மேனாள் நீதிநாயகம் அரிபரந்தாமன் அவர்களின் விரிவான பேட்டி: 

தங்களது பிறப்பு, பெற்றோர், பள்ளிக்கல்வி குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.

நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள்: நான் பிறந்தது கொண்டஞ்சேரி என்ற சிறிய கிராமம். அது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது.

எனது குடும்பம் விவசாயக் குடும்பம். தந்தை துரைசாமி. அவர் பள்ளி சென்றதில்லை. ஆனால் அவருக்கு எண்ணும் எழுத்தும் தெரியும். மண்தரையிலும், ஓலைச்சுவடியிலும் படித்தவர். எனது அம்மா ராஜாம்பாள். அவருக்கு எண்ணும் தெரியாது, எழுத்தும் தெரியாது. அவரும் பள்ளி சென்றதில்லை.

எனது தம்பி ஒரு வருடம் நான்கு மாதத்தில் பிறந்ததால் என்னை வளர்த்தது எங்கள் வீட்டில் இருந்த விதவை அத்தை. அவரை அம்மா என்றே அழைப்பேன். அவர் பெயரும் ராஜாம்பாள். இவரும் கல்லாதவரே. எனக்கு ஒரு தங்கையும் உண்டு.

1959 ஆம் ஆண்டில் எங்கள் கிராமத்தில் அப்போதைய முதல்வர் காமராசர் அவர்களால் தொடக்கப்பள்ளி திறக்கப்பட்டது.

ஐந்து வயது நிரம்பாத என்னை ஐந்து வயது நிரம்பியதாகச் சொல்லி அந்தப் பள்ளியில் சேர்த்தனர். நானே எனது குடும்பத்தில் பள்ளிக்குச் சென்ற முதல் நபர்.

ஆறாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை சென்னையில் உள்ள டாக்டர் குருசாமி முதலியார் தொண்டை மண்டல துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளியில் 1964-65 முதல் 1969-70 வரை ஆறு ஆண்டுகள் படித்தேன். அது அரசு உதவி பெறும் பள்ளி. பிராட்வே அருகில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் உள்ள மணலி விடுதியில் தங்கினேன். உணவும் அந்த விடுதியே அளித்தது. அது இலவச விடுதி. காங்கிரஸ் கட்சியில் இருந்த மறைந்த மணலி இராமகிருஷ்ண முதலியார் அதன் அறங்காவலர். அவரது மூதாதையர்கள் கட்டிய விடுதி. நீதிக்கட்சி தோன்றிய காலத்தை ஒட்டி அந்த விடுதி கட்டப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.

சட்டக்கல்லூரி மற்றும் முற்போக்கு இயக்கங்களில் பங்கேற்ற அனுபவங்கள்.

1970-71 இல் புகுமுக வகுப்பும், 1971-74 இல் இளங்கலை கணிதமும், 1974-76 இல் முதுகலை கணிதமும் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் படித்தேன்.

judge hariparanthamanபட்டப் படிப்பு வரை கிண்டியில் உள்ள இலவச உணவு விடுதியில் தங்கியிருந்தேன். சென்னை மல்லீஸ்வரர் -கேசவ பெருமாள் கோயில் அறக்கட்டளை அந்த விடுதியை நடத்தி வந்தது. அந்த அறக்கட்டளையின் அறங்காவலரும் மறைந்த மணலி இராமகிருஷ்ண முதலியார் அவர்களே.

அந்த விடுதி மாணவர்களுக்கும் விடுதி காப்பாளருக்கும் இடையே இருந்த ஒரு கருத்து வேறுபாட்டை ஓட்டி முதுகலை படிக்கும் போது அங்கே எனக்கு இடம் கிடைக்காமல் போனது. எனவே ஜெயின் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படித்தேன்.

கிண்டியில் உள்ள மேற்சொன்ன இலவச உணவு விடுதி தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பல தலைவர்களை உருவாக்கிய இடம். தோழர் அ. செளந்தரராஜன், கோவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இரு முறை இருந்த தோழர் பி. ஆர். நடராசன் ஆகியோர் இந்த விடுதி மாணவர்களே.

செங்கல்பட்டில் முழு நேர ஊழியராகப் பணியாற்றி மறைந்த தோழர் இராதாகிருஷ்ணன் அந்த விடுதியில் படித்தவரே. மின்சார வாரியத்தில் சி.ஐ.டி.யு சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த தோழர் கே.விஜயன் படித்ததும் அந்த விடுதியில்தான். எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் தோழர் வீ.பா. கணேசன் படித்ததும் அந்த விடுதியில்தான். நான் அந்த விடுதியில் சேர்ந்த போது தோழர் செளந்தரராஜன் அவரது பட்டப்படிப்பை முடித்துச் சென்று விட்டார் மற்றவர்கள் அனைவரும் நான் படித்த போது படித்தவர்கள்.

இதில் மறைந்த தோழர் இராதாகிருஷ்ணன் அவர்களே நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வரக் காரணமானவர். அவசர நிலை காலத்தில் நான் முதுகலை கணிதம் படித்துக் கொண்டிருந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானேன்.

என்னுடன் அப்போது உறுப்பினரானவர் தோழர் அண்ணாமலை. அவரும் அந்த விடுதியில் இளங்கலை கணிதம் வரை படித்தவர். அவருக்கும் விடுதி காப்பாளருக்கும் நடந்த நேரடி வாக்குவாத நிகழ்வை ஓட்டி அவருக்கும் முதுகலை கணிதம் படிக்கும் போது விடுதியில் இடம் அளிக்கப்படவில்லை. நான் முதலாண்டு இளங்கலை கணிதம் படித்த போது அவர் மூன்றாம் ஆண்டு இளங்கலை கணிதம் படித்தார்.

தோழர் அண்ணாமலையைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். அவர் துணிகள் ஏற்றுமதி வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தியவர். தோழர் இராதாகிருஷ்ணனுக்கு அனைத்து உதவிகளையும் செய்தவர். எனக்கும் அவர் செய்த பொருளாதார உதவிகள் எண்ணற்றவை. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு அவர் ஒரு வங்கி போலவே இருந்தார். அவரைத் தவிர வேறு எவரிடமும் நான் பொருள் உதவி கேட்டுச் சென்றதில்லை. ஆனால் இந்த வங்கி அளிக்கும் பணத்திற்கு வட்டி கிடையாது. நான் குடியிருக்கும் வீட்டை வாங்கியது, கட்டியது, எனது அலுவலகத்தைக் கணனி மயமாக்கியது, கார் வாங்கியது என எனது பல வளர்ச்சியில் அவரது பண உதவி மிக அடிப்படையானது. எந்தப் பயனையும் எதிர்பாராமல் செய்த உதவி அது. வள்ளுவனின் வார்த்தையில், அது கடலின் பெரிது.

நான் ஆசிரியராக விரும்பியே முதுகலை கணிதம் படித்தேன். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்த பின்னர் சட்டம் படிப்பது என்று முடிவெடுத்தேன். அதற்குக் காரணமானவர் மறைந்த தோழர் இராதாகிருஷ்ணன். 1976-79இல் சட்டம் படித்தேன். சட்டம் படித்தபோது இந்திய மாணவர் சங்கத்தில் முழு வீச்சில் செயல்பட்டேன். மூன்றாம் ஆண்டு படித்தபோது சென்னை -செங்கை மாவட்டத்தின் (இப்போதைய செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டம்)இந்திய மாணவர் சங்கச் செயலாளராக இருந்தேன். 1979ஆம் ஆண்டு பாட்னாவில் நடந்த இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் பிரதிநிதியாகக் கலந்து கொண்டேன். 1979 ஆம் ஆண்டில் நடந்த சட்டப் படிப்பிற்கான இறுதி ஆண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

வழக்கறிஞராகப் பணியாற்றியதும், அது சமயம் எதிர்கொண்ட வழக்குகளும்

* பள்ளிக்கே நான் முதல் தலைமுறை என்று குறிப்பிட்டேன். உயர்நிலைப் பள்ளி வரை படித்ததும் தமிழ் வழி கல்லூரியிலும் கணிதம் படித்ததால் ஆங்கிலம் பெரிய அளவு அவசியம் இல்லை. ஆனால் சட்டம் படிப்பதற்கும் பின்னர் குறிப்பாக உயர்நீதிமன்றத்தில் தொழில் செய்வதற்கும் ஆங்கிலம் தவிர்க்க இயலாது என்பது தெரிந்தது. அரசியலில் 1975 இல் காலடி வைத்த போதே, அரசியல் ஆர்வத்தை ஓட்டி ஆங்கிலப் பத்திரிகை படிக்க முயற்சித்தால் அது மிகச் சிரமமாக இருந்தது. எனவே சுய முயற்சியில் ஆங்கிலம் கற்கத் தீர்மானித்தேன்.

1979 ஆம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெறொத நிலையில், வழக்கறிஞர் தோழர் சிகரம் செந்தில்நாதன் அவர்களிடம் வழக்கறிஞர் தொழில் பழகச் சேர்ந்தேன். 1980 இல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். 3-9-1980இல் தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தேன். தோழர் செந்தில்நாதனின் முதல் ஜூனியர் நான்தான். தொழிலாளர்கள் சம்பந்தமான வழக்குகளில் பயிற்சி பெற்றேன்.

தோழர் செந்தில்நாதனுடன் தொழில் பழக ஆரம்பிக்கும் போதே சென்னையில் என்னை வளர்த்த அம்மா ராஜாம்பாள் ஊரிலிருந்து வந்து என்னுடன் தங்கினார். 2008இல் அவர் மறையும் வரை என்னுடன் இருந்தார்.

1982 ஆம் ஆண்டு இறுதியில் பிரபல குற்றவியல் வழக்கறிஞர் திரு எம். வெங்கட்ராமன் அவர்களிடம் ஜூனியராகச் சேர்ந்தேன். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்குகளைக் கட்டணம் இன்றி நடத்தி தருவார். அவரிடம் ஜூனியராகப் பயிற்சி பெற்றவர்தான் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக இருந்த தோழர் ஜி. ராமகிருஷ்ணன்.

எனது வழக்குரைஞர் தொழிலைச் செங்கல்பட்டில் செய்வது என்பதுதான் எனது திட்டம். செங்கல்பட்டில் தோழர் இராதாகிருஷ்ணனின் அரசியல் செயல்பாட்டிற்கு உதவியாக எனது வழக்குரைஞர் தொழிலை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். செங்கல்பட்டில் தொழிலாளர் வழக்குகளை மட்டும் நடத்தித் தொழில் செய்ய முடியாது; அங்கு தொழிலாளர் நீதிமன்றமே கிடையாது. சென்னையில் உள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில்தான் செங்கல்பட்டு தொழிலாளர்கள் வழக்கு நடத்த வேண்டும். செங்கல்பட்டு அரசியல் செயல்பாட்டிற்குக் குற்றவியல் வழக்கு நடத்துவது மிக அவசியம். அதற்காகவே வழக்குரைஞர் எம் வெங்கட்ராமனிடம் ஆறு மாதம் ஜூனியராகப் பயிற்சி பெற்றேன். அந்த ஆறு மாதத்தில் அவர் ஆறு கொலை வழக்குகள் நடத்தினார்.

தோழர் இராதாகிருஷ்ணனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, என்னைச் செங்கல்பட்டுக்கு வர வேண்டாம் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்திலேயே தொழில் செய்யவும் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் தொழிலாளர் வழக்குகள் நடத்துவதில் மிகப் பிரபலமான அலுவலகமான ராவ் அண்ட் ரெட்டியில் ஜூனியராகப் பணிபுரிய மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத் அவர்களை அனுகினேன். அந்த அலுவலகத்தில் தான் தோழர் சந்துரு( பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதியான சந்துரு அவர்கள்) ஏழு ஆண்டுகள் ஜூனியராக இருந்தார். தற்சமயம் மூத்த வழக்கறிஞராக இருக்கும் தோழர் வைகையும் அந்த அலுவலகத்தில் சுமார் பத்து ஆண்டுகள் ஜூனியராக இருந்தார். துரதிஷ்டவசமாக என் ஜி ஆர் பிரசாத் அவர்கள் எனக்கு அந்த அலுவலகத்தில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கவில்லை.

இந்தச் சூழலில் தனித்து வழக்குரைஞராக 1983 ஜூனிலிருந்து செயல்பட்டேன். இந்த சூழலில் 1983 ஜூன் 5 இல் எனக்குத் திருமணம் நடந்தது.

பின்னர், குற்றவியல் வழக்கறிஞர் தோழர் விஜயகுமாருடன் சேர்ந்து வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கினேன். ராவ் அண்ட் ரெட்டியில் பணியாற்றிய தோழர்கள் அய்யாதுரை மற்றும் ராசாராம் ஆகியோர் அந்த அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் எங்கள் அலுவலகத்தில் இணைந்தனர். அந்த அலுவலகம் ஒரு கம்யூன் போல செயல்பட்டது. அதாவது வருவாயை அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொள்வது என்பதையே கம்யூன் என்றேன். அது தவறு என்பது எனது தற்போதைய கருத்து. தனிப்பட்ட திறமை சார்ந்த தொழில்களில் கம்யூன் முறை சரியானது அல்ல.

1989- 90 ல் நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறியவுடன் எனது அலுவலகத்தில் இருந்து தோழர் அய்யாதுரை வெளியேறினார். அதற்குப் பின்னர் கம்யூன் முறை கைவிடப்பட்டது. அலுவலகத்திற்கான வாடகையை மற்ற மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டு அவரவர் தனித்தனியே அலுவலகம் நடத்தினோம். எழுத்தரும் தட்டச்சரும் என்னுடைய அலுவலகத்தில் தொடர்ந்து பணி புரிந்தனர்.

இக்காலத்தில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. என்னைத் தனது அலுவலகத்தில் சேர்க்க மறுத்த மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் அவர்களுடன் தொடர்ந்து தினம் தினம் பல வழக்குகளில் பணி புரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் காலையில் 6:30 மணிக்கு அவரது வீட்டுற்கு வரச் சொல்வார். அவரது வீடு கீழ்ப்பாக்கம் பகுதியில் இருந்தது. நான் பெசன்ட் நகர் பகுதியில்

வசித்தேன். காலையில் பேருந்து மூலம் அவரது வீட்டிற்குச் செல்வேன். வழக்கைப் பற்றி விவாதித்து, பின்னர் அவருடனே அவரது காரில் உயர்நீதிமன்றம் வருவேன். வீட்டிலிருந்து காலைச் சிற்றுண்டி மற்றும் மதிய உணவும் கையில் தவறாமல் எடுத்து வருவேன்.

என்னை ஸ்கூட்டர் வாங்குமாறு அறிவுறுத்தினார். இந்தியன் வங்கியில் கடன் பெற்று பஜாஜ் கப் என்ற 100 CC ஸ்கூட்டர் வாங்கினேன். அந்தக் கடன் பெறுவதற்கான முன் தொகை (margin money) அவர் கடனாகக் கொடுத்து உதவினார். இது நிகழ்ந்தது 1987 ஆம் ஆண்டு இறுதியில்.

இதற்குப் பின்னர் ஸ்கூட்டரை அவரது வீட்டில் விட்டுவிட்டு அவரது காரில் உயர் நீதிமன்றம் வரச் சொல்வார். மாலையில் என் பணி முடிந்ததும் அவரது வீட்டிற்கு வந்து ஸ்கூட்டரை எடுத்து வருவேன். எனக்கு அவர் எண்ணற்ற வழக்குகளைக் கொடுத்தார். அதைத் தயாரிப்பது எனது பணி. தயாரித்து வழக்கின் விவரங்களை அவரது வீட்டிற்குச் சென்று கூறியதும் நீதிமன்றத்தில் அவர் வாதிடுவார்.அவர் மூலமாகவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தும் அனுபவம் எனக்குப் பெரிய அளவில் கிடைத்தது.

எனது முக்கிய வழக்குகளிலும் அவர் எனக்காக வாதிடுவார். என்னை ஏனோ அவருக்குப் பிடித்துப் போனது.

இது 1996 வரை நீடித்தது. 1996 இல் தோழர் சந்துரு அவர்கள் மூத்த வழக்கறிஞர் ஆனார். அவரது அலுவலகத்தில் ஒரு கணிசமான தொழிலாளர் தொடர்பான வழக்குகளை நான் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எனவே எனது அலுவலகம், எனது ஜூனியர்கள், எழுத்தர், தட்டச்சர் அவரது அலுவலகத்திற்குச் சென்றது. அவர் மூத்த வழக்கறிஞரானவுடன் அவருக்கெனத் தனி அலுவலகம் கிடையாது. நூலகமே அவரது அலுவலகம். 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை அவரது அலுவலகத்தில் இருந்தேன்.

2002 மே மாதத்தில் திருவான்மியூரில் நான் கட்டிய வீட்டில் எனது அலுவலகத்தை மாற்றினேன். இதற்கிடையில் 2006 இல் தோழர் சந்துரு உயர் நீதிமன்ற நீதிபதியானார்.

தொழிலாளர்கள் வழக்கை மட்டுமே நடத்தினேன். அதிலும் குறிப்பாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்துத் தொழிலாளர்களின் வழக்குகளை நடத்தியதைக் கூறியாக வேண்டும். தோழர் அ. செளந்தரராஜன், கோயம்புத்தூர் சேரன் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் காளியப்பன், மதுரை பாண்டியன் போக்குவரத்துக் கழகச் செயலாளர் தோழர் பிச்சை, திண்டுக்கல் ராணி மங்கம்மாள் போக்குவரத்துக் கழகச் செயலாளர் செயலாளர் தோழர் ஆறுமுகம் நயினார், சென்னை பல்லவன் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தீவிர ஊழியராக இருந்த தோழர் சேகர் எனப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த பலரும் எனது அலுவலகத்துடன் கிட்டத்தட்ட தினமும் தொடர்பில் இருந்தவர்கள். வேலை போன ஆயிரக்கணக்கான போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வாங்கிக் கொடுத்த மகிழ்ச்சி உண்டு. அவர்கள் பயன் அடைந்ததைப் போலவே நானும் என் அலுவலகமும் மிகுந்த பயனடைந்தோம்.

ஆலைத் தொழிலாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், இன்சூரன்ஸ் ஊழியர்கள் என பலருக்கும் பல தொழிற்சங்கங்களுக்கும் நான் வழக்கறிஞராக வழக்குகள் நடத்தினேன். இவர்களுக்கான வழக்குகளை முதலில் தொழிலாளர் நீதிமன்றங்கள் மற்றும் தொழில் தீர்ப்பாயத்திலும் பின்னர் அதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்றத்திலும் நடத்தினேன்.

பின்னர் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள் எனப் பல தரப்பினருக்கும் குறிப்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தினேன்.

நான் வழக்குரைஞராகத் தொழில் தொடங்கியது முதல் தொடர்ந்து மின்சார வாரியத்தில் தோழர் விஜயன் எங்கெங்கு பணி புரிந்தாரோ- சென்னை, தூத்துக்குடி, மேட்டூர்- அங்கெல்லாம் அவருடைய தொழிற்சங்கப் பணிக்கு உறுதுணையாக இருந்தேன். அவர் பணிபுரிந்த ஒவ்வொரு இடத்திலும் ஒப்பந்தத் தொழிலாளர்களைத் தொழிற்சங்கத்தில் இணைத்து அவர்களின் போராட்டத்தை முதன்மைப்படுத்தினார். அதனாலேயே அவர்

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கும் பின்னர் தூத்துக்குடியில் இருந்து மேட்டூருக்கும் மாற்றலானார். அனல் மின் நிலையம் தவிர்த்து வேறு இடங்களில் அவரைப் பணி மாற்றம் செய்ய இயலாது.எனவே மேட்டூருக்கு பின் எங்கும் மாறுதல் செய்ய வேண்டாம் என்று நிர்வாகம் முடிவுக்கு வந்தது. இது அன்றி அவர் பகுதியில் இருக்கும் மற்ற ஆலைத் தொழிலாளர்களையும் தொழிற்சங்கத்தில் இணைத்து அவர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர் அவர். இதில் வழக்குகள் நடத்துவதுடன் அவரது தொழிற்சங்கப் பணிகளுக்கும் உதவியாக இருந்தேன்.

இதுபோல முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் வேலூரைச் சேர்ந்த ஊரிஸ் கல்லூரிப் பேராசிரியர் இளங்கோவன். அவர் தலித் செயற்பாட்டாளர், பேராசிரியர்கள் சங்க நிர்வாகி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் எனப் பல பன்முகத் தளங்களில் இயங்கியவர். 1996 இல் தோழர் சந்துருவுடன் நான் இணைந்து செயல்பட்டது முதல், பேராசிரியர் இளங்கோவனின் அனைத்து வழக்குகளையும் நான் நடத்தினேன். அவர் சுமார் 40 பொதுநல வழக்குகள் போட்டார். அத்தனை வழக்குகளிலும் வெற்றி பெற்றுக் கொடுத்தேன். அவரின் கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்த வெற்றிக்கு அடிப்படைக் காரணம். மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சட்டம் 2006 முதல் வந்தது. அதில் பல வழக்குகளை தாக்கல் செய்யக் காரணமானவரும் அவரே. அவர் போட்ட பல வழக்குகள் மிக முக்கியம் வாய்ந்தவை. குறிப்பாகப் பட்டியல் இனத்தவரின் இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான வழக்குகள் மிக முக்கியம். மாற்றுத்திறனாளிகள் தொடர்பான மிகப் பெரும்பாலான வழக்குகளை நான் தாக்கல் செய்தேன் என்றால் அதற்கு அவரே அடிப்படை.

புத்த மதத்திற்கு மாறிய பட்டியல் இனத்தவரும் பட்டியல் இனத்தவரே என்ற தீர்ப்பு, அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான 521 பின்னூட்டு (backlog vacancies) இடங்கள் நிரப்ப வேண்டும் என்ற தீர்ப்பு, தமிழ் நாடு அரசின் பல துறைகளில் 5000 இளநிலை உதவியாளர்களை பணி அமர்த்திய போது அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு, போக்குவரத்து தொழிலாளர்கள் விபத்தின் போது மிகச் சிறிய

அளவில் தகுதி குறைந்தாலும் மாற்றுப் பணி அளிக்க வேண்டும் என்று வாங்கிய நூற்றுக்கணக்கான தீர்ப்புகள் என நான் நடத்திய வழக்குகளின் பட்டியல் நீளும்.

நீதிபதியாக வந்த பின் எதிர்கொண்ட வழக்குகள் மற்றும் உங்களது தீர்ப்புகள்

* 31.3.2009 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றேன். 16.3.2016 வரை பணியாற்றி ஓய்வு பெற்றேன்.

எதிர் கொண்ட வழக்குகள் ஏராளம். நான் ஓய்வு பெறுவதற்கு முன் வாதங்களைக் கேட்ட அனைத்து வழக்குகளிலும் தீர்ப்பளித்தேன்.

ஒரு சில தீர்ப்புகளைச் சுருக்கமாகக் கூறுகிறேன். அரங்கக் கூட்டம் நடத்துவதற்குக் காவல்துறையின் அனுமதி தேவையில்லை என்ற தீர்ப்பு, அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துரிமை தொடர்பானது.

15.4.2015 அன்று பெரியார் திடலில் அண்ணல் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் விழாவும் மாட்டுக்கறி விருந்தும், தானாகத் தாலி அகற்றும் நிகழ்ச்சியும் எனத் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. 15.4.2015 செவ்வாய்க்கிழமை. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் மேல் ஒரு குற்றவியல் வழக்கை இந்து மகா சபை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்து மதத்தை இழிவு படுத்துவதே மேற்சொன்ன 15.4.2015 அன்று திராவிடர் கழகம் நடத்தும் நிகழ்ச்சி என்பது குற்றவியல் வழக்கு. எனவே ஆசிரியரின் மேல் குற்ற வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஆனால் காவல்துறை பதிவு செய்ய மறுக்கிறது என்பதும் வழக்கு. அந்த வழக்கில் 11.4.2015 வெள்ளிக்கிழமை அன்று நீதிபதி பி.என். பிரகாஷ் உத்தரவு போட்டார். ஆசிரியர் மேல் குற்ற வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்பது அந்த உத்தரவு.

இதனால் 12.4.2015 சனி அன்று, தமிழ்நாடு அரசு 15.4.2015 நிகழ்வுக்கு அனுமதி மறுத்தது. அந்த அனுமதி மறுப்பை ரத்து செய்து நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கேட்டு 14.4.2015 திங்கள் அன்று என் முன் வழக்கு வந்தது. அந்த வழக்கில் மாறிய லப்பை பிரிவினர் இல்லை என்பதே உயர் நீதிமன்றம் கூறிய காரணம்.

மண்டல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் அளித்த தீர்ப்பை சுட்டிக் காண்பித்து, மேற்சொன்ன ஆரிஃபா பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவராகக் கருதி அவருக்குத் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பணி அளிக்க வேண்டும் என்று நான் தீர்ப்பளித்தேன்.

2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு அந்தத் தீர்ப்பை அமுல்படுத்தும் விதத்தில் மற்ற மதத்தில் பின் தங்கிய வகுப்பில் இருந்து இஸ்லாம் மதத்தின் எந்த பின்தங்கிய பிரிவிற்கு மதம் மாறினாலும் அவர்கள் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று உத்தரவு அளித்துள்ளது.

அடுத்து, இறந்து போன அரசு ஊழியரின் பிள்ளைகளுக்கு கருணை அடிப்படையில் பணி அளிக்கும் போது ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் இடையே பாகுபாடு காட்டியது தமிழ்நாடு அரசு. விதவையாகவோ அல்லது கணவனால் கைவிடப்பட்டவராகவோ இருந்தால்தான் பெண் பிள்ளைக்கு வேலை என்றது அரசாணை. அந்த அரசாணையை ரத்து செய்து ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எந்த வித்தியாசமும் இன்றிப் பணி அளிக்க வேண்டும் என்று அளித்த தீர்ப்பு முக்கியமானது.

ஒரு கார் விபத்தில் அதில் பயணம் செய்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இறந்து போனார்கள். அந்த குடும்பத்தில் மருமகள் தவிர்த்து மற்ற அனைவரது இறப்புக்கும் அந்த குடும்பத்தின் தந்தைக்கு நஷ்ட ஈடு வழங்கித் தீர்ப்பளித்தது விபத்து பற்றி நஷ்ட ஈடு வழங்கும் நீதிமன்றம். ஆனால் அந்த மருமகளின் பெற்றோர்கள் போட்ட நஷ்ட ஈடுக்கான வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம். திருமணத்திற்குப் பின் பெற்றோர்கள் தனது பெண்ணைச் சார்ந்து இருக்கவில்லை என்று காரணம் கூறியே வழக்கைத் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கின் மேல்முறையீடு என் முன் விசாரணைக்கு வந்தது. 2006 ஆம் ஆண்டில் பாராளுமன்றம் இயற்றிய சட்டத்தில், மகளும் மகனைப் போன்றே பெற்றோரைப் பராமரிக்க வேண்டிய கடமை உள்ளவர் என்றும் பெற்றோர்கள் தனது மகளிடம் தேவைப்பட்டால் பராமரிப்புக்காக வழக்குத் தொடுக்கலாம் என்றும் கூறியது அந்தச் சட்டம். அதைச் சுட்டிக்காட்டி மகளை இழந்த பெற்றோருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவளிக்கப்பட்டதே அந்த தீர்ப்பு.

அடுத்து, 40% மதிப்பெண் பெற்று பொறியியல் படிப்பில் சேர்ந்து இருந்தார் ஒரு பட்டியல் சாதி மாணவர். அவருக்கு ஒரு பொதுத்துறை வங்கி கல்விக் கடன் வழங்க மறுத்தது. 60% மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று இந்த வங்கியின் தலைமை அலுவலகம் போட்ட உத்தரவைச் சுட்டிக் காண்பித்துக் கடன் அளிக்க மறுத்தது. 750-க்கு 287 மதிப்பெண்களைப் பள்ளி இறுதி தேர்வில் பெற்ற அண்ணல் அம்பேத்கருக்குப் பரோடா மன்னர் கல்விக் கடன் அளித்தார் என்பதைச் சுட்டிக் காண்பித்து, மன்னரை விட பொதுத்துறை வங்கி பொதுநோக்குடன் நடக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தேன். இந்தத் தீர்ப்பை ஓட்டி நூற்றுக்கணக்கானோர் கல்விக் கடன் பெற்றனர்.

பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டார். அவர் திருமணம் ஆகாதவர். அவரை நம்பி அந்த குடும்பமும் குறிப்பாக அவரது சகோதரியும் இருந்தனர். அவரது சகோதரிக்கு அரசு பணி அளிக்கப்பட வேண்டும் என்பது வழக்கு. அவரது சகோதரிக்கு அரசுப் பணி அளிக்குமாறு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீர்ப்பளித்தேன்.

பல ஆண்டுக்காலம் தற்காலிகமாகப் பணிபுரிந்து, பணி நிரந்தரம் பெற்ற பின் 10 ஆண்டுகள் பூர்த்தி ஆவதற்கு முன்னர் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் அளிக்க வேண்டுமென்று அளித்த தீர்ப்பால் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர்.

இப்படி எத்தனையோ தீர்ப்புகளை சொல்லலாம்.

ஈழப் போரட்டத்தில் பங்கேற்ற நினைவுகள்

* ஈழப் போராட்டம் எனது அரசியல் திசை வழியை மாற்றியது. ஈழத்தமிழர் தரப்பின்றி இந்தியாவும் இலங்கையும் போட்ட ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய இராணுவம் இலங்கைக்குச் சென்றது. இதையும் ஆதரித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு நான் விலகினேன்.

என்னைப் போன்றே பலரும் இதற்கும் முன்னரே ஈழப் போராட்டத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறி இருந்தனர். குறிப்பாக அவர்களுடன் சேர்ந்து அவர்கள் நடத்திய ஈழப் போராட்டங்களில் பங்கு பெற்றேன்.

குறிப்பாக முழு நேர வழக்குரைஞராகச் செயலாற்ற இந்த நிகழ்வு உதவியது. அதனால் தொழிலாளர் சம்பந்தமான வழக்குகள் நடத்துவதில் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டேன். அதுவே நான் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமனம் பெற உதவியது.

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையில் இருந்த காலத்தில், நளினி அவர்களும் இரவிச்சந்திரன் அவர்களும் எழுதிய அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல்களுக்கான அணிந்துரையில் மேற்சொன்ன விவரங்களைக் கூறி இருந்தேன்.

பாபர் மசூதி தீர்ப்பு குறித்த உங்களது கருத்து

* 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி அளிக்கப்பட்ட பாபர் மசூதி தீர்ப்பு ஆய்வுக்குரியது. அந்தத் தீர்ப்பு நீதித்துறைக்கு ஒரு களங்கம்.

1528இல் கட்டப்பட்ட பாபர் மசூதிக்கு முகலாயர் ஆட்சி காலத்தில் எந்த பாதிப்பும் இல்லை.

1857-58 க்குப் பின் அந்தப் பகுதி ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் ஆட்சி அந்த மசூதிக்குப் பாதுகாப்பு அளித்தது. தாக்குதலுக்கு உள்ளான போது அதைச் சரி செய்தது மட்டுமன்றி, அதைச் சுற்றி இரும்புக் கம்பிகளால் கதவு போலப் பாதுகாப்பை உண்டாக்கியது. பாபர் மசூதி சம்பந்தமான எந்தப் படத்திலும் அதைச் சுற்றி இருக்கும் இரும்புக் கம்பிகளை அமைத்தது ஆங்கிலேய ஆட்சி.

பாபர் மசூதி வளாகத்தில் இராமருக்கான கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு நீதிமன்றத்தை அணுகினர் அன்றைய மதவெறி கூட்டத்தினர். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பின் 1949 இல் நேரு பிரதமராக இருந்தபோது இராமர் சிலையைப் பாபர் மசூதி வளாகத்தின் நடுப்பகுதியில் வைத்தனர் மதவெறிக் கூட்டத்தினர். அதை அகற்றுவதற்குத் தவறிவிட்டது நேரு அரசு. அகற்றாவிட்டாலும் இந்தப் பகுதியைப் பூட்டி வழிபாடு செய்வதற்குத் தடை விதித்தது நேரு அரசு.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இந்தப் பூட்டை உடைத்து வழிபாட்டுக்கு வழி செய்தார்.

பின்னர் 1992 இல் டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி உடைத்துத் தகர்க்கப்பட்டது இந்து மத வெறியர்களால்.

2019-ல் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு, 1949 இல் இராமர் சிலையைப் பாபர் மசூதிக்குள் வைத்தது தவறானதும் சட்டவிரோதமானதும் என்கிறது; பாபர் மசூதியை உடைத்ததும் சட்டவிரோதம் என்கிறது.

சட்டவிரோதம் என்று கூறிய பின்னர், அந்த சட்ட விரோத செயல்களைச் செய்தவர்களிடமே அந்த வளாகத்தை ஒப்படைத்து அவர்கள் இராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று கூறியது எவ்வாறு சரியாக இருக்க முடியும்?.

அதற்கு அந்தத் தீர்ப்புக் கூறும் காரணம், இராமர் அந்த இடத்தில் தான் பிறந்தார் என்று கோடிக்கணக்கான இந்து மக்கள் நம்புகிறார்கள் என்பதுதான்.

தீர்ப்புக்கு ஆதாரமாகச் சட்டப்பிரிவுகளைக் கூறாமல் நம்பிக்கையை கூறுகிறது இந்த தீர்ப்பு. எனவே அந்தத் தீர்ப்பைச் சரித்திரம் நிராகரிக்கும்.

பொருளாதார வழியில் பின் தங்கியோருக்கான இடஒதுக்கீடு (EWS) குறித்த உங்களது கண்ணோட்டம்.

* கல்வி மற்றும் சமூக நிலையில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கே கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டை வழங்குகிறது அரசமைப்புச் சட்டம்.

அரசமைப்புச் சட்டம் 26 1 1950 முதல் அமலுக்கு வந்த போது கல்வியில் மட்டுமே இட ஒதுக்கீட்டை வழங்கியிருந்தது அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 16(4). அந்த பிரிவில் பயன்படுத்தி இருக்கும் வார்த்தை "பின்தங்கிய வகுப்பினர்" என்பதே. பட்டியல் இனத்தவர் பழங்குடியினர் மற்றும் பிற பின் தங்கிய வகுப்பினர்களை உள்ளடக்கியது இந்த பிரிவில் கூறப்படும் "பின் தங்கிய வகுப்பினர்" என்பது.

பின்னர் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் பிரிவு 15 (4) சேர்க்கப்பட்டது. அது சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் பட்டியல் இனத்தவர் பழங்குடி யினருக்குக் கல்வியில் இட ஒதுக்கீட்டை அளிக்கிறது.

இதற்கான வரைவு (Draft) பிரிவு 15(4) விவாதத்திற்கு வந்த போது, அவை உறுப்பினர்களில் ஏழு பேர் அந்த வரைவிற்கு ஒரு திருத்தம் வேண்டும் என்று கூறினர். பின் தங்கிய பிரிவினர், சமூகத்தில் மற்றும் கல்வியில் மட்டும் பின்தங்கி இருந்தால் இந்த இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்றும், அவர்கள் பொருளாதாரத்திலும் பின்தங்கி இருந்தால் மட்டுமே இந்த இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்றும் திருத்தம் கோரினர்.

அதாவது, பின்தங்கிய வகுப்பினரில் ஏழைகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது அவர்கள் கூறிய திருத்தம்.

அந்த திருத்தம் அவையால் நிராகரிக்கப்பட்டது. ஏழு பேர் தவிர்த்து அவையின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் அந்தத் திருத்தத்தை நிராகரித்தனர். இந்தத் திருத்தத்தைக் கோரியவர்களில் ஒருவர் சியாம் பிரசாத் முகர்ஜி. பின்னாளில் ஜன சங்கத்தை உருவாக்கியவர் இவர்.

அதாவது அப்போதைய விவாதம், பின் தங்கிய பிரிவினரில் வசதியானவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்பதே. அதாவது பின் தங்கியவர்களில் ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்கு மேலே உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்பது அந்த வாதம். அதாவது பின்தங்கிய பிரிவினரில் கிரிமி

லேயர் (creamy layer) என்ற ஏற்பாட்டை கோரியது மேற்சொன்ன திருத்தம்.

உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற விவாதமே இல்லை.

இது தவிர்த்து, உயர் சாதியில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் அரசமைப்புச் சட்ட திருத்தம் கொண்டு வருவதற்கு (EWS), அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 46 மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உயர்சாதியினரில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் இந்த அரசமைப்புச் சட்ட திருத்தம், பட்டியல் சாதியினர் பழங்குடியினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரில் உள்ள ஏழைகளுக்கு இந்த ஒதுக்கீட்டுப் பலனை அளிக்காததும் குறிப்பிடத்தக்கது.

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 46 ஐ படிக்கும் எவரும், உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதற்காக இப்பிரிவை சுட்டிக் காட்டுவது ஓர் அராஜகமான மற்றும் அயோக்கியத்தனமான செயல் என்பதை ஏற்பர்.

பட்டியல் சாதியினர் பழங்குடியினர் மற்றும்" நலிந்த பிரிவினர்" ஆகியோரை மேம்படுத்தலைக் கொள்கையாகக் கொண்டது அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 46.

மேம்போக்காகப் பார்த்தால், நலிந்த பிரிவினருக்குள் முன் தங்கிய சாதியினரில் உள்ள ஏழைகளும் அடங்குவர் என்று தோன்றும்.

ஆனால் இப்பிரிவு 46, நலிந்த பிரிவினர் யார் என்று தெளிவாகக் கூறுகிறது. சமூக அநீதியில் இருந்தும், அனைத்து விதமான சுரண்டல்களில் இருந்தும் நலிந்த பிரிவினரைக் காப்பாற்றுவதே இப்பிரிவு 46-இன் நோக்கம் என்கிறது அரசமைப்புச் சட்டம். சமூக அநீதி (Social Injustice) என்ற வார்த்தைகளை இந்த பிரிவில் மட்டுமே அரசமைப்புச் சட்டம் பயன்படுத்துகிறது.

இந்த பிரிவு 46-இன் கீழ்தான் கையால் மலம் அள்ளுவதைத் தடுப்பதற்கான சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றியது என்பதிலிருந்தே, இதே பிரிவு 46- ன் கீழ் உயர் சாதியினரின் ஏழைகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு என்பது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பது புரியும்.

உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த அரசமைப்புச் சட்ட திருத்தம் சரியானது என்று தீர்ப்பு கூறியது. அந்த ஐவரில் ஒருவர் கூட பட்டியல் இனத்தவரோ பழங்குடியினரோ பிற்படுத்தப்பட்டவரோ இல்லை என்பது உற்று நோக்கப்பட வேண்டும். இந்த SC/ST/OBC பிரிவுகளில் உச்ச நீதிமன்றத்தில் உரிய அளவு நீதிபதிகள் இருந்தால் தானே அமர்வில் இருக்க முடியும்.

இந்தியாவையே உலுக்கிய ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் உங்களது பங்கு காத்திரமானது. அது குறித்த அனுபவங்களைப் பதிவிட இயலுமா?

ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு அடையாளமாக கருதப்படுகிறது. பழந்தமிழரின் ஏறுதழுவுதல் பின்னர் ஜல்லிக்கட்டு விளையாட்டாக மாறியது. குறிப்பாகப் பொங்கல் பண்டிகை காலத்தில் தொடங்கும் இந்த விளையாட்டு ஒரு சில மாதங்கள் தொடர்ந்து நீடிக்கிறது.

"விலங்குகளுக்கு வதை செய்வதை தடுத்தல்" என்ற பொருள் அரசமைப்புச் சட்டத்தின் ஒத்திசைவு பட்டியலில் (Con- current List) உள்ளது. ஒத்திசைவு பட்டியலை பொதுப் பட்டியல் என்றும் கூறுவர்.

1960களில் விலங்குகளுக்கு வதை செய்வதை தடுக்கும் சட்டத்தைப் பாராளுமன்றம் இயற்றியது.

இந்திய விலங்குகள் நல வாரியம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2014 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதித்துத் தீர்ப்பளித்தது. மேற்சொன்ன சட்டத்தின்படி, காளைகளை வதை செய்வது ஜல்லிக்கட்டில் நிகழ்கிறது என்று விளக்கம் அளித்தது உச்ச நீதிமன்றம்.

எனவே 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் நடப்பதற்கு அரசு தடை விதித்தது. அந்தத் தடைகளை மீறிச் சில இடங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடந்தது.

2017 ஆம் ஆண்டில் பொங்கல் திருவிழாவை ஒட்டித் தமிழ்நாடு முழுவதும் தடையை மீறிப் பல இடங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடந்தது. அது வரலாறு காணாத பேரியக்கமாக மாறியது. இலட்சக்கணக்கில் மக்கள் அந்த இயக்கத்தில் பங்கு கொண்டனர். மெரினா கடற்கரையில் மக்கள் வெள்ளம் போலத் திரண்டனர் .திரண்ட மக்கள் கூட்டம் மெரினா கடற்கரையிலேயே தங்கி அமைதியான வழியில் போராடியது. இந்தப் போராட்டம் உலகில் பல பகுதிகளில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் பரவியது.

அப்போது தமிழ்நாடு சட்டமன்றம் கூடவில்லை. எனவே விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை அவசரச் சட்டம் மூலம் கொண்டுவரச் செய்தது. தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

மேலே குறிப்பிட்டுள்ளது போல இது ஒத்திசைவு பட்டியல் என்பதால், இது சம்பந்தமாக தமிழ்நாடு அரசு சட்டசபையில் சட்டம் இயற்றி, ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். ஒன்றிய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே அது சட்டமாகும்.

அதுவே சட்டசபை கூடாத காலத்தில், தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் போடுவதாக இருந்தால், அதற்கு ஒன்றிய அரசின் முன் அனுமதி தேவை. அப்போதுதான் அவசரச் சட்டம் அமலுக்கு வரும். அப்படி அமலுக்கு வரும் அவசரச் சட்டம் ஆறு மாத காலம் உயிருடன் இருக்கும். அந்த ஆறு மாத காலத்திற்குள் சட்டசபையில் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு அதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் பெற்றால்தான் அது முழுமையான சட்டம் ஆகும்.

எனது நினைவில், 2017 ஜனவரி 21 ஆம் நாள் சனிக்கிழமை அன்று இயற்றப்பட்ட அவசரச் சட்டத்திற்கு, அடுத்த நாளே ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுத்தது. ஒரே நாளில் ஒப்புதல் கொடுத்த வரலாறு இதற்கு முன் இருப்பதாகத் தெரியவில்லை. ஒன்றிய அரசு ஒரே நாளில் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்குக் காரணம், தமிழ்நாடு முழுவதும் மக்கள் அனைவரும் பங்கு கொண்ட வரலாறு காணாத போராட்டமே ஆகும்.

தமிழ்நாடு அரசு போட்ட அவசரச் சட்டம் தமிழ்நாட்டிற்கு மட்டுமே பொருந்தும். அதாவது மற்ற மாநிலங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்வு நடத்தச் சட்டம் அனுமதிக்கவில்லை.

1960 ஆம் ஆண்டுகளில் போட்ட விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், சில வகையான விலங்கு வதைகளை வதைகள் அல்ல என்று கூறுகிறது. அதாவது, அசைவ உணவு சமைப்பதற்காக ஆட்டையோ கோழியையோ வெட்டுவது வதை அல்ல என்கிறது அந்தச் சட்டம். அதேபோல, கோயில்களில் விலங்குகளைப் பலியிடுவது, விலங்குகளை வதை செய்வது அல்ல என்கிறது அந்தச் சட்டம். மேலும், ஒரு மாட்டை அடையாளப்படுத்துவதற்காகப் பழுக்க காய்ச்சிய இரும்பில் கோடு போடுவது வதை அல்ல என்கிறது அந்தச் சட்டம்.

இந்த வரிசையில், மேலே சொன்ன அவசரச் சட்டத்தில் ஒரு பிரிவைச் சேர்த்ததன் மூலம், தமிழ்நாட்டிற்கு மட்டும் ஜல்லிக்கட்டு விளையாட்டு விலங்கு வதை ஆகாது.

இந்த அவசரச் சட்ட பிரிவுகளை பத்திரிகையிலோ, தொலைக்காட்சியிலோ அல்லது வேறு விதமாகவோ பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவரத் தமிழ்நாடு அரசு தவறிவிட்டது.

வெறுமனே ஓர் அவசரச் சட்டம் போட்டதாகத் தமிழ்நாடு அரசு சொல்வதை, போராடிய மக்கள் நம்பத் தயாராக இல்லை. எனவே இலட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையை விட்டுச் செல்ல மறுத்து விட்டார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள், அந்த அவசரச் சட்டத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை நீக்கப்பட்டுள்ளது என்று அரசு கூறுவது பற்றி விளக்கி மெரினா கடற்கரைக்கு வந்து நான் கூறினால் அதை ஏற்பதாகத் தெரிவித்தனர். காவல்துறையும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

அப்போது சென்னை நகரில் எந்த வாகனமும் செல்ல போராடிய மக்கள் அனுமதிக்கவில்லை. எனவே காவல்துறையின் வாகனத்தில் நானும் தோழர் தியாகு அவர்களும் மெரினா சென்றோம்.

காவல்துறை துணை ஆணையர், சென்னை தெற்கு அவர்கள் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அவர் அந்தச் சட்டத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார்.

அந்தப் பிரதியை ஏற்கனவே நான் பார்த்துள்ளேன். பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த தோழர் சுந்தரராசன் அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் சு. வெங்கடேசன் (இப்போதைய மக்களவை உறுப்பினர்) அவர்களும் என்னை வீட்டில் சந்தித்து அந்த நகலைக் கொடுத்தார்கள். அதுவே அவர்களை நான் முதன் முதலில் சந்தித்தது.

அதைப்பற்றி என் கருத்தைக் கேட்டார்கள். அதைப் படித்துப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்றும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜல்லிக்கட்டுக்குத் தடை இல்லை என்றும் என் கருத்தைக் கூறினேன். ஆனால் இதுதான் அவசரச் சட்டத்தின் உண்மையான நகலா என்பதை எவ்வாறு உறுதி செய்வது என்று அவர்களைக் கேட்டிருந்தேன். தமிழ்நாடு அரசு ஏன் இதைப் பொதுவெளியில் வெளியிடவில்லை என்பதையும் அவர்களிடம் கேட்டேன்.அதற்கு அவர்களிடம் பதில் ஏதுமில்லை.

இந்த நிலையில்தான் நான் மெரினா சென்றிருந்தேன். காவல்துறை அதிகாரி கொடுத்த நகலும், ஏற்கனவே மேற் சொன்ன தோழர்கள் கொடுத்ததும் ஒன்றுதான்.

அவரிடம் அந்த நகலில் தமிழ்நாடு அரசின் கெசட்டில் வெளியானது பற்றிய விவரமோ அல்லது அரசின் முத்திரையோ இல்லையே என்று கேட்டேன். அவர் உடனே மிக விரைவாக கோட்டைக்குச் சென்று எனது ஐயத்தை தீர்க்கும் வகையில் உண்மை நகலைக் கொண்டு வந்தார்.

அதற்குப்பின் காவல்துறை ஏற்பாடு செய்த ஒலிபெருக்கியில் அங்கு கூடியிருந்த மாபெரும் மக்கள் கூட்டத்திடம் அந்த அவசரச் சட்டத்தை விளக்கிப் பேசினேன். மக்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்ற தகவலைத் தெரிவித்தேன்.

இந்த நிகழ்வு நடந்தது 2017 ஜனவரி 23ஆம் நாள்.

அன்று திங்கள்கிழமை. அன்று தமிழ்நாடு சட்டமன்றமும் கூடியது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பின் கூடும் முதல் சட்டமன்றக் கூட்டம் அது. வழக்கமாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு சட்டசபை கலைந்து விடும். ஆனால் அன்று மேற்சொன்ன அவசரச் சட்டம், ஒரு சட்டமாகவே தமிழ்நாடு சட்டசபையால் ஒருமனதாக இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தை அன்றே கவர்னர் ஒன்றிய அரசின் அனுமதிக்கு (குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு) அனுப்பினார். அடுத்த நாளே ஒன்றிய அரசு (குடியரசுத் தலைவர்) அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இதுவும் ஒரு வரலாற்றுச் சாதனை என்றே குறிப்பிட வேண்டும்.

ஏனெனில், ஆண்டுக்கணக்கில் கவர்னரும் குடியரசுத் தலைவரும் தமிழ்நாடு அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் தமிழ்நாடு மக்களை அவமதிக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருவது பாஜக ஒன்றிய அரசில் ஆட்சி புரிய தொடங்கியது முதல் நடக்கும் சாதாரண நிகழ்வு. அது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் 8-4-2025 இல் சொன்னது சமீபத்திய நிகழ்வு.

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேரலாம் எனும் ஒன்றிய அரசின் அறிவிப்பு குறித்த உங்களது பார்வை.

* ஆர்.எஸ்.எஸ் தானே 2014 முதல் ஒன்றிய அரசை ஆண்டு வருகிறது. அதாவது ஆர் எஸ் எஸ் உருவாக்கிய பாரதிய ஜனதா தானே இப்போது மத்தியில் ஆளும் கட்சி. எனவே அரசு ஊழியர்கள் அவர்களது அமைப்பில் சேரலாம் என்று போட்ட ஒன்றிய அரசின் உத்தரவு ஒன்றும் வியப்பானது அல்ல.

இதற்கு அவர்கள் கூறும் காரணம், ஆர்.எஸ்.எஸ். ஓர் அரசியல் இயக்கம் அல்ல; அது ஒரு கலாச்சார பண்பாட்டு இயக்கம் என்பதாகும்.

ஆனால் இந்த அளவுகோலை மற்ற அரசியல் கட்சி அல்லாத அமைப்புகளில் அரசு ஊழியர்கள் சேரவோ செயல்படவோ அனுமதிக்க மாட்டார்கள். இதுவே ஆட்சேபனைக்குரியது. அதாவது ஆர்.எஸ்.எஸ். மட்டுமன்றி அனைத்துப் பண்பாட்டு கலாச்சார அமைப்புகளிலும் அரசு ஊழியர்கள் சேரவும் செயல்படவும் அனுமதிக்க வேண்டும்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) நீக்கப்பட வேண்டியதன் தேவை என்ன?

இந்த சட்டம் ஒரு கருப்புச் சட்டம்.

1967இல் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதில் கடுமையான பிரிவுகள் ஏதும் இல்லை.

மக்கள் இயக்கங்களை ஓடுக்குவதற்கு, பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம் என்ற கொடுஞ் சட்டத்தை 1985இல் ராஜீவ் காந்தியின் அரசு கொண்டு வந்தது. இதைச் சுருக்கமாக "தடா சட்டம்" என்பர்.

இதை ஒரு தற்காலிகமான சட்டம்தான் என்றும், சில குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின் அச்சட்டம் காலாவதியாகிவிடும் என்றும் அச்சட்டத்திற்கு நியாயம் கற்பிக்கப்பட்டது. அச்சட்டத்தில் sun set clause இருக்கிறது என்றனர்.

ஏன் "தடா" சட்டத்தைக் கடுமையான கொடுஞ்சட்டம் என்கிறோம் என்றால், பல விஷயங்களில் வழக்கமான குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்தியச் சாட்சியச் சட்டம் இதற்குப் பொருந்தாது.

குற்றவியல் சட்டங்களின் அடிப்படை, குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிருபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்று கருதப்படுவார். எனவே பிணை என்பது விதி; பிணை மறுப்பு என்பது விதிவிலக்கு. ஆனால் தடா சட்டத்தில் பிணை மறுப்பே விதி.

குற்ற வழக்குகளில் புலன் விசாரணையின் போது காவல்துறையிடம் அளிக்கும் எந்த வாக்குமூலமும் ஒப்புக்கொள்ளக் கூடிய சாட்சியமாகாது. ஆனால் தடா சட்டத்தில் காவல்துறையிடம் அளிக்கும் வாக்குமூலம் ஒப்புக்கொள்ளக் கூடிய சாட்சியம் ஆகும்.

மக்கள் இயக்கங்களும் எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்ததை ஓட்டி, இந்த "தடா" சட்டம் 1995இல் காலாவதியானது.

பின்னர் வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் 2002 ஆம் ஆண்டில் "பொடா" என்ற பெயரில் இச்சட்டம் மறு அவதாரம் எடுத்தது. இந்தப் பொடாச் சட்டமும் தற்காலிகச் சட்டம் என்று நியாயப்படுத்தப்பட்டது. அதாவது தடா சட்டத்தின் கூறுகள்

இந்தி மொழியின் ஆதிக்கத்தை அரசமைப்புச் சட்டமே ஏற்றுக் கொண்டிருப்பதையும் இடதுசாரி இயக்கங்கள் போதிய அளவு கணக்கில் கொள்ளவில்லை.

அதேபோல, தேசிய இனங்களின் உரிமை பற்றிப் போதிய அளவு ஆய்வு செய்யவில்லை போன்ற காரணங்களால் இடதுசாரி இயக்கம் வலுவாக இல்லாமல் இருக்கிறது.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எதிர்காலத்தில் என்ன மாதிரி விடை கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- நீதிபதி அரிபரந்தாமன்

நேர்காணல்: கண. குறிஞ்சி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.