க.நெடுஞ்செழியன் ஆய்வுகளை முன்வைத்து...
நுழை வாயில்
முரண்கை யாதெனில் இத்தொடர்பில் பெரியார் இயக்கங்கள் சார் அணுகுமுறையிலிருந்து திராவிட இயக்கச் சார்பாளர் ஆயினும் எம்மனோர் அணுகுமுறை மாறுபட்டதென்பதும்; மறுபக்கத்தில் ஆடுவாரற்று வெறிச்சோடிக் கிடக்கும் பக்தி இலக்கியப் பரந்த வெளியில் காத்திரமான ஆய்வுகளை முன்னெடுத்தோர் பகுத்தறிவியக்கம் (சாமி.சிதம்பரனார்), பெரியார் உள்வட்டத்தினர் (மயிலை சீனி வேங்கடசாமி, சாத்தான்களம் இராகவன்) மார்க்சிய இயக்கம் (கைலாசபதி, சிவத்தம்பி, திசுந, ந.முத்துமோகன்) சார்பாளர்களே என்பதும் கவனங்கொள்ள வேண்டுவன என்பதேயாகும்.
மெய்ம்மியல் ஆய்வறிஞர் க.நெடுஞ்செழியனார் தம் ஆய்வுகளில் 'சங்ககாலத் தமிழர் சமயம்' எனும் நூலில்தான் சைவசமய ஆய்வில் அதற்கூடான 'பனிப்போர்' குறித்து வைத்தார். பின்னர் தம் 'பக்தி இயக்கங்களும் வைதிக எதிர்ப்பும்' (2017) நூலில் இதனை வைணவத்துக்குமாக அகலித்து அஃகி அகன்றதாய் முன்வைத்தார்.
இத்தொடர்பில் தொ.பரமசிவன், தி.சு.நடராசன், ந.முத்துமோகன், பொ.வேல்சாமி ஆகியோரும் தத்தம் ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். பின்னையதான மா.அரங்கநாதன் வைதிக எதிர்ப்பு விசித்திரமானது.
வைதிகத்தை மட்டுமே எதிர்க்கும் அவர்க்குப் பிராமண எதிர்ப்போ, சங்கத எதிர்ப்போ கிடையாதாமாம். இதைத்தானே பிராமண எதிர்ப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளும் குமரி மனோபாவம் என்பார் தமிழவனார்? இத்தகு மனோபாவம் இவ்விருவர்க்கு மட்டுமல்லாமல் ராஜ்கௌதமனார்க்கும் உரித்தானதே.
'இரட்டை நாக்குப் பிறக்கும்' என்னும் கா.சு.பிள்ளை கூற்றே மனத்தில் மின்வெட்டலாயிற்று. இத்தொடர்பில் இதற்குமேற் பேச இதான்று இடம்.
முற்பதமாக பக்தி இயக்கம், தொன்மங்கள் குறித்து எவ்வாறெலாம் அணுக முற்படலாம் என்பது குறித்த பல்வேறு பார்வைகளைத் தொகுத்துக் காண்போமாக:
எப்படி எதிர்கொள்ள வேண்டும் பக்தி இலக்கியத்தை?
என் மெய்யியல் பண்பாட்டாய்வுப் பயணத்தின் திசைமானியாய் எனை ஆற்றுப்படுத்தியவர் தமிழியல் ஆய்வறிஞர் பேரா.க. நெடுஞ்செழியனாரே. "திறந்த மனதோர் பேறு பெற்றார் என்கிறது பைபிள். என்னதான் நான் திராவிட இயக்கத்துடன் அடையாளப்படுத்திக் கொண்டாலும் என்னுடைய ஆய்வுகள் திறந்த மனத்துடன் செய்யப்பட்டவை".
இவ்வாறு திறந்த மனப்பான்மை என்றவர் பேசிநிற்பது கம்பராமயணம், பக்தி இலக்கியம் குறித்த திராவிட இயக்க அணுகுமுறை பற்றித்தான். அதுபற்றி அப்புறமாய்க் காண்போம். கநெ குறிப்பிடும் இயக்கங் கடந்த 'திறந்தமன ஆய்வின் பாய்ச்சல்' என்பதனையே எம்மனோர் 'பகுத்தறிவின் பயங்கர வாத'த்தினின்றும் விட்டு விடுதலையாகிப் போதரும் அவர்தம் ஆய்வுச் செந்நெறியாம் செல்நெறியாகப் பின்பற்றி அவரவர் போங்கில் முன்னெடுக்கலானோம்.
இதனையே 'புரட்டிப் போட்டாற் போன்ற சிந்தனை வெளிச்சம்' என்னும் குட்டி ரேவதி சங்க இலக்கியம் பற்றிய: நவீன பார்வையை அதன் அழகியலும் அர்த்தங்களும் தமிழ்மரபின் செறிவும் குறையாமல் முன்வைத்த ஒரே எழுத்தாளர் பேரா.க.நெடுஞ்செழியன் எனப் போற்றுவார் -'அந்திமழை நவ.2022.
(இதுவே க.நெ. உடனான இறுதிச் செய்வி. அந்திமத்தில் அவர் சொல்லித் தீர முனைந்தவற்றை அவரே தமை நேராக வருமாறு கேட்டு எடுக்கப்பட்டதென்பார்.)
'பகுத்தறிவின் பயங்கரவாதம்' எனும் பின்நவீனத்துவச் சொல்லாடலைத் தமது எதிர்தல் முறை மாத்திரமே சரியெனினும் தத்துவ வழிபாட்டின் தன்னிலை ஆகிநிற்கும் பகுத்தறிவின் வன்முறை எனவாங்கே புரிந்துகொள்ள வேண்டுகின்றேன்.
"மார்க்சியர், மார்க்சியர் அல்லாதவர்கள் பார்க்கிறார்கள் என்பது முக்கியமல்ல; மார்க்சியக் கண்ணோட்டம்தான் முக்கியம். மார்க்சியர் கூட மார்க்சியக் கண்ணோட்டம் இல்லாமப் பார்க்க முடியும். எந்த ஒரு விடயத்தையும் நல்லமுறையில் உள்ளங்கிக் கொள்வதுதான் சரி. பக்தி என்கிற ஒரு காலம் தமிழில் இருக்கிறது. நாங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நிராகரிக்க முடியாது. இதைப் புரிந்து கொள்வது மார்க்சியர்களின் அத்தியாவசியத் தேவை."
"தொகுக்கப்பட்ட நூல்களை வைத்துக்கொண்டு நாம் பார்க்கிறோம். தொகுத்து சோழர் காலத்திலே. பக்தி இயக்கம் என்ற ஒன்று இருந்திருக்கிறது. அந்த இயக்கத்தின் தன்மை என்ன? அது எப்போது தொடங்குகிறது? ஏன் தொடங்குகிறது என்று பார்க்க வேண்டும்."
"பக்தி இயக்கம் என்ன காரணத்தால் பரவுகின்றது என்று பார்க்க வேண்டும். கைலாசபதியின் 'நாடும் நாயன்மார்களும்' என்ற கட்டுரையை இந்த வடிவத்தில் பார்க்கலாம். பக்தி இயக்கம் என்பது தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார அரசியல் வளர்ச்சியோடு சம்பந்தப்பட்ட ஒன்று. இலக்கியம் என்ற பார்க்கிறபோது வருகிற பிரச்சினையைப் பார்க்கவில்லை. வைஷ்ணவ இலக்கியப் பாரம்பரியத்தில் உள்ளவர்கள் மத இலக்கியமாகப் பார்த்தது மாத்திரம் அல்ல. அதற்கு அற்புதமான வியாக்கியானங்கள் கூறுகின்றனர். சைவத்தில் இந்தப் பாரம்பரியம் கிடையாது. தேவாரம், திருவாசகம் உரை கிடையாது." - கார்த்திகேசு சிவத்தம்பி (நியூசெஞ்சுரியின் உங்கள்நூலகம் - மார்ச். 2006)
ஏன் இல்லாமல்? உரைப்பாரம்பரியம் சைவத்திலும் காணக்கிடக்கின்றன தாமே?
'தீபரவட்டும்' இயக்கமே எதிர்த்தலைக் காரணியாக, சிகேசுவின் பெரியபுராண விரிவுரை
கம்பராமாயணத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட 'தீ பரவட்டும்' இயக்கத்தின் விளைவாக அதுவேறு சில கலை இலக்கிய, பதிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படவும் எதிர்த்தலைக் காரணியாக அமைந்தது.
"இக்காலப் பகுதியின் (முப்பதுகள்) மற்றொரு நிகழ்வு, கம்பராமாயணத்துக்கு அரசியல் உலகில் எழுந்த எதிர்ப்பும், இலக்கிய உலகில் எழுந்த ஆதரவுமாகும்.
கம்பராமாயணத்துக்குத் திருத்திய பதிப்பு ஒன்று வெளியிட வேண்டும் என்ற முயற்சியினை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்குத் 'தீ பரவட்டும்' இயக்கமே காரணமாக இருந்தது.
வடசியின் நண்பரான சி.கே.சுப்பிரமணிய முதலியார் பெரியபுராணத்திற்கு விரிந்த உரையுடனும் குறிப்புகளுடனும் ஒரு பதிப்பு வெளியிட முனைந்ததற்கும் எதிர்த்தலைக்காரணியாக நின்றது இந்த இயக்கமே" - தொ.பரமசிவன் ('தமிழாராய்ச்சியின் வளர்ச்சி' நாடற்நோர் பதிப்பகம்)
பு.ரா.புருடோத்தம நாயுடு (அண்ணாமலைப் பல்கலையில் நானவரிடம் பாடங்கற்ற மாணவன்) வைணவ ஈட்டுரைக்கு இணையான நூல் மிக்கதே சிகேசுவின் பெரியபுராண விரிவுரை. நான் வாசித்து ஒட்டியும் வெட்டியும் எடுத்தாண்டுள்ளேன். இன்னும் திருமந்திரத்திற்கும், சிவஞானபோதத்துக்கும், திருவாசகத்திற்குமாக இன்றளவும் தொடரும் உரைப்பாரம்பரியத்திற்கும் நிறையப் பங்களிப்புகள் உண்டு. ப.சரவணன் திருவாசக உரை சந்தியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.
வைணவத்தைப் பொறுத்த மட்டிலும் பேரா. ம.பெ. சீனிவாசனின் அருங்கெழு கொடை அளப்பரியது.
காலச்சுவட்டில் இது தொடர்பில் முனைவர் அ.மமாகனா கட்டுரை கவனங்கொள்ளத் தக்க சிறப்பான கட்டுரையே.
காதல் வேட்கையைப் பக்தி உணர்வாக மடைமாற்றிய வேட்கையின் அரசியல்
"பக்தி இலக்கியத்தைப் பக்தியாக அணுகாமல் ஒரு இலக்கியப் பிரதியாக அணுக வேண்டும். தமிழுக்கு அதன் கொடை என்பதில் கவனம் அவசியம். அதே நேரத்தில் வேதாந்தத்தைத் தமிழ் அறிவுப்பரப்பிற்குள் ஊன்றிய அதன் சனாதனச் சார்பை கவனத்தில் கொள்ள வேண்டும். பக்தி இயக்கம் தமிழ் உணர்வை சமய உணர்ச்சியாக மாற்றித் தமிழ் உடல்களை சைவ வைணவ உடல்களாக கட்டமைத்த இயக்கம். அன்றைய வாணிப (இன்றைய பனியா போல) வர்க்கத்தின் அரசு அதிகாரத்திற்கு எதிரான உழவர் புரட்சியை சமய அடையாளமிட்டு சைவ வைணவக் கருத்தியலுக்குள் திரட்டிய ஒரு சமயம் சார்ந்த வர்க்கப் போராட்டம். இன்றைய இந்துத்துவா எழுச்சி என்பது நவ வேதாந்தக் கருத்தியலைக் கொண்ட நவபக்தி இயக்கம் என்று ஒப்பிடும் சாத்தியங்கள் உண்டு. "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் / தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே" என்பதில் இந்த "தன்னை" என்கிற தான் என்பது என்ன? என்பதில் அடங்கியுள்ளது அதன் சமய அரசியல். இந்த தன்னை என்பது லக்கானிய பிக் அதராக (The Other) அதாவது பிறன்மையாகக் கொண்டு மறு வாசிப்பு செய்ய வேண்டும். சமயங்கள் தந்த பக்திப் பரவசம் ஏன் பாசிசமாக மாறுகிறது? என்ற கேள்வி உள்ளது. சங்ககால அகம் என்ற காதல் வேட்கையை சமயக் குரவர்கள் மக்கள் மொழியில் பாடல்களாக்கிப் பக்தி என்ற உணர்வாக மடைமாற்றினர் என்பதாக இதனை வேட்கையின் அரசியலாகவும் வாசிக்கலாம்." - ஜமாலன் (29/12/2024 முகநூல் பின்னூட்டம்)
தமிழின் தொன்மை என்பது அதன் தொடர்ச்சியில்தான் உள்ளதென்பார் கா.சிவத்தம்பி. இத்தொடர்பில்தான் கம்பராமாயணம், திருவாய்மொழி, திருக்கோவையார் மூன்றிற்கும் பொதுவாகவும் காணக்கிடக்கும் சங்கத்தமிழ் அகத்திணைமரபின் தொடரோட்டத்தை அகழ்ந்தெடுத்தவர் இனங்காட்டும் புள்ளிகள் மனங்கொள்ளத் தக்கனவாம்:
"சிவனியத்தில் மாணிக்கவாசகரும், வைணவத்தில் நம்மாழ்வாரும் வைதிக எதிர்ப்பின் குறியீடுகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர் இருவரும் அகத்திணை மரபைப் போற்றியுள்ளனர். இதனால் தமிழ் அகத்திணை இலக்கியம் என்பது ஓர் இலக்கிய உத்தியாக இல்லை.
மாறாக அஃதோர் மெய்யியல் கோட்பாடு என்பது உறுதியாகிறது. அதனால் பக்தி இயக்கங்கள் வேற்று மொழிப் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட பௌத்த -சைன எதிர்பிற்காகத் தோன்றியவை அல்லவென்றும் அவை சாதி - வருண- பாகுபாட்டைக் குமுக நிலையிலும், சமற்கிருத மேலாண்மை மொழி நிலையிலும், வேத வேள்வி முறைகளைப் பண்பாட்டு நிலையிலும் எதிர்த்துப்போரிட்டவை என்ற புரிதல் ஏற்படுகின்றது." - க.நெடுஞ்செழியன் ('பக்தி இயக்கங்களும் வைதிக எதிர்ப்பும்' (2017)
இது ஆய்வறிஞர் குணாவின் அக × புறச் சமயங்கள் என பௌத்த சமண சமயங்களையும் அவற்றுக்கு எதிரான போரின் தளகர்த்தராக ஞானசம்பந்தரையும் கொண்டாடும் நிலைப்பாடுகளுக்கான அடிப்படையைத் தகர்த்தெறியும் புதுத்திறப்புப் புத்தொளி வீச்சேயாகும்.
தொன்மங்களை (Myths) எவ்வாறு அணுகுவது?
"புராணங்களிலும் இதிகாசங்களிலும் வெளிப்படுவது ஒரு குறிப்பிட்ட தனிநபரின் சிந்தனை அல்ல; மக்களின் கூட்டுச் சிருஷ்டித் தன்மை ஆகும்"
"புராணமும் இதிகாச இலக்கியமும் ஈடிணையற்ற ஆழ்ந்த அழகுடன் (அந்த அழகுக்கு அடிப்படை உருவத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் இடையே நிறைவான இசைவு இருப்பதுதான்) விளங்குவதை மனிதக்கூட்டின் பிரமாண்டமான பக்தியைக் கொண்டுதான் விளக்க முடியும். கூட்டு மனப்பான்மையின் முழுமைதான் இந்த இசைவை உண்டாக்கித் தந்தது." - மாக்சிம் கார்க்கி
"கீழை நாட்டில் இந்துக்களும் பௌத்தரும் வரலாற்றையே புராணங்களாகவும், ஜாதகக் கதைகளாகவும் உருமாற்றினர். அவற்றில் சமயத் தத்துவங்களைக் குடியமர்த்தினர். மேலை நாட்டிலும் இப்படித்தான் நடந்தது. எனவேதான் நீட்சே எழுதினார்:
'உண்மையில் ஏசு சிலுவையில் அறையப்பட்டது, அவரைச் சிலுவையில் அறைந்தவர்களே அவரைத் தெய்வமாக்கிக் கொண்டாடிய போதுதான்.' க.பஞ்சாங்கம் (தொன்மத் திறனாய்வு)
மெய்யாலுமே கேரளத்தில் நடந்த நிகழ்வுகள் என் மனத்தில் பளிச்சிடலாயின:
'ஏசுவிண்டே ஆறாந் திருக்காயம்' என்றொரு நவீன நாடகம் மக்தலேனா இயேசு தொடர்பில் அங்கு நடந்தேறியது. பின்னர் அதன் தொடர்நீட்சியாக இன்னொரு குறு வீதிநாடகமும் அரங்கேறியது.
அதில் இந்த நாடகத்தை எதிர்ப்போர் மத்தியில் ஏசுவே தோன்றி இதில் என்ன தவறு கண்டீர்கள் என அதற்கு ஆதரவாகப் பேசியதும் இயேசு மீண்டும் சிறையில் அறையப்பட்டார்.
சிபிஎம் கட்சி சார்பிலான சிந்தா பதிப்பகம் ஒரு நூலை முன்வெளியீட்டுத் திட்டத்தில் அறிவித்து அதன் மகசூலாய் கணிசமான வசூலில் இலாபத்தைக் கல்லாக்கட்டி அதனை வெளியிட்டது. என்ன நூல் தெரியுமா அது இராமாயணமேதான்.
'நாம் எக்காரணம் கொண்டும் முன்னோர்களினதும், பிற நாட்டவரதும் பிதுரார்ஜிதங்களை அவை நிலப்பிரபுத்துவ அல்லது முதலாளி வர்க்கங்களின் படைப்புக்களாக இருந்த போதும்,கையேற்க மறுக்கவோ அவற்றில் இருந்து கற்கவோ மறக்கவோ கூடாது. ஆனால் பிதுரார்ஜிதங்களை நமதாக்கிக் கொண்டு, அவற்றை உதாரணங்களாக உபயோகிப்பது, ஒருபோதும் நமது சொந்த சிருஷ்டிகர வேலையின் இடத்தை எடுத்துவிடக்கூடாது. முன்னோர்களிடமும் அந்நியர்களிடமும் விமர்சனக் கண்ணோட்டமின்றி எடுத்துவந்து புகுத்துவதும் இலக்கியத்திலும் கலையிலும் மிகவும் படைப்பாக்கமற்றதும் தீங்கானதுமாகும்' என்று எழுதுகிறார் மாவோ. ('பிதுரார்ஜிதம் எனில் மூதாதையர் வழிச்சொத்து. முதுசொம் எனப் பாவிப்பார் பாவாணர்.
முதுசம் என்பது ஈழ வழக்கிலும் காணக்கிடப்பதே' - (பொதி)
"புராண இதிகாசக் கதைகள், பழங்கதைகள், கட்டுக்கதைகள், நாட்டுப்புறக் கதைகள்- இவைகளை எந்தவித விமர்சனக் கண்ணோட்டமுமின்றி, புதியன படைக்கும் நோக்கமின்றித் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் போன்றவை பயன்படுத்துகின்றன; இன்னொரு பக்கம், இவைகளின் ஆக்கபூர்வமான பங்கை முற்றாக மறுத்துப் புறக்கணிப்பதைத் திராவிட இயக்கங்கள் செய்கின்றன"- க.பஞ்சாங்கம் (மேலது) என இருமுனைத் தவறுகளையும் சுட்டிக்காட்டுகின்றார்.
இதேமூச்சில் திராவிட இயக்கஞ் சார் பாவேந்தரும் கலைஞரும் தம் படைப்புகளூடே எவ்வாறு தொன்மங்களைப் புனரமைத்துக் காத்திரமாகக் கையாள்கின்றனர் என இருவர்க்கும் இடையிலான பொதுவியல்பும் சிறப்பியல்புகளும் புலப்படுமாறு விதந்தோதியே சித்திரிக்கின்றார் பஞ்சு.
கம்பராமாயணம், பக்தி இலக்கியம், பாரதியார் பாடல்கள் ஆகியவற்றை அறவே மறுதலித்து பாரதி இயலையே மறுதலிப்பதான பேரா.மணிகோ. பன்னீர்ச்செல்வம், முல்லை வேனிலன் குறுக்குச்சால்கள் அவற்றை எவ்வாறெலாம் அணுகலாகாதென்பதற்கான 'பகுத்தறிவின் பயங்கரவாத' அணுகுமுறைக்கான முற்காட்டுக்களேயாகும். தொன்மையை அதன் தொடர்ச்சியினின்றும் துண்டித்துப் பக்கவாதமாக நீலம் பாரிப்பனவே அவை எனலாம்.
தெய்வமாக் கவிகளேனுந் மெய்ம்மையைத் திரித்துரைப்போர் 'நய'வஞ்சகரே
"வையம் என்னை இகழவும், மாசு எனக்கு
எய்தவும், இது இயம்புவது யாது எனின்,
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே." -கம்ப நாடன்
"தமிழ்க்காப்புப் போரில் 'ஆசார்ய இருதய'த்திற்கு முன்மாதிரியாக அமைந்தது கம்பரின் 'சடகோபரந்தாதி ' ஆகும். இராமாயணத்தைப் பாடியதற்காககக் கம்பர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால் இராமாயணத்தைப் பாடியதற்காகக் கம்பர் வருத்தப்படுவதை அவரின் சடகோபரந்தாதி பதிவு செய்துள்ளது பெரும் வியப்பாகும்" - க.நெடுஞ்செழியன் ('பக்தி இயக்கங்களும் வைதிக எதிர்ப்பும்')
தொன்மத்தைக் காத்திரமாக அணுகலில் வள்ளலார், பாரதி, கா.சு.பிள்ளை பார்வைகள்
"புராணப் பனுவல்கள் ஆராய்ச்சியில் புடைக்கப்படுதல் வேண்டும். மெய்யாராய்ச்சியில் நிலைபெறுவனவே தழுவத்தக்கன. ஏனைய தள்ளத்தக்கன. சரித்திரம் செம்மை பெறுதல் வேண்டும்".
"கவிநயங்களைப் பாராட்டுவதில் குற்றமில்லை. அவற்றை மெய்யென மயங்குதலே தவறாகும்" (கா.சு.பிள்ளையின் ஆராய்ச்சித்திறன்' க.வை.பழனிச்சாமி)
இது தொன்மங்களை எவ்வாறு உள்வாங்க வேண்டும் என்பது குறித்த கா.சு.பிள்ளையின் துல்லியமான கணிப்பு. மட்டுமல்லாமல் அவருடைய வரலாற்று மெய்ம்மை நாட்டமும் இதற்கூடாகக் காணக்கிடக்கின்றது.
இன்னொரு வகையில் பெரியாரால் நம்பகமான ஆய்வாளராகராகவும்; சைவ சித்தாந்திகளால் தமக்கான 'தொல்லாணை நல்லாசிரியர்' ஆகவும் ஒருசேர ஏற்கப்பட்டவரே கா.சு.பிள்ளை.
"18 புராணங்களை இயற்றி, அக்கதைகளே உண்மை வரலாறு என்று மக்களை நம்ப வைத்தனர் பாரதப் பௌராணிகர்கள். அப்புராணங்களில் அவதாரம் என்ற கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்தம் வாயாலேயே, 'நானே நான்கு வர்ணங்களை உருவாக்கினேன்' என்று சொல்ல வைத்து மக்களை நம்ப வைத்து ஈராயிரம் ஆண்டுகளாக ஏய்த்துவந்த தெய்வ மாக்கவிகளின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியவர் வள்ளலார்.
'கலை உரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்/
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக' என்று சாடினார்.
அதில் இருந்த உண்மையை உணர்ந்த பாரதி எழுதினான், 'உயிர்பெற்ற தமிழன்பாட்டு':
'கடலினைத் தாவும் குரங்கும்'- வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததனாலே-தெற்கில்
வந்து சமன் செய்யுங் குட்டை முனியும்
நதியினுள் ளேமுழு கிப்போய் - அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த - திறல்
வீமனும் கற்பனை என்பது காண்டோம்
கவிதை மிகநல்ல தேனும்-அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்."
"உண்மையை வலியுறுத்தவே கற்பனையும் கலையும். மாறாக உண்மையை மறைத்துப் பொய்மைக்கு முலாம்பூசி உண்மையெனத் திரித்துக் காட்டுவது மகாகவிகள் ஆயினும் வஞ்சகரே என்பது வால்டேரின், வள்ளலாரின் வாதம்" - இரா.குப்புசாமி ('வால்டேர்')
இத்தொடர்பில் இன்னொரு தரப்பும் நோக்கத்தக்கதே; "பாவனா சக்தியால் சுவை விளைவிப்பதே கவிலக்ஷணமாகும் என்னும் திருமணம் செல்வக் கேசவராய முதலியார், "கவி கற்பனை என்பது ஒரு பொருளில் கவியானவன் தன் சாதுரியத்தால் முன்னில்லாத சுவையைப் பிறப்பித்தல். பொய்யும் புனைந்துரையும் கவி கற்பனையன்று. கட்டுக்கட்டாய் மனம் போன போக்கில் உரைப்பதும் கவி கற்பனையன்று" எனத் தொடர்வார். ('செந்தமிழ்ச்செல்வி' சிலம்பு:27, பரல்:12)
சைவசமய ஆய்வில் அடிப்படை முரண்பாடு
இந்திய சமயங்கள் சைவ நோக்கில் (1) அகம், (2) அகப்புறம், (3) புறம், (4) புறப்புறம் என நான்காகப் பகுக்கப்பட்டுள்ளன.
"அகப்புறச் சமயமாவது பாகபதம், காளாமுகம், காபாலிகம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும்" - சி.சு.மணி ('சிவஞான மாபாழயம்' முன்னுரை).
காளாமுகம் எனப்பட்டதே பின்னாளில் பாசுபதம் எனப்பட்டது. வேதியரான திரிகுனசம்பந்தர் வேதவழக்கினர். வேளாளரான அப்பர் வேத எதிர்வழக்கினர்.
"ஞானசம்பந்தர் வேதமரபினைப் பின்பற்றியவர் வேதியர். அதனால் வேதமரபுகளைத் தமிழ்மரபுக்குப் புறம்பான வேள்விப்பண்பாட்டைச் சைவத்தில் புகுத்தியவர். ஆனால் திரு நாவுக்கரசரோ வேதநெறியைக் கண்டித்தவர். வைதிகத்தின் வழியொழுகிய வருணநெறியைப் புறங்கொண்டவர். சைவமய ஆய்வில் இம்முரண்பாடு மிகமிக அடிப்படையானது. பல்வேறு புதிர்களுக்குமான விடையைக் கொண்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்."
"காபாலிகம் வேதமறுப்புக் கோட்பாடான உலகாய்த்ததோடு ஒருவகையில் உறவுகொண்டது. என்பதால் அதனை நாத்திகச் சமயங்களில் ஒன்றாகவே வேதியர் கருதினர்... அந்தக் குறையைப் போக்கவே சிவவழிபாட்டை வைதிக நெறிக்குள் அடக்கிய முயற்சியே காளாமுகமாக வடிவுகொண்டது". - க.நெடுஞ்செழியன் ('சங்ககாலத் தமிழர் சமயம்')
"சைவம் ஆறு உட்பிரிவுகளைக் கொண்டது. அவை கபாலிகம், காளாமுகம், பாசுபதம், மாவிரதம், பைரவம், வாமம் என்பன. இவற்றுள் மிகத் தொன்மையானது கபாலிகமே ஆகும். வேத எதிர்ப்பையும் தந்திரச்சடங்குகளையும் உள்ளடக்கமாகக் கொண்ட இச்சமயப் பிரிவின் மிகத்தொன்மையான சான்றைச் சங்க இலக்கியமாகிய மதுரைக்காஞ்சியில்தான் முதன் முதலாகக் காணமுடிகிறது. கபாலிகம் வைதிக எதிர்ப்பில் உறுதியாக நின்றதால் வைதிகச் சார்பான இலக்கியங்கள் கபாலிகத்தை மிகவும் இழிவுபடுத்தியே பேசியுள்ளன."
"பாகுபத்திலிருந்து கிளைத்த காளாமுகப் பிரிவைச் சார்ந்தவரே ஞானசம்பந்தர் என்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. சூத்திரராகிய அப்பர் கபாலிகப் பிரிவைச் சார்ந்தவர் என்பதாலும், காளாமுகப்பிரிவைச் சார்ந்தவர் ஞானசம்பந்தர் என்பதாலும் இரு வேறு பிரிவுகளுக்கும் இடையே நிலவிய முரண்பாடுகள் படிப்படியாக முற்றத் தொடங்கித் திருமறைக்காட்டில் வேத எதிர்ப்பு வேதச்சார்பு என இரண்டாகப் பிரிந்தன."
திருக்கடையூரில் திறக்கப்பட்ட அப்பரும், அடைக்கப்பட்ட சம்பந்தரும்...
சைவத்தின் அகப்புறச்சமயங்களான 'காளாமுகம்' 'கபாலிகம்' இவற்றிற்கிடையிலான உட்பூசலே சம்பந்தர் - அப்பர் இருமைக்கும் ஊடாக வெளிப்படலாயிற்று. வேள்விப்பண்பாட்டுக்கும் கோயிற்பண்பாட்டுக்கும் இடையிலான மோதலே அமைந்தியன்றது.
'இருதிறத்துப் பெருந்தவரும் இருந்த நாளில்' சம்பந்தர் அப்பர் இருவர்க்கும் இடையே நிலவிய ஏற்றத்தாழ்வுக்கு ஊடாக வெளிப்பட்ட மோதலைக் காளாமுக - கபாலிக முரண்பாட்டின் வெளிப்பாடுகளாக இனங்கண்டு எடுத்துரைப்பார் எம்பேராசிரியர்:
"வயதில் சிறியவராக இருந்தாலும் திருவானசம்பந்தர் ஆசிரியர் நிலையிலிருந்து வினாவுவதும்; வயதிலும், கல்வியிலும், தகுதியிலும் தவநெறிகளிலும் மேம்பட்ட இருந்தாலும் அப்பர் சூத்திர நிலையில் நடத்தப்படுவதும் பெரியபுராணத்தால் அறியப்படும் செய்திகளாகும்." - க. நெடுஞ்செழியன் ('சங்ககாலத் தமிழர் சமயம்')
திருமறைக்காட்டில் அடைத்துக் கிடந்த கோயில் கதவை அப்பர் திறக்கப் பாடவும், சம்பந்தர் அடைக்கப் பாடவும் நிகழ்ந்த சம்பவ உட்கிடைகளின் தாழ்திறந்தும் இம்மோதலைச் சித்திரிப்பார். காளாமுகத்தின் மேலாண்மையை நிலைநாட்டும் போக்கில் அமைந்ததுதான் அப்பர் பாடிய பத்துப்பாடலுக்கும் திறக்காத கதவு சம்பந்தர் பாடிய ஒரே பாடலில் மூடிக்கொண்டதாகும் என்பதே அவர் நிலைப்பாடாகும். உரிய பாடலையும் அதுபற்றிய வெவ்வேறு வாசிப்புகளையும் காண்போம்:
"அரிதில் திறக்கத் தாம்பாட
அடைக்க அவர்பாடிய எளிதை
கருதி நம்பர் திருவுள்ளம்
அறியா திருந்தேன் எனக்கவன்று
பெரிதும் அஞ்சித் திருமடத்தின்
ஒருபால் அணைந்து பேழ்கணிந்து
மருவும் உணர்வில் துயில்கண்டார்
வாய்மை திறம்பா வாகீசர்" - சேக்கிழார்
"திருநாவுக்கரசு சுவாமிகள் நெஞ்சில் திருக்கதவு அரிதில் திறந்து கொண்டதையும், எளிதில் அடைந்து கொண்டதையும் ஒட்டி ஒருவித சுழற்சி ஏற்பட்டது. நான்மறைகளும் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டன. அவைகளை வெளியிடும் உரிமைப்பாடு திருஞான சம்பந்த சுவாமிகளுக்கே உண்டு என்று தம்மைப் போன்றவர்களுக்கும் அவருக்கும் உள்ள இடையில் இடைவெளி பெரிது என்று எண்ணி அப்பர் கலங்கினார்." - திருவிக (திருத்தொண்டர் புராணம் திருவிக அரும்பத உரை)
"திறக்கத் தாம் பாடிய அருமையும் அடைக்க அவர் பாடிய எளிமையும் கருதி, பதினோரு பாட்டுக்கள் பாடியும் இரக்கமில்லீரே என்று இறைவரை வலிந்து சொல்லியும் தாம் கதவம் திறப்பித்த செயலை அரிதென்பதும் நாயனார் உட்கொண்ட கருத்து"
"திருவுள்ளம் பற்றாச் செயலிற் துணிந்தமையும், அதனோடு பெருங்குணையாளராய், அருளையேயன்றி வேறு மூசெய்யாதவராய் நொந்துமுகொண்டதையும் தாம் செய்த பிழை என்று கவன்றனர்." - சி.கே.சுப்பிரமணிய முதலியார் (திருத்தொண்டர் புராணம், மூன்றாம் பகுதி உரை)
"இதில் ஏதோ குது இருக்கவேண்டும் என ஐயுற்ற அப்பர் அந்நிகழ்வினால் பெரிதும் மனம் கலங்கினார். திருஞான சம்பந்தரின் சூழ்ச்சியினால் தம் உயிருக்கு எங்கே ஊறு வந்துவிடுமோ என்று அஞ்சியதும், அவ்வச்சத்தின் காரணமாக அந்த மடத்தின் ஒரு மூலையில் சென்று உறங்கி மருவும் உணர்வால் நொந்து வருந்தியதையும் அப்பாடல் நல்லவண்ணம் பதிவு செய்துள்ளது." - க.நெடுஞ்செழியன்
பொறாமையாலன்று குற்றவுணர்வால்: கவன்று கண்மூடி அறிதுயிலில் அமர்ந்தார் என்பது சிகேசுவின் உரை.
க.நெ. தவிர மற்றிருவர் முறைகளும்: தம்சமய எல்லைக்குள் நின்று: சபலபக்க கட்டுக்கட்ட முலையும் உரை விளக்கங்களே.
க.நெ. வாசிப்பு மட்டுமே கட்டவிழ்க்கும் தலையீட்டு மொழி: (In-temptation). காளாமுக - கபாலிக இருமை எதிர்வு முரண்பாட்டுக்கு ஊடாகச் சைவசமய ஆய்வில் ஒரு புதிய திறப்பினை உடைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
(அணியமாகிக் கொண்டிருக்கும் நூலின் தொடக்கத்தில் இருந்து ஒரு பகுதி மட்டும் வெள்ளோட்டமாக...)
- வே.மு.பொதியவெற்பன்