“கவிதை ஒரு கலை. மானுடம் சொல்ல வந்திட்ட பல கலைகளுள், கவிதை ஓர் அற்புதமான பொருள். கவிதையாகட்டும். வேறு எதுவாகட்டும், கலையே, மனிதகுலத்தின் மனமாக, சாரமாக, மானுட சக்தியாக விளங்குகிறது. மானுடம், தன் மனதைக் கலை மூலமாகக் காட்டிக்கொள்கிறது; கலையாகக் காட்டிக் கொள்கிறது. மானுடம், கலையிலேதான் நிறைவு பெறுகிறது; கலையிலேதான் அது, தன்னை நினைவு கொள்கிறது; கலையிலேதான் நிம்மதி பெறுகிறது.” - தி.சு.நடராசன், கவிதையெனும் மொழி.devadevan kavithaigalகவிதைப் படைப்பாக்கச் செயல்பாட்டில் தேவதேவன் அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தடம் பதித்து வருபவர். வேறு கலைச் செயல்பாடுகளில் உற்றுநோக்கலின்றி கவிதைக் கலையில் மட்டுமே தம்மை ஈடுபடுத்திவருகிறார். தேவதேவன் கவிதையின் கச்சாப் பொருள் இயற்கை. இயற்கையும், இயற்கை சார்ந்த நிமித்தமும், இயற்கைப் பருப்பொருள்களும் கவிதையின் பொருண்மைகளாக அமைகின்றன. இன்றைய வாழ்க்கையில் சக மனிதர்களின் மீது ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவதும் அதிலும் வாழப் பழகி விட்ட மனிதர்களின் இருப்பினையும் புறவெளியின் இருப்பையும் படைப்புலகில் பார்க்கமுடிகிறது. வாழ்வின் முரண்களே சுயத்தையும், அடையாளத்தையும், இருப்பையும் தேட உந்துகின்றன. இந்நிலையில் தான் படைப்பாளர்கள் தம் படைப்புகளின் வழியாக வாழ்வின் இருத்தலைப் பேசுகிறார்கள். அந்தவகையில் தேவதேவனின் படைப்புலகை அறிய முடிகிறது. தேவதேவனின் ‘இரவெல்லாம் விழித்திருந்த நிலா’, ‘மெய்வழிச்சாலை’, ‘பள்ளத்திலுள்ள வீடு’, ‘பேர் யாழ்’, ‘காயமும் தழும்பும்’, ‘கண்விழித்த போது’, ‘நுனி கொம்பர் நாரைகள்’, ‘பக்கத்தில் தான் இருக்கிறது வீடு’, ‘பற்றி இழுக்கும் ரோஜாவின் முட்கிளை’, ‘அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது’, ‘மலர் தேடும் மலர்’ எனும் தேவதேவனின் பதினொரு கவிதைத் தொகுப்புகளை உள்ளடக்கிய, பெருந்தொகுப்பாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மூன்று தொகுதிகளை வெளியிட்டுள்ளது.

தேவதேவனின் எல்லாத் தொகுப்புகளிலும் இயற்கைவாதம் மையங்கொள்கின்றது. தேவதேவனின் ‘இரவெல்லாம் விழித்திருந்த நிலா’ எனும் இத்தொகுப்பு முழுவதும் பேரண்ட வெளியைக் காட்சிப்படுத்துகிறது. சூரியனும், நிலாவும், நட்சத்திரங்களும், கோள்களும், பிரமிப்பை ஏற்படுத்துவது போல உணர்கிறார். கண்ணுக்குப் புலப்படாத பேரண்டத்தை விழிகளால் அகப்படுத்திய ஒரு வலையாக இவ்வானத்தைப் பார்க்கிறார் தேவதேவன். மலைகளும், அருவிகளும், மனவெளியில் குளிர்மை கொள்கின்றனவெனக் கூறுகிறார்.

“ஒரு காகத்தின் குரலில்

துவக்கி வைத்தார் கடவுள்

அன்றைய பொன்னுலகை” (தேவதேவன் கவிதைகள் தொகுதி – I, ப.23)

 

“காலைப்புலரும்ஒளி

கண் ததும்ப வைக்கிறது

இத்தனை மென்மையுடன்

யார் அவனைத் துயில் எழுப்புவார்கள்?” (மேலது)

 

நிலவை மறைத்த மேகம்

பகட்டுகிறது அதனை

எல்லோரும் பார்க்கும்படி (மேலது, ப. 35)

 

மறைந்து மறைந்து தோன்றும் நிலவை

நடிக்கிறது நதியில்

மூழ்கி மூழ்கி நீந்தும் தலை (மேலது, ப.37)

 

“தன் பொலிவை இழந்து நிற்கின்றன

நிலவு நீத்த மேகங்கள்.” (மேலது.)

 

“ஒளிரும் அலைகளின்

ஓராயிரம் புன்னகைகள் தாம்

கூடி இயன்றது வாய்த்

திரண்டு எழுந்து நிற்கும் பெருநிலா,

கடற்கரை மணலோடு

கடல் கொண்ட காதற்

பெருங்களியால்” (மேலது, ப.56)

 

“தோன்றி மறைந்தது ஒரு கணம்

மெய்சிலிர்ப்பென

ஒழிந்த ஒரு சலனம்” (மேலது, ப.56)

 

“நான் என்பது பொய்மை” (மேலது, ப. 263)

 

”மலையகம் ஒன்றன்

குளுமையும் பசுமையும்

இதயவடிவம்” (தேவதேவன் கவிதைகள் தொகுதி – II, ப.170)

இயற்கையை மேன்மை நிறைந்தாகப் பார்க்கிறார் தேவதேவன். இயற்கைக்கு முன் நான் எனும் தன்னிலை, பொய்மையாகிறது என்கிறது கவிதை. ஆடிப் பிம்பத்தில் மாய்ந்து நின்ற அழகு இயந்திரப் பெருக்கத்தில் நான் என்னும் தன்னிலை இயங்காமல் இயங்கிக் கொண்டிருக்கின்ற வாழ்வினைக் கவிதையாகக் கூறுகிறார். ‘நான்’ எனும் தன்னிலை இயங்காமல் இருப்பது சொர்க்கத்தின் கடைத்தெருவிற்கு அழைத்துச் செல்வது போல உணர்கிறார் தேவதேவன்.

அடுத்ததாக ‘மெய்வழிச்சாலை’ கவிதைத் தொகுப்பில் 90 தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. பள்ளத்தில் உள்ள வீடு 87 தலைப்புகளில் கவிதை இடம்பெற்றுள்ளது. இதில் மலைக்குன்றுகளைப் பற்றிச் சிறு சிறு கவிதைகளாக இடம்பெற்றுள்ளன. மலைக்கும் மனிதருக்குமான தொடர்ப்பாடும், மலைக்கும் மலையை விட்டு அகன்று வாழும் தொடர்பற்ற மனிதர்களின் வாழ்வையும் பதிவு செய்கிறது. வெண்கொக்கு சிற்பம் போல ஒரு பெருவாழ்வை வேண்டி தூய தவம் செய்கிறது என்கிறார் கவிஞர். இயற்கையின் பருப்பொருள்களையும் பல்லுயிர்களின் மேல் கொண்ட அன்பினையும் பசுமையைக் கொண்டாடுதலும் பசுமையான மரக்கிளையில் காய்ந்த சுள்ளிகளைக் கொண்டு அமைந்த பறவையினது கூடும் வாழ்வியல் முரணை எடுத்து இயம்புகிறது என்கிறார் கவிஞர் தேவதேவன்.

“குளிர் நிலவுமாய் ஒளிரும் ஓர் இரவு ”

“தளிர் நடை பயிலும் பூமேனிக்

குழந்தை கண்டு”

((தேவதேவன் கவிதைகள் தொகுதி – I, ப.49)

உலர்தலும் வியத்தலும் வைகறை பொழுதாகி விடுகிறது; இதை அறியாமல் இருப்பது பேதைமை என்கிற கவிஞர். தேவதேவனின் பெரும்பான்மைக் கவிதைகள் குழந்தை மனவெளியோடும் பயணிக்கின்றன; குழந்தைகளின்மேல் பேரன்பைப் பொழிகின்றன. தனிமை எனும் தீவில் ஒருவர் வாழ்ந்தாலும் அவரோடு ஒரு குழந்தை இருந்தால் அவ்வாழ்வு அருள் நிறைந்த வாழ்வாகும் என்கிறார் தேவதேவன். கவிதைகளில் குழந்தை மனவெளியைக் கவிதையாக்கும் போது கவிஞர் குழந்தையாகவே மாறிவிடுகிறார்.

வாழ்வின் சுயமறிதல்:

சுயமறிதல் எனும் குணநிலை தன்னியல்பு சார்ந்தும் தன்னிலை அடையாளத்தை வெளிப்படுத்தல் சார்ந்தும் நிகழ்கின்றது. தன்னை முழுமையாக வெளிப்படுத்தலிலும், தன் முனைப்பும், சுயம் அந்நியமாதலும், சுயம் அகம், புறவயத்தன்மை கொண்டதாகவும், உள் முரண் கொண்டதாகவும் எனும் பண்புநிலைகளில் சுயம் தேவதேவன் கவிதைகளில் வெளிப்படுகின்றது.

தேவதேவனின் 'அமுத மாத்திரமே வெளிப்பட்டது' எனும் கவிதைத் தொகுப்பில் தன் வாழ்வின் பொருட்டு பரிசமாக சுயம் தன்னைத் தடம்பதிக்கின்றது.

“சலனமின்றி அமைதியாக

இமைக்காத விழிகளுடன்

தன் வாழ்வுக்காய்

நம் தொடுகையை வாசித்தபடி”.

(தேவதேவன் கவிதைகள் தொகுதி- III, அமுத மாத்திரமே வெளிப்பட்டது, ப.17).

 தன்னுணர்ச்சி சார்ந்த செயல்பாடுகளையும் எண்ண வெளிப்பாடுகளையும் சுயமே தீர்மானிக்கின்றது. தன் வாழ்வுக்காகத் தன்னை நிலைநிறுத்துதல் என்பதே சுயத்தின் அடையாளமாக வெளிப்படுகின்றது.

“ஒன்றும் சக்தி எதுவான யோசி

அதைத் துற

தொடர்ந்து துறந்து கொண்டே இரு

மொத்த உலகத்தின் பிரதிநிதியான நீ”

(மேலது, ப.27)

மனித இருப்பு சுயத்தைத் தேடுவதிலிருந்து உருக்கொள்கிறது. நீ – நான் குறித்துப் பேசுவதாகவும், சுயத்தை நிலைநிறுத்துதற்கானதாகவும் சுயம் கவிதையில் வெளிப்பட்டுள்ளது.

“அஞ்சாது தனித்திருந்து

தன்னை அறிந்து

தன்னந்தனியான வாழ்வினையும் அறியும் மாண்புமிக்கோன்

'தான்பிறர்' எனும் பேதக்கொடுவாய்க்குள்

குழு ரகசியமாய் முளைக்கும்

கொடூரப் பல்இல்லாதான்.

அவனின் விரிந்த விழித்திரையெங்கும் வாழ்வின் நடனம்.

கதறி அழைக்கும் வாழ்வினுக்குப்

பாறாங்கல் முதுகுகாட்டி

கலைக்கமுடியவில்லை வாழ்வின் நடனத்தால்”.

(மேலது, ப.23)

தன்னைத் தானே அறிதல் என்பது நிலைபேறு அடைவதன் வழியாகும். தன்னை நிலைநாட்டல் எனும் இருத்தல் இக்கவிதையில் அமைந்துள்ளது. மனித வாழ்க்கை அர்த்தநிலைகளையும் அர்த்தமற்ற நிலைகளையும் கொண்டுள்ளது. தனிமனித இருத்தலும் சமூகமயமான இருத்தலும் வாழ்க்கையை அபத்தமாகப் பார்க்கின்றன.

“வாழ்வு குறித்த சிந்தனைகளால்

சலிப்படைந்து போயிருக்கிறேன்.

பசிக்கும் எனக்கு வேண்டியது

உணவுப் பட்டியல் அல்ல

உணவு

அதுவும் இப்பொழுதே.”

(மேலது,ப.11)

இக்கவிதை மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக உணவு அமைகின்றதைக் காட்டுகிறது. தேவதேவனின் ‘பலூன்காரன்’ கவிதை குழந்தைகளின் மனவெளியைப் படைத்திருக்கிறது. விரிந்திருக்கும் பிரபஞ்சத்தின் வானில் உலாவும் விருப்பமுடைய இதயமாகவும் தன்னறம் நோக்கியே நீள்கிறது. அதன் விரல் எனக் குழந்தையின் மனவெளி தன்னறம் சார்ந்த வெளியாகத் தேவதேவன் படைப்புலகு, பிரபஞ்சமெங்கும் படர்கிறது. வாழ்வில் பிடிமானமற்று வெள்ளத்திலோ அல்லது 'கிணற்றிலோ' குளத்திலோ பாய்ந்து தற்கொலை செய்வதை மறுத்து ஒரு பெண் தற்கொலையிலிருந்து மீண்டு கிராமத்தை விட்டு நகரத்தை நோக்கிச் செல்கிறாள். மனித வாழ்க்கையில் வாழ்வாதாரம் சிதைந்து தன் வேரை இழந்து வாழக்கூடிய வாழ்க்கையில் தன் பூர்வீகத்தைத் தேடிப் பார்க்கும் பொழுது ஐரோப்பியக் காலனியப் பார்வை மெய்மையற்ற ஒரு புனைவாகக் கவிஞர் தன் 'வேர்கள்' கவிதை கதைசொல்லியாக ஒலிக்கிறது.

மனித வாழ்க்கை எதிர்பார்ப்புகளில் துளிர் கொள்கிறது. எதிர்பார்த்துக் கொண்டிருந்த மழை, பொழிந்தது. எதிர்பார்த்தபடி நிலவும் பசுமை அடைந்தது. இதமான வெயிலும் இதமான குளிரும் என்றும் இல்லாத ஓர் அமைதியைத் தந்தன. பல ஆண்டு காலமாகப் பொய்த்துப் போன மழை வாழ்வில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு இந்நினைவுகளே நீடித்து இருக்கும் இந்த எதிர்பார்ப்போடு மனித வாழ்க்கை நகர்கிறது என்பதைத் தேவதேவன் தன் கவிதையில் பதிவு செய்துள்ளார். மேலும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தின் அம்புகளையே தருகின்றன என்றும் கூறுகிறார். எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் ஓயாத அலைகள் போல் முன்னும் பின்னும் அசைந்து கொண்டிருக்கின்றன என ‘அது நிகழ்ந்து விட்டது’ கவிதைப் பதிவுசெய்துள்ளது.

வாழ்வு பதற்றம் நிறைந்தவையாகக் காணல்:

தன் வாழ்வு கேள்விக்குறியாக மாறும் போது பதற்றமான சூழல் உருவாகின்றதைக் கவிஞர் தேவதேவன் கவிதையில் பதிவு செய்துள்ளார். “ஊசித் துளையினில் நூல் நுழைக்க இயலாக் கைநடுக்கம்” என வாழ்வினைப் பதற்றத்தை நோக்கி நகர்கிறதாகக் கூறுகிறார் தேவதேவன். வேதனைகள் தன்னைச் சூழ்ந்து இருக்கின்ற போதெல்லாம் சுயத்தை நிலைநிறுத்துவதற்குத் தானே மருந்தாக அமையும் எனச் சுயம் வாழ்வில் மெய்யியலைத் தேடுகிறது என்கிறார் தேவதேவன்.

மரணத்தைக் களைத்துப் போடுதல் :

தேவதேவன் கவிதைகளில் மனித வாழ்வில் ஏற்படும் மரணம் குறித்த கருத்தாக்கத்தைக் கவிதைகள் வழியாகப் பார்க்கமுடிகின்றது. மரணத்திற்குப் பின்னான எத்தனிப்புகளைத் தேவதேவன் கவிதைக் கட்டியெழுப்புகிறது.

கவிஞர் தேவதேவனின் ‘தீவிரமான உணர்வுகள் அவனை’ என்னும் கவிதை நவீன எடுத்துரைப்பில் அமைந்துள்ளது. மனித வாழ்வில் தீவிரமான உணர்வுகள் மரணத்தைப் பற்றிச் சிந்திக்க வைத்ததாகவும் மரணத்தைப் பற்றிய ஒருவரின் உணர்வுகள் யாவும் வாழ்வைப் பற்றிய சிந்தனையை ஏற்படுத்தியதாகவும், சமூகத்தைப் பற்றி அவனுடைய உணர்வுகள் இன்னும் நிறைவேறாத இலட்சியங்களைப் பற்றிச் சிந்திக்க வைத்ததாகவும், இலட்சியம் பற்றிய அவனுடைய உணர்வுகள் போர்களைப் பற்றிச் சிந்திக்க வைத்ததாகவும், போர்களைப் பற்றி அவனுடைய உணர்வுகள் விடுதலை பற்றிச் சிந்திக்க வைத்ததாகவும், இலட்சியமும் விடுதலையும் பற்றிய உணர்வுகள் கனந்தோறும் வாழ்வு தன்னில் கருணையின் ஊற்றாக மலர்கிறது. கொந்தளித்த உணர்வுகளுக்கு நடுவே மனித வாழ்வு தன்னுள் இருக்கக்கூடிய மானுட இலட்சியத்தையும் விடுதலையையும் மரணமற்ற பெருவாழ்வினுடைய ஒளி வீசிக் கொண்டிருக்கின்றது. (தேவதேவன் கவிதைகள் தொகுதி -III, அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது,ப.59) காட்டு மலர் மனிதரோடு உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இக் கவிதை நவீன அந்தாதியில் அமைந்திருக்கின்றது.

“பெரு வல்லமையும்

பேரழிவு முன்னால்,

தம் அழுகையைத்தான்

ஏந்தி நிற்குமோ?”

(தேவதேவன் கவிதைகள் தொகுதி - III, மலர் தேடும் மலர்,ப.379)

 

“அழகு, கூற்றம்.

மரணத்தையும் உயிர்த்தெழுதலையும்

தம் நோய்க்குத் தாமே மருந்தானார்.” (தேவதேவன் கவிதைகள் தொகுதி - III, அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது, ப.63).

மரணம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பின்தொடரக்கூடியதாகும். மரணம் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். இயற்கையாக நிகழ்வதும் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளும் இயற்கைச் சீற்றத்தால் மரணம் நிகழக்கூடும். மரணம் துன்பத்தைத் தருவதோடு இருப்பின் இழப்பை எவரும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாக மௌனித்து உலாவுகிறதாகவும், ஒவ்வோர் இழப்பிற்கும் தமக்குத் தாமே இறப்பின் வலிகளுக்கு மருந்தாவர் எனக் கவிதையில் தேவதேவன் கூறுகிறார்.

“பல்லாயிரம் மர்மங்களால்

சமன்படுத்தப்பட்டுக்கொண்டு

தனதும், மனித வாழ்வினதுமான

மகாதர்மத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறே இவ்வுலகு

மகா களிப்பூட்டும்

ஒரு நாடகச் சுவைவெளியாய்” (மேலது, பக்.69 - 70)

 

“மரணத்தையும் குழந்தைமையையும்

வாளாய் ஏந்தியபடி

காலத் தீண்டலற்ற

கணங்களை மட்டுமே அறியும்

குதிரையின் குளம்படிகள் ஒலிக்க

காணுமிடமெங்கும்

நம் கனவு ராஜ்ஜியம்!”. (மேலது, ப. 83).

 

“வாழ்வின் பாதையில்

எல்லா நம்பிக்கைகளும் ஆபத்தானவையே

என்கிறது புனிதம்.” (மேலது, ப.119)

நிகழ்வியத்தை அடிப்படையாகக் கொண்டே தேவதேவனின் கவிதை வெளி இயங்குகிறது. காலத்தையும், வெளியையும் தேவதேவன் கவிதைகள் பிரதிபலிக்கின்றன. வாழ்க்கையில் நம்பிக்கை எனும் ஊற்றுக் காலமும் இடமும் கொண்டதாக இருக்கிறது என்கிறார் தேவதேவன். மனித வாழ்வை மகத்தானதாக ஆக்குவது லட்சிய வாழ்வாகும். அவ்வாழ்வு கனலும், அழகும், அன்பும். அறவுணர்வும், சாதியற்ற வாழ்வின் மகத்துவத்திலிருந்து உருவாகுகிறது என்கிறார். மனிதர்கள் கண்டறிய வேண்டியது புனித வாழ்வு. இதுவே, தலையாய உண்மைகளைக் கொண்டுள்ளதாகத் தேவதேவன் கவிதையில் காட்டுகிறார். மனித வாழ்வு முரண்களைக் கொண்டு இயங்குகிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் முரண்கள் இருந்தாலும் ஒரு புள்ளியில் இயங்குவதும் விலகிச் செல்வதும் நிகழ்கிறது என்பதை மூன்று நண்பர்கள் கவிதை காட்டுகிறது.

முதுமையில் ஏற்படும் மரணத்தின் வருகையை எண்ணி ஒவ்வொரு கணமும் துக்கப்படுவதாக அடையாது இருக்கின்ற நிலை வேறு வாழ்க்கையை நினைத்து நினைத்து அத்துக்கமே அவனைக் கொல்கிறதாகக் கவிஞர் காட்டுகிறார்.

"அழிந்தது ஆங்கே ஓர் அழகுக் காட்சி" (தேவதேவன் கவிதைகள் தொகுதி - II, கண் விழித்தபோது, ப.299)

 

“வாழ்வின் சொர்க்கத்தை

அறிந்து கொண்ட மலர்கள்

வாழ்வின் சொர்க்கத்தையே

நோக்கிய வண்ணமுள்ளன,

சூரியகாந்திப் பூக்கள்”. (மேலது, ப.298)

 

 “அடர்ந்திருக்கும் மரத்தின் நிழலின் குளிர்மை

வாழ்வில் வெறுமை

இவ்வுலகில் ஏன் இத்தனை துயரங்கள்? (மேலது,ப.41).

குளிர்ந்து இருத்தல் இன்பத்தின் குறியீடாக இருப்பதை முரணாக, துயரம் நிறைந்ததாகக் கவிஞர் காண்கிறார். மற்றொரு கவிதையில், விண்ணில் பறப்பதற்காகச் சிறகு விரித்தபடியே அமர்ந்திருக்கின்றன விமானங்கள் எனக் கவிதை வழிப் பறவையின் பறத்தலை, சுதந்திரத்தின் தாகமாக நவீனக் கருவி வழி பறத்தலும் அதன் சுதந்திரமும் அடங்கி இருப்பதாகக் கவிதையில் பார்க்கமுடிகிறது. ‘நுனிக்கொம்பர் நாரைகள்’ கவிதைகள் பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளன. இதில் இருவரித் துளிப்பாக்களும், ஹைக்கூக் கவிதை வடிவக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

தனக்குப் பிடித்த உணவை எல்லாம் சாப்பிட வேண்டும் என்கிற மழலைக் குணம் இன்பம் நிறைந்ததாக இருப்பதாகக் கவிஞர் கூறுகிறார். பழக்கடைகளில் பார்க்கும் கொடுக்காப்புளி பழங்களைக் குழந்தை மனம் ததும்புகிறதாகக் கவிஞர் கூறுகிறார். நம் உலகம் நம்பிக்கைகளாலும் அவநம்பிக்கைகளாலும் நிறைந்து இருந்தாலும் ஒரு குழந்தை இவ்வுலகைப் பார்க்க வெளிவந்தவுடன் அழுகிறது. சகலவிதத்திலும் இவ்வுலகம் நலம் தருவதாக மாறிவிடும் எனத் தேவதேவனின் குழந்தை குறித்தான கவிதை நம்பிக்கை ஊட்டுகிறது.

தேவதேவனின் படைப்பாக்கம் மனித வாழ்க்கை பிடிமானமற்றதாகவும், நம்பிக்கை எனும் நிழல் படர்ந்து இருப்பதாகவும், வெயிலை நிழலாகவும், நிழலை வெயிலாக்கித் தருவதாகவும், இப்படி எதுவாக இருக்கக்கூடும் எனக் கேள்வி எழுப்புவதாக இருத்தலை நோக்கிப் பயணிக்கிறது. மனித வாழ்வின் இருத்தலில் அறத்தைத் தேடுதலும், அன்பின் பற்றுதலை வாழ்வின் அர்த்தமாகப் பார்த்தலும் தேவதேவனின் படைப்புலகமாக அவதானிக்கலாம். இருப்பினும், பெரும்பான்மைப் படைப்புகளில் இருத்தலும், இழத்தலும், கருணையும், பக்திமை, மெல்லிய மனவெளியும், மனிதவாழ்வின் இருமை எதிர்வுகளாக இழையோடுகின்றன. பெரும்பான்மையான படைப்புகள் இயற்கையின் இயல்புகளை முன்மொழிவதோடு, இயற்கையின் மீது அலாதியான நேசிப்பின் வெளிப்பாடுகளில் மையங்கொள்கின்றன. மேலும் தேவதேவனின் படைப்புலகு பல்வேறு வாசிப்பனுபவத்தை உள்ளடக்கியுள்ளது.

துணை நூல்கள் :

1.      தேவதேவன் கவிதைகள் (தொகுதி - I), டிசம்.2025, NCBH வெளியீடு, சென்னை.பக். 268.

2.      தேவதேவன் கவிதைகள் (தொகுதி-II), டிசம்.2025, NCBHவெளியீடு, சென்னை. பக்.438.

3.      தேவதேவன் கவிதைகள் (தொகுதி-III), டிசம்.2025, NCBH வெளியீடு, சென்னை. பக்.460.

4.      தி.சு.நடராசன், 2019, கவிதையெனும் மொழி, NCBH வெளியீடு, சென்னை.

- முனைவர் ம.கருணாநிதி, தமிழ் உதவிப்பேராசிரியர், தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் – 635 601.