கடவுள் உணர்வின் ஆன்மிகக் கற்பிதங்களைச் சற்று விலக்கி வைத்து விட்டு, மத நிறுவனங்களின் இருப்பு பற்றி யோசிக்கலாம்.
இயற்கை சக்திகளைக் கண்டு அஞ்சிய, மனித குலத்தின் ஆதாரமான அச்ச உணர்விலிருந்தே கடவுள்கள் பிறந்தனர். அவர்கள் வானத்தில் வசிக்கிறார்கள் என்பது, ஒரு புராதன மற்றும் வேடிக்கையான நம்பிக்கையாக இன்றளவும் தொடர்கின்றது.
கடவுளர்கள், ஆதிகால சமூகக்குழுக்களின் முக்கிய அடையாளமாக இடம் பெற்றனர். வரலாற்றில், அரச வம்ச அதிகாரத்துக்கு இணையாக மதத் தலைவர்களுக்கும் மக்களிடையே செல்வாக்கு இருந்ததைப் பார்க்க முடிகிறது.
இயற்கை வளங்களையும், சொத்துக்களையும் கைப்பற்றி, தமக்குள் பங்கு போட்டுக் கொள்வதே சமூகக் குழுவாதத்தின் முதன்மைப் பணி என்பதை நினைவில் கொள்வோம். ஆளும் இனமாக இயங்குதே ஒரு சமூகக் குழுவின் உண்மையான வெற்றி. இதனால் தான் ஒவ்வொரு சமூகத்திலும் போர்க்கடவுளர்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றனர்.
போர்களுக்கும் மதங்களுக்குமான தொடர்பு மிக நெருக்கமானது. நோக்கம் என்னவாக இருப்பினும், போர்களில் வெற்றி கிடைத்த போதெல்லாம் அரச அதிகாரமும் மத குருமார்களும் ஒருசேரக் கொழிக்க முடிந்தது, அதிகாரத்தைத் தக்க வைக்க முடிந்தது. மதங்கள் மக்களின் அமைப்பாக்க முயற்சிகளுக்குப் பேருதவி செய்ததுடன் ஆளும் வர்க்க நலன்களைப் பாதுகாக்க மிகவும் உதவின.
எனவே , ஒரு மக்கள் திரளின் பண்பாட்டில், கடவுளர் கதைகளும் நம்பிக்கைகளும் தொடர்ந்து வலுவூட்டப் பட்டவாறே இருந்தன.
பிற்காலத்தில் நாட்டை ஆண்ட அரசர்களும் கடவுள் தன்மையைச் சொந்தம் கொண்டாடியதால் உள்ளபடியே 'ஆண்டவர்களும' கடவுளாக்கப்பட்டனர். இவ்வழக்கத்தைப் பண்டைய எகிப்திய நாகரிகத்தில் நன்கு காண முடியும்.
மதங்களின் பிறப்புக் கதைகள் பலவற்றிலும் அரச குடும்பமும் அதிகாரமும் சம்பந்தப்பட்டிருப்பது யதேச்சையான ஒன்றல்ல.
மக்களை அதிகாரத்திற்குப் பணிய வைக்க வேண்டிய தேவை அரசுகளுக்கும், உழைக்காமல் சுரண்டி வாழும் ஒரு அமைப்பைக் காக்க வேண்டிய தேவை மத குருமார்களுக்கும் எப்போதும் இருக்கின்றன. இதை ஒருங்கே சாதிப்பதற்கு அற்புதங்களால் நிரம்பிய கடவுளர்கள் நன்கு உதவினர்.
எனினும்... எகிப்தியர்கள், சிந்து சமவெளியினர், சுமேரியர்கள், ரோமானியர்கள், பாபிலோனியர்கள் என மிகவும் புகழ்பெற்று விளங்கிய பல நாகரிகங்களில் செல்வாக்காக இருந்த பல கடவுளர்கள் இன்றைக்கு வெறும் வரலாற்றுக் குறிப்புகளாக மட்டுமே உள்ளனர்.
பல கடவுள்கள் தடயமற்றுப் போயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில், இன்றைக்குப் பெருமதங்களாக இயங்கும் மதங்கள் பலவும் தமக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உலகில் மிகச் சிறந்த நாகரிகங்கள் இருந்தன என்பதையோ, தமது கடவுள் மற்றும் மதக் கண்டுபிடிப்புகள் பலவும் அவற்றின் நீட்சியே என்பதையோ வசதியாக மறந்து போனவை தான்.
தர்க்கமும் அறிவும் சிந்தனைப் போக்குகளும் உச்சத்திலிருந்த பண்டைய நாகரிகங்களின் அழிவுக்குப் பிறகான ஒரு காலகட்டத்தில்...
வானத்திலிருந்து இறைத் தூதர்கள் இறங்கி வருவது, இறந்தோரைப் பிழைக்க வைப்பது, நோயாளிகளை மாயத்தால் குணப்படுத்துவது, அவதாரமெடுப்பது, உயிர்த்தெழுவது என அற்புதக் கதைகளை உருவாக்கிப் புதிய மதங்கள் தம்மை நிலைநிறுத்திக் கொண்டன.
மத நிறுவனங்களின் மையமாகக் கடவுள் வைக்கப்பட்டு, அதைச் சுற்றி 'புனிதக் கருத்தியல்' உருவாக்கப்பட்டது. புனிதத்தலம், புனிதப் புத்தகம், புனித மொழி, புனிதச் சடங்கு என இவை விரிந்து நிலைபெறத் துவங்கின. விளைவாக, மதங்கள் தமக்குள் இறுகத் துவங்கின.
ஒரு புனித நூல் இயற்றப்பட்ட காலத்தில், மனித குலத்தின் வரலாற்றில் திரண்டிருந்த அறிவும் சிந்தனையும், பண்பாடுமே அவற்றில் இடம்பெற முடியும் என்பதை நேர்மையாக ஏற்றுக் கொண்டாலே பிரச்சினை தீர்ந்து விடும். ஆனால் மறைநூல்களில் இறைவனின் குரல் ஒலிப்பதாகக் கூறிவிட்டதால், அதை முக்காலத்திற்கும் பொருந்தியதாக வலியுறுத்த வேண்டிய ஒரு கட்டாயம் வந்து விடுகின்றது.
சற்று யோசித்தால்... பல நூறு ஆண்டுகளாக எமது மதமோ, நம்பிக்கையோ, வழிபாடோ எந்த மாற்றமும் அடையவில்லை எனக் கூறுவது உண்மையில் பெருமைப்படத்தக்க ஒன்றல்ல என்பது புரிந்து விடும்.
ஏனெனில், புதுப்பித்தலும் மாற்றமுமே ஓர் அமைப்பை உயிரோட்டமுடையதாக ஆக்கும். இதை மறுக்கையில் அவ்வமைப்பு தேங்கிப் போய்விடுகின்றது.
சிதைவது என்பது மீண்டும் புதியதொரு உருக்கொள்ள வாய்ப்பாக அமையும். ஆனால் தேங்குவது பிறழ்வுகளுக்கே இட்டுச் செல்லும்.
ஆக, இறுதியில் எது அடிப்படைவாதம் என்று உணரக் கூடச் சக்தியற்றுப் போவதுதான் இதன் உச்சகட்டத் துயரம்.
ஆனால், காலம் தேங்கி நிற்பதில்லை. அறிவியல் வளர்ச்சியடைகின்றது. தொழில் நுட்பம் விரிவடைந்தபடி செல்கின்றது. மனித வளர்ச்சிக் குறியீடு உயர்ந்து வருகின்றது. இன்றைய உலகமயச் சூழல் என்பது, அனைத்து விதமான அறிவுசார் போக்குகளையும் விரிவுபடுத்தி அறிமுகப்படுத்தி வருகின்றது.
நம்பிக்கைகளுக்கும் பகுத்தறிவுக்குமான முரண்கள் கூர்மைப்படுவதும் அதிகரிக்கின்றது.
இதற்கு ஈடுகொடுக்கும் விதமாக தத்தமது புனித நூல்களில் அறிவியல் கருத்துக்கள் மண்டி, மறைந்து கிடப்பதாகப் பேசியாக வேண்டிய சூழல் இன்றைக்கு உருவாகியுள்ளது. அதே வேளையில் சுவர்க்கம், நரகம் , மீட்பு, நியாயத் தீர்ப்பு, ஆன்மா, சாத்தான் என நம்பிக்கைகளையும் அவை கைவிட முடியாமல் அல்லாடுகின்றன.
மத நிறுவனங்களின் இந்த நிலைமை மிகவும் வினோதமாகக் காட்சியளிப்பதாக உள்ளது. மதங்கள் கற்பித்து வந்த நம்பிக்கைகள் யாவும் இன்றைக்கு கேள்விக்குட்படுத்தப்படும் எளிய இலக்காகி இருக்கின்றன. இதற்குக் காரணம் அவற்றின் பலவீனமான அடித்தளமே.
தவிரவும், அரசு - கல்வி - சமூக அமைப்பு - குற்றம் - நீதிமன்றம் - தண்டனை - மக்களாட்சி என்கிற நவீன அமைப்பு உருவாக்கப் பட்டாயிற்று. இந்த நவீன அமைப்பினுள் மதமும் மதவாதச் சிந்தனைகளும் தம்மைப் பொருத்திக் கொள்ள முயலுகையில், அது மிகவும் பொருத்தமற்றுத் தெரிவது இயல்பே.
எனவே விவாதங்கள் எழுவது தவிர்க்க இயலாததாகி விடுகின்றது. அதிலும், சமூக ஊடகங்கள் இன்றைக்கு உருவாக்கித் தந்திருக்கும் 'வெளி' என்பது, மதவாதிகளுக்குப் பெரும் நெருக்கடியைத் தருவதாக மாறி வருகின்றது.
மதம் அடிப்படையில் போதனையை மட்டுமே நம்பும். உரையாடலை அது அவ்வளவாக விரும்புவதில்லை. சமூக ஊடகங்களோ உரையாடலுக்கான பரந்த வெளியாக இருக்கின்றன.
தீவிர மத நம்பிக்கைகளில் மூழ்கியபடி, பொது வெளியில் பிற்போக்குவாதக் கருத்துக்களை முன்வைத்தால் அவை உடைபடுவது இங்கு வழமையாகி விட்டது. அச்சமயங்களில் ஒரு மதப் பற்றாளனுக்கு மிகுந்த சினமும், நம்பிக்கைக் குலைவின் மீதான அச்சமும் ஏற்படத் துவங்குகிறது.
அவ்வாறு அச்சம் கொண்டவனே அச்சமூட்ட முயலுகிறான் என்பது ஒரு எளிய தர்க்கம்.
மதம் தன் இருப்பைக் காத்துக் கொள்ள நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றும் காலமிது. விளைவாக, சிதையத் துவங்கும் மத நம்பிக்கைகளைக் காக்க, மத அடிப்படைவாதிகள் உற்பத்தி செய்யப்படுகின்றனர்.
இவர்களால் திட்டமிட்ட தமது நகர்வுகளின் வழி, மிக எளிமையாக தமது சக மத நம்பிக்கையாளர்களைத் திரட்டிக் கொள்ள முடிகின்றது.
உண்மையில், இந்த மதங்கள் ஒவ்வொன்றும் தம்மிடையே கடும் போட்டியுடனே இயங்குபவை. தத்தமது இறைவனை யாவரையும் ஏற்கச் செய்து நிலை நிறுத்தியாக வேண்டிய அடிப்படைக் கடமை இவர்களைப் பின்தொடர்கின்றது. இது முடிவற்ற ஒரு போராட்டம். ஆயினும், ஒரு மதத்தின் அடிப்படைவாதி மற்றொரு மதவாத வெறியனுக்கு தார்மீக ஆதரவு தருபவனாக இருப்பதை யாரும் மறந்து விடலாகாது.
இங்குதான் தன்னுணர்வு மிக்க சிந்தனையாளர்கள் மற்றும் மானுட நேயம் போற்றுவோர்க்கு அச்சுறுத்தல் துவங்குகின்றது.
"எல்லோரையும் மனந்திருப்புங்கள். . பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது.!"
"யாவருக்கும் இறைச் செய்தியைக் கொண்டு செல்லுங்கள்."
"பரமபிதாவை ஏற்காதவர்கள் சாத்தானை வழிபடுவோர். . ! மார்க்கம் தழுவாதோர் காஃபிர்கள்.!"
என்றெல்லாம் புனித நூல்கள் பேசுகையில், அவற்றின் தாக்கமென்பது யதார்த்தத்தில் என்னவாக மாறி இயங்கக் கூடும் என்கிற சிந்தனை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இறைமறுப்பு என்பது மன்னிக்கவியலாத குற்றமெனப் பொதுவெளியில் குரல்கள் எழத் துவங்கியிருக்கின்றன.
இறைவன் என ஒருவன் இருப்பின், போர்களும், பட்டினியும், சித்ரவதைகளும் நிரம்பி வழியும் இந்த உலகைப் படைத்து வேடிக்கை பார்த்து வருவது ஏன் என எழும் எதிர்க் கேள்விகளுக்கு இவர்களால் ஒருபோதும் விடையளிக்க முடிவதில்லை.
இந்நிலையில், மதங்களின் தோற்றம், இருப்பு, பொருத்தப்பாடு மற்றும் அவற்றின் இயங்கியலைத் தொடர்ந்து ஆராய வேண்டிய தேவை அதிகரித்தபடியே உள்ளது.
இவ்வாறான சிந்தனைகளின் பின்னணியில்... தமிழகச் சூழலில், கருஞ்சட்டைத் தோழர் ஃபரூக் கொலை எனும் நிகழ்வு எளிதாகக் கடந்து விடக் கூடிய ஒன்றல்ல. முறையான விசாரணைகளுக்குப் பிறகு கொலைக்கான காரணம், பிற தலையீடுகள் குறித்த உறுதியான தகவல்கள் வெளிவரட்டும்.
மற்றபடி, பன்சாரே, கல்புர்கி, தபோல்கர் வரிசையில் ஃபரூக்குகளையும் சேர்ப்பதில் மதவாதிகளுக்கு என்ன தயக்கம் இருக்க முடியும் என்று யோசிக்கையில் அச்சம் மேலிடவே செய்கின்றது.
- ஜீவகன்