கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புகள் வழியாகச் சமூகம் குறித்த அவரின் பார்வையை மதிப்பீடு செய்யும் முயற்சியே இக்கட்டுரை. விரிப்பின் பெருகும் சுருக்கின் எஞ்சும் என்ற புரிதலுடனேயே இதனை எழுத முனைகிறேன். 40 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. என்றாலும் 1944 தொடங்கி 1964 வரையிலான 20 ஆண்டுகளில் அவரின் படைப்புகளைத் தொகுத்துப் பார்த்தால் 30 நூல்களாக விரிகின்றன. இவற்றுக்குள் மூழ்கி முத்தெடுக்கும் முயற்சியாகவும் இதனைக் கொள்ளலாம். கவிஞரின் சமூகப் பார்வையை எடுத்துரைக்கும் முன்பாக சமூகம் பற்றிய எனது புரிதலைக் கூற விரும்புகிறேன். இந்தப் புரிதல் கண்ணாடி வழியாகவே தமிழ்ஒளியை நான் காண்கிறேன்; மதிப்பீடு செய்கிறேன்.

மாதுளையில் முத்துக்கள் போல் சமூகப் பார்வைக் கூறுகள் பலவாக இருப்பினும், நாரத்தை சுளைகள் போல் சிலவற்றை முன் வைக்கிறேன்.

சமூகம் என்றால் மக்கள் சமமாக வாழ வேண்டும்

ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது

ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ வேண்டும்

பசிப்பிணி இருக்கக் கூடாது

தனி நபர் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்

பெண்களுக்குப் பாதுகாப்பும் சம வாய்ப்பும் இருக்க வேண்டும்

ஊர் என்றும் சேரி என்றும் பிரிந்திருக்கக் கூடாது

தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்; சாதிப் பாகுபாடு களையப்பட வேண்டும்

சமயக் காழ்ப்பு நீக்கிச் சமூக நல்லிணக்கம் வேண்டும்

எல்லாருக்கும் எல்லாமும் என்ற பொதுவுடமை நிலை வேண்டும்

இவையெல்லாம் தானாய் உருவாகி விடாது. இதை நோக்கித் தனியாகவும் கூட்டாகவும் செயலாற்ற வேண்டும். இந்த மன ஓட்டத்தைத் தமிழ்ஒளி தொடக்க காலத்திலேயே எழுதாக்கிப் பதிக்கிறார். 1948 முன்னணி இதழில் ஒரு கவிதை. காதலியுடன் காதலன் பேசுவதாக இது அமையும்.

 "யாரடி காதலி கேளடி - உன்றன்

ஆசைக் குரியவன் சொல்கிறேன்

பாரடி மானிடச்சாதியை - அவர்

பட்டிடும் துயரத்தைப் பாரடி"

இளம் வயது 24-ல் எழுதிய காதல் கவிதையிலும் சமூக அவலம்தான் அவரது மனதை ஆட்கொள்கிறது. "முத்தெனவே ஒளி சிந்திடும் கொடி, முல்லையை ஒத்த சிரிப்பினால், எத்தனை ஜாலங்கள் காட்டுவாய்" என்று காதலியை வர்ணிக்கிறார். அதற்குள் சமூக நிலைமை மனக்கண்ணில் விரிகிறது. "அதை எண்ணி மயங்கிடும் போதிலே, தொத்து பிணிகொண்ட ஏழைகள்- படும், துன்பம் அழுகுரல் காதிலே, குத்தல் எடுக்குது தோழியே- துயர், கொண்டதென் உள்ளமென் செய்குவேன்" என்று தவிக்கிறார். இல்வாழ்க்கையின் பண்பும் பயனும், அன்பும் அறனும் என்று வள்ளுவர் வரையறுக்கிறார். தமிழ்ஒளி செய்யும் வரையறை இது.

"இக்கணம் தொட்டு நம் ஆசையும் - காதல்

இன்பமும் மக்களின் தொண்டடி"

 மக்கள் தொண்டுதான் வாழ்க்கை இன்பம் என்ற பார்வை இளம் வயதில் எத்தனை மகத்தானது.

தமிழ்ஒளி பிறந்து வளர்ந்த 1940கள் தமிழ் மண்ணில் திராவிடச் சிந்தனை வேர் விட்டு வளர்ந்து படர்ந்த காலம். இதிலிருந்துதான் அவரது சமூகப் பார்வையும் தொடங்குகிறது. அவரின் தொடக்ககால கவிதைகளில் இதற்கான கருத்துக்கள் பட்டுத் தெறிக்கின்றன.

"தமிழனுக்கே தமிழ்நாடு இதைத் தடுக்க

யார் செய்தாலும் கேடு" (திராவிட நாடு -1944)

"செழுந்தேனை ஒத்த தமிழ் உணர்ச்சியாலே, திறல் பெற்றார் மாணவர்கள் திராவிடத்தின் முழு பொறுப்பும் அவர் ஏற்றுக் கொண்டார் ..... திராவிடத்தின் எதிர்காலம் அதோ அவர்கள் கையில் தானே" (குடியரசு 1944)

என்று திடமாகக் கூறுகிறார் தமிழ்ஒளி. இதுதான் வரலாறு என்பது 1967ல் நிரூபணமானது.

திராவிடம் என்ற கருத்தாக்கத்தை மனம் கொள்ளும் போது எதிர்நிற்பது ஆரியம் என்பதும் பார்ப்பனியம் என்பதும் இன்று வரை சொல்லாமலேயே விளங்கிக் கொள்ளப்படுவதாகும்.

"பெரும்பழிக்கு வகை தேடும் ஆரியத்தை

அறவே இந்நாள் அதுவும் இன்றே பாய்ந்தே

அழித்திடுவோம் ஆம் இதிலே ஐயமில்லை"

என்று அதே கவிதையில் ஆவேசம் கொள்கிறார். "ஆரப்பன் நாட்டில் ஆரியம் திகழ்வது? தேரப்பா ஆரியம் வீழ்த்தியே தீரப்பா" (புதுவாழ்வு 1946) என்று அழுத்தம் கொடுக்கிறார். "திராவிடம் உற்ற சிறுமையைத் தீய்த்திடு, தூக்குக் கயிறுனைத் தொட்டிழுத்தாலும் துளியும் அஞ்சாதே" என்று ஊக்கப்படுத்துகிறார்; உத்வேகமூட்டுகிறார்.

வீராயி காவியத்தில் ஒடுக்கப்பட்ட பறையர் சமூகத்தின் இரண்டு பிரதிநிதிகளாக வீராயியையும், அவளுக்கு ஆதரவு தரும் முதியவர் மாரியையும் நமக்கு அறிமுகம் செய்கிறார் கவிஞர். இவர்கள் சாதியக் கொடுமைகளால் நொந்தபோது நாட்டில் இருப்பதைவிட காட்டுக்குச் சென்று விடலாம் என்று நினைக்கின்றனர். ஏன்?

"சேரியெனும் இடமில்லை காட்டினிலே

அதுவன்றிக் கற்பைத் தின்னும்

பூரியர்கள் அங்கில்லை; சட்டத்தால்

பொய்சொல்லிப் புன்மை சேர்க்கும்

ஆரியர்கள் அங்கில்லை யாவையுமே

பொது உடைமை"

ஆரிய எதிர்ப்பு, கவிஞர் மனதில் நீக்கமற நிறைந்திருப்பதை இது காட்டுகிறது. ஆரிய எதிர்ப்பு அடித்தளம் என்றால் அதன் மேற்கட்டுமானங்களான சாதி, மதம், மூடநம்பிக்கைகள் எதிர்ப்பும் தவிர்க்க இயலாதவை அல்லவா? அதனையும் தமிழ்ஒளியின் பல படைப்புகளில் நேரடியாகவும் பாத்திரங்கள் வாயிலாகவும் காண்கிறோம்.

வீராயி காவியத்தில் ஒரு காட்சி மூலம் ஆரியத்தின் விளைவான இந்துமத எதிர்ப்பைக் கவிஞர் தமிழ்ஒளி பதிவு செய்கிறார். மழை வெள்ளத்திற்கு அஞ்சி வைக்கோல் போரில் தஞ்சம் அடைந்த வீராயியும் அவள் தந்தை வேடப்பனும் மயக்கமடைந்து கிடக்கின்றனர். எலும்பு தோல் இறைச்சியில் இலக்கமிடாததால் முதலில் மனித மனம் உதவி செய்ய முனைகிறது. ஆனால், அவள் சேரிப்பெண் என்று ஒருவர் கூறியதும் அனைவரின் மனமும் தடுமாறுகிறது.

"பயப்பட்டார் பறையர்களைத் தொட்டெடுத்து விட்டால்

பார்ப்பவர்கள் என் சொல்வார் என்றொதுங்கிப் போனார்"

இதற்குக் காரணம் என்ன? " தயைமிக்க இந்துமதம் வளர்த்து விட்ட எண்ணம்."

தீண்டாமைக் கொடுமையின் வேர்கள் ஆரியம் எனும் பார்ப்பனியத்திலும் அதுபெற்ற இந்து மதத்திலும் இருக்கின்றன என்பதை இக்கவிதையில் உறுதியாக உரைக்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது வள்ளுவம் வகுத்த நெறி. செவ்வியல் இலக்கியங்களில் சாதி, சமய பேதமில்லை; நால் வர்ணக் கூறு இல்லை. இப்படியான "தமிழரிடை இத்தீமை விளைத்தவரைக் காணின், கையிரண்டும் காலிரண்டும் வெட்டி, அவர் கண்ணைக், கழுகுக்குப் பலியிடுவேன்" என்று கொந்தளிக்கிறார். இது வன்முறை எண்ணம் இல்லை. நன்றான வாழ்க்கையில் நஞ்சு கலந்ததை எண்ணியதால் ஏற்படும் மனக்குமுறல்.

“ஏழ்மையினால் காய்ந்த பூண்டாகி மாறிடினும் குலத்தன்மை மாறோம்” என்ற உறவினர்கள் கூற்றின் மூலம் சாதி நஞ்சு எவ்வாறு மூளை நரம்புகளில் புரையோடிப் போயிருக்கிறது என்பதைக் காட்டுகிறார். இப்போது முன்வைக்கப்படும் மாட்டுக்கறி பிரச்சனையை ஆனந்தனின் அப்பா வழியாக அப்போதே எடுத்துக் காட்டுகிறார். “கப்பலிலே கால் வைத்த காலிக்கு மாட்டு கறிதின்னும் புத்தியது வராதா என்ன?” ஆத்திரத்திலும் துருத்திக் கொண்டு நிற்கிறது உணவு பழக்கம் குறித்த இளக்காரம். யார் தடுப்பினும், இந்த ஊர் எதிர்ப்பினும் வீராயியைக் கைப்பிடித்து வாழ்வதில் பின்வாங்க மாட்டேன் என ஆனந்தன் உறுதி கொள்கிறான். மணமுடிக்க அவன் தெரிவு செய்த இசைக் கருவி ‘பறை’ இது மிகச் சிறப்பான குறியீடு. அதனை மையமிட்டுச் சுழல்கின்றன கவிதை வரிகள்.

“எக்களிப்பு கொள்ளுதடா பறையோசை எங்கும்

எதிர் நின்ற சாதி வெறி மதவெறிகள் எல்லாம்

சுக்காகப் போயிற்று பறையோசை ஓடி

சுதந்திரத்தைச் சொல்லியுமே முழக்குதடா ஊரில்”

சுதந்திரத்தின் அடையாளமாக, உரிமையின் குறியீடாக, ஆதிக்கத்திற்கு அடங்க மறுக்கும் முழக்கமாகப் பறையோசை இன்றும் ஒலிப்பதைக் கேட்கலாம். சாதி, மதம், தீண்டாமை எனும் சமூகப் புற்றுநோயை வளர்த்துவிட்ட வைதீகத்தை வேரறுக்கும் ஓசை பறையோசை என்பதை அடுத்தடுத்த பத்திகளிலும் பதிவிடுகிறார்.

அநியாயம் ஒன்று கூடி விட்டால் நியாயம் செத்துப் போகும்தானே! சாதி வெறி கொண்ட அநியாயக்காரர்கள் ஒன்று சேர்ந்து ஆனந்தனையும் வீராயியையும் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கிறார்கள். நிலைபெற்ற சிலை, மே தின ரோஜா, கோசலக்குமரி, கவிஞனின் காதல் ஆகிய காவியங்களிலும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக நின்ற காதலர்களுக்கு அழிவே ‘பரிசாகிறது’. இக்காலத்தும் ஆணவக் கொலைகளுக்குக் கொடுவாள், அரிவாள் என ஆயுதங்களுக்குக் கூர் தீட்டிக் கொடுப்பதும், துப்பாக்கிகளில் தோட்டாக்களை ஏற்றுவதும் சாதி வெறிதானே! இதனை அறவே மாய்த்த சமூகம்தான் தமிழ்ஒளி விரும்பிய சமூகம்.

ஆரிய, பார்ப்பனிய எதிர்ப்பு என்பது வர்ணாசிரம எதிர்ப்பும்தானே. இதற்காகவே ஒரு காவியத்தைப் படைத்துள்ளார் தமிழ்ஒளி. கோசலக்குமரி என்ற அந்தக் காவியம் வர்ணாசிரமத்திற்கு எதிராகப் புத்த மதத்தை நிறுத்துகிறது. இதற்கான கருவை ராகுல்ஜியின் வால்காவிலிருந்து கங்கை வரை நூலின் பிரபா என்ற ஒரு குறுங்கதையிலிருந்து எடுத்துக் கொள்கிறார். அதில் வரும் நாயகனான அஸ்வகோஷ் புத்த மதத்தை நாடிச் செல்லும் போது, தர்மசேனர் விளக்கம் அளிப்பதாக வரும் பகுதி வர்ணாசிரமத்தின் பிறப்புக் கோட்பாட்டைக் கேள்வி கேட்கிறது. “அந்தணர் தம்பெண்டிர் ஆணைப் புணர்கின்றார், முந்திக் கருவடைதல் முன்வயிற்றிற் பார்க்கின்றோம்! பிள்ளைப் பெறுகின்றார் பெற்று வளர்க்கின்றார், வெள்ளையாய் வீட்டில் விளக்குகின்ற உண்மை யன்றோ? இவ்வாறே அந்தணர்கள் எல்லோரும் தாய்வயிற்றில் ஒவ்வோர் உயிராய் உயிர்த்துப் பிறந்திருக்க, முன்னர்ப் பிரமன் முகத்தில் பிறந்தார் யார்? என்ன கதைகள்! இழிவுரைகள்” என எளிய சான்று காட்டி விளக்குகிறார்; வர்ணக் கோட்பாட்டைக் கிழித்தெறிகிறார். “படையின்றி பார்ப்பனர்கள் வெற்றி கொள்வர், பயல் அஸ்வகோஷ் எங்கே?” என்ற பெரிய பார்ப்பான் பாத்திரத்தின் கூற்று, சமூகம் காலகாலமாக சந்திக்கும் நுட்மான பிரச்சனை.

ஆரியத்துக்கு எதிராக முதலில் திராவிடத்தை மனம் கொண்ட தமிழ்ஒளி காலப்போக்கில் புத்த மதத்தை முன் நிறுத்தினார். இதன் விளைவே அவரது மாதவி காவியம், விதியோ வீணையோ, புத்தர் பிறந்தார், கோசலக் குமரி போன்ற காவியங்கள் எனலாம். புத்த மதக் கோட்பாட்டின் ஒரு பகுதியாகவே மூடநம்பிக்கை எதிர்ப்பும் அவரிடம் வேரூன்றியிருக்கிறது. உழைக்கிற மக்கள் உருக்குலைந்து கிடப்பதைப் பல கவிதைகளில் அவர் பதிவு செய்கிறார்.

“கால் வயிறு சாப்பிடவும் போதாக்கூலி

கண்ணெதிரே வறுமையிடும் கோரக்கூத்து

நூல் போன்ற இளைத்த உடல் மனைவி மக்கள்

நோய் கொண்ட பெற்றோர்கள் இளங்குழந்தைப்

பாலின்றி அழும் ஓசை ஐயோ இந்தப்

பஞ்சையர்க்குத் துயர் ஒன்றே வாழ்க்கை ஆச்சு!

சால்வயிற்று முதலாளி வாழ்கின்றானே

தன்கையால் சிறு துரும்பை அசைத்திட்டானா?"

என்று கேள்வி எழுப்பி தொழிலாளர்கள் வாழ்வு பெற வீதிக்கு வர வேண்டும். வீறு கொண்டு போராட வேண்டும். என்பதை நகர சுத்தித் தொழிலாளர்களின் எழுச்சி பெற்ற கவிதை மூலம் எடுத்துரைக்கிறார். தொழிலாளர்களின் நிலை பற்றிக் கடுகளவும் கவலைகொள்ளாத பெருந்தனக்காரர்கள், பெரும முதலாளிகள் மூடநம்பிக்கையில் எப்படி மூழ்கிக் கிடக்கிறார்கள்? அவர்களின் சனாதனப் பாசிப்படிந்த மூளை என்ன செய்யத் தூண்டுகிறது என்பதை எள்ளல் தொனியில் இப்படிப் பதிவு செய்கிறார்.

“கும்பாபி ஷேகம் எனச் சொல்வார்; கோயில்,

குளமெடுக்க மிகுந்த தொகை செலவழிப்பார்!

கும்பியிலே பசி நெருப்பு மூண்டெரிக்க,

குழந்தைகளும் மனைவியரும் துடிக்க ஏழை,

தெம்பின்றி விழுந்திடுவார் அவர்கள் முன்னே

செய்த வினை விதி என்றே சொல்லிவிட்டு

எம்பிரான் நாமத்தை ஜெபிப்பார் மூடர்

இன்ன இவர் மனிதர்களாய் வாழு கின்றார்!"

தமிழ்ஒளியின் சென்னை வாழ்க்கையும் ஜெயகாந்தன், விந்தன், குயிலன் போன்றோரின் நட்பும் அவரைப் பொதுவுடமையின் பக்கம் நகர்த்திச் செல்கிறது. பாரதியைப் போலவே சோவியத் புரட்சியை, சீனப் புரட்சியைப் புகழ்ந்து பாடுகிறார்.

“எதுவுடைமை? எது உலகம்? என்று காணா

ஏழைகளும் அவர் இனத்தின் எளியோர் தாமும்

பொதுவுடைமை வந்தவுடன் அண்ட கோளப்

புதல்வர்களாய் அமரர்களாய்ப் பொலிந்து தோன்ற

அதுவுடைமை அறிவுடைமை சோவியத்தின்

அன்புடைமை எனக்கொண்டார் அஃதேயன்றிப்

புதுவுடைமை விஞ்ஞானம் என நவம்பர்

புரட்சித்தாய் கூறினாள் புவியோர்க் கெல்லாம்!"

என்று பொதுவுடைமை சமூகம்தான் புவி சிறக்க, புவியிற் பிறந்த மக்கள் சிறக்க வழி எனத் தமிழ்ஒளி உறுதியான முடிவுக்கு வருகிறார். இதனைத் தனது நண்பர் பாலசுந்தரத்திற்கு எழுதிய கடிதத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

“நமது வாழ்வின் நோக்கம் நமது சமுதாயமும் மக்களும் முன்னேற்றமடையும் முறையில் இயன்ற தொண்டு செய்வதுதான். மக்கள் அறியாமை, மூடநம்பிக்கை, வறுமை, அடிமையில் மோகம் முதலியவற்றினின்றும் நீங்கி நல்லுணர்வும் வாழ்வும் பெற ஆவன புரிய வேண்டும் என்பதுதான். அதனைத் தன்னலமின்றிச் செய்ய வழிகாட்டும் இயக்கம் பொதுவுடமை இயக்கம்தான். நான் இப்பொழுது ஒரு கம்யூனிஸ்ட் தொண்டன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.”

இந்தப் பெருமித வாழ்க்கைதான் தமிழ்ஒளியின் சமூகப் பார்வையாக உள்ளது. அவரது கவிதைகள், காவியங்கள், சிறுகதைகள், உரைநடைகள், நாடகங்கள், சிறார் பாடல்கள் வழியாகத் தொகுத்துப் பார்த்தால் கவிஞர் தமிழ்ஒளி திராவிடம், தமிழ், தமிழர், திராவிட நாடு என்பதில் பயணத்தைத் தொடங்குகிறார். இதுவே அவரது தொடக்ககால சமூகப் பார்வையாக இருக்கிறது. திராவிடச் சிந்தனை ஆரியம் பற்றிய தேடலுக்கும் புரிதலுக்கும் இட்டுச் செல்கிறது. ஆரியம் அல்லது பார்ப்பனியம் சாதி மதங்களின் பேரால் மக்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. வர்ணாசிரமக் கருத்தைத் திணிக்கிறது. அறிவுக்குப் பொருந்தாத மூடநம்பிக்கைகளை வளர்க்கிறது. இவையெல்லாம் சமூகத்தளத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று சிந்திக்கத் தூண்டுகிறது.

இதற்கான தத்துவமாக முதலில் புத்த மத போதனைகளைத் தமிழ்ஒளி காண்கிறார். இதற்கும் கூடுதலான தேடல் உழைக்கும் மக்கள் தலைமையிலான அரசமைய வேண்டும் என்ற விருப்பமாக மாறுகிறது. மே தினமே வருக என்ற நெடுங்கவிதையில் ‘கந்தல் மனிதரவர் கையில் அதிகாரம்’ என்ற வரியில் இதன் சாரத்தைப் பதிவிடுகிறார்.

“தமிழனே நான்உலகின் சொந்தக் காரன்

தனிமுறையில் நான்உனக்குப் புதிய சொத்து!

அமிழ்தான கவிதைபல அளிக்க வந்தேன்

அவ்வழியில் உனைத்திருத்த ஓடி வந்தேன்

இமைதிறந்து பார்! விழியே அகலமாக்கு!

என்கவிதைப் பிரகடனம் உலகம் எங்கும்

திமுதிமென எழுகின்ற புரட்சி காட்டும்

சிந்தனைக்கு விருந்தாகும் உண்ண வாநீ!

***

உழுபவனே நிலத்திற்குச் சொந்தக் காரன்!

உழைப்பவனே தேசத்தின் உரிமை யாளன்!

புழுவைப்போல் கிடந்ததுவும் பிச்சை வாங்கும்

புன்மைநிலை அடைந்ததுவும் வாடைக் காற்றில்

அழுதுதுயர் அடைந்ததுவும் இனிமேல் இல்லை

அடங்காத வேகமொடும் ஆர்வத் தோடும்

எழுந்துவா உழைப்பவரின் போராட் டத்தில்

இரண்டின்றிக் கலந்துவிட இதுதான் நேரம்!"

என்ற கவிதை வரிகளைத் தமிழ்ஒளி கொண்டிருந்த சமூகப் பார்வையின் சாரமாகக் கொள்ளலாம்.

- மயிலை பாலு