குறைவாகக் கூட பெற்றுக்கொள்ள மசோதாவின் பிரிவு-6 அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

 bhopal_tragedy_360இந்திய- அமெரிக்க அணு ஒப்பந்தத்தை அடுத்து இந்தியாவிற்கு அணு உலைகள் சப்ளை செய்வதற்கும், எதிர்காலங்களில் அது ஏற்படுத்தும் விபத்துக்களின் பொறுப்புகளிலிருந்து பன்னாட்டு அணு உலை தயாரிப்பு நிறுவனங்கள் தப்பித்துக்கொள்வதற்கும் ஏற்ப மிக வசதியாக இம்மசோதா வடிவமைக்கபட்டுள்ளது.

 செர்னோபிள் அணு உலை விபத்து போன்று நம் நாட்டில் நேரிட்டால் நம் நாட்டிற்கு மட்டுமல்ல எல்லை தாண்டியும் கூட மனித குலத்தின்மீதும், இயற்கையின் மீதும், பொருளாதாரத்தின் மீதும் அது ஏற்படுத்தும் மிகக் கடுமையான சேதாரம் குறித்து அரசு அதிகார வர்க்கம் ஏதும் சிந்தனை செய்யவில்லை என்பதற்கான அத்தாட்சிதான் அணு விபத்து நஷ்டஈடு மசோதா. செர்னோபிள் விபத்தின் ஆரம்பக் கட்ட சேதாரம் மட்டும் 250 பில்லியன் டாலர்கள் என உக்ரைன் அரசு மதிப்பிட்டுள்ளது. அதாவது 11 லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய். விபத்தின் தொடர் நிகழ்வாக புற்றுநோய் மற்றும் மரபணு பாதிப்புகள் ஏற்படுத்தும் மருத்துவச் செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை. ஜெர்மனியில் இதுபோன்ற விபத்து ஒன்று ஏற்படுத்தும் சேதம் 2 டிரில்லியன் முதல் 5 டிரில்லியன் யூரோ வரை ஆகும் என அந்நாட்டு அரசு மதிப்பிட்டுள்ளது. (1 டிரில்லியன் =1000 பில்லியன்,  1 பில்லியன் = 100 கோடி). 1979-ல் அமெரிக்காவில் உள்ள மூன்று மைல் தீவில் நடைபெற்ற மிகப்பெரிய அணு விபத்தில் அவ்விடத்தை சுத்தம் செய்வதற்கு ஆன செலவு மட்டும் ஒரு பில்லியன் டாலர். அதாவது இன்றைய மதிப்பில் 5 பில்லியன் டாலர். சுத்தம் செய்வதற்கான காலம் 14 வருடங்கள். அமெரிக்காவிலும் கூட நஷ்ட ஈட்டுத்தொகையாக 10 பில்லியன் டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 46,000 கோடி ரூபாய். ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் ஸ்வீடனில் உச்சபட்ச நஷ்டஈட்டுத் தொகை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

 நாட்டின் உண்மையான வளர்ச்சி பற்றியும், இயற்கை வளங்கள் நாசமாவது குறித்தும், ஏழைகளின் உயிர்கள் மலினமாவது குறித்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு துளி கூட அக்கறை கிடையாது. அனைத்துப் பித்தலாட்டங்களையும் செய்து விட்டு மிக சுலபமாகத் தப்பித்துச் செல்லும் ஆற்றல் படைத்தவை அவை. பன்னாட்டு நிறுவனங்களின் சோதனைக் கூடங்களாக மூன்றாம் உலக நாடுகள் இன்னமும் தொடர்கின்றன என்பதற்கு அத்தாட்சிதான் போபால் வி­வாயு விபத்து. தனது கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு உலகின் எந்த ஒரு மூலையிலும், எவராலும் ஒரு சிறுதீங்கு கூட ஏற்பட அனுமதிக்காத அமெரிக்கா, பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தில் கடலுக்கடியில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவால் தனது நாட்டின் கடல் வளம் பாதிக்கப்படும்போது, அது அலறும் சத்தம் நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது.

அமெரிக்கா என்ற சூப்பர் பவரால் தவறு செய்யும் பன்னாட்டு நிறுவனத்திற்கெதிராக அலறத்தான் முடியுமே தவிர போர் தொடுக்க இயலாது. அதன் சொத்தில் ஒரு பைசாவைக் கூட தீண்ட முடியாது. அவ்வளவு வலிமையானவை பன்னாட்டு நிறுவனங்கள். அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் முதல் வார்டு உறுப்பினர் தேர்தல் வரை பன்னாட்டு நிறுவனங்களின் தயவால்தான் அமெரிக்காவின் ஜனநாயகமே பிழைத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் மிக ஆழமாக வேர்விட்டுப் பரவி நிற்பவை பன்னாட்டு நிறுவனங்கள். அதனால்தான் பிச்சைக்காசாக 20 பில்லியன் டாலரை மட்டும் அமெரிக்க அரசை நோக்கி வீசுகிறது BP நிறுவனம். எண்ணெய் கசிவு ஏற்படுத்திய சேதாரம் 20 பில்லியன் டாலரைவிட பல மடங்கு அதிகம். மிகப் பெரும் செல்வவளம் படைத்த BP நிறுவனம் அமெரிக்கக்கடல் வளத்தை நாசப்படுத்திவிட்டு அமெரிக்காவிடம் ஒரு சிறு தொகையை தருகிறது என்றால், திவாலாகி கடை மூடும் நிலையிலுள்ள அமெரிக்க அணுஉலைத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் அமைக்கப்போகும் அணு உலைகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் யார் கொடுப்பார்கள் நஷ்டஈட்டை?

 “இயற்கையை மாசுபடுத்துபவர்கள்தான் அதற்கான முழு விலையைத் தர வேண்டும்” என்று 1996-லேயே உச்சநீதிமன்றம் தெளிவானத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பிறகு அளிக்கப்பட்ட தீர்ப்புகளிலும் அவ்விதி உறுதிப்பட்டிருக்கிறது. அப்படியானால் இம்மசோதா சட்ட விரோதம் தானே?

 போபால் வி­வாயு வழக்கின் தீர்ப்பையயாட்டி நாடு முழுவதும் எழுந்துள்ள ஆவேச அலைகள், வேதனைக் குரல்கள் 1989 பிப்ரவரி-15-ம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது எழுந்திருக்குமானால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்போதோ விடிவு பிறந்திருக்கும் அன்றைய தினம் தான் கேட்ட 3 பில்லியன் டாலர் நஷ்ட ஈட்டுத்தொகைக்குப் பதிலாக 470 மில்லியன் டாலரை மட்டும் நஷ்ட ஈடாகப் பெற ஒப்புக் கொண்டு 
 
வழக்கையே நீர்த்துப் போகச் செய்ய மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை உச்சநீதிமன்றமும் ஆமோதித்தது. 1996-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எம். அஹமதி வழங்கியத் தீர்ப்பு வழக்கை ஒன்றும் இல்லாமல் ஆக்கியது. 1997-ல் அவர் ஓய்வு பெற்ற பிறகு யூனியன் கார்பைடு நிறுவனத்தின் போபால் நினைவு மருத்துவமனை அறக்கட்டளையின் நிரந்தரத் தலைவராக நியமிக்கப்பட்டது வேறு வி­யம்.

 முப்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டதற்கும், மூன்று லட்சம் மக்கள் முடமாக்கப்பட்டதற்கும், அவர்களின் எதிர்காலத் தலைமுறைகள் ஊனமாக்கப்பட்டதற்கும் மொத்த தண்டனை இரண்டு வருடங்கள் மட்டுமே. முதல் குற்றவாளி வாரன் ஆன்டர்சன் பற்றி ஒரு வார்த்தை கூட தீர்ப்பில் இல்லை.

 தேசத்தின் நீர்த்துப் போன நீதிபரிபாலன அமைப்பு ஒரு புறம் இருக்கட்டும். அதை சகித்துக்கொண்டிருக்கும் மக்கள் என்ற வகையில் நாம்தான் வெட்கப்பட்டுத் தலைகுனிய வேண்டும். அரசு தற்போதும் கூட செயல்படுத்திக்கொண்டிருக்கும் தாராளமய, உலகமயக் கொள்கைகளை இந்நிகழ்வுகளின் பின்னணிக் கொண்டு நோக்க வேண்டும். இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்குமானால் இம்மசோதாவுக்கு இடமேது?!

 சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன்சிங், “ஒபாமாவை சந்தித்துப் பேசியபோது போபால் சம்பவம் பற்றியப் பேச்சே எழவில்லை. அதைவிட முக்கியமான விசயங்கள்தான் பேசப்பட்டன” என்கிறார். பொருளாதாரம் என்ற ஒற்றைச் சிந்தனையைத் தவிர்த்து மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் எதுவும் அவருக்குப் பிரச்சினைகளாகத் தெரிவதில்லை. அதனால்தான் பொருளாதாரம் சாராத மற்றப் பிரச்சினைகளைப் பேசும்போது அவரதுப் பேச்சில் உயிரூட்டம் இருப்பதில்லை. Inflation, Deflation, Stimulus package to Corporates என்றெல்லாம் அவர் பேசும் போது உன்னிப்பாய் கவனிக்கும் வளர்ந்த நாடுகள் அவரதுப் பொருளாதார அறிவை வியந்துப் போற்ற எப்போதும் தயங்கியதில்லை. தனது பொருளாதார அறிவைப் பாராட்டும் ஒபாமாவிடம் தனது மண்ணில் அவரது கார்ப்பொரேட்டுகள் செய்யும் அட்டகாசங்களை, தலையீடுகளைப் பற்றி முறையீடு செய்ய மன்மோகன் அஞ்சுகிறார். முதலீடுகள் செய்ய கார்ப்பொரேட்டுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் போது அவர்களால் நமக்கு ஏற்படும் தார்மீகத் தோல்விகளை அவர் பொறுத்துக் கொள்கிறார். அதனால்தான் “போபால்கள் நேரலாம், ஆனால் நாட்டின் வளர்ச்சி முக்கியம்” என்று அவரால் பேச முடிகிறது.

 தனது நாட்டின் கடல் வளத்தை BP நிறுவனம் பாழ்படுத்திவிட்டு, அந்நிறுவனத்தின் தலைவர் எதுவும் நடக்காதது போலப் பேசியபோது கொதித்தெழுந்த ஒபாமாவை உண்மையாகவே நேசிக்கத்தான் தோன்றுகிறது. அந்நிறுவனத்தை அடி பணியவைத்து மொத்தமாக 50 பில்லியன் டாலரை நஷ்ட ஈடாகப் பெற்றுத் தந்த ஒபாமாவைப் பார்த்து பொறாமை வருகிறது. போபாலில் செத்துப் போன முப்பதாயிரம் பேருக்கும், பாதிக்கப்பட்ட ஐந்து லட்சம் பேருக்குமாக மொத்தம் 470 மில்லியன் டாலரை (இன்றைய மதிப்பு இரண்டு பில்லியன் டாலர்) மட்டுமே பேரம் பேசிப் பெற்றுக்கொண்ட மத்திய அரசையும், நீதித்துறையையும் எண்ணி வெட்கமும், வேதனையும் படாமல் இருக்க முடியவில்லை. 
 
 பாதிக்கப்பட்ட ஏழைமக்களின் சார்பாகக் குரல் கொடுக்க அதிகாரவர்க்கத்தினர் யாரும் எப்போதும் முயன்றதில்லை. கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் சிறுகச் சிறுக நடத்தி முடித்தப் போராட்டங்களினால் கிடைத்த வெற்றிதான் 713 கோடி ரூபாய் நஷ்ட ஈடு. அதற்காக அந்த நகர மக்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. சமீபத்தில் திருத்தி அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு நஷ்ட ஈட்டை 1500 கோடியாக உயர்த்தி அறிவித்தாலும் பாதிக்கப்பட்ட மக்களில் 90 சதவிகிதம் பேருக்கு இத்தொகை போய்ச்சேராது என போபால் நகரத்தின் பாதிக்கப்பட்ட மக்கள் குழுக்கள் புள்ளி விபரங்களோடு கூறுவதை நோக்கும் போது அமைச்சர்கள் குழுவின் நோக்கம் குறித்து நாம் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கையிலும் சரி, அவர்களைப் பாதிப்புக்கு ஏற்ப வகைப்படுத்துதலிலும் சரி நிறையக் குழப்பங்கள் உள்ளன. அவற்றைக் களைந்து உண்மையான பாதிக்கப்பட்டவர்களை அரசு பட்டியலிட வேண்டும். நீர்த்துப் போய்விட்ட வழக்கு விவகாரங்களை மீண்டும் உயிர்ப்பித்து உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது, வாரன் ஆன்டர்சனை இந்தியா அழைத்து வர உண்மையான முயற்சிகள் எடுப்பது பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் சிகிச்சை பெற வழிவகை செய்வது, ஆலை வளாகத்தில் தேங்கிப்போயுள்ள அகற்றப்படாத கழிவுகளை சுத்தம் செய்வது, கடந்த ஆறு வருடங்களாக நீதிமன்ற ஆணையை வாங்க மறுக்கும் டெள கெமிக்கல் நிறுவனத்தை இந்தியாவில் தடை செய்வது, அதன் சொத்துக்களை கையகப்படுத்தி ஆலையை சுத்தப்படுத்த ஆகும் செலவுக்கு ஈடு செய்வது, ஆலையைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது என ஏராளமான கடமைகள் அமைச்சர்கள் குழுவின் முன் உள்ளது.

 ஒரு பிரச்சினைக்கான நியாயமானத் தீர்வை நோக்கியத் தேடலில் அமெரிக்கச் சட்டமும், இந்தியச் சட்டமும் வித்தியாசமாகச் செயல்பட முடியாது. வாரன் ஆன்டர்சன் அமெரிக்காவில் இருந்தாலும் சரி, ஆப்பிரிக்காவில் இருந்தாலும் சரி, அவர் நியாயமான விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டியவர். 

 அமெரிக்க நீதி, இந்திய நீதி என்ற பாகுபாடெல்லாம் இயற்கைக்கு கிடையாது. அமெரிக்க அறம், இந்திய அறம் என்றெல்லாம் தனித்தனியாக இருக்க முடியுமா என்ன? அறத்தை உறுதியாகப் பற்றி கொண்டு நீதியை நோக்கியப் பயணத்தில் யாருக்கும் அடி பணியாமல் அன்றைய ஆட்சியாளர்கள் நடந்திருப்பார்களானால் போபால் மக்களின் துயரங்கள் தழும்புகளாக மாறியிருக்கும். காயங்களாக இன்னமும் அப்படியே தொடர்ந்திருக்காது.

-  செ.சண்முகசுந்தரம்,  தஞ்சாவூர். (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)  

செல் : 9442260832.

Pin It