கோயமுத்தூர் டவுன் ஹாலில் மாபெருங்கூட்டம்

சகோதரர்களே!

என்னைப் பற்றி ஸ்ரீமான் ராமசாமி முதலியார் அதிகமாக கூறிவிட்டார். என்னை தங்களது இயக்கத்தின் தலைவர் என்றும், நான் சொல்லுகிறபடியே நடக்கப் போவதாகவும் சொன்னார். இவ்விஷயம் எனக்கு மிகவும் வெட்கத்தையும் பயத்தையும் கொடுக்கிறது. ஒரு காலத்திலாவது நான் தலைவனாய் இருந்ததே கிடையாது. தலைமைத்தனமும் எனக்குத் தெரியாது. அதற்குண்டான குணங்களும் என்னிடத்தில் இல்லை. நான் ஒரு தொண்டனாகவே இருந்து வர பிரியப்படுகிறேன். எனக்கு தொண்டு செய்வதில் அதிக ஆசை இருக்கிறது. ஆதலால் என்னை ஒழுங்கான வழியில் நடத்தி என்னிடம் சரியானபடி வேலை வாங்கிக் கொள்ளுங்கள்.

periyar and EVKSநேற்றைய மகாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தார்களில் இஷ்டப்பட்டவர்கள் காங்கிரசில் சேரலாமென்பதாக ஒரு தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. இவ்வித தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டிய அவசியமே நமக்கு ஏற்பட்டிருக்கவில்லை. தெ.இ.ந.உ. சங்கத்தாரில் தனிப்பட்ட நபர்கள் காங்கிரசில் சேர்வதை இச்சங்கத்தின் எந்த விதியும் தடுப்பதில்லை. காங்கிரசில் சேர்ந்தவர்களும் ஏற்கனவே இதிலிருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனபோதிலும் நம்முடன் சேர்ந்து உழைப்பதற்காக காங்கிரசிலிருந்து வருகிற சிலரைத் திருப்தி செய்யவும் இங்கிருந்து காங்கிரசுக்கு போகிற சிலருக்கு பயத்தை தெளிய வைக்கவும் இத்தீர்மானம் செய்யப்பட்டு இருக்கிறது. காங்கிரசின் யோக்கிதையே கெட்டுப் போயிருக்கும் - இந்தக் காலத்தில் காங்கிரஸ்காரன் என்று சொல்லிக் கொள்வதற்கே ஜனங்கள் வெட்கப்படும் - இந்தக் காலத்தில் நம்மவர்கள் காங்கிரசில் சேர்கிறேன் என்பது பரிகசிக்கத் தகுந்ததென்பதும், அதில் போய் ஒன்றும் செய்ய முடியாதென்பதும் எனது அபிப்பிராயமாதலால்தான், நான் அந்தத் தீர்மானத்திற்கு அனுகூலமாய் இல்லை என்று கூறினேன். பிராமணர்களுக்கு பயந்து கொண்டாவது காங்கிரஸ் பிராமண ஆதிக்கம் என்பதற்காகவாவது நான் அவ்விதம் சொல்லவில்லை. காங்கிரசின் அடிப்படை தத்துவமே பாமர மக்களுக்கு பயன்படாததும், விரோதமானதும் என்பது எனது முடிவு. மகாத்மா காந்தி காங்கிரசில் நான் இருந்ததற்கு காரணமெல்லாம் காங்கிரசின் பழய தத்துவங்களை எடுத்து எறிந்துவிட்டு அதனால்யேற்பட்ட கெடுதிகளையும் உடனே அழிக்க திட்டங்கள் போட்டுக் கொண்டு, பாமர மக்களுக்கும் சிறப்பாக பார்ப்பனரல்லாதாருக்கும் நன்மை தரக்கூடிய திட்டங்களை மகாத்மா அதில் புகுத்தியதாலும், அவற்றால் நமக்கு நன்மை உண்டென்று நம்பியதாலும் நான் அதில் ஈடுபட்டு உழைத்து வந்தேன். கடைசியாக பார்ப்பன சூழ்ச்சியே வெற்றி பெற்று காங்கிரசின் பொய் வேஷம் வெளியாய் விட்டது.

இப்பொழுது மறுபடியும் மகாத்மாவினால் செய்ய முடியாத காரியத்தை நாங்கள் செய்து விடுகிறோம், எங்களுக்கு நீங்கள் கொஞ்சம் உதவியாக மட்டில் இருங்கள் என்று ஸ்ரீமான் ஷண்முகம் செட்டியார், வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்தர முதலியார் முதலியவர்கள் உங்களை அழைக்கிறார்கள். அதற்குத் தடையாக இருப்பதற்கு எனக்கு இஷ்டமில்லை. உங்கள் புத்தியைக் கொண்டே நீங்கள் யோசித்துப் பாருங்கள். நான் கொஞ்ச காலத்திற்கு யாரையும் தடுக்காமல் விட்டு விடப் போகிறேன். காங்கிரசின் யோக்கியதையை தெரிந்துகொண்டு பிறகு வெளியே வரட்டும், காங்கிரசினால் உத்தியோகம் பெற்று விடலாம் என்பதினாலேயே தேசத்துக்கு ஒரு நன்மையும் விளைந்துவிடாது.

யார் மந்திரி வேலை பார்ப்பதாய் இருந்தாலும் நமது லெக்ஷியம் நிறைவேறிவிடாது. பனகால் ராஜாவும் ஆறு வருடம் மந்திரி வேலை பார்த்தார். அதன் பயனாய் அரிசி விலை ஒரு தம்படியாவது குறைந்து போகவில்லை. அதுபோலவே டாக்டர் சுப்பராயனும் மந்திரி வேலை பார்க்கிறார். அரிசி விலையொன்றும்யேறிப் போகவுமில்லை. பனகால் ராஜா செய்த வேலையைத்தான் சுப்பராயனும் செய்து வருகிறார். ஆனால் பனகால் ராஜா பார்ப்பனரல்லாதாருக்கு உத்தியோகம் கொடுத்தார். டாக்டர் சுப்பராயனோ பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் கொடுத்து வருகிறார். இதற்கு காரணம் பனகால் ராஜாவை பார்ப்பனரல்லாதவர்கள் மந்திரியாக்கினார்கள் அவருடைய மந்திரி ஸ்தானம் நிலைக்க பார்ப்பனரல்லாதார்கள் உதவி செய்து வந்தார்கள். அதனால் பார்ப்பனரல்லாதவர்கட்கு அவர் உத்தியோகம் கொடுத்து வந்தார். டாக்டர் சுப்பராயனோ பார்ப்பனர்கள் தயவால் மந்திரியானார். அவருடைய மந்திரி ஸ்தானம் நிலைக்க பார்ப்பனர்கள் இரவும் பகலும் பாடுபட்டு வருகிறார்கள். அதனால் பார்ப்பனர்களுக்கே உத்தியோகம் கொடுக்க வேண்டியது டாக்டர். சுப்பராயனின் கடமையாய் போய் விட்டது. இம்மாதிரி கொள்கையுள்ள மந்திரி ஸ்தானத்திற்கு யார் வந்தாலும் இப்படித்தான் செய்ய முடியும். மகாத்மா காந்தி வந்தாலும் இப்படித்தான் முடியும். எனவே மந்திரி பதவியே நமது லக்ஷியமல்ல. நமது மக்களுக்கு சுயமரியாதைதான் பிரதானம். அதற்காக பாடுபடுவதற்கு யார் ஒப்புக்கொண்ட போதிலும் அவர்களுடைய மற்ற அபிப்பிராய பேதங்களை பாராட்டாமல் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

சுயமரியாதைதான் சுயராஜ்யத்திற்கு வழியே அல்லாமல் மந்திரி முதலிய பதவிகள் அல்ல. நமக்குள்ளிருக்கும் சுயமரியாதை அற்ற தன்மையை சற்று யோசித்துப் பாருங்கள். நம்மில் சுயராஜ்யமென்று பேசிக் கொண்டிருக்கிற பெரிய பெரிய மிராசுதாரர்கள் எல்லாம் பிரபுக்கள் எல்லாம் பார்ப்பனர்களின் காலில் விழுந்து கும்பிட்டு அவர்கள் கால்விரலுக்கு முத்தம் கொடுக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியும் நானும் பார்ப்பன விஷயங்களைப் பற்றி மிகைப்படுத்தி சொல்லுகிறோமென்று எங்கள் மீது பழிசுமத்துகிறவர்கள் கூட பார்ப்பனர் காலில் விழுந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பார்ப்பனர் தவிர வேறு வீட்டில் சாப்பிடுவதில்லை என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் இந்த ஊருக்கு வந்த சங்கராச்சாரி என்ற பார்ப்பனருக்கு எத்தனையோ பிரபுகள் அவர் காலில் விழுந்து 1000, 2000 என்று பணத்தை அவர் காலில் கொட்டி அவர் காலைக் கழுவிய தண்ணீரை பாத தீர்த்தம் என்பதாக வணக்கத்துடன் வாங்கி தலையில் தெளித்துக் கொண்டதுமல்லாமல் வாயிலும் ஊற்றிக் கொண்டார்கள். இந்த முட்டாள் தனமானது 500 வருடங்களுக்கு முன்னால் கிருஸ்தவ சமூகத்தில் இருந்த அதாவது “பாவ மன்னிப்பு டிக்கட்டு விற்கிறதான” அவரவர்கள் பாபத்திற்கு தகுந்தபடி விலைபோட்டு பணம் வாங்கிக் கொண்டு விற்று வந்த மூட நம்பிக்கையை விட முட்டாள்தனமாக இருக்கிறது. இந்த முட்டாள்தனமும், மூட நம்பிக்கையும் போன பிறகுதான் கிருஸ்தவ நாட்டிற்கும் ஆட்சிபுரியும் சக்தி வந்தது. அதன் பிறகுதான் அது பெரும்பான்மையான தேசத்தை ஆளத் தலைப்பட்டது.

அதுபோலவே நமது மூட நம்பிக்கையும் முட்டாள்தனமும் நம்மை விட்டு விலகி சுயமரியாதையை அடைந்த பிறகுதான் நாம் ஆட்சி புரிவதற்கு உரியவர்களாவோம். நமது நாட்டில் உயர்ந்த ஜாதி என்கிற கொள்கை ஒழிந்து, தாழ்ந்த ஜாதி என்கிற கொள்கை அழிந்துபட்டபின்தான் “சுயமரியாதையை” நினைப்பதற்கு யோக்கியதை உண்டு. ஒரு மனிதனைப் பார்த்து பிராமணன் என்று சொல்வதினாலேயே நாம் தாழ்ந்த ஜாதி என்பதும், சூத்திரன் என்பதும், பிராமணனது வைப்பாட்டி மக்கள் என்பதையும் நாமே ஒப்புக் கொண்டவர்களாகிறோம். இதைப் பற்றிக் கவலையில்லாத ஜனங்களுக்கு சுயராஜ்யம் எதற்காக, காங்கிரஸ் எதற்காக, சங்கங்கள் எதற்காக, பொது நலச்சேவை என்கிற வேஷங்கள் எதற்காக, பொய்யான உத்தியோக சண்டையின் பயனாய் இப்பேர்ப்பட்ட இழிவான தத்துவங்கள் எல்லாம் நிலைபெற இடமேற்பட்டு விடுகிறது. மற்ற மதஸ்தர்களைப் பார்த்தாவது நமக்கு புத்திவர வேண்டாமா? உலகத்தில் உள்ள எந்த மதத்திலாவது பிறவியின் காரணமாக ஒருவன் காலில் ஒருவன் விழுகிறானா? ஒருவனுக்கொருவன் வைப்பாட்டி மகன் என்று ஒப்புக்கொள்ளுகிறானா? இம்மாதிரி கொடுமைகள் எல்லாம் தீர்வதற்குக் காங்கிரசில் இடமிருக்கிறதா? அல்லது நமது சங்கத்தில் இடமிருக்கிறதா என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உண்மையான இடத்தை விட்டு விட்டு நமது குறைகள் நீங்குவதற்கு காங்கிரஸ் போன்ற கற்சுவற்றில் முட்டிக் கொள்வதில் யாதொரு பயனுமில்லை.

குறிப்பு:- கோயமுத்தூர் டவுன்ஹாலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரு. முனுசாமி நாயுடு தலைமையில் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 10.07.1927

Pin It